Saturday, December 31, 2022

TNBJP 2022 - பத்தடி முன்னே இருபதடி பின்னே 31/12/2022

ஏன் தமிழகத்தைக் கொள்ளையடித்து தமிழகப் பொருளாதார பலத்தைச் சூறையாடும் திமுக அதிமுக மட்டும் தான் ஆட்சியில் இருக்க வேண்டும்?

தொடர்ந்து அவர்களிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று யார் யாரெல்லாம் விரும்புகின்றார்கள்?
திமுக, அதிமுக கட்சியில் இருப்பவர்கள் பாஜக வை வெறுப்பதை விட விரும்புவது போல நடித்து நட்பு பாராட்டி ஆனால் மனதளவில் மிக அதிக அளவு வெறுக்கும் சோ கால்டு பத்திரிக்கையுலக புத்திசாலிகள் வைத்துள்ள காரணங்கள் என்ன?

( 1 )
ஏன் காங்கிரஸ் தோற்றது என்று அண்ணாதுரை அவர்களிடம் அமெரிக்காவில் வைத்துக் கேட்ட போது நீண்ட காலம் இருந்த காரணம் என்றார்.
இது கால்வாசி உண்மை. முக்கால் வாசி பொய்.
எப்படி திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது? நிஜமான காரணங்கள் தான் என்ன?
பார்த்துப் பார்த்து பலவிதமான திட்டங்களைத் திகட்டக் திகட்ட காமராஜர் கொண்டு வந்த போதிலும் ஏன் அவர் தோற்றார்.
ஏன் பக்தவச்சலம் அவர்களின் ஆட்சி மக்களால் தூற்றப்பட்டது.
பசி கால் வாசி காரணம். அரிசி பற்றாக்குறை கால் வாசி காரணம். கருணாநிதி தொடர்ந்து இடைவிடாமல் தினமும் செய்த பச்சை அயோக்கியத்தனம் மீதி அரை வாசி காரணம்.
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் என்பது வேரடி மண்ணோடு சாய்க்கப்பட்டது என்று தான் எழுத வேண்டும். காரணம் அண்ணாதுரை அவர்களால் கூடக் காங்கிரஸ் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.
ஏன் நிகழ்ந்தது?.
முக்கியக் காரணம் காங்கிரஸ் மக்கள் மனதைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள விரும்பவில்லை. பசியால் அழுது கொண்டு இருந்தவர்களிடம் நாடு பெரிது என்று தத்துவத்தைப் போதித்தது.
காறித் துப்ப முடியாமல் சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டு இருந்தார்கள். 1967 தேர்தலில் செருப்படி விளக்குமாறு கொடுத்து காங்கிரஸ் என்ற கட்சி பாடை கட்டி அனுப்பி வைத்தனர். அண்ணாதுரை முதல்வராக அமர்ந்தார்.
ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விழுமியங்கள் உள்ள தமிழகத்தில் காங்கிரஸ் எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் காவல்காரன் போலத்தானே இருந்தது?
மக்களின் ஆன்மீகம் முதல் அடிப்படை வாழ்க்கை கட்டுமானம் வரைக்கும் பார்த்துப் பார்த்துப் பார்த்து தானே செய்தது?
எங்கே தவறு நடந்தது?
1947 முதல் 1967 வரை இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் சார்ந்த எந்த பேச்சாளர்களும் தமிழர்கள் விரும்பக்கூடிய மொழியில் பேசவே இல்லை. மேடைப் பேச்சு முதல் நடை உடை பாவனை திட்டம் நோக்கம் கொள்கை எல்லாமே லண்டன் தனமாகவே இருந்தது.
ஆங்கிலப் பேச்சு என்பது கௌரவமாகப் பார்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் தான் பாதிப் பேர்கள் பேசினார்கள். கோவணம் கட்டி வாழ்ந்தவனுக்கு, வயல் வாழ்க்கையைப் பிரதானமாக கருதிய விவசாயிகளுக்கு, அடிப்படை தொழில் கட்டுமானம் வாழ்க்கை வாழ்ந்த தமிழர்களுக்கு அண்ணா, கருணாநிதி முதல் பல பேர்களின் பேச்சு மயக்கியது. சொக்க வைத்தது. நம்ப வைத்தது. ஓட்டமாக மாற்றியது.
மேடைப் பேச்சோ, கருத்தரங்கமோ, கேள்வி பதிலோ, பேட்டியே தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகின்றார்கள் என்றால் அந்தக் கட்சி விரைவில் பலத்த சேதாரத்தைப் பெறப் போகின்றது என்று அர்த்தம். அத்துடன் ஐம்பது சதவிகித ஓட்டளிக்கும் மக்கள் அந்தக் கட்சியைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
காங்கிரஸ் அசிங்கத்தைப் பெற்றது. திமுக அங்கீகாரத்தைப் பெற்றது.
அண்ணாமலை ஒருவர் தான் இதை தற்போது புரிந்துள்ளார்.
மக்கள் மொழியில் அவர் பேசும் பேச்சு நாளுக்கு நாள் மெருகேறி ரசிக்கும் வண்ணம் மாறிக் கொண்டே இருக்கின்றது. இதை இங்கே பல பேர்களிடம் அந்தப் பேச்சைக் கேட்க வைத்து அவர்கள் முகபாவங்கள் எப்படி மாறுகின்றது என்ற ஆராய்ச்சியையும் ஒவ்வொரு பேச்சுக்கும் செய்து வருகின்றேன்.
அண்ணாமலை அவர்கள் மிக மிக கஷ்டப்பட்டு பத்தடி முன்னால் செல்கின்றார்.
மற்றவர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் கட்சியின் வளர்ச்சியை இருபது அடி பின்னால் இழுத்தப்படியே உள்ளனர்..

No comments: