Tuesday, May 26, 2020

"விகடன் வீழ்ச்சி"

நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் கொரானா பழிவாங்கிய துறை பத்திரிக்கை துறை.  தினசரிகள் முதல் வார இதழ்கள் வரைக்கும் பல விதங்களில் பல கோடிகளை இழந்துள்ளார்கள்.  இதன் அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிக்கை நிர்வாகமும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இப்போது விகடன் விவகாரம் இணையத்தில் பெரும் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஏன்?

சாதி, மதம், கட்சி, மற்ற கொள்கைகள் என்று ஒவ்வொரு நிலையிலும் முரண்பாடுகளுடன் நின்ற அனைவரும் தற்போது "விகடன் வீழ்ச்சி" என்ற நிலையில் ஒரே அணியில் நிற்கின்றார்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

சந்தோஷம் என்று கொண்டாடித் தீர்க்கின்றார்கள். திருமாவேலன் விகடன் குழுமத்தை விட்டுச் சென்றதும் விகடன் வாங்குவதை நிறுத்திவிட்டேன். வாரம் 200 ரூபாய்க்கு வார இதழ்கள் வாங்கிக் கொண்டிருந்தேன்.



ஆனால் இப்போதும் பெட்டிக்கடையில் தொங்கும் விகடன் புத்தகங்களை ஆசையோடு தடவிப் பார்ப்பதுண்டு. ஒரு பக்கம். ஒரே ஒரு பக்கத்திலாவது கொடுக்கும் காசுக்குப் பிரயோஜனமாக இருக்குமா? என்று. பலமுறை இரத்தக் கொதிப்பைத்தான் அதிகப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் பொறம்போக்கு, போக்கிரி, நாதாரிகள், சமூகத்தைப் பற்றியே தெரியாதவர்கள், நடிகைகள் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்ட செல்லும் விடலை மனம் கொண்ட வயதான பெரிசுகள் என்று பெருங்கூட்டணியை எப்படி சீனிவாசன் தேர்ந்தெடுத்தார்? பலரின் விமர்சனங்கள் அவர்களின் காதுக்குப் போயிருக்குமே? ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தார்? பல முறை நேரிடையாக அவரிடம் அழைத்துக் கேட்டு விடலாமா? என்று யோசித்தது உண்டு.

நடிகர் வடிவேல் திமுகவை நம்பி வாழ்க்கையை இழந்தது போல அதில் பணிபுரியக்கூடியவர்கள் யார் யாரையோ நம்பி விகடன் என்ற ஆலமரத்தை இன்று வெற்றிகரமாகத் தூரோடு பெயர்த்து எடுத்து உலகமே வேடிக்கை பார்க்க வைத்து விட்டார்கள். தன் உடலைக்கூட மருத்துவ உலகத்திற்குக் கொடுத்த புண்ணியவான் எம்டி என்று இன்று வரையிலும் பக்தியோடு பாசத்தோடு அழைக்கப்படும் பாலசுப்ரமணியம் சார் அவர்கள்.

அவரின் கடைசிக்கால வாழ்க்கை வெளியுலகம் அறியாதது. மகனுக்கும் அவருக்கும் நடந்த போராட்ட நிகழ்வுகளை பொது வெளியில் எழுதுவது நாகரிகமாக இருக்காது.

அவர் மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு தன்னை தன்னுடைய பண்ணைக்குள் குறுக்கிக் கொண்டு தான் வளர்த்த பறவைகளுடன் உரையாடத் தொடங்கினார். உலகத்திலிருந்து விலக்கிக் கொண்டு வாழ்ந்து மறைந்த தயாள மகாபிரபு. நம்பிக்கை, நாணயம், நேர்மை என்ற வார்த்தைக்குத் தமிழ் இதழியல் உலகில் இவர் தான் முன்னோடி.அதே போல ஆர்எஸ். பிரபு அதிக வெறுப்பைத் தனிப்பட்ட நிறுவனம் அல்லது தனிப்பட்ட நபர்கள் மேல் எழுதுவது இதுவே முதல் முறை. அதற்கு இவர்கள் இருவருக்கும் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் விகடன் வீழ்ச்சி எனக்குத் தனிப்பட்ட வருத்தமாகவே உள்ளது.

காரணம். சிபாரிசு எதுவும் இல்லாமல், குறுக்கு வழிகள் எதுவும் கடைப்பிடிக்காமல் டாலர் நகரம் புத்தகத்திற்குப் பல வகையில் மரியாதையளித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். ஒவ்வொரு 90 நாளுக்கு அடுத்த நாளும் ராயல்டி டிடி வந்து கொண்டே இருந்தது. ஸ்டேட்மெண்ட் வந்து கொண்டே இருந்தது. 100 சதவிகித நேர்மையான அணுகுமுறை.

உச்சக்கட்டத் தமிழக ஆளுமைகள் கூட இதன் மூலம் என் தொடர்பில் வந்தார்கள். அன்புக்குரிய திருமாவேலன் அவர்கள், விகடன் ஆண்டு மலர் குழுவினர், ஆசிரியர் (இன்று வரையிலும் இவர் யார் என்றே தெரியவில்லை) என்று ஆச்சரியப்படக்கூடிய மனிதர்கள் அங்கே இருந்தார்கள். ஒரு முறை திருமாவேலன் சொன்ன வார்த்தை இன்னமும் என் மனதில் அப்படியே உள்ளது. இந்தப் புத்தகத்தை நாலைந்து பக்கங்கள் பார்த்து மேலோட்டமாக பார்த்த போதே முடிவு செய்து விட்டேன். இது முக்கியமான புத்தகமென்று.

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் வருடந்தோறும் விகடன் பல நிலையில் அங்கீகாரம் கொடுப்பவர்களின் பட்டியலைப் பார்த்து, அவர்கள் அதற்காக நடத்தும் நிகழ்ச்சிகள் பார்த்து பலரும் எரிச்சலுடன் இன்று வரையிலும் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இதற்கு முக்கியக் காரணம் இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்தவர்கள், உள்ளவர்கள் தான் வாழும் சமூகத்தைக் கேளிக்கையாக, கேவலமாகப் பார்க்கும் மனநிலையில் உள்ளவர்களை விகடன் நிர்வாகம் பொறுப்பில் வைத்திருக்கக்கூடும். இதன் காரணமாகத்தான் இவருக்கு விருதா? என்று சிரிக்கும் அளவுக்கு இருந்தது. மேலும் நிர்வாகம் ஒவ்வொரு நிகழ்வுகளையும் டிஜிட்டல் உலகத்தில் காசாக்கும் நிலையில் இருந்த காரணத்தால் முக்கிய விசயங்களை விடக் குத்தாட்டம் போட வரும் நடிகைகளுக்குத்தான் பணத்தை வாரி இறைத்தார்கள். பலவீன மனிதர்களின் கூடாரமாகவே மாற்றி வைத்திருக்கிறார்கள்.

தன் ஜோக்,தன் கவிதை விகடனில் வர வேண்டும் என்பதற்காகச் சிபாரிசுக்காக அலைந்த சில நபர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். கடந்த பத்தாண்டுகளில் அப்படித்தான் அவர்களின் படைப்பை விகடன் இதழ்களில் வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். இணையத்தில் தங்களைப் பெரிய பிம்பமாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். காரணம் அப்படித்தான் அங்கே டீம் இருந்தது. அவனுக்குத் தெரிந்தவன், அவன் அவனுக்குத் தெரிந்தவன் என்று தொடர்பு சங்கிலி போய்க் கொண்டேயிருக்கும். கடைசியில் நாகரிகமான, நல்ல செய்திகள், சமூகத்திற்குத் தேவைப்படும் விசயங்கள் என்று அனைத்தும் பின்னுக்குப் போய்விடும். பளப்பள அட்டையில் சினிமா... சினிமா.. என்று மாற்றி விட்டார்கள். இணையத்தில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகளை முக்கியச் செய்திகளாக மாற்றும் தன்மைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் முதலாளி சீனிவாசன் தான் என்பேன். காரணம் கப்பலுக்கு கேப்டன் முக்கியம் என்பதனை மறந்து விட்டார் என்று தோன்றுகின்றது. ஒரே சமயத்தில் நிர்வாகத்தை நாற்பது இடங்களில் வைத்தால் கவனம் செலுத்த முடியாது என்பது அவர் உணரத் தயாராக இல்லை. இதற்கு மேலாகப் பல ஆண்டுகளாக தங்கள் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களை மதிக்கத் தேவையில்லை? அவர்களுக்குக் கொடுக்கும் பெரிய சம்பளத்தில் பத்து கத்துக் குட்டிகளைப் போட்டுக் கொண்டால் போதும். தங்கள் நிறுவனப் பெயருக்கென்று ஒரு அடையாளம் உள்ளது? அதுவே வியாபாரத்திற்குப் போதும் என்று எப்போது முதல் நம்பினாரோ அன்று முதல் விகடன் வீழ்ச்சி விரைவாகத் தொடங்கியது.

எம்.டி காலத்தில் விகடன் நிர்வாகத்தைக் குறித்து யாருமே பேசியதில்லை. யார் யார் உள்ளே பணிபுரிகின்றார்கள் என்றே யாருக்கும் தெரியாது. ஆனால் சீனிவாசன் காலத்தில் விகடன் குழுமத்தில் வரும் புத்தகங்களைப் பற்றிப் பேசுவதை விட அங்கே பணிபுரிபவர்கள், அவர்கள் குணாதிசயங்கள், அவர்கள் சமூக வலைத்தளச் செயல்பாடுகள், அவர்களின் தனிப்பட்ட பலவீனங்கள் இதைப் பற்றியே சுற்றிச்சுற்றி பேச்சு சுழன்று கொண்டேயிருந்தது. அது அசிங்கமாகவும் இருந்தது. பல அணர்த்தங்களையும் கொண்டு வந்தது.

ஒருவன் தன் சந்தில் வாழும் ஒருவருடன் பகையாளியாக இருந்தால் மற்றவர்கள் பிரச்சனைகள் வரும் போது போது உதவுவார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை பேர்களுடனும் பகைத்துக் கொண்டு வாழ்ந்தால் சாகக்கிடக்கும் போது கொண்டாடித்தான் தீர்ப்பார்கள். அது தான் இப்போது விகடன் விசயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

என் பார்வையில் பணிநீக்கம், வேலையிழப்பு என்கிற விதங்களில் விகடனில் பணிபுரிந்தவர்களுக்குத்தான் பிரச்சனை. ஆனால் சீனிவாசன் அவர்களுக்கு இது தனிப்பட்ட வகையில் பெரிய பாதிப்புகளை உருவாக்காது என்றே நம்புகிறேன். அவர் இன்னமும் ஆன்லைன் ஆப் லைன் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தயவு செய்து வேலை இழந்து வெளியே வருபவர்கள் தமிழகத்தில் நடிகர் நடிகைகளின் பிருஷ்டங்களுக்குப் அப்பாலும் தமிழகத்தில் நிறைய விசயங்கள் உள்ளது என்பதனை அடுத்துச் சேரப் போகும் இடங்களில் உங்கள் திறமையின் மூலம் காட்டி வளர முடியுமா? என்று பாருங்கள்.

மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்குகளை அவர் குளிக்கும் போது சுத்தம் செய்து கொள்வார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரேசன் அரிசியாவது வாங்கி உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க முடியுமா? என்று பாருங்கள்.

குறிப்பாக இனியாவது இணையத்தில் போராளி வேடம் போடுவதை நிறுத்தி விட்டுக் கிழிந்து போயிருக்கும் ஜட்டி வாங்கக் காசு வேண்டும். எனவே வேறொரு வேலை தேட வேண்டும் என்பதே முக்கியம் என்பதனை கவனத்தில் வைத்திருக்கவும்.


6 comments:

கிரி said...

விகடனின் நிலை அனைவருமே எதிர்பார்த்தது தான் என்றாலும், கொரோனா அதை விரைவுபடுத்தி விட்டது.

செய்தி ஊடகம் நடுநிலை தவறினால், அதன் நிலை என்ன ஆகும் என்பதற்கு விகடன் சிறந்த எடுத்துக்காட்டு.

நிறைய கூற நினைக்கிறேன்.. தனிக்கட்டுரையாக எழுதுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பேராசை அனைத்தையும் தாமதமாக காவு வாங்கும்...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை. விகடன் பல காலமாகவே படிப்பதே இல்லை. அதன் தரம் கீழே கீழே நோக்கிச் சென்றுவிட்டது என்று உணர்ந்த போதே நிறுத்திவிட்டேன்.

ஜோதிஜி said...

நடுநிலை நேர்மை சத்தியம் உண்மை போன்றஎதையும் தற்போதைய சூழலில் முழுமையாக எவராலும் கடைபிடிக்க வாய்ப்பில்லை கிரி. காரணம் 90 சதவிகித கிரிமினல் கூட தான் நாம் வாழ வேண்டியுள்ளது. ஆனால் முடிந்த அளவுக்கு நேர்மை உண்மை சத்தியம் போன்றவற்றை எப்போதும் நம்மால் கடைபிடிக்க முடியும். ஆனால் பத்திரிக்கைகள் அதற்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.

ஜோதிஜி said...

அருமையான வாசகம்.

ஜோதிஜி said...

பலரும் இப்படித்தான் சொல்கின்றார்கள் வெங்கட்.