Wednesday, November 23, 2022

2022 22 11 இருபதும் இனி வரும் காலமும்

சில தினங்களுக்கு இரவு பத்து மணிக்கு நண்பர் அழைத்திருந்தார். மகள் பேசிக் கொண்டிருந்ததைப் பாதித் தூக்கத்தில் கேட்டுக் கொண்டு இருந்தேன். உரையாடல் கேட்டது. ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் என் மூளை முழுமையாக உள்வாங்கியது.  




"இந்த ஊரில் பத்து மணிக்கு ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லக்கூடிய ஒரே ஆத்மா உங்க அப்பாதாம்மா?"

என்ற வார்த்தைகள் மட்டும் என் காதில் ஒலித்தது.

அவரும் நானும் படிப்படியாக முப்பது வருடங்களாக பல்வேறு நிலைகளிலிருந்து நகர்ந்து வந்துள்ளோம். 

எட்ட முடிந்த தொலைவுகள் கொஞ்சம்.  

இன்னும் எட்ட வேண்டிய உயரங்கள் இருவருக்கும் கனவாகவே உள்ளது. 

அவருக்கு இரவானால் தூங்க பனிரெண்டு மணிக்கு மேல் ஆகின்றது என்று புலம்புகின்றார். நான் எட்டு மணி தொடங்கி அன்றைய தினத்தின் முடிவுக்கு வர வேண்டிய  பணிகளை படிப்படியாக முடித்து விட்டு மற்றவர்கள் உணவருந்தும் முன் அதையும் முடித்துக் கொண்டு படுக்கைக்குத் தயார் படுத்திக் கொள்ளும் போதும் எப்போதும் போல உள்ளேயிருந்து குரல் வரும்.  

"குழந்தை தூங்கத் தயார் ஆகி விட்டது போல"

என்று. படித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம், பாத்திரம் கழுவி சுத்தம் செய்து இரவில் வரும் பால் வாங்கி வைத்து படுக்கைக்கு வருபவர் மற்றொரு பக்கம். நான் எந்தப் பக்கமும் இல்லை. எனக்குத் தேவை குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம்.

படுத்தவுடன் பயணம் தொடங்கி விடும். அழைத்தால் நான் இரண்டாவது யாமத்தில் இருப்பேன். காரணம் அதிகாலையில் என் நூற்றுக்கணக்கான தோழர்களை சந்திக்கும் ஆவலுக்காக என்னை முந்தைய இரவில் தயார் படுத்திக் கொள்வது வாடிக்கையாகவே வைத்துள்ளேன்.

எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஒருவர் நான்கு மணி அலாரம் வைத்திருப்பார். அடுத்தவர் ஐந்து மணிக்கு வைத்திருப்பார். அவர்கள் படிக்கத் தொடங்கும் நேரம். நான் அலாரம் இல்லாமல் இவர்களுக்கு முன்னால் எழுந்து விடுவேன். தேநீர் தயாரிக்கத் துவங்கும் முன், எழுந்தவுடன் அறையின் ஜன்னலை மெதுவாக திறந்து பார்த்து சப்தம் கேட்கின்றதா என்று காதுகளைக் கூர்மையாக அந்த காரிருள் வேளையில் கேட்டால் கட்டாயம் வினோத குரல்களின் வித்தியாச மொழிகள் என்னைத் தாக்கும். நூற்றுக்கணக்கான சண்டை, சச்சரவுகள், சந்தோஷங்கள், பரிமாறல்கள் என்று இடைவிடாது கேட்கும். 

பத்தடி தொலைவில் உள்ள பக்கவாட்டு பெரிய வீட்டில் விதவிதமான பெரிய பெரிய மரங்கள் உள்ளது.  அனைத்தும் இறக்குமதி வகையைச் சார்ந்தது. வினோதமான பூக்கள், இலைகள், அடர்த்தியான காடு போல இருக்கும் வித்தியாசமான மரங்களில் தான் ஒவ்வொரு நாளும் இரவானால் நூற்றுக்கணக்கான தோழர்கள் வந்து அமர்ந்து ஓய்வெடுப்பார்கள்.  ஒன்பது மணிக்கு வரத் துவங்குவார்கள்.  அவர்கள் என்ன வகையைச் சார்ந்தவர்கள் என்பதனை கண்டு பிடிக்க முடியாது.  இருட்டுக்குள் வருவார்கள். இருள் பிரியும் முன்பே அதிகாலையில் ஐந்து மணிக்கு முன்பே வானத்தை அளக்க பறந்து சென்று விடுவார்கள்.

பறவைகள், தாவரங்கள் இவற்றின் மேல் இயற்கையிலேயே அலாதியான விருப்பம் உண்டு. நடந்து செல்லும் போது சமூகத்தைக் கவனிக்க சுவரொட்டிகளைக் கவனிப்பது போல நான் வசிக்கும் பகுதியில் நாய் முதல் மயில் வரை அனைத்தையும் பொறுமையாக கவனித்து வேடிக்கை பார்க்கும் என்னைப் பலரும் வினோதமாக வேடிக்கை பார்த்து அருகே வந்து என்ன பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? என்று கேட்டுள்ளனர்.  

"அதோ அந்த மயிலின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டு இருக்கின்றேன்?"

என்று சொன்னதும் வந்தவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு வேகமாக நகர்ந்து சென்று விடுவார்கள்.  காரணம் ஒவ்வொரு மணித்துளியிலும் டாலர் தேடி அலையும் ஊரில் இயற்கையோடு பேசுகின்றேன் என்று சொன்னால் எவனாவது மதிப்பானா?  

அவர்களைப் போன்றவர்கள் விரும்பாத மற்றொரு செயலை நானும் மகள்களும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.  

மொட்டை மாடியில் கோதுமை, அரிசி, சாதம், தண்ணீர் என்று விருந்தினருக்குத் தலைவாழை இலை போட்டு வரவேற்பது போலத் தினமும் வரும் விருந்தாளிகளுக்காக நேரம் ஒதுக்கி சில காரியங்கள் செய்து வருகின்றோம்.  இரவில் கொண்டு போய் வைத்தால் அதிகாலை எட்டு மணிக்குள் அனைத்தும் காலியாகும் விடும்.

முதலில்  திருமதி மயிலார் வருவாள். பிறகு மற்றொரு பக்கத்திலிருந்து தோகையோடு ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே கூட்டமாக அங்காளி பங்காளி போல மற்ற மயில்களும் வந்து சேரும். அவர்கள் வரும் போதும் உற்றார் உறவினர்களை அழைத்துக் கொண்டு காக்கையார் வந்து உணவருந்துவார். இடையிடையே குயில், அணில் வரைக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் உண்டான உணவு இருப்பதால் இவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் அவரவர் நேரம் பார்த்து வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போடாமல் தின்ற திருப்தியில் சப்தம் போட்டு இருப்பை காட்டி விட்டுச் சென்று விடுகின்றனர்.

தொழில் நகரத்தில் பித்ருக்களின் ஆசி வேண்டி பல லட்சம் மதிப்புள்ள வாகனங்களில் பல ஊர்களுக்கு பறந்து செல்லும் பெரிய முதலாளிகளைப் போல காசை வீணாக்காமல் இருக்கும் இடத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் முப்பதாயிரம் கோடி தேவர்களுக்கும் எங்கள் பங்களிப்பை எங்களுக்குத் தெரிந்த வகையில் தினமும் செய்கின்றோம்.

அணில் பிரசவம் முதல் மயில் தன் குட்டிகளை அழைத்து வந்து அறிமுகம் செய்து விடும் வாய்ப்பு வரை தினமும் பார்க்கும் எனக்கு மன அழுத்தம் இன்றி எண்ணிய எண்ணங்கள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறிய தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகள் நியூரான் திசுக்களில் விரவியிருப்பதால் ஒவ்வொரு நாள் இரவும் என்னைத் தாலாட்டும் இரவாக உள்ளது. 

இரவு எளிதாக தூக்கம் வந்து விடுகின்றது என்பதனை நண்பரிடம் சொன்னதை இன்று எழுதிப் பார்த்தேன்.

அரசியல் இல்லாத உலகத்திலும் நான் வாழ்கிறேன்.

No comments: