Thursday, March 29, 2018

மேலும் சில குறிப்புகள் 8

இது புத்தகங்களின் காலம். இணையத்தில் அவ்வப்போது கிறுக்கிக் கொண்டிருப்பவர்கள் கூடத் தங்கள் எழுத்தை புத்தகமாகப் பார்க்க வேண்டும் என்று சொந்தக் காசை செலவழித்து எழுத்தாளராக மாறும் நேரமிது. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு முக்கியமான ஒருவரின் புத்தகம் அறிமுகம் ஆகியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலத்தில் எழுதி டெல்லியில் வெளியிட்டார். இப்போது தமிழ் பதிப்பு வந்து விட்டதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான விழாவை காட்சியாகப் பார்க்க முடிந்தது. 

முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஆண்டிமுத்து ராசா எழுதியுள்ள 2 ஜி அலைக்கற்றை ஊழல் என்பதற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகள். 

விழாவில் பேசிய ஒவ்வொருவரின் பேச்சையும் கேட்டு முடித்த பின்பு எழுத வேண்டும் என்று தோன்றியது. 

காரணம் ராசா தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சட்டத்தின் பார்வையில் இருந்து வென்றவராக வெளிவந்துள்ளார். இருந்த போதிலும் 91 வது நாளுக்காகக் காத்திருந்த அமலாக்கத்துறையும், சிபிஐ யும் மேல் முறையீடு செய்து மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கி உள்ளார்கள். 

மாநில சுயாட்சி என்ற வார்த்தையை நிறுத்த வேண்டும் என்பதற்காகவா? இல்லை விரைவில் வரப்போகும் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமா? என்று தெரியவில்லை. 

2ஜி ஊழல், ஒன்னே முக்கால் லட்சம் கோடி போன்ற பெரிய வார்த்தைகளைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. இணையம் ஒன்று மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்த ஊழல் இந்த அளவுக்குப் பேசப்பட்டு இருக்காது? என்பது மட்டும் நிச்சயம். ஆனால் மாறன் சகோதரர்கள் போல ராசா, கனிமொழி மற்றும் உடன் பாதிக்கப்பட்ட கூட்டாளிகள் அனைவரும் விடுதலையாகி உள்ளனர். வென்றவர்களை வாழ்த்துவது தானே தமிழ் மரபு. வாழ்த்துகிறேன். 

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் பழிவாங்கும் பகுதி என்றழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவன் என்ற முறையில் என் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் எப்படி இருந்தது? என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஆனால் அடுத்த 25 ஆண்டுகள் கழிந்தும் பெரம்பலூர் மாவட்டம் எப்படி இருந்தது என்பது தமிழகத்தில் வாழ்ந்தவர்களுக்கு, நடப்புகளைக் கவனித்துக் கொண்டிருப்பவர்களும் நன்றாகவே தெரியும். 

ஆனால் ராசா பிறந்தது 1963. அவர் பிறந்த தாழ்த்தப்பட்ட சாதியில் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்திருப்பார்? எப்படித் தன்னைக் கல்வி ரீதியான முன்னேற்றத்திற்காக உழைத்திருப்பார் என்பதனை இன்றும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் வியப்பாகவே உள்ளது. இவரைப் போன்ற பலருக்கும் இடஒதுக்கீடு வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இவரைப் போல எத்தனை பேர்கள் உச்சத்தைத் தொட்டு இருக்கின்றார்கள்? 

கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ராசா பேசும் அப்போது தான் வகித்த அஞ்சல்துறை அமைச்சக பொறுப்பு பற்றியும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குத் தபால் வந்தால் பாரபட்சமாக எப்படிச் சாதியின் அடிப்படையில் வழங்கப்பட்டது குறித்தும் சில தகவல்களைச் சொன்னார். இன்று கலைஞர் மூலம் அந்தத் துறைக்கே அமைச்சர் பொறுப்பில் இருப்பதையும் நெகிழ்ந்து குறிப்பிட்டார். 

அதனை நினைவில் வைத்து இந்தப் புத்தக விழாவிலும் பேசியுள்ளார். ஐம்பது வயதில் ராசா தொட்ட உயரம் அசாத்தியமானது. ராசாவின் வளர்ச்சியில் அவர் கல்வி அறிவு உதவியதைப் போல அவரின் நேரமும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும். 

சிலருக்குத் தொட்டது துலங்கும். சிலருக்குத் தொட நினைக்கும் போதே வந்து கையில் சிக்கும். ஆனால் ராசாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் கலைஞர் மட்டுமே. கூடுதல் தகுதியாக அவரின் சாதியும் வந்து சேர்ந்தது. இதைவிட மற்றொரு முக்கியக் காரணம் அப்போது இருந்த சூழ்நிலை அவருக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து அமைச்சர் பதவியை வழங்கியது. 

மாறன் சகோதர்களின் அடாவடித்தனம். கலைஞர் தன் மகள் கனிமொழி மேல் கொண்ட பாசம் இவை இரண்டுமே ராசாவிற்குப் பம்பர் லாட்டரி போல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. கலைஞர் குடும்ப முதல் வட்டத்தில் மிக விரைவாக உள்ளே நுழைந்தார். நுழைந்ததற்கான பலனையும் கொடுத்து நன்றிக்கடனையும் தீர்த்துள்ளார். 

இதற்கெல்லாம் அடுத்தபடியாகத் திமுக வின் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் நமக்கு மிக முக்கியம் என்ற சூழ்நிலையில் இருந்த மன்மோகன் சிங் அரசாங்கம். 

ஒரு சாதகமான சூழ்நிலையில் இருந்தாலே சுக்கிர திசை என்று சொல்ல முடியும். ஆனால் பல சாதகமான சூழ்நிலை ராசாவின் வாழ்க்கையில் வந்து சேர இந்தத் துறை தான் வேண்டும். அதுவும் இவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வாங்கும் அளவிற்குக் கலைஞர் காட்டில் அடை மழை தொடங்கியது. அப்புறமென்ன? விவசாயம் செழித்தது. அறுவடைக்குப் பஞ்சமா? 

கொள்கைவாதிகளைப் பற்றிப் பேசும் லஞ்சம், ஊழல் பற்றி நாம் பேசக்கூடாது என்பது அரசியலில் உள்ள பொதுவிதி. இது பெரியார் மண். பெரியார் இல்லாவிட்டால் இங்கே இது போன்ற வளர்ச்சி நடந்துஇருக்கவே வாய்ப்பில்லை. சமூக நிதீயின் ஆசான் அவர். ஆமாம். இதையெல்லாம் இன்று மேடைதோறும் முழங்குபவர்கள் யார் யார் என்றால் கொள்கை என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதில் வல்லவராக இருப்பவர்கள் மட்டுமே. சமூக நீதியைப் பற்றி யார் பேசுகின்றார்கள்? தங்கள் கல்வி நிறுவனங்களில், தொழில் நிறுவனங்களைத் தவிர மற்ற இடங்களில் சமூக நீதி வர வேண்டும் என்று பாடுபடுபவர்கள் என்று பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

தவறில்லை. 

கொள்கைவாதிகளை இந்தத் தமிழகம் எங்கே மதித்துள்ளது. காமராஜரைக் கல்லூரி மாணவனை வைத்துத் தோற்கடித்த சமூகம் தானே இன்றும் அவர் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றது. கக்கனை அரசுமருத்துவமனையில் தரையில் படுக்க வைத்தவர்கள் தானே அவரைப் போல உண்டா? என்று போற்றிப் புகழ் பாடுகின்றது? 

கொள்கையைப் பற்றி உரத்துப் பேச வேண்டுமென்றால் உடம்பில் தெம்பு இருப்பது அவசியம் தானே? அந்தத் தெம்பு வர வேண்டும் என்பதற்காகத் தொழில் அதிபர்களாக, கல்வித் தந்தையாக இருப்பது தவறா? 

ஆனாலும் என் பார்வையில் ராசா அவர்களின் மொழிப்புலமை, தேர்ந்த புத்திசாலித்தனம், தன் வழக்கில் நானே வாதாடுகின்றேன் என்று கலைஞர் எதிர்ப்பையும் மீறி நின்று இன்று வென்றுள்ளார். 

மாறன் செய்தது இரண்டு காரியங்கள். வெளியே சம்பாரிக்கவும் முடிந்தது. அதன் மூலம் தங்கள் நிறுவனங்களை வளர்க்கவும் முடிந்தது. கூடுதலாக எதிரிகளை வளரமுடியாமல் தடுக்கவும் முடிந்தது. 

ஆனால் ராசா அது போன்ற கேவலமான காரியங்களைச் செய்யவில்லை. செய்யும் கடமைக்குக் கூலி வேண்டாமா? அதைத்தான் செய்தார். விரும்பிய நிறுவனங்களுக்கு, சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதில் எந்தத் தவறும் இல்லை. 

ஆனால் அவர் மோதியது யாருடன்? பாகாசூர ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன். ஆதிக்கம் செலுத்திய மற்ற நிறுவனங்களுடன். விடுவார்களா? 

ஆனால் இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் ஈழத் தமிழர் விசயத்தில் காத்திருந்து கழுத்தறுப்பது எப்படி? என்று என்னுடன் வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று உலகத்திற்கே கற்றுக் கொடுத்த சோனியா ஒரு பக்கம். 

தமிழகத்தில் உனக்குப் பல கோடி தொண்டர்கள் இருக்கலாம்? அதற்கு நாங்கள் என்ன இனி உழைத்து உன்னைப் போல ஓடாகத் தேயவா முடியும்? காலம் முழுக்க நீங்கள் எங்களைச் சுமப்பது உங்கள் கடமை என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் உணர்த்தி முட்டுச் சந்தில் நிறுத்திய ப. சிதம்பரம் மற்றொரு பக்கம். 

ஆனால் அம்பயர் போல இருக்க வேண்டிய மன்மோகன் சிங் எப்போதும் போலக் கண்களை மூடிக் கொண்டு காதுகளைப் பொத்திக் கொண்டு இருந்த காரணத்தால் டெல்லி லாபி வச்சு வச்சு செய்த கொடுமை அனைத்தையும் தாண்டி வந்துள்ளார் ராசா. 

மறைமுகமாக ஊதிப் பெருக்கிய மாறன் சகோதரர்களை வென்றுள்ளார். 

நீ என்னை உள்ளே வைக்கக் காரணமாக இருந்தாய். இன்று உன் புள்ளை உள்ளே போயிருக்கு பார்த்தாயா? என்று வெளியே கொண்டாட முடியாத மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். 

ஆமாம் சோனியாவும், மன்மோகனுக்கு இதில் தொடர்பே இல்லையா? 

அட போங்க பாஸ். அவங்களுக்கு எப்போதும் அடியாட்கள் தான் தேவை. இல்லாவிட்டால் கலைஞர் பிரதமராக மாறி இருப்பாரே? 

14 comments:

Avargal Unmaigal said...

படித்து முடித்தவுடன் நம் நாட்டு அரசியலை நினைத்து பெருமுச்சுதான் விட முடிந்தது ஹும்ம்ம்

Avargal Unmaigal said...

எப்படி அழகாக கட்டுரை எழுதுவது என்பது பற்றி நீங்கள் பதிவுகள் போடலாமே உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் தட்டச்சு செய்வதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீங்க... சும்மா தெறிக்கும்...!

Paramasivam said...

அருமையாக எழுதப்பட்ட கட்டுரை. ஆனாலும் ஒன்று--ராசா அவர்கள் வென்றாரா இல்லையா என்பது இனிமேல் தான் தெரியும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆழமான மதிப்பீடு.

Amudhavan said...

ஆ.ராசா ரொம்பவும் திறமையானவர். நீங்கள் கேட்டதுபோல் அவர் மோதியது யாருடன்? பகாசுர ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் மட்டும் அல்ல, அதுபோல மகா மகா பெத்த ஆட்களுடனெல்லாம் மோதி எந்தக் காயமும் படாமல் வெளியில் வருவது ஒன்றும் சாதாரணமானதல்ல.

அது ஒரு கனாக் காலம் said...

It is too much to appreciate Raja on his accomplishments - he is a corrupt to the core.Even when he was a environment minister, he made money ( mainly for the party ) , and he used those connections when he was in telephone minstry as well... while working for a company ( like u ) , if you do what Raja does, for selecting a supplier or buying materials, you will be thrown out and you will be in jail . And there are learned people, like prof and teachers ...are in agreement with your assessment. Read Aram,( by Jayamohan) based on real life story, there are better people who came up in life .( Nooru Nargaligal)

ஜோதிஜி said...

தொடர்ந்த ப்ளாக்கர் அடம் பிடித்த காரணத்தால் எவருக்கும் பதில்அளிக்க முடியவில்லை சுந்தர். நான் எந்த இடத்திலும் ராசா நல்லவர் வல்லவர் என்று சொல்லவே இல்லை. நாட்டில் சட்டம் சரி என்று சொல்வதும் சட்டத்தின் பார்வையில் இவர் நிரபராதி என்று சொல்வதையும் பற்றியே இங்கே எழுதியுள்ளேன். உங்களுக்கே தெரியும் ஏ1 குற்றவாளியையும் இப்படித்தானே சொன்னார்கள். கடைசியில் தானே சாவின் மூலம் தப்பித்துக் கொண்டார்.

ஜோதிஜி said...

போட்டி இருக்கக்கூடாது என்று ஏர்டெல் வச்சதே சட்டம் என்பதை இப்போது ரிலையன்ஸ் மாற்றி விட்டதே. கார்ப்ரேட் உலகில் சிங்கத்திற்கு ஒரு சிங்கம் தான் எதிரியாக இருக்க முடியும் என்பது அவர்களின் எழுதப்படாத கொள்கையாக இருக்கும் போல.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அரசியல் உலகில் கடைசி வரைக்கும் வென்று கொண்டேயிருக்க வேண்டும். மீண்டும் அவருக்கு யுத்த களம் தயாராகிக் கொண்டு இருக்கின்றது.

ஜோதிஜி said...

தனபால் நீங்க சொன்ன நேரம் உங்க கிட்டே ப்ளாக்கர் பஞ்சாயத்தை முதல் முறையாக கொண்டு வரும்படி ஆச்சே? இது தேவையா?

ஜோதிஜி said...

நான் தான் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளது என்று நினைத்துக் கொள்வதுண்டு.

கிரி said...

ராசா எடியூரப்பா எல்லோரும் வெளியே நிரபராதி ஆகி விட்டார்கள். யாரும் எந்த தவறும் செய்யவில்லை போல.

என்னமோ போங்க..