Friday, May 15, 2020

ஜனத்தொகை அதிகம். குறைந்தால் பரவாயில்லை - May 2020

சுய ஊரடங்கு 3.0 -  55
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மார்ச் 24 அம்மாவாசை தினம்.

மோடி காரண காரியத்தோடு அறிவிப்பு வெளியிட்டாரா? இல்லையா? என்று தெரியவில்லை. இந்தியா என்பது முதல் முறையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டது.கொரானா என்ற கண்களுக்குத் தெரியாத சிறிய கிருமி காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் முடக்கியது.

நாளை தினம் என்பது ஊரடங்கு தொடங்கி 44வது தினம். ஊரடங்கு, சுய ஊரடங்கு, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று ஒவ்வொரு கோட்டையும் கடந்து வந்தோம்.


உள்ளே இரு என்றார்கள். இருந்தோம். வெளியே வந்தால் விலகியிரு என்றார்கள். இருந்தோம். கொரானா பரவலை நம்மால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டினார்கள். நம்பினோம். ஒவ்வொருவரின் உயிரும் என் உயிர் என்றார் ஒருவர். நன்றி பகவானே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டோம். மற்றொருவர் இங்கே துடிப்பாகக் களப்பணியாற்றினார். கண்துஞ்சாது உழைக்கும் உழைப்பை மெச்சினோம். இந்த நேரத்தில் அசிங்கமாக அரசியல் செய்கின்றார்கள் என்று அழுவாச்சி காவியம் நடத்தினார். நம்பி பரிதாபப்பட்டோம். பல விசயங்களில் கணக்கு வழக்கு அதுவொரு பக்கம் உதைத்துக் கொண்டேயிருந்தது. அட விடுங்கப்பா.. என்று கடந்து சென்றோம்.

முதலில் தப்லீக் என்றார்கள். இப்போது கோயம்பேடு என்று வந்து நிற்கின்றார்கள். மூன்று நாளில் முடிவு கட்டிவிடுவோம் என்றார். கிராப் இறங்குகின்றது என்று ஆதாரங்களை அள்ளி வீசினார்கள். வந்தார்கள். மறைந்தார்கள். மறைக்கப்பட்டார்கள். உருவாக்கினார்கள். உளறினார்கள். நாடகம் போலவே இருந்தது. நம்பித் தொலைக்க வேண்டியதாகவும் இருந்தது.

சமாதியின் தியானம் செய்தவர் பொறுப்பில் தான் கோயம்பேடு சந்தை இருந்தது. இத்தனை நாளும் ஒன்றும் செய்யவில்லை. இப்போது கூட ஒன்றும் செய்ய மனமில்லாமல் அவர் வீட்டுக்குள் தியானம் தான் இன்னமும் செய்து கொண்டிருக்கின்றார்.

அதிகாரிகளும் கப் சிப். ஆட்சியாளர்களும் கப் சிப்.

அது குறித்து ஒரு பேச்சு இல்லை. ஆனால் தமிழகம் முழுக்க பரவியுள்ளது. பரவிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் நாளை 7 ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்படுகின்றது.

ஏற்கனவே மதியம் 12 மணி முதல் தொடங்கப்பட்டது. இப்போது அலுவலக நேரம் போலக் காலையில் தொடங்கப்படுகின்றது.

கடந்த ஆறு வாரமாக அரசின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருந்த ஆண்களுக்கு எடப்பாடியார் நாளை அன்புப் பரிசு வழங்கப் போகின்றார். குடிமகன்களுக்கு நாளை சுதந்திர நாள்.

கடந்த 4ந் தேதி முதல் வெளியே நடமாடலாம் என்று தளர்வுகளை உருவாக்கியுள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் முழு வீச்சாக இயங்கப் போகின்றது. அதுவும் நான்கு நாளைக்கு முன்பே அறிவித்து மதுப்பிரியர்களின் (இப்படித்தான் ஊடகங்கள் சொல்கின்றது) வயிற்றில் பீர் வார்த்துள்ளது.

தரம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வழங்கும் கடைகள் சுற்றுப்புறம் குறித்தும் அச்சப்படத் தேவையில்லை. கலப்பிடமோ கருமாந்திரமோ, சரக்கு என்று பெயரில் அரசு கொடுத்துக் கொண்டிருக்கும் எரி சாராயத்தை வாங்க வேண்டுமென்றால் குடை பிடித்து வா. குதுகலமாக வாங்கிக் கொண்டுப் போ என்று திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. குடை இல்லாதவர்களுக்கு மது இல்லை என்று அறிவுறுத்தியுள்ளனர்.

எடப்பாடியாரிடம் கேட்க சில கேள்விகள் உள்ளது.

1. எட்டுக் கோடி மக்களில் தற்போது ஒரு கோடி மக்கள் குடிகாரர்களாக உள்ளனர். இது டாஸ்மாக் விற்பனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கு. இதில் பாதிக்குப் பாதி பேர்கள் குடி நோயாளியாகவும் உள்ளனர். கடந்த ஆறு வாரங்களில் இவர்கள் எப்படித் தப்பிப் பிழைத்தார்கள் என்பதே மிகப் பெரிய ஆச்சரியம். உங்கள் கிரகங்கள் உச்சத்தில் இருப்பதால் பெரிய அளவுக்குப் பிரச்சனை இல்லாமல் கடந்த ஆறு வாரங்கள் தமிழகத்தில் சச்சரவு இன்றி கடந்து விட்டது. இப்போது ஒட்டு மொத்தமாக மொத்தத் தமிழகத்திற்கும் சாவு மணி அடிக்கப் போகின்றீர்கள் என்பது புரிகின்றதா?

2. மத்திய அரசாங்கம் உதவவில்லை. நிதி ஆதாரம் நினைத்த அளவுக்கு எந்தப் பக்கத்திலும் இருந்தும் வந்து சேரவில்லை. கதறக்கதற அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்தாகி விட்டது. இந்தத் தொகையும் உடனே உதவாது. மெதுவாக, படிப்படியாக உதவும் என்றே கணக்கில் வைத்துக் கொள்ளலாம். அரசு சக்கரம் இயங்க நிதி தேவை. ரூபாய் 110 குவாட்டரை ஊரடங்கு காலத்தில் பலர் 500 ரூபாய் கொடுத்து வாங்கினர். சிலர் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

ஒவ்வொரு சமஉ க்களும் இந்தப் பாட்டில் விற்பனையில் தான் அதிகக் கவனம் செலுத்தினார்கள் என்று பேச்சு வந்தது. இது தவிரத் தினசரி செய்திகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் என்ற பிரச்சனை அங்கங்கே மெது மெதுவாகக் கிளம்பிக் கொண்டேயிருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் டாஸ்மாக் திறப்பது தவறில்லை? என்ற சொன்னாலும் எந்தச் சமயத்தில் திறப்பது? என்பது தான் அச்சத்தை உருவாகின்றது?

3. எதிர்க்கட்சிகள் அவர்கள் பங்குக்கு திறக்காதீர் என்று ஒரு முறை கூவிவிட்டு அடங்கி விட்டார்கள். அதற்கு மேல் அவர்கள் கூவ மாட்டார்கள். காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கொரானா நோய்த் தொற்று என்பது மருந்து மாத்திரைகளை விட அவரவர் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டே உயிர் பிழைப்பது என்பதே நடக்கின்றது. மருத்து உதவிகள் என்பது பெயரளவுக்குத்தான் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் நாளை முதல் மது அருந்துபவர்களின் எதிர்ப்புச் சக்தி தான் பலியாகப் போகின்றது. காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தது போல வீபரிதங்கள் நடக்கப் போகின்றது. கொத்து கொத்தாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்னவாகும்?

4. ஏற்கனவே ஏப்ரல், மே மாதத்திற்கு ரேசனில் இலவசப் பொருட்கள் வழங்கி விட்டு இப்போது ஜூன் மாதத்திற்கும் வழங்கப் போகின்றீர்கள். ஆக மொத்தம் 60 சதவிகித மக்களிடம் பத்து நயா பைசா கூட இருக்காது. ஆனாலும் குடும்பங்கள் அமைதியாகச் சந்தோஷமாகக் கடந்த ஆறு வாரங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அது நாளை முதல் தலைகீழாக மாறப் போகின்றது.

5. வாங்கும் போது குடைபிடித்து வாங்குகின்றவன் வெளியே வந்தவுடன் யாருடன் சேர்ந்து குடிப்பான்? எங்கே செல்வான். மது மயக்கத்தில் யார் யாருடன் சேர்வான்? எல்லாமே தலைகீழாக நடக்கப் போகின்றது? மொத்தப் பழியும் உங்களை நோக்கியே வரப்போகின்றது.

எட்டுக் கோடி ஜனத்தொகை அதிகம். குறைந்தால் பரவாயில்லை என்று நினைத்து இருக்கக்கூடியவர்கள் தான் இப்போதைய சூழலில் இது போன்ற ஆபத்தான முடிவை எடுக்கத் துணிவார்கள்.

வருகின்ற May  22ந் தேதி நிறைந்த அம்மாவாசை.

பார்க்கலாம்.

அடுத்த இரண்டு வாரத்தில் தெரியும்.உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளுங்க.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் படமும் கடைசி படமும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது....

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை ஐயா

வெங்கட் நாகராஜ் said...

கடைசி படம் - சரியான இடத்தில் சரியான விளம்பரம் - இந்தச் சூழலுக்கு!

வேதனை தான். குடிக்கிறார்கள் - விற்கிறோம்; விற்கிறார்கள் - குடிக்கிறோம் கதை தான் இப்போதும்.

G.M Balasubramaniam said...

அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்பரிசோதனை இலவசமா