Sunday, November 06, 2022

அண்ணாமலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் உரையாடும் காணொளி

தமிழ் இணைய உலகில் அதிகப்படியான அவமானத்தைப் பெறக்கூடிய முதல் அரசு ஊழியர் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான்.  விமர்சனம் செய்யக்கூடிய பத்தில் எட்டுப் பேர்களின் குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் தான் படிக்கும்.  ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்ப்பதும் இல்லை.  மொத்தததில் இன்றைய சூழலில் அரசு பள்ளிக்கூடம் என்பது வேறொரு "வார்த்தை" கொண்டே அழைக்கப்பட்டு வருகின்றது.  

இடஒதுக்கீடு என் வாழ்க்கையில் என் குழந்தைகள் வாழ்க்கை வரைக்கும் நான் சிறப்புச் சலுகையாக பெற்றது இல்லை.  ஆனால் இடஒதுக்கீடு என்பது முறைப்படுத்தி அதனைச் சரியான வகையில் சரியான நபர்களுக்குக் கொடுத்தால் போதுமானது என்ற எண்ணத்தில் தான் தற்போது அரசு பள்ளிக்கூடச் சூழலைக் கவனித்து வருகின்றேன்.

அரசுப் பள்ளிக்கூடங்களைக் கடந்த மூன்று வருடங்களாக அதன் இயங்கியல் குறித்து நேரிடையாக உள்ளே நுழைந்து பார்க்கும் வாய்ப்பு  எனக்கு அமைந்துள்ளது.   சில உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றேன். 

13 ஆண்டுகள் தனியார் கல்வி என்ற எலைட் சூழலையும் பார்த்தேன். அதன் வணிக செயல்பாடுகளை இரத்தம் உறுஞ்சுவதை கண்டேன்.  இன்றைய சூழலில் தமிழகத்தில் 45 000 என்ற எண்ணிக்கை அளவில் தனியார் கல்விக்கூடங்கள் உள்ளது.  5,000 நிறுவனங்கள் தரமான சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி? வாய்ப்பும் இல்லை. சூழலும் இல்லை.  

நீங்கள் எந்த பெரிய தனியார் கல்விக்கூடங்களின் பெயரைச் சுட்டிக் காட்டினாலும் நேரிடையாக நுழைவுத் தேர்வு (தனிப்பட்ட பயிற்சி இல்லாமல்) எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதனை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். சிபிஎஸ்சி அல்லது என்சிஆர்டி பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும் கல்வி நிறுவனத்தின் பிராண்ட நேம் என்பது பணம் பார்க்க மட்டுமே உதவுகின்றது. ஆசிரியர்கள் பழைய கள் புதிய மொந்தை.

அப்படியெனில் அரசு பள்ளிக்கூட என்ன கிழித்து விட்டது? என்ற கேள்வி உங்களுக்கு வரும்.  

ஒரு மாணவனுக்கு மாணவியருக்கும் முதலில் தேவை ஆளுமைத்திறன்.  

அண்ணாமலை அவர்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் உரையாடும்  காணொளியைப் பாருங்கள்.  அந்த மாணவியர்கள் பேச்சை, கம்பீரத்தை, ஆளுமைத்திறன், சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு விதத்தை என்று ஒவ்வொன்றாக உங்களால் புரிந்து கொள்ள முடியும். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்? தனியார்கூடம் தோற்று விடுகின்றது என்பதனை கண்கூடாகப் பார்த்தேன்.  எந்திரம் போலவே மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

நமக்கு அரசுப் பள்ளிக்கூடம் என்றவுடன் உடனே மனதில் தோன்றுவது அதிகப்படியான சம்பளம் பெறும் ஆசிரியர்கள், வேலை செய்யாத ஆசிரிய சமூகம், திமுக விற்கு ஆதரவாக இருக்கும் கூட்டம், மாணவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், வட்டிக்கு விட்டுச் சம்பாதிப்பவர்கள்  இது போன்ற பலவிதமான குற்றச்சாட்டை இன்று வரையிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுக்கி வருகின்றோம். 

அமைச்சர் மூர்த்தி நடத்திய திருமணத்தில் தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அதிகார வர்க்கம் எத்தனை கோடிகளைக் கொண்டு கொட்டியுள்ளனர் என்பதனை வாசித்து உய்க. இவர்கள் மேல் எவராவது விமர்சனம் வைப்பார்களா?  தனி மென்பொருள் உருவாக்கி லஞ்சம் மட்டும் வசூல் செய்யும் போக்குவரத்து துறை பற்றி பேசுகின்றோமா?  கோடி... கோடி.  

அடுத்து நாம் வைக்கும் குற்றச்சாட்டு இட ஒதுக்கீடு.  

அந்தப் பக்கம் முற்பட்ட வகுப்பினர் (பொருளாதார பலமில்லாதவர்கள்) பெறும் பத்து சதவிகிதம் தொடங்கி  இந்தப் பக்கம் 7.5 சதவிகிதம் வரைக்கும் கறித்துக் கொட்டுகின்றோம்.

என் நண்பர் கடந்த பல ஆண்டுகளாக சொல்லி வருவது என்னவெனில் தற்போது தமிழகப் பள்ளிக்கல்வித்துறைக்கு 38 முதல் 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகின்றது. இதனைக் கணக்கீட்டுப் பார்த்தால் ஒரு மாணவனுக்கு ஏறக்குறைய 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரைக்கும் தமிழக அரசு செலவழித்துக் கொண்டு இருக்கின்றது. இதனை அப்படியே தனியாருக்குக் கொடுத்து நடத்தச் சொன்னால் ஒரு மாணவனுக்கு வருடம் பத்தாயிரம் கொடுத்தால் மிக அற்புதமாக நடத்துவார்கள் என்பார்.

திறமையின்மை, பொறுப்பின்மை, தங்களை மேம்படுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள்......

எங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களைப் பகடைக்காயாக மாற்றி வைத்த கருணா அரசியல்......

லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் இன்னமும் எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்.....

நான் அரசுப் பள்ளிக்கூடங்களை குறைகளுடன் விரும்புகின்றேன்.

நான் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளில் ஒரு பெரிய கூட்டத்தைப் பார்த்து வருகின்றேன்.

மன வளர்ச்சி இல்லாத பெண் குழந்தைகள்.....

அதீதமாக இல்லாமல் ஓரளவுக்குக் கற்றல் திறன் சுமாராக உள்ள மாணவியர்களும் நான்காவது பிரிவு என்று சொல்லப்படுகின்ற தொழில் பிரிவில் படிக்கின்றார்கள். அவர்களை எந்த தனியார்ப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.  அவர்களை 35 மதிப்பெண்கள் எடுக்க வைப்பதே ஆசிரியைகளுக்கு மிகப் பெரிய சவால். நான் கண்கூடாக பார்த்து வருகின்றேன்.  அதனை இந்த வருடத்தோடு புலிகேசி கூட்டம் இழுத்து மூட ஆணை பிறப்பித்துள்ளது.

இத்துடன் எதற்கு இட ஒதுக்கீடு என்று கேட்பவர்கள்? நக்கல் செய்பவர்கள்? வெறுப்புணர்வுடன் எழுதுபவர்கள் தயவு செய்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுடன் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வென்று 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளவர்கள் கலந்துரையாடல் செய்துள்ளதை அவசியம் முழுமையாகக் கேளுங்கள்.

சவாலான சமூக வாழ்க்கை

இடைவிடாத கல்வி வாழ்க்கை

எப்போதும் வேண்டுமானாலும் தங்கள் கல்வி நின்று விடும் வாழும் பெண் குழந்தைகள்.

இடைவிடாத லட்சியத்தை சுடரொளி போல ஏந்திக் கொண்டு இருக்கும் இந்த மாணவியர்கள் உண்மையிலேயே மருத்துவராக வர வேண்டும் விரும்புகிறேன்.

இது போல உள்ள மாணவிகளை நான் இங்கே அரசுப் பள்ளிக்கூடங்களில் கண்கூடாகப் பார்த்து வருகின்றேன்.

அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் கட்டணத்துடன் கட்டாய கட்டணமாக நீட் பயிற்சி கட்டணத்தையும் வாங்குகின்றார்கள்.  ஆனால் யாரும் வெல்வதில்லை. பாதிப் பேர்கள் பரிட்சைக்கு செல்வதில்லை.  அருகே உள்ள பள்ளிக்கூடங்களில் சென்று கேட்டுப் பாருங்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அடிப்படையான விசயங்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்குக் கல்வித்துறையை நகர்த்தாத வரைக்கும் இந்த சிஸ்டம் ஆவது இருந்து தொலைக்கட்டும் என்ற எண்ணம் தான் என்னைப் போன்றவர்களுக்கு உருவாகி மனதை இளக வைக்கின்றது.

அண்ணாமலை அவர்களுடன் மாணவியர்கள் உரையாடும் விதத்தைப் பாருங்கள். 

No comments: