Monday, November 14, 2022

K. Annamalai Speech - You are IAS Officer/You are IPS Officer/நீங்களும் IAS ஆகலாம்

திருப்பூரில் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் செயல்பாடுகள் பார்த்து மனதளவில் இவர்கள் மேல் ஒருவிதமான பரிதாபம் உருவானது. 
ஆனால் இன்று காலை சென்னையில் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகடாமியும் தினமலரும் இணைந்து நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை நடத்தினர். நிறுவனர் திரு. பூமிநாதன். ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார் (தமிழக கல்வித்துறை ஆணையர் பெயரும் திரு. நந்தகுமார் தான். இவர் ஐஏஎஸ்) அதன் பிறகு பாஜக தலைவர் திரு. அண்ணாமலை என மூன்று பேர்கள் பேசி உள்ளனர். முதல் இருவர் பேசுவதை தினமலர் தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். 

இதில் அண்ணாமலை அவர்கள் பேசியதை மட்டும் கொடுத்துள்ளோம். 

தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய தாக்கத்தை அண்ணாமலை தன் பேச்சின் மூலம் உருவாக்கியுள்ளார். அரசியல் பேச்சு எப்படி பேசுவார் என்பது நமக்குத் தெரியும். இங்குள்ள அரசியல் சூழலில் இவ்வளவு தான் முடியும் என்பதாகவே நமக்கு நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆனால் இதில் அண்ணாமலை பேச்சு என்பது நூறு சதவிகிதம் எதார்த்தம். உண்மை. நேர்மை. சத்தியம் என்று எல்லாமே கலந்து பேசியுள்ளார். எனக்கே சில திறப்புகள் உருவாகியுள்ளது. உங்கள் மகன் மகள் இருந்தால் அவசியம் இதனை முழுமையாக கேட்கச் சொல்லுங்கள். அடுத்த சில நாட்களுக்கு மனம் முழுக்க இந்த பேச்சே இருக்கும் என்கிற அளவுக்கு உள்ளது. என் மிக நெருங்கிய உறவுக்கூட்டத்தில் மூன்று பெண்கள் அவர்கள் அம்மாவிடம் தயவு செய்து திருமணம் செய்து கொடுக்க வேண்டாம். டிகிரி முடித்தவுடன் யூபிஎஸ்சி பரிட்சைக்கு தயார் செய்யச் சொல்லவும். காரணம் மூவரும் 97 முதல் 98 வரை தான் மதிப்பெண்கள் பெறுவார்கள். 

தொடக்கம் முதல் கடைசி வரைக்கும். சரஸ்வதி அவர்கள் நாக்கில் இருக்கின்றார் என்பார்களே அது போல. ஆனால் குறிப்பிட்ட சமூகம் என்பதால் திருமணம் நடந்து முடிந்தது விட்டது. மூன்றும் இப்போது தின்று பகலில் தூங்கி குட்டி போட்டு குந்தாணி மாதிரி சராசரி தமிழச்சி போல வாழக் கற்றுக் கொண்டு சீரியல் பார்த்துக் கொண்டு எனக்கு நேரமே பத்தல என்பதாக தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். 

ஏதாவது விசேடத்தில் என்னைப் பார்த்தால் மூவரும் வேறு பக்கம் ஓட்டமாக ஓடி விடுவார்கள். அண்ணாமலை பேசிய பேச்சுக்களை அவர்களுக்கும் அனுப்பி உள்ளேன். 
ஆதங்கமாக இருந்தது.  

கொரோனா வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழகத்தில் யூபிஎஸ்சி பரீட்சையை எளிதாக வென்று விடலாம் என்று ஆசை காட்டி தமிழகம் எங்கும் புற்றீசல் போலப் பல நிறுவனங்கள் நேரிடையாக மறைமுகமாக (புரவலர்) பயிற்சி மையம் உருவாக்கினர். அந்த சமயத்தில் இங்கு ஒரு பெரிய ஆய்த்த ஆடை நிறுவனமும் அந்த புனிதப் பணியில் இறங்கியது. அப்போது மகள் எட்டாவது படித்துக் கொண்டு இருந்தார். ஆச்சரியம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் உருவாக்கி இருந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தேன். எச்சிலை துப்ப வில்லை. அது நமக்கு நொதித்தலுக்கு உதவும் என்பதால். 

அவர்கள் தற்போது மிகப் பெரிய கல்வி வணிகத்திலும் ஈடுபட்டு அதிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 34 வது இடத்திலிருந்து தரத்தில் அதள பாதாளத்தில் இருந்தார்கள். 3000 கோடி வர்த்தகம் செய்பவர்களால் ஏன் முடியாது? 

அதற்குள் இருப்பது தான் நிஜ அரசியல்? அவர்கள் தான் ஐஏஎஸ் ஆக்குகின்றோம் என்று இருட்டறையில் முரட்டுக்குத்து கணக்காக அலுவலகம் தொடங்கி கல்லா கட்ட நினைத்துச் சூடு பட்டுப் பொத்திக் கொண்டு போய் விட்டார்கள். மூடியும் விட்டார்கள். இப்படித்தான் தமிழகம் முழுக்க சாதாரணக் குடும்ப வருவாயை உறிஞ்சும் விதவிதமான நாதாரிக்கூட்டம் உள்ளது. 

ஆனால் அண்ணாமலை சொன்ன "முதல் முறை ஐஏஎஸ் ல் தேர்ச்சி பெற்றால் அது அதிர்ஷ்டம் மற்றும் கடவுளின் அனுக்கிரகம் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார். நம் மாணவர்களைச் சுற்றி சில விசயங்கள் உள்ளது. 

சினிமா சினிமா சினிமா. (இதனைக் கடந்து வர வாய்ப்பே இல்லை) 

சமூக வலைதளம் ( முற்றிலும் இதனை விட்டு வெளியே வந்தால் மட்டுமே ஏதாவது நல்ல சிந்தனைகளை உருவாக்க முடியும். கொஞ்சுண்டு என்பதெல்லாம் வேலைக்கு உதவாது) அண்ணாமலையும் இதையே இதில் பேசியுள்ளார். 

எதிர்மறை சிந்தனைகள் ( நீட் எழுதச் செல்வதற்கு முன்பு தான் அரசியல் கட்சிகள் செய்யும் அயோக்கியத்தனம். அதற்கு முந்தைய மாதங்கள் வரைக்கும் அமைதியாக இருப்பார்கள். அதே போலத் தேர்ச்சி வரும் சமயத்தில் வேகமாக யாரும் தூக்குப் போட்டுக் கொள்ளாதீர்கள் என்கிற அளவுக்குப் பேசத் தொடங்குவார்கள்) 

தற்போதைய சூழலில் மாணவர்கள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டு உள்ளனர். 

தனியார்ப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள். 

இதற்குள் மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்சி ( இன்று இரண்டு பாடத்திட்டம் உள்ளது. அதனை நடுத்தரவர்க்கம் இன்னமும் அதிக அளவில் கண்டு கொள்ளவில்லை) 

1990 க்கு பிறகு பிறந்தவர்கள் தான் எல்லா இடங்களிலும் ஆசிரியர்கள் என்ற நிலையில் உள்ளனர். இவர்களின் தரம் என்பதனை யூபிஎஸ்சி தேர்வுக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதனை நான் சொல்லத் தேவையில்லை. காரணம் அண்ணாமலை ஒரு முத்தான வாசகத்தை இதில் சொல்லி உள்ளார். இது தேர்வல்ல. உங்கள் ஆளுமையைச் சோதிக்கும் தருணம். 

இதையே நந்தகுமார் அவர்கள் சொல்வது 30 நிமிடத்தில் உன்னிடம் உள்ள அத்தனை திறமைகளையும் நீ வெளிக்காட்ட வேண்டும். இப்போது சொல்லுங்கள். நம் பாடத்திட்டம். நம் ஆசிரியர்கள். கல்விச்சூழல். வாய்ப்புள்ளதா? ஆனால் வாய்ப்புள்ளது என்பேன். 

 உன்னை நீயே புரிந்து கொண்டு அன்றாடச் செய்திகளைச் சமுக நிகழ்வுகளை உள்வாங்கி உன்னை உருமாற்றிக் கொண்டு இந்தத்தேர்வுக்குப் படித்தால் போதும் என்பேன். அண்ணாமலை மற்றும் நந்தகுமார் இருவரும் இதனை வேறுவிதமாக சொல்லி உள்ளனர்.

No comments: