Tuesday, May 12, 2020

அது ரொம்ப முக்கியம்.

சுய ஊரடங்கு 3.0 - 49
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


அரசு எந்திரமென்பது நீங்களும் நானும் நினைப்பது போல மிக எளிதாக அவர்களை ஆட்சியாளர்கள் வேலை வாங்கிவிட முடியாது. அது சாதாரணமான காரியமும் அல்ல. எளிதும் அல்ல.

அரசியல்வாதிகளுக்கு துறை சார்ந்த அறிவு இருக்கும் பட்சத்தில் கேள்வி கேட்க முடியும். குறிப்பு எழுதிக் கோப்பில் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே? ஒரு அளவுக்கு மேல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகக்கூடும். கட்டாயம் என்பது புற அழுத்தங்களின் மூலம் உருவாக்கப்படும்.



இன்றைய அதிகாரிகள் மேலிருந்து கீழ் வரைக்கும் அரசியல்வாதிகளைப் பயன்படுத்திக் கொள்வது, அவர்களுக்கு வழிகாட்டுவது, அதன் மூலம் தங்களை அவர்களுடன் பிணைத்துக் கொள்வது, "நான் மாட்டினால் நீயும் மாட்டுவாய்" என்று சங்கிலியைக் கடைசி வரைக்கும் இழுத்துக் கொண்டே செல்வார்கள். செல்கின்றார்கள்.

ஆட்சிக்காலமான ஐந்து வருடம் முடிவதற்குள் "தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதும். தான் செலவழித்துள்ள தொகைக்கு வட்டியும் முதலும் கிடைத்தது" என்ற திருப்தியில் சக அதிகாரியுடன் அனுசரித்துச் செல்லும் அமைச்சர்கள் தான் அதிகம்.

செல்லூர் ராஜு போன்றவர்கள் எல்லாம் இந்த அதிகாரவர்க்கத்தில் கோலோச்சுகின்றார்கள் என்றால் அதற்குப் பெயர் என்ன? அதைத் தான் நாம் ஜனநாயகம், மக்களாட்சி என்கிறோம்.

"நான் முட்டாளாக இருந்தால் நீ படு முட்டாளாக இருந்து விடு" என்ற உயரிய கொள்கை இங்கே கடைப்பிடிப்பதால் மட்டுமே செல்லூர் ராஜு அருகே இருந்த மாவட்ட ஆட்சியர் தெர்மாகோல் எடுத்து அமைச்சர் கையில் கொடுத்த புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அப்படியென்றால் இத்தனை கஷ்டப்பட்டுப் படித்து வாங்கிய கலெக்டர் பதவிக்கு என்ன தான் மரியாதை? இந்த இடத்தில் தான் "புரோட்டகால்" என்ற கொத்துப்பரோட்டா நமக்கு பறிமாறிப்படுகின்றது.

விஜயபாஸ்கர் ஒரு வகையில் கெட்டிக்காரர். குழந்தை ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்த போது அங்கே போய் அமர்ந்து கொண்டார். இது அமைச்சர் செய்யும் வேலை அல்ல. இப்போதும் பம்பரமாகச் சுற்றி வருகின்றார். ஊடக வெளிச்சத்தில் இருந்து கொண்டே இருக்கின்றார். இது பாராட்டத்தக்கது என்றாலும் கூட இது அமைச்சரின் வேலை அல்ல.

காரணம் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர் முதலில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். வருகின்ற தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். தனக்கு கீழ் பணிபுரியக்கூடியவர்களின் புலம்பல்களின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தெரிய வேண்டும். ஊழலில் மிதந்து நாற்றமெடுக்கும் ஒவ்வொரு துறையிலும் உள்ள குறைகளைக் களைய உடனடி ஆவணம் செய்ய வேண்டும். தன் துறையோடு மற்ற எத்தனை துறைகள் தொடர்புள்ளது என்பதனை உணர்ந்து ஒருங்கிணைப்பு உருவாக்கத் தெரிய வேண்டும்.

கூடவே மருத்துவச் செயலாளர் அம்மையார் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை எப்படி வேலை வாங்குகின்றார்? எப்படி அணுகின்றார்? கிடைக்கும் வெற்றியின் அளவுகள் என்ன? எந்த இடத்தில் குறைபாடுகள் உள்ளது என்பதனை அமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள சுகாதார நலத்துறை எப்படிச் செயல்படுகின்றது என்பதனைத்தான் முதலில் கவனிக்க வேண்டும்.
அமர்ந்து கவனிக்க வேண்டியவர் சுற்றிக் கொண்டேயிருந்தால் மொத்த அதிகாரத்தைச் செயலாளர் பார்க்கின்றார் என்று அர்த்தம்.

செயலாளர் என்பவருக்குத் தனித்த அதிகாரம் மக்களாட்சியில் இல்லை. அமைச்சர் சொல்வதை விரும்புவதை எதிர்பார்ப்பதை நிறைவேற்றிக் கொடுக்க அவரின் கல்வியறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இங்குள்ள சிஸ்டம். ஆனால் இங்கு தலைகீழாக நடக்கின்றது.

கல்வித்துறையை ஒப்பிடும் போது மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள செயலாளர் அம்மையாருக்கும் அமைச்சருக்கும் நல்ல "கெமிஸ்ட்ரி" இருப்பதால் வேலைகள் விரைவாக நடக்கின்றது என்பது உண்மை தான்.

ஆனால் ஏற்கனவே மருத்துவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற மன கொந்தளிப்பில் இருக்கின்றார்கள். பழிவாங்கும் நடவடிக்கையால் தொடர்பில்லாத இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம் என்ற மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள். மக்களுக்கு சமூக விலக்கம் தேவை என்று அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற அதீதக் கோபம் ஒவ்வொரு மருத்துவருக்கும் உள்ளது என்பதனை அமைச்சர் அறிந்துள்ளாரா?

பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்ன பாதுகாப்பு? எல்லை மீறும் போது என்ன ஏற்பாடு இங்கே செய்யப்பட்டுள்ளது? அதற்கான திட்டமிடுதல் இங்கே உள்ளதா?

பயப்படவேண்டாம் என்று சொல்வது நல்லது தான். ஆனால் சக்கரங்கள் பழுதாகி உள்ளது. பயணம் சிறப்பாக இருக்கும் என்று ஒட்டுநர் நம்பிக்கையளித்தால் உங்கள் எண்ணம் எப்படியிருக்கும்? அப்படித்தான் இப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

நம் நாட்டில் பேரிடர் நடக்கும் காலத்தில் தான் அரசு எந்திரம் முழிக்கும். சோம்பலிலிருந்து வெளியே வர நினைக்கும். இன்றைய சூழலில் மருத்துவத் துறையில் இருக்கும் ஒவ்வொருவரின் பணியும் தியாகத்திற்கு ஒப்பானது. அது அதிகாரிகளின் ஈகோ தனத்தால், வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்னமும் பல மாவட்டங்களில் சரியாக வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தைத் தொடர்ந்து வாசிக்கும் போது அமைச்சரின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுமோ? என்று அச்சம் உருவாவதை தடுக்க முடியவில்லை.

கோவிட் 19 பரவுதலின் சங்கிலியை உடைத்தாலே போதுமானது என்று அயராது உழைக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் வாழ்த்துகள். ஆனால் மருத்துவர்களின் தன்னம்பிக்கை சங்கிலியையும் தயவு செய்து கவனிங்க அமைச்சரே.

அது ரொம்ப முக்கியம்.

15 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான், மருத்துவர்களின் தன்னம்பிக்கைச் சங்கிலி மிகவும் கவனிக்கப்படவேண்டியது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்த மடத்தனமான திட்டமாக இருந்தாலும் ரொம்ப நடைமுறை சிக்கல்களை பாராமல் நிறவேற்றா முயற்சிப்பார்கள் பெரும்பாலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அரசியல்வாதிகளிடம் இவர்கள் ஆட்டம் செல்லும்படி ஆவதில்லை.ஆனால் கீழ்நிலை அதிகாரிகளை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.நடைமுறை சிக்கல் சார்ந்து ஒரு கருத்து கூட சொல்ல முடியாது . எல்லாம் ஒன்வேதான் எதிர்பக்கம் எப்போதும் மியூட்டில்தான் இருக்க வேண்டும். சபிதா,கந்தசாமி,பூஜா குல்கர்னி, ப்ரதீப் யாதவ் உள்ளிட்ட பலரும் சர்வாதிகாரிகள்தான். தற்போதைய் அதிகாரிகளிடம் விளம்பர மோகமும் சேர்ந்திருக்கிறது.பாடம் நடத்துவது,மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவது, ஆசிரியரின் காலில் விழுவது. வீட்டில் சென்று நல உதவி செய்து போட்டோ எடுத்துக் கொள்வது. வாட்ஸாப்பில் மிரட்டுவது என

ஜோதிஜி said...

இதில் கந்தசாமி பூஜா குல்கர்னி எந்த துறையில் இருந்தாங்க முரளி? இப்போது தான் இவர்களைப் பற்றி கேள்விப்படுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

பிரச்சனைகள் நிறைய உண்டு ஜோதிஜி. எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடிவதில்லை.

G.M Balasubramaniam said...

பிரச்சனை எதுவாயிருந்தாலும் அதுபற்றிய விஷயங்களில் ஒருவர் கணிப்பே சரியானதாகுமா

Rathnavel Natarajan said...

ஆனால் ஏற்கனவே மருத்துவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற மன கொந்தளிப்பில் இருக்கின்றார்கள். பழிவாங்கும் நடவடிக்கையால் தொடர்பில்லாத இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம் என்ற மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள். மக்களுக்கு சமூக விலக்கம் தேவை என்று அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற அதீதக் கோபம் ஒவ்வொரு மருத்துவருக்கும் உள்ளது என்பதனை அமைச்சர் அறிந்துள்ளாரா? - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Unknown said...

மக்கள் நலத்துறை எந்த ரிஸ்க் இல்லாமல் பணம் செய்யும் துறை. எல்லா பகுதிகளிலும் பதவி உயர்வு இடமாற்றம் ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் லஞ்சம் இல்லாமல் நடக்காது. மறுத்தால் பழிவாங்கல். இத்துறையை பிடித்திருக்கும் பெரு நோய் லஞ்சம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கந்தாசாமியை தங்களுக்கு தெரியாதது ஆச்சர்யம். கந்தசாமி திருவண்ணாமலை கலெக்டர். வாட்ஸ் ஆப்பில் அனைத்து பிடிஓக்களை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்று மிரட்டியவர். ஆடியோவும் இணையத்தில் கிடைக்கிறது. பூஜா குல்கர்னி அனவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர். பள்ளிகளில் ஆதார் கார்டு மையங்கள் வழியாக மாணவர்களுக்கு ஆதார் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பணியில் ஒரு கணினியில் ஒரு நாளைக்கு என்னதான் முயன்றாலும் அதிக பட்சம் 40 பேருக்கு எடுக்க முடியவில்லை. 1 ம் வகுப்பு மாணவர்களுக்கு விரல் ரேகை பதியவில்லை. சில மாணவர்களுக்கு பதிவு செய்யவே இயலவில்லை இப்பணியை மேற்கொண்டவர்கள் டிசிஎஸ் நிர்வத்தினர். ஒரு நாளைக்கு 100 பேர் எடுக்கலாமே ஏன் அண்டர் யூடிலைஸ் செய்கிறிர்கள் என்று மாவட்ட வட்டார அலுவலர்களை காணொலிக் காட்சியில் திட்டியவர். கேட்க வேண்டியது ஒப்பந்தம் மேற்கொண்டவர்களை ஆனால் இவர் கடிந்து கொண்டது அரசு அலுவலர்களை. இவரும் சபீதாவும் ஆய்வு என்ற பெயரில் இரவு 11.00 மணி வரை ஆய்வு செய்தது பெரும்பாலும் மனித உரிமை மீறல். நானறிந்தவரை பெரும்பாலான ஆட்சியர்கள் சைக்கோ தன்மை உடையவர்கள் என்றே நினைக்கிறேன். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். இவர்களிடம் அடங்கிக் கிடக்கும் அடுத்த நிலை உயர் அதிகாரிகள் தனக்கு கீழே உள்ளவர்களிடம் அதே நடைமுறையைப் பின்பற்றுவது தற்போது வழக்கமாக உள்ளது

ஜோதிஜி said...

கல்வித்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை இந்த மூன்று துறைகளில் பணியில் சேருதல், தேர்ந்தெடுத்தல், பரிட்சை நடத்துதல், பணி மாறுதல், திட்ட நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்து வேலைகளும் அதிகாரிகள் அமைச்சர்கள் தொடர்பின்றி இணையம் வழியே நடத்தினால் போதும். இனியெல்லாம் தமிழகம் சுகமே.

ஜோதிஜி said...

கந்தசாமி இப்போது நினைவுக்கு வந்து விட்டார். உண்மை தான். சைக்கோ தன்மை. இந்த ஒரு வார்த்தை பெரிய பதிவு எழுத தூண்டுதலாக உள்ளது. பார்க்கலாம்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

ஊடகங்கள், வார இதழ்கள்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளைத்தானே வெளியிடுகின்றார்கள்.

ஜோதிஜி said...

உண்மை

ஜோதிஜி said...

நன்றி

மெய்ப்பொருள் said...

அரசு எந்திரம் என்பது வெள்ளைக்காரர் ஏற்படுத்தி வைத்தது .
அதன் நோக்கம் நேட்டிவ்களை அடக்கி வைப்பதுதான் .
இதற்காக போலீஸ் , ரெவென்யூ , கோர்ட் அமைக்கப்பட்டது .
அரசு அதிகாரிகள் யாரும் மக்களுக்கு பதில் சொல்ல
தேவையில்லை .அதனால் யாரும் கேள்வி ஏதும் கேட்பதில்லை .
உ-ம் போலீஸ் ஸ்டேஷன் போய் ஏதும் கேட்க முடியுமா ?
'என்ன மரியாதையில்லாமல் ' என்பார்கள் .
ஒவ்வொரு அரசு அதிகாரியும் வருகிறவர்கள் பணிவாக ,
கை கட்டி , வாய் பொத்தி நிற்க வேண்டும் என் நினைக்கிறார்கள் .

அதிகாரி தன் மேலதிகாரிக்கு சல்யூட் செய்யணும் .
எதிர்த்து பேசவோ , கேள்வி கேட்பதோ கூடாது .
இது கீழே இருந்து மேலே வரை அப்படித்தான் .

காசு வாங்காமல் எந்த வேலையும் நடக்காது .
வேலை என்றால் எதோ ஒரு பேப்பர் - அதில் ஒரு கையெழுத்து
அது இல்லை பூச்சாண்டி பிடித்துக் கொண்டு போய்விடும் .

நிர்வாகம் சரியாக இருக்குமானால் பரஸ்பர நம்பிக்கை ,
நல்லெண்ணம் தேவை . அது இல்லை என்றால் தேவையில்லா
ரூல்ஸை காட்டிக்கொண்டு அழ வேண்டும் .