Wednesday, November 16, 2022

பசி மாறி ருசி

கருணாநிதி எம்ஜிஆரைப் போல திரைப்படத் துறையில் உள்ளே புகுந்து வெளியே வந்தாலும் அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆர் போல மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  குறிப்பாக எம்ஜிஆர் போல அதனை வாக்காக மாற்ற முடியவில்லை. உதயசூரியன் சின்னத்தை அண்ணாத்துரை கட்டளையின் பேரில் அவர் மேல் கொண்டு இருந்த மரியாதை மற்றும் அன்பின் காரணமாக எம்ஜிஆர் தன் படத்தில் பாட்டில் வைத்து கிராமப் புற மக்களிடம் கொண்டு சேர்த்தார்.



ஆனால் கருணாநிதி எப்படி திரைப்படத்துரையை தன் கைப்பிடிக்குள் வைத்து ஆட்டுவித்தாரோ அதே அவரின் வாரிசுகள் இன்று லவ் டுடே படத்த்து விமர்சனம் எழுதும் அளவுக்கு நேரம் உள்ளது. பேட்டி கொடுக்கின்றார்கள். சென்னை மக்கள் படும் துயரத்தை விட இதனைப் பார்த்து போது நிச்சயம் இது அண்ணாமலை அவர்களின் பார்வைக்கு சென்று இருக்கும் என்றே நினைத்தேன். 

சரியாக அந்தியூர் ஆர்ப்பாட்டத்தில் இதனைச் சொல்லியே பிளந்து கட்டியுள்ளார்.

சென்னை மழை வெள்ளத்தில்/லவ் டுடே பார்த்து மகிழ்ச்சியில் முதல்வர்/அண்ணாமலை அந்தியூர் ஆர்ப்பாட்டத்தில்


திருக்குவளை தந்த திருமகனார் முதல் முறை எம்ஜிஆர் தயவால் பதவிக்கு வந்தார். எம்ஜிஆர் ஏன் கருணாநிதியைத் தேர்ந்தெடுக்க உதவினார் என்றால் காங்கிரஸ் இன்னமும் வலுவாக உள்ளது? அதனை எதிர்க்க சரியான நபர் வேண்டும்.  அண்ணாவிற்குப் பிறகு இருந்த எவரும் எம்ஜிஆர் எதிர்பார்த்த அளவுக்குத் திறமையானவர்கள் இல்லை என்பதன் அடிப்படையில் முழு நம்பிக்கையின் அடிப்படையில் தன் நண்பர் என்ற நோக்கத்திலும் கருணாநிதியின் கையை எம்ஜிஆர் உயர்த்தினார். போட்டியில் இருந்த மற்ற அனைத்து கைகளும் முணுமுணுப்பு கூட இல்லாமல் அமுங்கிப் போனது. 

காரணம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து. 

அதுவொரு மந்திரச் சொல். வளர்க்கும். வாழ வைக்கும். அழிக்கும். ஆளே இல்லாமல் ஆக்கி விடும்.

அதிகாரம் என்பதனை அண்ணா இருந்த போது கருணாநிதி வெறித்தனமாக விரும்பினார். தனக்கு போலிஸ் இலாகா கொடுங்கள் என்று அண்ணாவிடம் கேட்ட கதையை அண்ணாவே தன் நண்பர்களிடம் நக்கலாக பகிர்ந்த கதையுண்டு.

கருணாநிதி முதல் முறையாக தமிழக முதல்வரானதும் சூழலைப் புரிந்து கொண்டார். எதார்த்தத்தைப் பார்த்துக் கொண்டார். ஒன்றுமே செய்யவில்லை. தன் நண்பர் மூலம் அண்ணா இறந்த பின்பு கிடைத்த பதவி என்பதால் கவனமாக இருந்தார். 

தேர்தல் உடனே வந்தது.

இரண்டாவது முறை 184 சீட் பெற்று பெரும்பான்மையுடன் வந்த போதும் எம்ஜிஆர் ஆதரவு இருந்தது. பிறகு தன் நிஜமான வேசித்தனத்தைத் தொடங்கினார்.  களையெடுப்பு நடக்கத் தொடங்கியது.  அப்போது தமிழகம் 90 சதவிகிதம் கிராமங்கள் தான்.  சென்னையிலிருந்து ஒரு தகவல் காரைக்குடி சென்று சேர மூன்று நாட்கள் கூட ஆகலாம். உள்ளே இருக்கும் கிராமத்திற்கு அந்த தகவல் போகவும் செய்யாது. அவரவர்களும் வயல்களுக்குள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் காணாமல் போய்க் கொண்டேயிருந்தனர்.

இந்த சூழலில் கருணாநிதி தன் நீண்ட அரசியல் வாழ்க்கையை மிக அழகாக தீர்மானித்து தன் பணியைத் தொடங்கினார்.

நீண்ட தூரப் பயணத்திற்கு, தன் எண்ணமான தலைமுறை தாண்டிய இலக்குக்கு எவரெல்லாம் இடைஞ்சலாக இருப்பார்களோ அவர்களை முதலில் வெளியேற்றினார்.  பட்டியல் நீளம். கருணாநிதி யாரையும் சாதாரணமாக பழிவாங்க மாட்டார். 

வெளியேறியவர் வாழ்க்கை முழுக்க அரசியல் பக்கமும் கருணாநிதி பக்கமும் திரும்பிப் பார்க்காத அளவுக்குப் புனிதப் பணிகளைச் செய்து விடுவார். நா கூசும் வார்த்தைகள் முதல் நாகரிகமற்ற செயல்பாடுகள் வரைக்கும். சிலவற்றை எழுதக்கூட முடியாது.

வெளியேற்றியவர்களின் முக்கியமானவரும் முதன்மையானவரும்  எம்ஜிஆர்.  

ஆனால் கருணாநிதி தன்னளவில் மனதில் உள்ள கொள்கை என்பதனை ஓரளவிற்குச் செயலாற்றுவதில் ஆர்வம் காட்டினார்.  ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அரசியல் கணக்குகளை வைக்க தவறவில்லை. 

பணம் படைத்தவர்களுக்கு எது பணத்தைத் தொடர்ந்து தந்து கொண்டு இருக்கின்றது.  அதில் கை வைத்தார். நாட்டுடைமையாக்கினார். கட்சிக்காரர்களுக்கும் தனக்கும் லாபம் என்பதனைக் கண்டு கொண்டார்.  முதலாளிகளால் அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா? 

மத்திய அரசு உதவாத போது நெல் கொள் முதல் பண்டக சாலைகளை உருவாக்கினார்.  இது ஒரு கல்லில் பல மாம்பழங்களை அவருக்குத் தந்தது. காரணம் அப்போது தமிழகத்திற்குப் பசி தான் முக்கிய பேசு பொருளாக இருந்தது.  காங்கிரஸ் நிர்வாகத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.  மக்கள் அரிசிக்காக நாயாய் பேயாய் அலைந்து கொண்டு இருப்பதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். மக்களின் கொலைவெறி அண்ணாவிற்குச் சாதகமாக அமைந்தது. 

எங்களுக்கு யோக்கியன் தேவையில்லை.  எங்கள் தேவைகளை எவன் நிறைவேற்றுகின்றானோ அவனே எங்களுக்குப் போதும் என்கிற தலைமுறையின் முதல் புள்ளி அப்போது தான் தொடங்கியது.  அண்ணா வென்றார். காமராஜர் தோற்றார்.  இப்போது அதன் மூன்றாவது தலைமுறை மத்திய அரசு  37 ரூபாய் செலவில் மானியமாக வழங்கும் ரேசன் அரசியை வாங்கி வந்து கோழிக்குப் போடும் அளவுக்குச் சமூகம் மாறியுள்ளது.

பசி மாறி ருசி வந்த காரணத்தால் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

ஆனால் கருணாநிதிக்கு  எம்ஜிஆர் என்பது கண்ணில் விழுந்த தூசியாகவே கடைசி வரைக்கும் இருக்க தடுமாறிப் போனார்.  அதிகாரம் இல்லாமல் தன்னால் வாழ முடியாது.  ஆனால் எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் அது தமிழக மக்கள் தனக்குத் தரவும் மாட்டார்கள் என்ற எதார்த்தத்தை உணர்ந்து வெறுத்துப் போய் இருந்தார்.

எம்ஜிஆர் 1977ல் ஆட்சிக்கு வந்தது முதல் அவரை நகர்த்த முடியாமல் அவர் இறந்த பின்பு கட்சி உடைபட்ட பின்பு அதிகாரத்தை அடைந்து மூச்சு வாங்கிய போது அவருக்குள் ஒரு தீர்க்கமான ஞானம் உருவானது.  

மக்களை நம்பி பிரயோஜனமில்லை. அவர்களைக் கடைசி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஆனால் அரசின் செயல்பாடுகள் எதுவும் அவர்கள் கண்களுக்குக் காதுகளுக்கு செல்லாமல் இருந்தால் நாம் நினைத்தபடி இங்கே கோலோச்சமுடியும் என்பதனை உணர்ந்து தீர்க்கமாக சில முடிவெடுத்தார்.  

ஒன்று பத்திரிக்கையாளர்.  மற்றொன்று நீதிமன்றங்கள்.

ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் மற்றொரு பக்கம் கட்சிக்காரர்கள்.

இந்த நான்கு முனையைக் கையாள்வதில் மிகப் பெரிய அளவுக்குக்  கருணாநிதி வெற்றி பெற்றார் என்பது உண்மையே.

அது கோமாளி வரைக்கும் தொடர்கின்றது.

No comments: