Sunday, November 13, 2022

அம்மாவின் சோம்பேறித்தனம். அப்பாவின் விழிப்புணர்வு

திருமணத்திற்கு முன் பத்தாண்டுகள் முழுக்க முழுக்க உணவகங்களில் சாப்பிட்டு (அப்போது திருப்பூர் வளர்ந்து கொண்டு இருந்தது. இப்போது உள்ள வசதிகள் எதுவுமே இல்லை. தண்ணீர் கூட அக்மார்க் உப்புத் தண்ணீர் தான்) வயிறு கிழிந்து, எல்லா உறுப்புகளும் கெட்டழிந்து.........






மஞ்சள் காமாலை ஒரே வருடத்தில் இரண்டு முறை வந்து....

உயிரோடு பிழைத்து வந்த பின்பு அடுத்த (திருமணம் ஆகி விட்டது) இருபது வருடங்கள் எந்த உணவகம் பக்கமும் திரும்பவே இல்லை.  

இங்கு நான்கு திசைகளிலும் உள்ள அத்தனை உணவகம் குறித்த அடிப்படை விபரங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் பிராடுதனம் முழுமையும் நான் அறிவேன்.

வெளியூர் சென்றாலும் 90 சதவிகிதம் பட்டினியாக வந்து விடுவேன். இல்லாவிட்டால் பழங்கள்.

இரண்டு காரணங்கள்.

வாயில் வைத்தவுடன் சண்டை வந்துவிடும்.  இது காரைக்குடி என்ற ஊரைச் சுற்றிலும் பிறந்த எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயல்பான ஒன்று.  என்னுடன் பிறந்த குடும்ப உறுப்பினர்கள் என்னை விட மோசம். கைகலப்புக்குச் சென்று விடும். ஊர்ப்பகுதிகளில் பெரிய பெரிய வீடுகளை உட்கார்ந்து தின்றே அழித்த கூட்டம் அல்லவா?

கடந்த சில வருடங்களில் தமிழர்களுக்குப் பிரியாணி என்பது வெறித்தனமாக மாறி மூன்று நேரமும் அதையே உண்பது என்கிற ரீதியில் அதற்குப் பின்னால் உள்ள விளம்பர மாயங்கள் பலன் பெறும் குறிப்பிட்ட சமூகம் குறித்து நான் கவலைப்பட்டது இல்லை. உடனே எச்சிலைத் துப்புகின்றார்கள். மாத்திரை கலக்கின்றார்கள். இன்னும் என்னவோ சொல்வது குறித்து நான் கவலைப்பட்டதில்லை.   அது உண்மையா? பொய்யா? நான் அறியேன். நான் பார்த்தது இல்லை. சரி இந்து குடிமக்கள் யோக்கியமானவர்களா?

இங்குள்ள தற்போது வெற்றிகரமாக செயல்படும் சில உணவக நிறுவனங்களைப் பெயரைக் குறிப்பிட்டு எழுதாமல் தவிர்க்கின்றேன்.  நாய் மற்றும் பன்றிகளை விட கேவலமான ஜென்மங்கள் இவர்கள்.  இந்த மதம் அந்த மதம் என்று இல்லை.  

பக்கெட் பிரியாணி என்று குறிப்பிட்ட தொகை வாங்கி வந்து கொடுத்தவுடன் உள்ளே ஒவ்வொன்றாக எடுத்து வைத்துப் பார்த்தால் குழந்தைகளுக்கு ஊட்டும் அளவு போல இருக்கும்.  அழைத்துக் கேட்ட போது ஒருவன் சொன்னான்.  

"சார் சுமாராகச் சாப்பிடுபவர் ஒருவர்.  குழந்தைகள் இருவர்" என்றார்.  

"ஆனால் விளம்பரம் மூன்று பேர்களுக்கு ஃபுல் என்ற அழகிய தமிழில் எழுதியிருந்தீர் " என்று அமைதியாகக் கேட்டேன்.  

அதற்கு அவன் சிரித்துக் கொண்டே "சார் விளம்பர வாசகம் என்பதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றவுடன் உடனே யோசிக்காமல் நான் கேட்டது 

"கூட்டிக் கொடுத்துச் சம்பாதிப்பது இதை விட எளிது சார்" என்றவுடன் அப்படியே கட் செய்து விட்டார்.  இதன் காரணமாக உலகம் அதன் திசையிலேயே போகட்டும். நமக்கென்ன கவலை என்று எதனையும் கண்டு கொள்வதில்லை. வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டே திகட்டத் திகட்ட நாடு ராத்திரியில் வந்து இறங்கினால் கூட இருக்கும் கஞ்சியைக் குடித்து விட்டுப் படுத்துக் கொள்வதுண்டு.

என் வீட்டு அருகே நான்கு திசைகளிலும் கொரோனா முன் பின் என்று குறைந்த பட்சம் (மூன்று வருடங்களில்) சிறிது பெரிது என்ற 250 பிரியாணிக் கடைகள் திறந்து இருப்பார்கள்.  

ஏன் இவ்வளவு துல்லியமாகச் சொல்கின்றேன் என்றால் கட்டாயம் அன்றைய செய்தித்தாளில் விளம்பரம் வந்து விடும். வீட்டுக்குள் வந்து பசங்க விளம்பரக் காகிதத்தை எறிந்து விட்டுச் செல்வார்கள்.  வரும் பத்திரிகைகளில் உள்ளே வைத்து விளம்பரக் காகிதம் என்று பல வகையில் வந்து சேர்ந்து விடும்.

ஆனால் இன்று 36 மாதங்களுக்குப் பிறகு மொத்தமே ஏழெட்டு பிரியாணிக் கடைகள் தான் செயல்படுகின்றன. எல்லாமே நான்கு மாதம் ஐந்து மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காது.  அவன் செத்த கோழி, சீக்கு வந்த கோழி, திருடி வந்த கோழி என்று தள்ளுபடி பிரியாணி விற்க முதல் இரண்டு நாளைக்குக் கூட்டம் தள்ளுமுள்ளுன்னு போய் நின்று வாங்கும்.  நம்மாட்கள் ஓசியில கொடுத்தால் பினாயில் கூடக் குடிப்பார்கள் அல்லவா?

சிரித்துக் கொண்டே வீட்டில் வந்து சொல்வேன். இவர்கள் என்னைக் கழுவிக் கழுவி ஊற்றுவார்கள். உணவக விருப்பங்களை மட்டும் வீட்டில் உள்ள பெண்கள் நலக்கூட்டணி கேட்கவே மாட்டார்கள்.  காரணம் எக்காரணம் கொண்டு உணவக அனுமதி மட்டும் கொடுப்பதில்லை.

அப்படியும் அதிக மதிப்பெண்கள் வாங்கினேன் என்று சொல்லும் தருணம், முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்று சொன்ன போது, இது போல அவர்களின் தனிப்பட்ட சாதனைப் பயணத்தில் அவர்கள் என்ன கேட்கின்றார்களோ அதனை நிறைவேற்றுவேன்.  மறக்காமல் இந்த பிரியாணியைத்தான் கேட்டுத் தொலைப்பார்கள். பெரிய கடைகளில் அழைத்துச் சென்று எதிரே அமர்ந்து கொண்டு அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே சிரித்துக் கொண்டே நான் வந்து விடுவேன்.

பல்லடம் சாலையில் உள்ள ஜுனியர் குப்பண்ணா கடையில் இரண்டு மாதத்திற்கு முன்பு மகளுக்குக் கொண்டு வந்து கொடுத்த தட்டில் குழம்பு 150 மில்லி இருக்கலாம். அதில் மூன்று துண்டு கோழிக்கறி தான் இருந்தது.  மூன்று துண்டும் அறுபது கிராம் வரும்.  விலை ரூபாய் 180 . (அன்றைய தின உறித்த கோழியின் விலை கிலோ 220 ரூபாய்). இதே போல ஒவ்வொரு மகளின் விருப்பங்களைக் கண்களை மூடிக் கொண்டு (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) நிறைவேற்றிய தருணத்தில் நான் பட்ட பாடு சொல்லி மாளாது.  

இது கஞ்சப் பிசினாறி அல்ல.  

நம் முன்னால் நம்மை ஏமாற்றுகின்றவன் செய்கின்ற அயோக்கியத்தனத்தை ஒரு பெருங்கூட்டம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கடந்து அவர்களின் அளவு கடந்த ஆசை பலரின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதனை உணரும் போது உங்களுக்குப் புரியும்.

செய்தித்தாளில் பாருங்கள். நஞ்சு உணவு காரணமாக இறந்த குழந்தைகள் செய்தி வாரத்தில் இரண்டு முறையாவது படித்து விட முடியும்.  ஒரே காரணம் அம்மாவின் சோம்பேறித்தனம்.  அப்பாவின் விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம் என்பேன்.

No comments: