Friday, November 25, 2022

தேவதாசி வாரிசுகள் 2.0

இன்று அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவர் வந்து "வணக்கம் சாமி" என்றார். முதலில் அடையாளம் தெரியவில்லை. நெற்றி நிறைய விபூதி, சந்தனம், ஐயப்பன் சாமியாக மாறியிருந்தார்.  என் வீட்டுக்கு அடுத்த சந்தில் இருப்பவர்.  நேற்று வரை வேறொரு விதமாக வாழ்ந்து கொண்டு இருந்தவர். ஓர் இரவுக்குள் ஐயப்பன் வந்து கனவில் என்ன சொன்னாரோ? இப்படி வந்து நிற்பார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.
அதிகாலை குடிகார சங்கத்தின் தலைவர். மதியக் குடிகார கூட்டணியின் பொதுச் செயலாளர். இரவு சல்லாபக் கூட்டணியின் நிரந்தரத் தலைவர்.  மூன்று பதவிகளை வகித்த காரணத்தால் 365 நாட்களும் மூதேவி அவர் வீட்டில் நிரந்தரமாக வசித்து வந்தாள். என்ன மாயமோ? மந்திரமோ? ஐயப்பனுக்கு விரதம் இருக்க இன்று காலை முதல் புதுக்கோலம் பூண்டுள்ளார்.

இவர் மட்டுமல்ல இவரைப் போல திடீர் சாமிகளின் அலப்பறை நான் இருக்கும் ஊரில் சொல்லி மாளாது. வாயைத் திறந்தால் சாமி சாமி என்று வார்த்தைக்குப் பத்து சாமி போட்டுக் கிறுகிறுக்க வைப்பார்கள்.  சிலர் ஒழுக்கமாய் நியதிகளை கடைப்பிடிப்பார்கள். 

பெரும்பாலும் தனிகிளாஸ் மூலம் தங்கள் விருப்பங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பார்கள்.

இப்போது சிலவற்றை யோசித்துப் பார்க்கலாம்.

இறை அச்சம் வேறு. இறை விருப்பம் வேறு.  

சாமி கண்களைக்குத்திடும் என்பதில் தான் நம் குழந்தைப் பருவ சாமிக் கதைகள் நம்மை நோக்கி வந்து இருக்கும்.  இருபது வயது வரைக்கும் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அல்லாடிக் குழப்ப மனோநிலையில் கடவுள் யார்? என்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து இருப்போம்.  விருப்பம் என்பது பாதிக்குப் பாதி வந்து சேர்ந்து இருக்கும். அதிலும் இறை மறுப்பு என்ற கொள்கை அதுவொரு அறிவின் நீட்சியாக பலரும் பார்ப்பதால் அல்லது பார்க்க வைக்கப்படுவதால் நாற்பது வயது ஆகும் சமயத்தில் நாய்ப் புத்தியோடு அத்தனை பேர்களை பிறாண்டி வாழும் சூழலை அவர்கட்கு வழங்குகின்றது,

இன்று எத்தனை பேர்களுக்கு நிஜமான ஆன்மீகம் குறித்த புரிதல் இருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

சாதிப் பார்வையைக் கடந்து வர முடியாமல், மதம் சொல்லுகின்ற தத்துவங்களையும் உணர்ந்து கொள்ளவும் முடியாமல் இறுதியில் வேடதாரிகளாகவே மாறிவிடுகின்றனர்.  லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் பதவிகள் போல இன்று தக்கார் பொறுப்புகளும், அறங்காவல் குழு அதிகாரமும் மாறியுள்ளது.  இத்துடன் ஆள்பவர்களுக்கு அனுசரணை என்ற வார்த்தையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் புனிதம் என்ற இடத்தில் புழுக்களின் செயல்பாடுகளை மனதை வருத்தப்பட வைக்கும்.

ஆனாலும் அடிப்படை தமிழர்களின் எண்ணங்கள் கடந்த பல நூற்றாண்டுகளாகவே ஒரே மாதிரியாகத்தான் வந்து கொண்டு இருக்கின்றதோ? என்று யோசித்துப் பார்ப்பேன்.

" இப்படி இருப்பதற்குக் காரணம் நீ தான் காரணம் இது பௌத்தம் சொல்லும் தத்துவம்.   ஆனால் தமிழனின் மொத்த வாழ்வியலிலும் கடைப்பிடித்துக்கொண்டு வரும் இறைபக்தி கூட சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆமாம்.  தன்னுடைய கர்மத்தைச் செய்து இறைவனை அடைவது "கர்ம மார்க்கம்".

அறிவைப் பயன்படுத்தி இறைவனை அடைவதற்குப் பெயர் "ஞான மார்க்கம்".

ஆனால் இந்த இரண்டையும் விட எளிய பாமரத்தனமாக "பக்தி மார்க்கத்தை" தான் மத வேறுபாடுகள் இல்லாமல் அத்தனை தமிழர்களும் விரும்புகிறார்கள்.

அன்றும் இன்றும் என்றும் இந்த "பக்தி மார்க்கத்தை" கெட்டியாக பிடித்துக்கொண்டு பயணிக்கிறார்கள்.  ஆலயத்திற்குள் சென்று போய் கொட்டி விட்டால் போது.  உடனடி தீர்வு கைக்கு வந்து விடும்.  ஆத்ம திருப்தி.  பூரண மகிழ்ச்சி.

இந்த மார்க்கத்தை கடைப்பிடிக்கத் தொடங்கிய தமிழர்களின் காணிக்கை பணம் என்பது இன்று இந்து மதத்திற்குத் தொடர்பில்லாத அத்தனை விசயங்களுக்குப் பயன்படுகின்றது. 

தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தார்கள். இன்று அவர்களைப் பற்றி எழுதக்கூடியவர்களும், அவர்களைப் பற்றி ஆராய்ந்தவர்களும் நமக்குக் கொண்டு வந்த சேர்த்த செய்திகள் முக்கால் வாசி பொய்.  

கோவில்களைப் புனிதமாக கருதி தங்களின் அன்றாடச் செயல்பாடுகளைக் கடவுளுக்குப் பணிபுரிவதே தங்கள் பிறப்பின் நோக்கம் என்ற வாழ்ந்த காலம்  என்பது முதல் பகுதியில் இருந்தது. காரணம் அரசனின் நேர்மையான ஆதரவு இருந்தது. தலைமுறை தலைமுறையாக அவர்களும் கௌரவமாக கோவில் என்ற பொருளாதாரச் சுழற்சியில் ஓர் அங்கத்தினராக வாழ்ந்தார்கள்.  

காலம் மாறியது. மன்னர்கள் மாறினார்கள். நிர்வாக நடைமுறைகளும் மாறியது. தேவதாசிகளின் வாழ்க்கை முறையும் மாறியது. பணக்காரர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணையத் தொடங்கினர். வாரிசுகள் உருவாகின. திரண்ட சொத்து இருந்தவர்களுக்கு இது கௌரவமாகப் பார்க்கப்பட்டது.

இன்று அதன் வாழையடி வாழையாக வந்து விழுந்த வாரிசுகள் தற்போதைய ஜனநாயக ஆட்சியில் செய்யும் காரியங்கள் அனைத்துக்கும் நாம் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்க முடிகின்றது.  

ஒன்று சிறுகூட்டம் கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்களாக வெளியே கத்திக் கொண்டு இருக்கின்றார்கள். மற்றொரு கூட்டம் உள்ளே சென்று வேண்டுதல் என்கிற ரீதியில் சிறப்புத் தரிசன சீட்டு பெற்று கடவுள் முன்னால் நின்ற பிச்சை எடுப்பதே இன்றைய ஆன்மீகமாக மாறியுள்ளது.

கடவுளின் பணி?

இன்று எந்த கோவிலுக்குள்ளும் கடவுள் இல்லை. அவர் உள்ளே சிலை வடிவிலாவது இருக்கின்றாரா இல்லையா என்பதனை கவனிக்கக்கூட இங்கே யாருக்கும் பொறுமையுமில்லை. அக்கறையுமில்லை.No comments: