Monday, May 04, 2020

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள்.

சுய ஊரடங்கு 3.0 - 33
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

அதிகாலை ஐந்து மணி நடைபயணத்தில் நீண்ட தூரம் நடந்து பறவைகளுடன் மட்டும் பேசிக் கொண்டே சென்ற போது அந்தச் சமயத்திலும் சுறுசுறுப்பாக மாறும் திருப்பூர் முழிக்காமலே இருந்தது. ஆள் அரவற்ற தேநீர்க் கடைகளில் இளையராஜா மட்டும் நம்பிக்கையளித்துக் கொண்டிருந்தார்.

ஆரோக்கியா பால் நம்பிக்கையளித்தார். ஆவின் பால் அசரீரி போல தெரிந்தார். ஆயத்தப்பணிகள் தொடங்காமலேயிருந்தது. நேற்று மாலை அதிசயமாகப் பெய்த மழையின் காரணமாகச் சுத்தமான காற்று. புகையில்லா சாலையின் சுகாதாரத்தை நுரையீரல் உணர்ந்தது. மேட்டுப் பாளையம் ஊட்டி சொல்லும் அதிகாலை அரசு விரைவு வண்டியில் ஓட்டுநர் நடத்துநருடன் மேலும் இரண்டு பேர்கள் முன்னும் பின்னும் அமர்ந்து சமூக விலக்கத்தை கடைபிடித்து பயணித்ததைப் பார்த்தேன்.

திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது மக்கள்  சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் எளிய மனிதர்களின் இயல்பு வாழ்க்கை மாறவில்லை. முகமூடி அணிந்த மனிதர்கள் குறைவாகவே தெரிந்தனர். பூக்கடையில் இருந்த பாட்டி ஒவ்வொரு முறையும் வாயில் கட்டியிருந்த முகக் கவசத்தைக் கழட்டிக் கழட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தவரிடம் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார். 

வட இந்தியர்களின் எலெக்ட்ரிக்கல் கடைகள் திறந்திருந்தது. முகக் கவசமும் இல்லை. எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லை.  திருப்பூர் ரயில் நிலையம் பூட்டப்பட்டு இருந்தது. பணியில் இருந்த காவல்துறையினர் உள்ளே வந்த கொண்டிருந்த வட இந்தியத் தொழிலாளர்களை ஹிந்தியில் விரட்டிக் கொண்டேயிருந்தனர்.  படிப்பறிவு இல்லாத வட இந்தியத் தொழிலாளர்கள் முதல் இங்கே வங்கியில் பணியாற்றும் ஹிந்தியர்கள் வரைக்கும் கடந்த பத்தாண்டுகளாகப் பார்த்துப் பழகி வந்தாலும், நெருக்கமாக அவர்களின் வாழ்வியலைக் கவனித்து வந்தாலும், அவர்களின் குணம், மனம் போன்றவற்றை உணர்ந்திருந்தாலும் இன்று வரையிலும் இவர்களை முழுமையாகவே என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தமிழர்களிடத்தில் ஏராளமான பலவீனங்கள் உண்டு. காவல் துறையினர் அதட்டினால் அடங்கி விடுவார்கள். பயந்து போய்விடுவார்கள். ஒதுங்கி விடுவார்கள். மொத்தமாக அமைதியாகி விடுவார்கள். ஆனால் ஹிந்தியர்கள் பாணி தனியாக உள்ளது.  நீ பேசு. பேசிக் கொண்டேயிரு என்று அவர்கள் போய்க் கொண்டேயிருக்கின்றார்கள். அடிக்கவும் வழியில்லாமல், அருகே செல்லவும் பயந்து கொண்டு அன்போடு கதறுகின்றார்கள்.

ரயில் நிலையத்திற்குக் கும்பல் கும்பலாக வருகின்றார்கள். ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று சொன்னாலும் கும்பலாக அங்கேயே அருகருகே நின்றும் விடுகின்றார்கள்.

உலகத்தை மறந்து பேசத் தொடங்கிவிடுகின்றார்கள்.

ஒவ்வொரு பெரிய நிறுவனமும் பெரிய விடுதிகள் வைத்துள்ளார்கள். வசதிகளுக்குக் குறைவில்லை. தண்ணீர் 24 மணி நேரமும் வந்து கொண்டேயிருக்கும். இவர்களைக் குளிக்க வைப்பது என்பது பெரும்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அதனை விடக் கொடுமையான அனுபவம். ஆனால் உள்ளே வந்து விட்டால் பேய்த்தனமான உழைப்பு.

இரவில் முழித்துப் பேசுவார்கள் பேசுவார்கள் பேசிக் கொண்டேயிருப்பார்கள். வீடியோ கால் அறிமுகமானது முதல் முத்தங்கள் தாராளம். சப்தங்களும் ஏராளம். வட இந்தியப் பெண்கள் குறுகிய காலத்திற்குள் இவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  கொள்கையில்லை. கூட்டணியும் இல்லை. புனித நதியில் நீராடுவது போல ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொள்கின்றார்கள்.

அதிகாலையில் அவசரம் அவசரமாக எழுந்து கசங்கிய உடைகளை குப்பைக்குள் இருந்து எடுப்பது போல எடுத்து மாட்டிக் கொண்டு வந்து சேர்வார்கள். காலைக்கடன்களை உற்பத்தித் துறையில் உள்ள கழிப்பிடங்களில் கழித்து நாற வைப்பார்கள். ஒவ்வொரு நிறுவன மனிதவளத்துறை உதவியாளர்களும் எந்த இடத்தில் இவர்கள் துப்புவார்கள்? துப்புகின்றார்கள்? என்பதனை கண்காணிக்கப் பல பக்கவாட்டு உதவியாளர்களை வைத்துக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

மூன்றாவது மாடியில் நின்று கொண்டிருந்தாலும் கீழே இருப்பவனின் தலையில் எச்சில் விழுமே என்பதனை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள்.  துப்புவதென்பது அவர்கள் கொள்கை. தூற்றினாலும் கண்டு கொள்ளாமல் மீண்டும் துப்புவது அவர்கள் பாணி.  நான் ஒரு முறை உதவியாளரிடம் சொன்னேன். அவர்கள் எந்தந்த இடத்தில் துப்புகின்றார்களோ அந்த இடத்தில் தொட்டிகளை வைத்து விடு என்றேன்.

எந்த வார்த்தைகளும் எடுபடாது. மாங்கு மாங்கென்று உழைக்கும் கூட்டம். எட்டரை மணிக்கு வேலை என்றாலும் எட்டு மணிக்கே வந்து நிற்பார்கள். பணத்திற்கு ஆவலாகப் பறக்கும் கூட்டம். ஊருக்கு ஒழுங்காக அனுப்பும் கூட்டம் இப்போது மதுவில் சிக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

இவர்கள் பட்ட சாராயம் போன்ற வஸ்துக்களைத்தான் விரும்புகின்றார்கள்.  சமீபத்தில் ராக்கியாபாளையம் பிரிவில் பீகாரிலிருந்து வந்தவர்களின் கோரிக்கையை ஏற்று (தினமும் மது அருந்துவதால் ஊருக்கு பணம் ஒழுங்காக அனுப்பமுடியவில்லையாம்) தங்கியிருந்த தோட்டத்திற்குள் கெமிக்கல் சமாச்சாரத்தைக் கலந்து சாராயம் காய்ச்சி விற்க   காவல்துறை    அதிர்ந்து அல்லாக்காக தூக்கிக் கொண்டு போய் மல்லாக்க மிதித்தனர்.

இங்குள்ள பல முதலாளிகள் இன்னமும் நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்திருந்தாலும் வீட்டுக்குள் இருந்து கொண்டே உற்பத்தி நடந்தாக வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டுள்ளனர். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகவே சொல்லிவிட்டனர்.

கொடுத்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து.  தைத்துக் கொண்டிருக்கும் ஆடைகளைத் தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலம் கழித்து எடுத்துக் கொள்வோம். தேவையில்லை என்றால் கூட அப்போது சொல்வோம். எதுவும் எங்கள் கையில் இல்லை. எதையும் அனுப்ப வேண்டாம்.  ஏற்கனவே அனுப்பிய சரக்குகளை எடுத்துக் கொள்ள வாய்ப்பிருந்தால் எடுப்போம். உறுதியளிக்க முடியாது.  ஆனாலும் இவர்களுக்கு இன்னமும் உற்பத்தியை நிறுத்த மனம் வரவில்லை. துணியாக இருந்தால் லாபம்.  வெட்டியிருந்தால் வங்கிக்கு பதில் சொல்ல வேண்டும்.  சிக்கியவர்கள் கதறுகின்றார்கள். எத்தனை நிறுவனங்கள் சிதறப் போகின்றதோ?

வட இந்தியத் தொழிலாளர்களுக்கோ விடுதியில் இருக்க மனமில்லை. எங்கு சென்றாலும் கும்பல் கும்பலாகத்தான் செல்கின்றார்கள்.  நிற்கும் இடத்தை நிமிட நேரத்திற்குள் அசிங்கமாகவும் மாற்றி விடுகின்றார்கள். மாறவே தயாராக இல்லை என்பதனை விட மாற்றங்களையே எதிர்கொள்ளவே விரும்பவில்லை என்பது தான் உண்மை. 

ஒரு இடத்தில் நிற்கின்றார்கள். பத்துப் பேர்கள் நின்றாலும் இரண்டு மணிநேரம் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் நிற்கின்றார்கள்.  என்ன தான் பேசுவார்கள் என்றே தெரியவில்லை?

ஒரு வேளை கோவிட் 19க்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்துப் பேசிக்கொண்டிருப்பார்களோ?



மே 3 வரை ஊரடங்கு தொடரும்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாதி சிதற வைத்தார்கள்...

மன்னன் எவ்வழியோ :-

இனி தானே அனைத்தும் சிதறும்...

Yaathoramani.blogspot.com said...

அவர்களைத் தங்கள் பதிவின் மூலம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது..

கரந்தை ஜெயக்குமார் said...

வட இந்தியத் தொழிலாளர்களுக்கோ விடுதியில் இருக்க மனமில்லை. எங்கு சென்றாலும் கும்பல் கும்பலாகத்தான் செல்கின்றார்கள். நிற்கும் இடத்தை நிமிட நேரத்திற்குள் அசிங்கமாகவும் மாற்றி விடுகின்றார்கள். மாறவே தயாராக இல்லை என்பதனை விட மாற்றங்களையே எதிர்கொள்ளவே விரும்பவில்லை என்பது தான் உண்மை.

வேதனை ஐயா