Tuesday, November 01, 2022

அம்மா மரண வாசலில் நிற்கின்றார்

"அம்மாவை நீங்க கொஞ்ச நாளைக்கு வச்சுக்றீங்களா?"?

நேற்று மாலை ஊரிலிருந்து அழைப்பு வந்தது. 
அழைப்பு வந்த நொடி முதல் என் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கின்றது. அம்மாவின் தற்போதைய நிலைமையை யோசித்துப் பார்க்கும் போது வயோதிகம் என்பது மனித வாழ்க்கையில் எத்தனை பெரிய கொடுமையான தண்டனை என்பது போலத் தெரிகின்றது.

அப்பா இறந்து 21 வருடங்கள் முடிந்து விட்டது.  66 வது வயதில் இறந்தார். சென்னையில் இருந்த மகள் வீட்டுக்குச் சென்று விட்டு நள்ளிரவில் திரும்பி கிளம்பி வந்தார். 

அதிகாலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய போது படிக்கட்டில் தடுமாறி கீழே விழுந்தார். விழுந்த நொடியில் இறந்தார். எப்போது இறந்தார் என்பதனை அறியாத உடன் வந்த மூத்த மருமகன் அவசரம் அவசரமாக அங்கேயிருந்த பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ல் ஏற்றி அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் இறந்து கால் மணி நேரம் ஆகி விட்டது என்றதும் அவருக்குப் படபடப்பாகி விட்டது. 

தட்டுத்தடுமாறி அதே ஆம்புலன்ஸ் ல் ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.  செய்தியைக் கேட்ட எவராலும் நம்ப முடியவில்லை. சென்னையில் வழி அனுப்பிய மகளுக்கு அழைத்துச் சொன்ன போது அவர் முதலில் நம்ப மறுத்தார். அழுது கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தார். நம்ப முடியாதது மனிதர்களின் மரணம். திடீர் மரணம் என்பது பலருக்கு அதிர்ச்சியை உருவாக்குவதைப் போலச் சிலருக்கு ஆச்சரியத்தையும் அளிக்கும். அப்பா அப்படித்தான் இறந்தார்.  

அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி என்று ஊரில் உள்ள ஒவ்வொருவரும் அவரை பெருமையுடன் பாராட்டினாலும் எந்த மகனும் மகளும் 21 வருடத்திற்கு முன்பு அவரை முழுமையாக அங்கீகரித்தது இல்லை. காரணம் அவரின் பழமைவாத வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை வைத்திருந்தார். அதற்குள்  தான் அனைவரும் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வைத்திருந்தார். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியிருந்தார். 

அம்மாவையும் இப்படித்தான் தொடக்கம் முதல் முரட்டுத் தனமாக கையாண்டார்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். அசைவ உணவுப் பிரியர். ஆடம்பரத்தை அறவே வெறுத்தவர். ஆனால் மாறிய காலச் சூழல் ஒவ்வொன்றையும் அவர் கருத்தில் கொள்ளவே இல்லை. 

சொல்லப் போனால் அப்பா இறந்த பின்பு அம்மா மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்றே சொல்வேன்.  ஒவ்வொரு மகன் வீட்டிலும் மாறி மாறி இருந்தார். தான் விரும்பியதை உண்டார். தோன்றும் போதெல்லாம் பேசினார்.  ஆரோக்கியமாக இருந்தார். வாழ்ந்தார். மகன்களைப் பெருமையாகப் பேசினார். விரும்பிய ஆடைகளை அணிந்தார். எனக்கு இனி புடவைகள் வேண்டாம். பீரோ முழுக்க ஏராளமாக சேர்ந்துள்ளது என்று செல்லமாக சலித்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு ஒவ்வொரு மகன்கள் மூலம் வெவ்வேறு விதமான கௌரவம் கிடைத்தது.

தொலை தூரத்தில் இருந்த மகன் மாதம் ஒரு தொகை அனுப்ப மற்ற மகன்கள் பார்க்கச் செல்லும் போதெல்லாம் கையில் பணம் கொடுத்து விட்டு வர "இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகின்றேன்" என்று அன்று அவர் இருந்த தம்பி வீட்டில் உள்ள செலவுக்குக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

நான் அம்மாவை திருப்பூருக்கு அழைத்து வந்தேன்.  


முழுமையாக ஒரு மாதம் கூட இங்கே இருக்கவில்லை.  

அவருக்கும் இந்த ஊர், இந்த மண், இந்த மக்கள் எதுவும் பிடிக்கவில்லை. மனம் ஒப்பவில்லை.  மறுபடியும் பலமுறை அழைத்த போதும் வரவே மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.  இதற்குப் பின்னால் உள்ள உளவியலை இன்று வரையிலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மற்ற அத்தனை பேர்களும் காரணம் கேட்ட போது "அந்த ஊருக்குப் போனால் ஒரு வேளை அங்கே இறந்து போய் விடுவேனோ என்று பயப்படுகின்றேன்.  நான் இங்கே தான் சாக வேண்டும்.  இந்த மண்ணில் தான் புதைக்கப்பட வேண்டும்" என்று அவர் காரணமாகச் சொன்ன போது என் வயதில் அதனை உணரத் தெரியாமல் எரிச்சலுடன் திட்டி விட்டு அதற்குப் பின்னால் அவரைப் பற்றிக் கவலைப்படுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.

ஊரில் உள்ள அண்ணன், அருகே உள்ள தம்பி என்று அவர் பயணம் தொடங்கி மற்ற தம்பி மூத்த அண்ணன் என்று பயணம் என்பது மாறி மாறிப் போய்க் கொண்டேயிருக்கின்றது என்பதனை அவ்வப்போது யாரோ ஒருவர் தகவலாக அழைத்துச் சொல்வார்கள்.  நான் கேட்டுக் கொள்வதோடு சரி.

ஆனால் நேற்று வந்த அழைப்பு மனதைக் கலங்க வைப்பதாக இருந்தது. அனைத்து வசதிகளோடு வாழும் அம்மா, மகன்கள், மகள்கள் என்று ஆதரவோடு வாழுகின்ற இவருக்கே வாழ்க்கை தலைகீழாக இருக்கின்றதே என்று நேற்று முதல் யோசித்துக் கொண்டேயிருக்கின்றேன்.

கடந்த ஏழெட்டு மாதமாக அவரின் எண்ணம், நோக்கம், செயல்பாடுகள் அனைத்தும் மாறிவிட்டது. அவருக்கு எத்தனை வயது என்று உறுதியாக யாருக்கும் தெரியாது. அவருக்கே தெரியாது.  

மூத்த அண்ணன் பிறந்த ஆண்டு கணக்கு வைத்துப் பார்த்தால் அவருக்கு வயது இப்போது 80  முதல் 85 வயதிற்குள் இருக்கலாம்.  இப்போது போல 18 வயதிற்குள் திருமணம் செய்வது கட்டாயம் என்கிற சூழல் இல்லாத காலத்தில் அப்பாவைத் திருமணம் செய்துள்ளார்.  இவருடன் ஏழெட்டு குழந்தைகள் பிறந்து ஒவ்வொரு குழந்தைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து பல்வேறு காரணங்களால் பல்வேறு சூழலில் இறக்க இவர் மட்டும் தான் ஒத்த பிள்ளையாக வாழ்ந்துள்ளார். 

இவரின் அப்பாவும் இவர் திருமணம் ஆகி வந்த சிறிது காலத்திலேயே  இறந்து விட்டார்.  ஆனால் அப்பா என்ற ஆண்மகன் வாழ்நாள் முழுக்க மனைவிக்கு அடங்கி நடப்பவராக வாழ்ந்துள்ளார்.  

திருமணம் ஆகின்ற வரைக்கும் தன் அம்மாவின் உழைப்பின் மூலம் தான் வளர்ந்துள்ளார். 1950 க்கு முன் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது. படிக்க வைக்கத் தேவையில்லை என்பதன் அடிப்படையில் அறந்தாங்கியில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடம் மட்டும் சென்று உள்ளார்.  அப்பாவைத் திருமணம் செய்து வந்த பிறகு வருடம் ஒரு குழந்தை பெற்றுக் கொடுப்பது என்ற உன்னத நோக்கத்தோடு பெரிய கூட்டத்திற்குச் சமைப்பது தான் வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் சுருக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் இருந்த மற்ற இரண்டு சித்தப்பாக்கள் குடும்பமும் சேர்ந்து வாழ்ந்த கூட்டுக் குடித்தன வாழ்க்கைக்கு உழைப்பதே தன் இல்லற வாழ்க்கை என்பதனை அடுத்த நாற்பது வருடமாக வாழ்ந்து கழித்துள்ளார்.  

நரகத்தின் வாசலைத் தொட்டு வளர்ந்துள்ளார் என்று சொல்ல வேண்டும்.  

வயல், கடை, வீடு என்று எப்போது ஜே ஜே என்று ஆட்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.  பந்தி போலச் சாப்பாடு கூடம் களைகட்டிக் கொண்டேயிருக்கும்.  மூத்த மருமகள் என்கிற நிலையில் அம்மா தான் எல்லாத் தப்புக்கும் காரணமாக இருந்துள்ளார்.  

கணவன்  மனைவியை அடிப்பது பெருமையான சமாச்சாரம் என்ற காலகட்டத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து வந்து அப்பா இறக்கும் வரைக்கும் சுதந்திரம் என்றால் கிலோ என்ன விலை? பெண் உரிமை என்பது எந்த ஊரில் கிடைக்கும்? என்பது வரைக்கும் அவர் வாழ்க்கையை நான் ஓரளவுக்கு திருப்பூர் வந்து யோசித்துப் பார்த்துள்ளேன்.

கடந்த ஒரு வருடத்தில் அவர் தோற்றம் மாறியது. எண்ணம் மாறியது. பேச்சு குழறத் தொடங்கியது. பிடிவாதம் அதிகமானது.  அவரால் சுயநினைவுடன் யோசிக்க முடியவில்லை. 

தன் கழிவுகளை எழுந்து சென்று கழிக்க முடியவில்லை. அடுத்த நொடியில் என்ன பேசுவோம்? என்பதனை உணர முடியாத நிலையில் இருக்கின்றார்.  

திடீரென்று உற்சாகமாக பேசுகின்றார். பல சமயம் தான் படித்த திண்ணைப் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து மிகப் பெரிய பிரச்சனையை உருவாக்குகின்றார்.

மருமகளைப் பார்த்து நீ யார் என்கிறார்? இது போலக் குழந்தைப் பருவத்தின் வாசலில் இருக்கின்றார். வயோதிக சூழலில் அவர் மூளையில் உள்ள நியூரான்களில் உள்ள நினைவுத் திறன் சார்ந்த திசுக்கள் அனைத்தும் சோர்ந்து போய் விட்டதாகவே கருதுகின்றேன்.  

ஒவ்வொரு தம்பியும் சோர்ந்து போய் விட்டார்கள்.  மகள்கள் அழைத்தாலும் நான் அங்கே செல்ல மாட்டேன் என்கிற பிடிவாதம் குறையாத மனுசியாகவே இன்னமும் இருக்கின்றார். 

நான்கு தலைமுறைகளை நல்லவிதமாகப் பார்த்து விட்டார். வறுமை இல்லை. துன்பம் இல்லை. அவர் வாழ்வில் துயரங்கள் எதுவும் நடந்தும் இல்லை. ஊனமாக பிள்ளைகளைப் பெற்றெடுக்கவில்லை.  எந்த மகனும் மகளும் அவமரியாதை செய்யும் அளவுக்கு வாழ்க்கை வாழவில்லை.  

ஆனால் அவர் தன் கடந்த கால வாழ்க்கையில் கணவன் மூலம், மாமனார், மாமியார் என்று தொடங்கி அந்தக் கால உறவுகள், இறந்து போன பல மனிதர்கள் தன்னை நடத்திய விதங்கள் என்று ஒவ்வொன்றையும் தற்போது வரிசைப்படுத்தி அதன் கசப்புகளைப் பட்டியலிட்டு ஆக்ரோசமான மனநிலையில் இருப்பதை எப்படி மாற்றுவது என்பது யாருக்கும் புரியவில்லை.

அவர் மரணத்தின் வாசலுக்கு வந்து விட்டார் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது. 

ஆனால் அவர் அமைதியாக வாழ முடியாத அளவுக்கு அவரின் பழைய நினைவுகள் அனைத்தும் பாடாய்ப் படுத்துகின்றது என்பதனை உணர முடிகின்றது.  

வெளியுலகம் என்பது என்றால் என்னவென்றே தெரியாது தன் வாழ்க்கையை முடித்து விட்டோம் என்ற ஆதங்கம் உள்ளே இருக்குமோ? என்று பலமுறை யோசித்துள்ளேன்.  

அங்கீகாரம் என்பது அவர் வாழ்க்கையில் கிடைத்ததே இல்லை.  

காரணம் அப்பா, சித்தப்பாக்கள், தாத்தா,  என்று அனைவரும் முரட்டுத்தனமான ஆணாதிக்க வல்லூறுகள்.  

கொத்திக் கொண்டேயிருப்பது தான் தங்களின் வீரத்தின் அடையாளம் என்பதாகக் கருதியவர்கள்.  எந்த ஆண்களும் இப்போது இல்லை. அனைவரும் இறந்த விட்டனர்.  ஆனால் அம்மாவின் கோபம் இன்னமும் அடங்கவில்லை. 

ஒவ்வொருவரும் தன்னை நடத்திய விதத்தை உள்ளே வைத்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது தான் அதன் நினைவலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றது என்று மூத்த சகோதரி அழைத்துச் சொன்னார்.

மனைவி மகள்களை நான் திட்டுவதே இல்லை.  என் கோபத்தை என் புறக்கணிப்பு மூலம் அவர்களை உணரவைக்கின்றேன். 

காரணம் அப்பாவைப் போல நானும் என் மனைவிக்கு முன்னால் இறக்க விரும்புகின்றேன். நான் இறந்த பிறகு என் மனைவி என் அம்மா போலக் கொந்தளிப்பான மனநிலையில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

No comments: