Wednesday, March 14, 2018

மேலும் சில குறிப்புகள் 3

வாழும் வீடென்பது வசதிகளைக் கொண்டிருக்க வேண்டுமா? வாழும் சூழ்நிலையைப் பொறுத்திருக்க வேண்டுமா? இந்தக் கேள்வி தான் இப்போது நம் அனைவர் மனதில் தோன்றக்கூடிய எண்ணமாக இருக்கும்? 

இப்போது நாங்கள் இருக்கும் வாடகை வீடென்பது நான்காவது வீடு. இந்த ஆண்டோடு வெற்றிகரமாக எட்டு ஆண்டுகள் முடியப் போகின்றது. குடும்பத் தலைவி குடும்பத் தலைவரிடம் கேட்கும் அதே கேள்வி தான். எப்போது நம் சொந்த வீடு? என்ற கேள்விக்குச் சிரித்துக் கொண்டே கடந்து வந்து விடுவதுண்டு. அவர் இப்போது கேட்பதில்லை. ஆனால் மகள்கள் கேட்கத் துவங்கி விட்டார்கள். 

இவர்களைச் சமாளிக்க முடியாமல் ஊரில் என் அப்பா வைத்துள்ள வீடு மிகப் பெரியது. தோட்டத்துடன் பெரிய இடமாக உள்ளது. பத்துக் குடும்பங்கள் வசிக்க முடியும். ஆள் கேட்பாற்றுக் கிடக்கின்றது. உங்கள் குழந்தைகள் அங்கே விருப்பப்படி விளையாடலாம். இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் இருவரும் அங்கே சென்று விடுவோம் என்று சொல்லி முடிப்பதற்குள் நாங்கள் அங்கே வரமாட்டோம் என்ற பதில் தெறித்து வந்து விழும். 

காரணம் அவர்கள் விரும்பும் வசதிகள் அங்கே இல்லை. வாழ்வதற்கு வசதிகள் தேவை என்ற கொள்கை கொண்டு வாழும் மகள்களின் எண்ணத்திற்கும் எனக்கும் நிறையக் கருத்து மோதல்கள் அவ்வப்போது வீட்டில் காரசாரமாக நடக்கும். 

திருமணம் நடந்து மனைவி திருப்பூருக்கு வந்த போது நான் தனியாளாக இருந்த போது குடியிருந்த குடியிருப்பு வளாக வீட்டுக்குள் (சகல வசதிகளுடன் வைத்திருந்தேன். மாமனார் வியந்து போனார்) வந்து ஜம்மென்று பால் காய்ச்சினார். 

குழந்தைகள் வளரத் தொடங்கிய போது எல்லைப் புறத்தில் இருந்த அந்த வீட்டில் இருந்து நகர்ப்புறத்தின் உள்ளே வந்து சேர்ந்தோம். இரட்டையரைத் தொடர்ந்து உடனே அடுத்தவரும் வந்து சேர்ந்த போது சற்று வசதியான தனி மாளிகை போல இருந்த வீட்டுக்குச் சென்றோம். அந்த வீடு அமெரிக்காவில் இருந்த பெண்மணி வருடம் ஒரு முறை திருப்பூர் வரும் போது பயன்படுத்தும் வீடு. மற்ற நேரம் பூட்டிக் கிடக்கும். பாட்டியம்மா கட்டுப்பாட்டில் இருந்தது. பாட்டியைச் சந்தித்த அந்தத் தினம் இன்றும் நினைவில் உள்ளது. 

சாதி, குலம், கோத்திரம், பணிபுரியும் இடம், வாங்கும் சம்பளம் என்று ஆதி அந்தம் அனைத்தும் கேட்டு அரைகுறை மனதோடு தந்தோர். அதன் பிறகு முக்கியமான சிபாரிசு அவருக்கு வந்து சேர்ந்த போது முக்கால் மனதோடு தந்தார். ஒரு மாதம் கழித்து வீட்டைப் பார்க்க வந்தார். அம்மையார் தெளிவாக வைத்திருந்தார். ஆச்சரியப்பட்டுப் பாராட்டி விட்டுச் சென்றவர் மாதம் ஒரு முறை வாடகை வாங்க மட்டும் வருவார். கூடுதல் தகவல். அம்மையார் கொடுக்கும் தேநீர் அவருக்கும் சொர்க்கலோகத்தைக் காட்டியது. அப்புறம் இந்தத் தேநீருக்காக மாதம் இருமுறை நலம் விசாரிக்கின்றேன் என்பதனை காரணமாகச் சொல்லிக் கொண்டு இரண்டு முறை வரத் தொடங்கினார். 

உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இந்த வீட்டுக்கு வரும் போது வீட்டைப் பார்த்து விட்டு உயர்தர வர்க்கத்திற்கு எப்போது வளர்ந்தாய்? என்ன தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான லாபம் கிடைக்கின்றதா? என்ற கலாய்ப்பார்கள். ஆனால் அந்த வீட்டுக்குச் சென்று வெளியே வரும் வரைக்கும் இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு எல்லாவற்றையும் இழந்தவனாக மாற்றியது. 

மற்றொரு பிரச்சனை உருவானது. 

மூவரையும் பள்ளியில் கொண்டு போய்த் தினமும் சேர்ப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மாலையில் அழைத்து வருவது அதனைவிடவும் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்த்தது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் எதன் மீதும் அக்கறை செலுத்த முடியாத அளவிற்கு அந்த வீடென்பது எல்லாவகையிலும் பெருந்துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருந்தது. 

ஆனால் மற்றவர்களின் பார்வையில் மதிப்பு மிக்கதாக இருந்தது. 

இப்போது இருக்கும் வீட்டைத் தரகர் ஒருவர் காட்டிய போது அப்போது இந்த வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் இந்த வீட்டுக்கு வரப்போகின்றீர்களா? கடந்த ஒரு வருடத்தில் ஆறு பேர்கள் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி வீட்டார்கள் என்று பயமுறுத்தினார். சமையல் அறை, ஒரு அறை, மற்றொரு அறை, வெளியே நடைபாதை. ஒரு பெரிய அறையை எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் வீட்டுக்குச் சொந்தக்காரர் வாடகை விட என்ற நோக்கத்தில் மட்டும் உருவாக்கியிருந்தார். வீட்டுக்கார பெண்மணி எப்போதும் போலக் குலம், கோத்திரத்தை விசாரித்தார். காரணக் காரியங்களைப் பொறுமையாக விளக்கினேன். இந்த வீட்டுக்கு உறுதியாக வந்து விட வேண்டும் என்று தீர்மானித்தற்கு முக்கியக் காரணம் வீட்டுக்கும் மகள்கள் படிக்கும் பள்ளிக்கும் 200 அடி தொலைவு தான். 

மேலைநாடுகளில் அருகாமைப் பள்ளியென்பது பெற்றோர்களுக்கு வரம் போல இருக்கும் வாழ்க்கையைக் கொண்டது. ஆனால் இங்கே எல்லாமே தலைகீழ். பள்ளியென்பது கௌரவம் சார்ந்தது. அதனால் உருவாகும் பிரச்சனைகளை எழுத்தில் எழுதி விட முடியாது. ஆனாலும் அதனைத் தான் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள் என்பது ஆச்சரியத்தின் உச்சமாக உள்ளது. பள்ளியில் மணியடிக்கும் நேரத்தில் வாகனங்களின் சீற்றங்களைப் பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால் இந்த வீட்டுக்கு வந்த பின்பு மகள்கள் குறித்த எந்தப் பயமும் இல்லை. நான் அக்கறைப்பட்டுக் கொள்வதே இல்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சுகமாக வாழ்கின்றார்கள். மகள்கள் வளர வளர மற்றொரு பிரச்சனைகள் உருவாகின்றது. பெண்கள் என்பதால் அதுவும் நான்கு பெண்கள் என்பதால் அவர்களின் மாதந்திர தேவைகள் உந்தித் தள்ளும் போது அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து குளியல் அறையை, கழிப்பறையைப் பயன்படுத்தும் போது நான் அந்தப் பக்கம் செல்லவே முடியாது. 

குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் எனக்கு ஒதுக்குவார்கள். அவர்கள் ஒதுக்கும் நேரத்தை நான் பயன்படுத்தாமல் நான் கணினியில் அமர்ந்திருப்பேன். திடீரென்று ஞானோதயம் உருவாகி வயிறு வலிக்கக் கத்திக் கொண்டு ஓடுவேன். அந்த நேரத்தில் சரமாரியாக என்னைத் தாக்க வருகின்றார்கள். 

நிதானமாகக் குளிக்க முடியவில்லை. சோப்பு போட்டுக் கொண்டிருக்கும் போது வெளியே தட தடதடவென்று தட்டி களேபரத்தை உருவாக்குகின்றார்கள். 

அவர்கள் வாழ்க்கையை அவர்கள் ரசனையுடன் சுகவாசியாக வாழ்கின்றார்கள், 

நான் அவர்களிடம் கேட்டுக் கேட்டு, திட்டு வாங்கிக் கொண்டு, இன்னமும் திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

14 comments:

மலைநாடான் said...

இன்று வரை அந்தக் காலை உணவு நினைவில் உள்ளது.. எண்ணமும் எழுத்தும் அத்தனை அழகு தேவியர் போலே.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் ஒரு மகிழ்ச்சியே...(!)

S. Arivazhagan said...

சுகமான சங்கடங்கள்,அனால் அதுவும் ஒரு மகிழ்வே.

sivakumarcoimbatore said...

arumai...sir..

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

Amudhavan said...

இதில் திருந்துவதற்கு என்ன இருக்கிறது?

ஜோதிஜி said...

மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

ஜோதிஜி said...

வாழும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர மறுக்கும் சமூகக்கூட்டத்தில் சிலரால் மட்டுமே வாழ்க்கையின் புரிதலை உணர்ந்து கொள்ள முடிகின்றது தனபாலன். நன்றி.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு நன்றி

ஜோதிஜி said...

நன்றி சிவா

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

மூன்று பேர்கள் தினமும் கொடுக்கும் பாடங்களைப் பற்றி பேசும் போது சொல்ல வந்தேன்.

தி.தமிழ் இளங்கோ said...

என்னதான் கிராமத்தில் பெரிதாக இருந்தாலும்,இருக்கும் இடத்தில் சொந்த வீடு என்று ஒன்று வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் என்பது பொதுவான ஆசை. மனத்தில் விதைத்து விட்டால், உங்கள் ஆசையும் ஒருநாள் நிறைவேறும். வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

மற்ற எதனையும் விட உடல் மன ஆரோக்கியம் தான் இப்போது எனக்கு பெரிதாகத் தெரிகின்றது.