Tuesday, May 19, 2020

CORONA - கேள்வி பதில்

சுய ஊரடங்கு 3.0 - 65
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

சமூகப் பரவல் என்றால் என்ன?

கொரோனா சமூகப்பரவல் என்பது வெளி நாட்டில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா பரவாமல் உள்ளூர் தொடர்புகளில் பரவுவதுதான். ஆனால் அதன் எண்ணிக்கை வேறு மாதிரி இருக்கும். அதாவது கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது தேசத்தில் நூற்றுக்கணக்கில் இருக்கும் நோய்த் தொற்று பல்லாயிரங்களில் மாறி லட்சங்களில் சில நாட்களிலேயே மாறுவதுதான் சமூகப்பரவல்.





2020 மே மாதம் சென்னையில் உள்ள சமூகப் பரவல் குறித்து?


அரசு தரும் எண்ணிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சமூகப்பரவலில்தான் நாம் இருக்கிறோம். ஆனால், அது வைரலாக பரவவில்லை என்றே தோன்றுகிறது. இது சரியாக மேலும் சில மாதங்கள் ஆகலாம். ஊரடங்கை விலக்கிக் கொண்டால் நோயின் தீவிரம் அதிகரிக்கலாம். ஜனவரி மாதத்தில் முன் கூட்டியே செய்திருந்தால் இந்த நோயை நிச்சயம் முழுமையாக கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதையே காலம் நமக்கு உணர்த்துகிறது.

கொரானா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தார் என்கிறார்கள்? இன்னமும் மருந்து மாத்திரைகள் கண்டு பிடிக்கவில்லை என்னும் போது இது எப்படி சாத்தியம்?

கொரோனாவில் இருந்து ஒருவர் குணமடைகிறார் என்பதே பொய்யானது. மருத்துவர் ஒருவர் அப்படி கூறுவதே தவறானது என் நினைக்கிறேன். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதினூடாக கோரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கிறார். மருத்துவர்கள் அவருடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிரித்து கொரோனா தொற்றில் இருந்து அவரை தற்காலிகமாகப் பாதுகாக்கிறார்கள். கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கும் வரை நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் நாம் கொரோனாவை கட்டுப்படுத்துகிறோமே தவிர, கொரோனா நோயில் இருந்து மருத்துவ ரீதியாக குணமடையும் மருத்துவ இதுவரை சாத்தியம் இல்லை. வருங்காலங்களில் அது சாத்தியமாகலாம். நோய் எதிர்ப்பு சக்தி வீழ்ச்சியடையும் போது கொரோனா வைரஸ் மட்டுமல்ல அல்லு சில்லு வைரஸ் எல்லாம் கூட நம்மை வீழ்த்தி விடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அரசாங்கம் சொல்லும் ஊரடங்கு மூலம் நடக்கும் நல்லது என்ன? கெட்டது என்ன?

கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மக்கள் வழக்கம்போல கூடி பணிகளில் ஈடுபடுவது, அதற்காக பயணிப்பது போன்றவை தொற்று ஏராளமானவர்களுக்குப் பரவ வகை செய்துவிடும் என்பதால் ஒரு அசாதாரண நடவடிக்கையாக மொத்த சமூக இயக்கத்தையும் நிறுத்தி வைத்து அனைவரும் வீட்டிற்குள் வசிக்க வேண்டும் என்ற நடைமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடை பிடிக்கின்றன. இந்த நடைமுறையை தாமதமாக கடை பிடித்ததால் இத்தாலி போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கனவர்கள் நோய்க்கு பலியாகிவிட்டனர். இத்தாலியில் நோய்க்கிருமி தொற்றிய வர்களில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகிவிட்டனர்.

எனவே, அநாவசியமாக காலம் தாழ்த்தாமல் மார்ச் மாத மத்தியிலேயே கேரள மாநிலம் லாக் டவுனை தொடங்கி விட்டது. 

மத்திய அரசு மார்ச் 22 ஒரு நாள் காலை முதல் இரவு வரை லாக் டவுன் பரீட்சார்த்தமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு பத்து நாள் லாக் டவுன் அறிவிக்க, மத்திய அரசு மார்ச் 24 நள்ளிரவிலிருந்து 21 நாள் தேசிய அளவிலான லாக் டவுனை அறிவித்தது. இதனால் நோய் பரவுதலின் வேகம் மட்டுப்படும் என்பதே காரணம். லாக் டவுனால் அன்றாடம் வருவாய் ஈட்டும் எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பரிபோகும் என்றாலும் கூட, அனைவரது ஆரோக்கியத்தையும் முன்னிட்டு இதை செய்வதாகவும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் மத்திய மாநில அரசுகள் கூறின.

தேசிய அளவில் லாக் டவுன் தொடங்கிய மார்ச் 24 ஆம் தேதி நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 519. இருபத்தோரு நாள் லாக் டவுன் முடிந்த தினம் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 10815. இதில் குணமடைந்தவர்கள், 1189, இறந்தவர்கள் 353 கழித்துவிட்டால் கூட 9272 பேர் நோய் தொற்றில் உள்ளார்கள். அதாவது இருபது நாட்களில் கிட்டத்தட்ட இருபது மடங்கு அதிகரித்துள்ளதாகவே அரசு தரும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

லாக் டவுன் செய்யாவிட்டால் தொற்று இதைவிட பன்மடங்கு அதிகரிகரித்திற்கும் என்ற வாதம் உண்மையானாலும், லாக் டவுன் காலத்தில் கணிசமாக அதிகரித்திருப்பது தெரிகிறது. மேலும் 19 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையான 21 நாள் காலகட்டத்தில் அதிகரித்தது போல, அடுத்த பத்தொன்பது நாட்களில் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மற்றொரு புறம், இந்தியாவில் நோய் தொற்று இருந்தாலும், நோய் முற்றுவதில்லை, மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. இது குறித்த தகவல்களை அரசு பரிசீலித்து முடிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உருவாகியுள்ளது. இந்த கோணத்தில் சிந்திப்பவர்கள் கோரானா பாதிப்பை விட, லாக் டவுன் பாதிப்புகள் அதிகமாகிவிடும் என எச்சரிக்கிறார்கள்.

ஊரடங்கு, வீட்டிலேயே தனித்திருப்பது என்பதெல்லாம் மாதச் சம்பளம் பெறும் மத்திய தர வர்க்கத்திற்கு சாத்தியம். ஏழை உழைக்கும் மக்கள், அன்றாடக் கூலிகள், அன்றாட வருவாயில் பிழைப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்வாதாரமே லாக் டவுனில் பறிபோகிறது. இவர்களுக்கு பணம் வழங்குவ தாகவும், உணவுப் பொருட்கள் வழங்குவதாகவும் கூறப் பட்டாலும், ஏராளமானவர்களுக்கு அவை சென்று அடையவில்லை என்பதே உண்மை. 

மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது மேலிருந்து கசியும் நீர் போன்றது. டிரிக்கிள் டவுன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது மத்திய தர வர்க்கத்தினர் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது தான் மெக்கானிக்கு களுக்கு வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கனக்கான் மெக்கானிக்குகள் வண்டிகளை செப்பனிட்டுக் கொடுத்தும், பராமரித்துக் கொடுத்தும் தங்கள் தினசரி வருவாயை ஈட்டுகிறார்கள். நாற்பது நாட்கள் வண்டிகளே ஓடவில்லையென்றால் அவர்கள் அனைவருக்கும் ஒரு வருமானமும் இல்லை என்ற நிலையே உருவாகும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கான சிறு விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள் உள்ளன. அவையனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அடைக்கப்பட்ட நிலையில் எத்தனை பேர் வருவாய் இழப்பார்கள் என்பதை யோசிப்பதே கடினமாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் பணக்கார, உயர் மத்திய தர, மத்திய தர வர்க்கத்தின் நுகர்விலிருந்து கசிந்து செல்லும் நீர் மொத்தமாக நின்றுவிடுகிறது எனலாம். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் சக்தி எளியவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் பலரால் சோறாக்கி சாப்பிட முடியவில்லை என்பதே யதார்த்தம். அதை இட்லி, தோசை செய்ய பயன்படுத்துவதே சகஜம். சாப்பாட்டிற்கான அரிசியை விலைகொடுத்துதான் வாங்குகிறார்கள். 

சமீபத்தில் மதுரையிலிருந்து ஒருவர் வாட்ஸ் அப்பில் ரேஷன் அரிசியைக் காட்டி நாங்கள் எப்படி இந்த அரிசியை உண்டு உயிர்பிழைத்திருப்பது என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார். நண்பர்கள் பலரும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து உணவிற்காக உதவி கேட்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தனர். இவை புள்ளி விவரங்களால் புறக்கணிக்கத்தக்க அனுபவங்கள் இல்லை.

இதற்கு அடுத்த நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள். இவை மாதா மாதம் ஈட்டும் வருவாயிலிருந்து பணியில் அமர்த்தியுள்ள ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவார்கள். இவர்களது இலாபம் என்பது பெரும் சேமிப்புகளை உருவாக்குவது அல்ல. மிகக் குறைந்த அளவிலேயே, முதலாளியும் தொழிலாளிகளில் ஒருவராக கொஞ்சம் அதிகம் வருவாய் ஈட்டுபவராக இருப்பார்; அவ்வளவுதான். 

இவர்கள் பலர் மார்ச் மாத சம்பளத்தை எப்படியோ கொடுத்துவிட்டார்கள். ஆனால் ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க முடியுமா என்பது ஐயம்தான். பிரதமர் யாரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறார். அது எப்படி சாத்தியம் என யோசிக்க வேண்டாமா? ஒரு நெடுஞ்சாலை பரோட்டா கடையில் கூட ஐந்து பேர் முதலாளியுடன் வேலை செய்வார்கள். கடையே நடக்கவில்லை என்றால் அவர் எப்படி சம்பளம் கொடுப்பார். எந்த நம்பிக்கையில் அவர்களை வேலைக்கு வைத்திருப்பார் என்பதே கேள்வி.

விவாசாயிகள் இழப்புகளோ மிகக் கடுமையாக இருக்கின்றன. மூர்க்கத்தனமான போலீஸ் கெடுபிடிகளால் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அழுகிப்போன காய்கறிகளினால் ஏற்பட்ட இழப்புகள் தலைசுற்றச் செய்கின்றன. அரசின் அலட்சியமும், மெத்தனமும் கேட்பவர்களின் வயிறையே எரியச் செய்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது கடினம். மேலும், சாதாரணமாகவே மாமூலில் கொழிக்கும் காவல்துறை இந்த நெருக்கடி நிலையிலும் அடாத பணப்பறிப்புகளை செய்துவருவதாக பலரும் கூறுகின்றனர். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும், அரசுதான் இந்த சூழ்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அரசும், ஊடகங்களும் உருவாக்கிய கொரோனா பீதியில் கண்மூடித்தனமான ஊரடுங்கு கொள்கையால் காவல்துறை அத்துமீறல் தலைவிரித்தாடுகிறது.
அது மட்டுமின்றி எல்லா தொழில்களும், விமான கம்பெனிகள் கூட கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கப் போகின்றன. அதானால் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்கள் என்ன, அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் குறித்து மத்திய அரசு எதையுமே கூறவதில்லை என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார ஊக்கத்திற்கான பெரும் நிதி ஆதாரங்களை அறிவித்துள்ளன. அதனால் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுகிறது. 

ஆனால் இந்திய அரசு மிகவும் மர்மமான முறையில் மெளனம் சாதிக்கிறது.  

நிதியமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக் முதல் முறை பேசியபோது பிரதமர் கூறினார். குழு அமைக்கப்பட்டதா,  அது என்ன பரிந்துரைகள் செய்துள்ளது என்பது குறித்து கடந்த இருபத்தோரு நாட்களில் எந்த செய்தியுமில்லை. அத்துடன் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் பகிர்ந்தளிப்பும் சரி, நிறுவனங்களுக்கு திருப்பித் தரவேண்டிய ஈட்டுத் தொகையும் சரி, எதுவுமே வழங்கப்படவில்லை என்பது மத்திய அரசின் நிதி நிலையைக் குறித்த பல்வேறு வதந்திகளை, கவலைகளை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. அரசிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை.

இந்தத் தொடர் முடியும் தருவாயில் இறுதியாக என்ன சொல்ல விரும்புறீங்க?

ராணுவ தளவாடங்கள் பின்னால் ஓடினார்கள்.
வசூலாகும் பாதிப் பணத்தைக் கொண்டு போய் கொட்டினார்கள். மீறி கேட்ட போது தேசபாதுகாப்பு என்றார்கள்.
அணுஆயுதம் பின்னால் ஓடினார்கள். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்றார்கள்.
உரக்கக் கேட்ட போது தேசபாதுகாப்பு என்றார்கள்.
சுதந்திரம் பெற்றது முதல் தின்று கொழுத்து எதையும் கண்டுபிடிக்காமல் சீட்டைத் தேய்த்துக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களை, நாட்டில் உள்ள மொத்த ஆராய்ச்சித் துறைகளை ஒன்று சேர்க்கக் கூடாது என்று அலறினார்கள். இப்போது பாதி தான் சேர்த்துள்ளோம். பொழுது போக்கு விஞ்ஞானிகள் இங்கு ஏராளம்.
இப்போது ஒவ்வொரு குடிமகனும் கோவிட் 19 யை கடத்தும் கடத்தல்காரர்களாக மாறியவுடன்
மக்கள் புரிந்து கொள்வில்லை என்கிறோம்.
நாம் நீண்ட போரின் தொடக்கத்தில் உள்ளோம் என்கிறார்கள். அறிவியலை வணங்காத நாடு வளராது.
வணங்கி வளர்ந்த நாடு எவருக்கும் உதவாது.
விற்று காசாக்கவே பார்க்கும்.
பாடம் கற்றுக் கொடுக்க வந்த வைரஸ் பகவானே
மார்ச், ஏப்ரல், மே (2020) மாதத்தில் நீ கற்றுத் தரப் போகும் பாடத்தைப் பார்த்து இந்தியாவின் பாதை மாறட்டும்.

மாறினால் (தான்) நல்லது.





4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நயவஞ்சக கூட்டமும் மாற வேண்டும்... அதுவே முழுமையான மாறுதல்...

விசு said...

//ஆனால் இந்திய அரசு மிகவும் மர்மமான முறையில் மெளனம் சாதிக்கிறது. //
அதுதாங்க எனக்கும் புரியல. ஆளுங்கட்சியினரும் சரி வலதுசாரி அமைப்பினரும் பேச்சாளர்களும் சரி... ஒன்னுமே பாதிப்பு இல்லாத மாதிரி பேசுறாங்க. இதன் மர்மம் தான் என்னவோ?

G.M Balasubramaniam said...

இந்த நிலையில் கோரண்டைன் ல் இருப்பவர்டான் அதற்கு செலவு செய்யவேண்டுமா பரிசோதனைக்கான பணம்யாரால் செலவு செய்யப்படுகிறது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவராலா அரசு சொல்லும் 20 லட்சம்கோடி ரூபாய் யாருக்கு லாபமீட்டுகிறது பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை

Rathnavel Natarajan said...

ஆனால் இந்திய அரசு மிகவும் மர்மமான முறையில் மெளனம் சாதிக்கிறது.

நிதியமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக் முதல் முறை பேசியபோது பிரதமர் கூறினார். குழு அமைக்கப்பட்டதா, அது என்ன பரிந்துரைகள் செய்துள்ளது என்பது குறித்து கடந்த இருபத்தோரு நாட்களில் எந்த செய்தியுமில்லை. அத்துடன் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் பகிர்ந்தளிப்பும் சரி, நிறுவனங்களுக்கு திருப்பித் தரவேண்டிய ஈட்டுத் தொகையும் சரி, எதுவுமே வழங்கப்படவில்லை என்பது மத்திய அரசின் நிதி நிலையைக் குறித்த பல்வேறு வதந்திகளை, கவலைகளை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. அரசிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை.