Sunday, May 31, 2020

தொற்று நோய் அரசியல்குரல்  வழிப் பதிவு - 4 

தொற்று நோய் அரசியல்

மே 31 2020

நான்காவது ஊரடங்கின் கடைசி நாள் இன்று.  

68 நாட்கள் ஊரடங்கென்பது 73 வருட சுதந்திர இந்தியாவிற்குப் புதிது. இந்தியர்களுக்கு விருப்பமில்லா அனுபவமிது. இந்தியாவின் 14வது பிரதமராக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடியுடன் தமிழகத்தின் 13வது முதலமைச்சராக உள்ள எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு இன்று வரையிலும் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ஆச்சரியமாக மூன்று ஆண்டுகளை முடித்துக் கடந்த பிப்ரவரி 16 முதல் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மார்ச் மாதம் கொரானா வந்து சேர்ந்துள்ளது. இந்த வாரத் "தலைப்புச் செய்தி"யில் டெல்லி முதல் தமிழகம் வரைக்கும் கொரானா ஊரடங்கு கால நிகழ்வுகளின் போது தற்போது ஆள்கின்ற பாஜக மற்றும் அதிமுக அரசு செய்த, செய்யத் தவறிய விசயங்களைப் பற்றிப் பேசுவோம்.

கொரானா மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்தியுள்ளது. குடியுரிமைப் போராட்டங்களை மாற்றியுள்ளது. ஏற்றம் இறக்கமாக இருந்த இந்திய பொருளாதார ஜிடிபி குழப்பங்களைத் திசை திருப்பியுள்ளது. இனி மத்திய அரசு என்ன செய்தாலும் அதனை கொரானா கணக்கில் ஏற்றும் வாய்ப்புகளும் பிரகாசமாக மாறியுள்ளது. தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வர்களும் சந்திக்காத நெருக்கடியை எடப்பாடி சந்தித்த போதிலும் எதிர்க்கட்சிகளை மக்கள் பார்வையில் படாத அளவுக்குத் தான் முதல் ஊரடங்கு தொடங்கிய நிலையில் தமிழக அரசின் நிர்வாகத்தை தெளிவாக கொண்டு சென்றார்.

தமிழக அரசின் பலதுறைகளை ஒருங்கிணைத்து தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தன் அமைச்சர்கள் தன்னை மீறிச் செயல்பட முடியாது என்பதனையும் உணர்த்தியுள்ளார். மொத்தத்தில் 2020 மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் சொன்ன "வல்லரசு" என்ற "கனவு குமிழ்" உடைந்து தொற்று நோயிலிருந்து காப்பாற்றினால் போதும் என்கிற அளவுக்கு வந்து நிற்கின்றது. வசதிகளும் வாழ்க்கை முறைகளும் மாறிய  விஞ்ஞானத் தலைமுறைகளிடம்  கொரானா தொற்று நோய் குறித்து அரசாங்கம் சொன்ன போது தடுமாறித்தான் போனார்கள். 

அம்பானி டாடாக்களும், கூட கொரானா பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. பல நூறு கோடிகளை இழந்தார்கள். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் தொற்று நோய் ஒழிப்பு நிதிக்காக மாநில அரசுகள் கை வைத்த போது மனதிற்குள் அழுதார்கள்.  மாதச் சம்பளக்காரர்கள் கட்ட வேண்டிய வங்கிகளுக்கான மாதத் தொகை எப்படிக் கட்டப் போகின்றோம்? என்று மருண்டு போனார்கள். அமைப்பு சாராத தொழிலாளர்கள், புலம் பெயர்த் தொழிலாளர்கள், சாலையோர வசிப்பிட மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே கஷ்டப் பட்டார்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஹரே ஓ சம்பா என்று தவ நிலைமைக்கும் போய்ச் சேர்ந்தனர்.

சரி மத்திய அரசாங்கம் உதவியிருக்குமே? என்பவர்கள் மட்டும் கொஞ்சம் வரிசையில் நில்லுங்கள்.  காரணம் உங்களுக்கு எடப்பாடி கொடுத்த ஆயிரம் ரூபாயை ரேசன் கடையில் நின்று வாங்கிக் கொள்ளவும். மோடி கொடுத்த 500 ரூபாயை ஏடிஎம் ல் எடுத்துக் கொள்ளவும். கூட உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அரசி பருப்பு எண்ணெணெய் மூன்று மாதத்திற்குக் கொடுத்துள்ளோம் என்பதோடு ஒதுங்கி விட்டார்கள். ஆளும் பாஜக அரசு இந்திய மக்களுக்கான அரசா? என்ற கேள்வியை ஒவ்வொரு மாநில முதல்வர்களும் பல்வேறு விதமாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். கூடவே தமிழர்கள் தமிழக அரசு கொரானாவை முற்றிலும் ஒழித்ததா? என்ற கேள்வியும் இயல்பாக இன்று ஒவ்வொருவர் மனதிலும் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. 

ஊரடங்கு சமயத்திலும் எதிர்ப்புகளை மீறி மதுக்கடைகளைத் திறந்த எடப்பாடியை மன்னிக்க முடியாத குற்றமாகவே மக்கள் பார்க்கின்றார்கள். கோவிட் காலம் இன்னும் சில விசயங்கள் இங்கே உரக்கச் சொல்லி விட்டு சென்றுள்ளது.

அரசியல்வாதிகளின் தரம், அதிகாரவர்க்கத்தின் தகுதி இந்தியச் சுகாதாரக் கட்டமைப்பின் உண்மை நிலைமை. இன்னமும் அடிப்படை வசதிகளின்று வாடும் வட மாநிலங்கள் போன்றவற்றை இந்த முறை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர இந்தியர்களின் மனோதிடம், இந்தியர்களின் ஆரோக்கியத்தில் உள்ள இயல்பான எதிர்ப்புச் சக்தி போன்றவற்றையும் கொரனா ஊரடங்கு உணர வைத்து விட்டது. 

அமெரிக்காவில் இறப்பின் சதவிகிதம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டேயிருக்கிறது. ஸ்பெயின், இத்தாலி, ஈராக் போன்ற நாடுகள் அதிர்ச்சியைத் தந்தது. இந்தியாவில் இறப்பு என்பது மக்கள் தொகை எண்ணிக்கையில் வைத்துப் பார்த்தால் இதுவொரு மகத்தான் சாதனை.
சீனா மேல் வைக்கப்படும் ஏராளமான குற்றச்சாட்டில் உண்மையிருப்பது போல அவர்கள் கொரோனாவிற்காக உருவாக்கிய அவசரக் கட்டமைப்புகள் குறித்து உலகம் முழுக்க இன்னமும் ஆச்சரிய அலைகள் அடித்துக் கொண்டேயிருக்கிறது. அதே போல இந்தியா என்ன சாதித்தது? கொரானா நோயாளிக்காக ரயில் பெட்டிகளைத் தயார் செய்தார்கள். அதுவும் இப்போதும் தேவையில்லை என்று அதற்கு ஒதுக்கிய கோடிகள் தெருக்கோடிக்கு வந்து விட்டது.

மோடி வைரஸ்க்கு எதிரான போர் என்றார். 68 நாட்களில் கோரானா நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்ல மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை. நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு பூஜ்ய நிலையை எட்டுவோம் என்று சூளுரைத்தார் எடப்பாடி. சென்னையில் இன்று வரையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐந்தாவது ஊரடங்கு தொடங்க இன்னமும் அச்சாணி போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அறிவுப்புகள் வந்துருக்கக்கூடும்.

அதிமுக அரசு தொற்று நோயில்கூட  மைனாரிட்டி அரசியலை மிகத் தெளிவாகச் செய்து கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் நகர முடியாத அளவிற்கு நான்கு பக்கமும் எடப்பாடி நிர்வாக விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த காரணத்தால்  இன்று சென்னையில் சாவின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே யிருக்கிறது. பல மாவட்டங்களில் பல பகுதிகள் இன்னமும் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிலையில் தான் உள்ளது.

அக்யூட் மதிப்பீடு மற்றும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி ஊரடங்கால் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக ரூ.35,000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 68 நாட்களையும் வைத்துக் கூட்டிக் கழித்துச் சொல்ல வேண்டும் என்றால்  கொரோனாவிற்காக இந்தியாவின் இழப்பு  உத்தேசமாக 22 லட்சத்து 40 ஆயிரம் கோடி.  இப்போது உங்களுக்கு ஒன்று நினைவுக்கு வர வேண்டும். இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி.  கூடவே மற்றொரு வார்த்தையும் பயன்படுத்தினார். 'சுயசார்பு பாரதம்'  இன்றைய நிலையில் இந்தியாவில் சீன இறக்குமதியை நிறுத்தினால் இரண்டு மாதத்திற்குள் மொத்த இந்தியாவே முடங்கி விடும். இது தான் உண்மையான நிலைமை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் அறிவியல் பின்னால் ஓடினார்கள். நம் பிரதமர் ஆன்மீகம் மூலம் ஆறுதல் அளித்தார். முதலில் கையைத் தட்டச் சொன்னார், விளக்கேற்றச் சொன்னார்.  சோதனை முயற்சியாக ஜனதா ஊரடங்கைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இதே போல வரிசையாகப் பிரதமர் நம்பிக்கையூட்டி வானொலியில் பேசினார். தொலைக்காட்சியில் டீசர் அறிவிப்பு கொடுத்து தரிசனமளித்தார்.  இறுதியாக அரசாங்கத்திற்கு நிதி தாருங்கள் என்றார். இருபது லட்சம் கோடி என்ற பாகுபலி படத்தையும் ரீலிஸ் செய்தார்.

சில விசயங்களில் கடைசி வரைக்கும்  பாஜக அரசு உறுதியாக இருந்தது. மாநில அரசுகளின் கூக்குரல்களைக் கண்டு கொள்ளவே இல்லை. உடனடித் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஊழல் இல்லா கட்டமைப்பு என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். பயனாளிகளுக்கு வங்கி வழியே மட்டுமே பணம் என்பதில் தெளிவாக இருந்தனர். வெற்றியும் பெற்றுள்ளனர். இன்னமும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.  ஆனால் மாநில அரசுகளின் உடனடி மக்கள் நலத்திட்டங்கள், அவசரச் சுகாதாரக் கட்டமைப்பு அனைத்தும் இதற்குள் சிக்கி சின்னாபின்னமானது. மாநில உரிமைகள் பறிபோனது. கோவிட் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல அவசரத் திட்டங்கள் அனைத்தும் மாநிலங்களைக் கதற வைத்தது.

மாத வருமானமின்றி முடங்கிக் கிடந்தவர்களிம் தள்ளுபடி, இலவசம் என்ற பேச்சே எடுக்கக்கூடாது என்று கண்டிப்பு காட்டினர். தள்ளி வேண்டுமானால் கட்டிக் கொள். உன்னைவிட இந்தியப் பொருளாதாரம் முக்கியம் என்று புதிய அறிவுரையை  பாஜக அரசு சொன்னதோடு டோல்கேட் வரைக்கும் வசூலித்துத் திகைப்பூட்டினார்கள். 

எதிர்க்கட்சிகள் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் காற்றில் கரைந்தது. "பணத்தை அடி பணத்தைக் கொடு" என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மட்டுமல்ல. ஊடக விவாத மேடைகளில் முழங்கும் திடீர் பொருளாதார நிபுணர்கள் முதல் யூ டியூப் அதிரடி அண்ணாச்சிகள் வரைக்கும் கத்திக் கத்தி காணாமல்  விட்டார்கள்.

"வங்கிகளிடம் செல். வாங்கிக் கொள்" என்று எளிமையாக முடித்துவிட்டுக் கிளம்பி விட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஊடகங்கள் தொடர்ந்து கேள்வியெழுப்ப  அம்மையார் அசரவில்லை.

"பணப்புழக்கம் என்பது உங்கள் கைகளில் நேரிடையாகக் கொடுத்து பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. சிறு குறு பெரிய நிறுவனங்களைத் தொழில் செய்ய வைத்து அதன் மூலம் பணச் சுழற்சியை உருவாக்குவதே சரியான பொருளாதாரம்" என்று பாடம் நடத்தியதைப் பார்த்து மக்கள் பயந்து போனார்கள். "நாங்கள் அறிவித்தோம். மக்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லை. நாங்கள் கைபிடித்து அழைத்து வங்கிக்குச் கூட்டிக் கொண்டு செல்ல முடியுமா?" என்று மீண்டும் ஒரு முறை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் பேசக்கூடும்.

அன்றாடங்காய்ச்சிகளுக்குக் கண்ணீர் வர வாய்ப்பில்லை. அரசு ஊழியர்கள் எதிர்த்துப் பேச முடியாது. தொழில் நிறுவனங்கள் உண்மைகளை உடைத்துப் பேசவே வாய்ப்பில்லை. பட்டினிச் சாவு இல்லை என்றார்கள். கலவரங்கள் உருவாகவில்லை. என்ன செய்வது? இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையில் காய்ந்து போன கண்களும் நாளை பொழுதின் கவலைகளும் கொண்டவர்கள் தானே பாதிப் பேர்களாக உள்ளனர்.

மூன்றாவது ஊரடங்கு தொடங்கிய போதே தளர்வுகளும் அறிமுகம் ஆனது. தொற்று நோயை விட உயிர் பிழைத்திருப்பதே முக்கியம் என்று ஒவ்வொருவரும் ஓடத் தொடங்கினர்.

சரி எடப்பாடி கோவிட் காலத்தில் என்ன தான் சாதித்தார். தொடக்கத்தில் தமிழக சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கையூட்டினார். பிறகு சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் வந்து கிரிக்கெட் கமெண்ட்ரி போல தினமும்  பீதியை கிளப்பத் தொடங்கினார். கூடவே தப்பிலிக் மாநாடு என்ற புதிய வார்த்தையும் புழக்கத்தில் வந்தது. தமிழக அரசியலில் அனலடிக்கத் தொடங்கியது. மைனாரிட்டி காவலர்கள் சிலிர்த்து எழ கொரானா தொற்று நோய் என்பது கொள்ளை நோய் போல வாய்வழியே பரவத் தொடங்கியது.   

ஆச்சரியமாக தலைமைச் செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கத் தொடங்கினார். இடையிடையே எடப்பாடி ஸ்டாலின் எறிந்து கொண்டிருந்த பந்து ஒவ்வொன்றையும் குறிவைத்து அடித்துக் கொண்டிருந்தார். எதிர்கட்சிகளை கலந்தாலேசித்து முடிவெடுங்கள்” என்றார் ஸ்டாலின். “நீங்கள் என்ன மருத்துவரா?” என்று எடப்பாடி சிக்ஸர் அடிக்க  தமிழகத்தில் தொற்று நோய் அரசியல் உச்சக்கட்டமாக இருந்தது. 

"இந்தச் சமயத்தில் இது அசிங்கமாக இல்லையா? " என்று எடப்பாடி கேட்டார்? 

ஆனால் சளைக்காமல் ஸ்டாலின் "உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா?" என்று வந்த பந்தை மீண்டும்  தலைமைச் செயலகம் பக்கமே உதைத்துத் தள்ளினார்.

இறுதியாக

இரண்டு மாதத்திற்கு முன்னால் பிபிசி செய்தி நிறுவனம் மே மாதம் இந்தியாவில் கொத்துக் கொத்தாக இறந்து போவார்கள் என்று ஆருடம் சொன்னது.  சமூகப் பரவல் மூலம் இந்தியா மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது என்று வந்தவர், போனவர் என்று அனைவரும் அறிக்கை என்ற பெயரில் உளறி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவில் எவ்வித துர்பாக்கிய நிலைமையும் உருவாகவில்லை.  நிச்சயம் அரசாங்கம் காரணமில்லை. மற்ற நாடுகள் போல எவ்வித பெரிய முன்னேற்பாடுகளையும் இங்கே செய்யவில்லை.

என்ன செய்வது? எதை கடைபிடிப்பது போன்ற எதுவும் இங்கே எவருக்கும் தெரியவில்லை.  இது குறித்து மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் ஒரு மாதிரியாகவும், பாதிக்கப்பட்ட நாடுகள் வேறு விதமாகவும் சொல்ல "முடிந்தவன் பிழைத்துக் கொள்" என்பதாக மாறத் தொடங்கியது.

மோடியை, எடப்பாடியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த எதுவும் இங்கே நடக்கவில்லை என்பது முதல் ஆச்சரியம் என்றால் மக்களை தூண்டிய போதும் கொந்தளிக்காமல் எப்போதும் போல தங்கள் துன்பங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டார்கள் என்பதே உண்மை.

மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் தகுதி.
 Thanks 4TamilMedia.com

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாலாபுறமும் சற்றே எட்டிப்பார்த்து நான்காவது முறையாக அருமையாக விவரித்து உள்ளீர்கள்...

அடுத்து வரும் வெட்டுக்கிளிக்கு தெரியாது... இங்கே நிறைய கொடூர வெட்டினகிளிகள் உள்ளன என்று...! ஆனாலும் அதனுடனும் பழகிக் கொள்வோம்...!

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

bakki said...

"மோடியை, எடப்பாடியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த எதுவும் இங்கே நடக்கவில்லை என்பது முதல் ஆச்சரியம் என்றால் மக்களை தூண்டிய போதும் கொந்தளிக்காமல் எப்போதும் போல தங்கள் துன்பங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டார்கள் என்பதே உண்மை.". Very simple. தங்களை போல 'சர்வாதிகார' ஆதரவாளர்கள் ஆகிவிட்டார்கள். ஏன்-எதற்கு என்பது what is the benefit for me ஆகிவிட்டது

ஜோதிஜி said...

எல்லாவிதமான ஜனநாயக மக்கள் நலன் காப்பாளர்களும் சொல்லிவைத்தாற் தாய் தகப்பன் இல்லாத அனாதைப் பெயரில் வந்து தான் மோடி எதிர்ப்பை காட்டுகின்றார்கள். இது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் மட்டுமல்ல. ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சகல இடங்களிலும் தங்கள் விபரங்கள் எதுவும் எந்த இடத்திலும் வெளிவராத அளவுக்கு மிகவும் கவனமாக இருக்கின்றார்கள். அப்புறம் அவர்கள் உலகத்திற்கே அகிம்சையை போதிக்கும் அருள் மிக்கவர்களாக உங்களைப் போலவே எழுதிகின்றார்கள்.

bakki said...

Simple we don't want any benefits from others. But you need, thats why publicity. Do you know the term undercurrent?

மெய்ப்பொருள் said...

நீங்கள் சொன்னது :
"சில விசயங்களில் கடைசி வரைக்கும் பாஜக அரசு உறுதியாக இருந்தது.
மாநில அரசுகளின் கூக்குரல்களைக் கண்டு கொள்ளவே இல்லை.
உடனடித் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை."

இது உண்மை - இதற்கு காரணம் ஒற்றை தலைமை !
மோடி முடிவெக்கும் போது யாரையும் கேட்பதில்லை .
மோடி சொன்னது நடக்குமா என்றால் சந்தேகம்தான் .
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ,
ஐம்பதே நாளில் கருப்பு பணம் ஒழிப்பு என்றெல்லாம்
சொன்னது என்ன ஆயிற்று என யாரும் கேட்பதில்லை .
கேட்டாலும் பதில் வருமா ? .

"ஊழல் இல்லா கட்டமைப்பு என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள்."
நிஜமாவா ?
அவர்கள் உறுதியாக இருப்பது வெறுப்பு அரசியல் மட்டுமே !

பா ஜ க கட்சி எதற்கும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை .

"மாநில உரிமைகள் பறிபோனது. " - உண்மை !

In comments you said :
"எல்லாவிதமான ஜனநாயக மக்கள் நலன் காப்பாளர்களும் சொல்லிவைத்தாற்
தாய் தகப்பன் இல்லாத அனாதைப் பெயரில் வந்து தான் மோடி எதிர்ப்பை
காட்டுகின்றார்கள். இது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது."

வேறு வழி ?

ஜோதிஜி said...

வேறு வழி ?But you need, thats why publicity. இப்போது தான் பார்த்தேன். ரெண்டு பேருமே என்னை சிரிக்க வைத்தமைக்கு நன்றி.