Sunday, November 27, 2022

அரசியலில் வெல்லச் சந்தர்ப்பவாதம் தான் முக்கியம்

வரப் போகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் கொள்கை பேசப் போகின்றதா? இல்லை எப்போதும் போல சந்தர்ப்பவாதம் தான் பேசுமா? என்பதனை சற்று நீள அகலமாக பார்த்து விடுவோம்.
எதிர்ப்பு ஆதரவு என்பது அரசியலை நகர்த்தும் இரண்டு பொத்தான் ஆகும்.  நடுநிலை என்று ஒன்று இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக நான் கண்டு கொள்ள விரும்பவில்லை என்று ஒதுங்கியிருப்பது நல்லது. எது குறித்தும் அவர்கள் கருத்து சொல்லவே மாட்டார்கள். ஆனால் யாரால் தனக்கு ஆதாயம் என்பதில் கவனமாக இருப்பார்கள். கண் கொத்தி பாம்பு போலச் சூழலைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் காத்திருப்பார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் சொந்த வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மேலேறிச் சென்று இருப்பார்கள். 

வெளியே இருந்து பார்க்கும் போது உழைப்பு என்பதாகத் தோன்றும்.  ஆனால் முழுக்க முழுக்க உள்குத்து என்பது அறிந்தவர்களுக்குத் தான் தெரியும். 

இணையம் முழுக்க இவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். கட்சி பிராமண எதிர்ப்பு என்று உரத்துப் பேசும். ஆனால் அந்த கட்சியில் பதவியில் இருப்பவர்களிடம் அதே பிராமணர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். கட்சி சார்ந்த தொழில் நிறுவனங்கள் முதல் எதை மறைப்பது எதைக் குறைப்பது என்பது வரைக்கும் சொல்லித் தரக்கூடிய ஆலோசகராக இருப்பவர்களும் இவர்களே. 

புலிகேசி குடும்பத்திற்கு முறைவாசல் செய்து பதவி வாங்கியவர்களும் அவர்களுக்கு இணையத்தில் ஆதரவளிக்கும் கூட்டத்தில் உள்ள பலரையும் இந்த பட்டியலில் கொண்டு வர முடியும். எந்தக் கொள்கையை வைத்துக் கொண்டு தங்களை ஓட ஓட விரட்டினார்களோ அவர்களிடம் அடைக்கலம் புகுந்து தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் பலரையும் சமீப காலமாக அதிகமாக பார்த்து வருகின்றேன்.

அதே போல விருப்பு வெறுப்பு என்பது கலை சார்ந்த விசயங்களை நகர்த்தக்கூடிய வார்த்தைகள் ஆகும்.  

தொடக்கத்தில் அவர் எழுதியது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த கருத்து சரியில்லை என்பதில் தொடங்கியது.  ஆனால் இணையச் சுதந்திரம் வளர வளர அவர் அந்தக் கட்சியை ஆதரிப்பவர். போட்டுச் சாத்து என்பதில் முடிந்துள்ளது. இதுவே தான் திரைப்படங்களும், திரை நடிகர்களும் நமக்குப் பலவற்றை உணர்த்துகின்றார்கள்.

அரசியல் என்பதனை தொடக்கத்தில் கொள்கை என்பது தான் இயக்கியது.  காரணம் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் அந்த கொள்கையை விரும்பக்கூடியவர்களாக மட்டுமே இருந்தனர்.  திடீர் என்று அண்ணாதுரை திராவிடம் என்ற போலியான வார்த்தையை உருவாக்கினார். நாமெல்லாம் திராவிடர் என்றார்.  ஆரியம் என்ற அருஞ்சொல் பொருளில் கண்டறிய முடியாதவற்றை உலகத்திற்கு முரசறிவித்தார். இரண்டும் மோதிக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி நாம் அத்தனை பேர்களும் 2000 ஆண்டுகளாக பழிவாங்கப்பட்டோம் என்று மொழி நடை மாற்றி முழங்கினார்.

அண்ணாவின் குடும்பத்தையும் கருணாநிதியின் குடும்பத்தையும் இன்னமும் எவரும் முழுமையாக இங்கே எழுதவில்லை. எழுதவும் முடியாது. எழுதவும் மாட்டார்கள்.  அப்போது இருந்த சமூகச் சூழலில் அவர்களின் முன்னோர்கள், உடன்பிறந்தோர்களின் வாழ்க்கை அப்படித்தான் வாழ வேண்டியிருந்தது என்பதாக நமக்கு நாமே சப்பைக்கட்டு கொள்ளலாம். ஆனால் இவற்றை யாராவது நோண்டுவார்களோ என்பதனை மறைக்க தான் புதிதாக கண்டு பிடித்த ஒன்றுக்கு அண்ணாதுரை வார்த்தைகளால்  அலங்காரம் செய்தார். 

கருவாக்கினார். உருவாக்கினார். கட்டமைப்பு என்று ஒன்றைக் காட்டினார். நம்ப வைத்தார். நம்பிக்கையை உருவாக்கினார். பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார். எழுதிப் புரிய வைத்தார். பாலியல்தனமாக கருத்துகளை எடுத்து வைத்து வாசிக்க வைத்து மயக்கும் நிலைக்குக் கொண்டு வந்தார்.  கருத்துக்கு முக்கியத்துவம் மறைந்து கிளுகிளுப்பு போதும் என்பதன் தொடக்கப் புள்ளியை அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

படிப்பறிவு அதிகம் இல்லாத, செய்தி தொடர்பு சாதனங்கள் இல்லாத சூழலில் வாழ்ந்த தமிழக மக்கள் நம்பத் தொடங்கினார்கள். இறுதியாக உறுதியாகவே நம்பி இன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தைப் படித்தாலே புரிந்து கொள்ளாதவன் கையில் தமிழகம்  வந்து சிக்கியுள்ளது. 

யார் மேல் தவறு?

கள்ள மௌனம் காத்து நமக்கென்ன? என்று ஒதுங்கியவர்கள் செய்த தவறு என்பேன். கருத்து வேறு. நட்பு வேறு? என்று சுயநலவாதிகளாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் தந்த பரிசு என்பேன்.அரசியலில் வெறுப்பு என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.  நான் பொறுப்பில் இருந்தாலும் திருட முடியவில்லை. கோடி கோடியாக சேர்க்க முடியவில்லை என்று கட்சியிலிருந்து கொண்டே தலைமையை வெறுப்பது. 

எதிர் கொள்கை கொண்டவனிடம் ரசித்தேன் ருசித்தேன் என்று உறவாடுவது என்று அத்தனை விதமான ஈனத்தனமான மனிதப் புழுக்களையும் நாம் இந்த களத்தில் பார்க்கலாம்.  

நாம் ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டு கொண்டு இருக்கின்றோம்.  அதற்கு எதிராக இருப்பவர்கள், செயல்படுபவர்கள் அத்தனை பேர்களையும் விலகியிருந்து பார்ப்பது தான் சரியாக இருக்கும்.  தமிழக அரசியலில் அதை மிகத் துல்லியமாக நூறு சதவிகிதம் சரியாகச் செய்த ஒரே ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா மட்டுமே. 

சசிகலாவிடம் கெஞ்சிக்கூத்தாடித் தான் அதிமுக ஆட்சியில் மது ஆலை வைத்திருந்தவர்கள் விற்றார்கள்.  திமுக என்று சொன்னாலே பயந்து ஒதுங்கினார்கள். பலரும் ஓடினார்கள். பெற்ற அம்மா என்றாலும் ஜெ என்ற அம்மா போதும் என்று பதவிக்காக ஒதுங்கி வாழ்ந்தார்கள்.  கருணாநிதி முதல் கடைக்கோடி திமுக கட்சிக்காரன் வரைக்கும் பத்துப் பைசா திருட முடியாமல் தவித்தார்கள்.  அதிமுக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறினார்கள். 

ஆனால் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தது முதல் கடைசி வரைக்கும் பயந்து பயந்து தான் நிர்வாகத்தை நடத்தினார்.  கருணாநிதிக்குக் கப்பம் கட்டினார். கட்டவைத்தார். அதன் பிறகு கோப்புகளை நகர்த்தினார். அதனைக் கருணாநிதி கடைசிவரைக்கும் தன் மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தினார். வெற்றியும் கண்டார். அதிர்ஷ்ட வாய்ப்பாக தமிழர்கள் எம்ஜிஆரின் பலவிதமான பலகீனங்களையும் மீறி இவர் நமக்கு நல்லது செய்வார் என்று நம்பினர்.  கருணாநிதி நல்லது எந்த காலத்திலும் செய்ய வாய்ப்பில்லை என்பதனையும் உறுதியாகவே நம்பினர்.  இதன் அடிப்படையில் தான் தொடக்க கால ஜெயலலிதாவின் வாழ்க்கை வெற்றி மேல் வெற்றி கிடைத்து அங்கீகாரம் கிடைத்தது.  

கருணாநிதி மீது உள்ள வெறுப்பை அதிகப்படுத்த அதனையே தன் ஆயுதமாக வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினார்.

மக்கள் கருணாநிதியை எதிர்த்தால் போதும் என்ற புள்ளியில் நின்று கொண்டு தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றினர்.  இன்று வரையிலும் 45 முதல் 85 வயது வரைக்கும் உள்ள இருபது சதவிகித வாக்குகள் அதிமுக என்ற கட்சிக்கு இரட்டை சின்னத்திற்கு லம்பாக உள்ளது. இவர்களின் மனநிலையை எவராலும் மாற்றவே முடியாது.  

கருணாநிதி என்று கிராமப் புறக் கிழவிகளிடம் சென்று சொல்லிப் பாருங்கள்.  தூமயக்குடிக்கி என்று ஆரம்பித்து இலக்கியத்தமிழில் புல்ஸ்டாப் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

ஏன் இதை எழுத வேண்டும் என்பதற்கு ஒரே காரணம் தினகரன் பத்திரிக்கையாளர்களை திருவாளர் கூல் ஆக கையாள்கின்றார்? என்று சொல்லக்கூடியவர்களிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி உள்ளது.  ஏதாவது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆவது, அல்லது தனிப்பட்ட பேட்டி, உரையாடல்களில் அண்ணாமலை அவர்களிடம் கேட்க கூடிய குறைந்தபட்சம் தமிழகம் சார்ந்த தரவுகள், புள்ளிவிபரங்கள் பற்றி எந்த பத்திரிக்கையாளர்களாவது கேட்கின்றார்களா? என்று பாருங்கள்.  

அவரிடம் மட்டுமல்ல.  எந்தவொரு அரசியல்வாதி என்று சொல்லக்கூடிய ஒருவரிடமும் நாம் யோசிக்கக்கூடிய வகையில் ஒரு கேள்வி கூட வராது. 

பாதி கேட்பவர்களுக்கு அது பற்றித் தெரியாது. அல்லது கேட்பவர்கள் இது தான் கேட்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது தான் கேள்விகளாக வரும்.  அப்படித்தான் காலம் காலமாக இங்கே நடந்து வருகின்றது.

ஆனால் தமிழகக் களத்தில் இன்று முக்குலத்தோர் என்று பல பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் சசிகலா கணவர் நடராஜன் உருவாக்கிய (தன் சாதிக் காரர்களுக்கு அரசு வேலை, அரசு அதிகாரம், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) புள்ளி இன்று விஸ்வரூபம் எடுத்து பலன் பெற்ற முதல் மற்றும் இரண்டாவது தலைமுறையின் ஓட்டு இன்று தினகரனுக்குக் கிடைப்பது என்னவோ உண்மையாகும். ஏன் இது பன்னீருக்கு கிடைக்கவில்லை என்பதற்கு ஒரே காரணம் காசு விசயத்தில் பன்னீர் பத்து கருணாநிதி. மத்திய பாஜக இந்த விசயத்தில் தினகரனுக்கு இன்றைய சூழலில் ஆதரவாகவே உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பழனிச்சாமி, பன்னீர், சசிகலா வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தினகரன். இதில் மற்றொரு விசயத்தையும் நீங்கள் கவனத்தில் வைத்திருக்கவும். பாஜக வின் அழுத்தம் காரணமாக சசிகலா அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கின்றார்.  இந்த நிமிடம் வரைக்கும் தினகரனுக்கு நம் சொந்தங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வெளிப்படையான அறிக்கை கொடுக்கவே இல்லை.  சொல்லப் போனால் தனக்குப் பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் தினகரன் தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நான்கு பக்கமும் பூட்டிக் கொண்டு விட்டார். 

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தினகரன் கட்சி பெற்ற வாக்குகள் அனைத்து சாதி விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே என்பதனை சாதாரண மக்கள் கூட உணர்ந்திருப்பார்கள்.

தினகரன், பன்னீர், சசிகலா (எடப்பாடிக்கு என்று தனிப்பட்ட வாக்கு வங்கி இங்கு இல்லவே இல்லை என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும். இவர் கவுண்டர் என்று எவரும் அவரை கொங்கு மண்டலம் விருந்தோம்புவதும் இல்லை. அதிமுக என்று கட்சிப் போர்வையும், கொள்ளையடித்து வைத்திருக்கும் பணமும் அவரை பிம்பமாக காட்டிக் கொண்டு இருக்கின்றது). 

இதனை உணர்ந்த பாஜக கட்டுவிரியன், நாகப்பாம்பு, ராஜநாகம் என்று தெரிந்தும் பாராளுமன்றத் தேர்தலில் அந்த மூன்றையும் சேர்த்து வைத்து போட்டியிட்டுத் தான் ஆக வேண்டும் என்று முடிவு எடுப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.  இது நடக்கும் பட்சத்தில் சசிகலாவிடமிருந்து குறைந்தபட்சம் அறிக்கையாவது வரும்.

காத்திருங்கள்.  

ஆதரவு, வெறுப்பு என்ற வார்த்தைகள் எல்லாம் அர்த்தம் இழந்து அரசியலில் வெல்லச் சந்தர்ப்பவாதம் தான் முக்கியம் என்பதனை வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு உணர்த்தப் போகின்றது.  ஏற்கனவே அப்படி நடந்தது இல்லையா? என்று கேட்டால் அதன் வெர்சன் 2.0 ஆக இருக்கப் போகின்றது.


No comments: