Sunday, May 17, 2020

கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


குரல்வழி பதிவு (ஜோதிஜி பேசுகிறேன்) - 2

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மாறியது.  வசதிகள் கூடியது.  ஏழை, பணக்காரன் என்ற இரண்டு அடுக்கு மாறியது. நடுத்தரவர்க்கத்தின் எண்ணிக்கை அதிகமானது. கூடவே  உயர் நடுத்தரவர்க்கம் என்ற புதிய வர்க்கம் உருவானது.

கம்யூனிஸ்ட் கொள்கைகள் செல்லக்காசாக மாறியது. பணமே பிரதானம். செல்வமே கடவுள் புதிய கொள்கை உருவானது.

காண்பதெல்லாம் வாங்கு. பார்ப்பதெல்லாம் அனுபவிக்க என்ற தத்துவம் தமிழர்களை வழிநடத்தத் தொடங்கியது.

நுகர்வோருக்கு தரம் தேவையில்லை. விளம்பரங்கள் போதும் என்ற எண்ணம் தான் விற்பனையை வளர்த்தது. கடன் வாங்குவது தவறில்லை என்ற கொள்கையும்  இயல்பானது.

சுதந்திரம் முக்கியம் என்றார்கள். கூட்டுக்குடித்தனம் தவறு என்றார்கள். அவரவர் பாதைகள் வேறு. பயணம் வேறு. எண்ணங்கள் வேறு. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றார்கள். சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்  என்று வந்தவர் போனவர் அனைவரும் அறிவுரை சொன்னார்கள்.

ஆனால்.......... நம்புவார்களா? மாட்டார்களா? என்று தெரியாது. 

ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமான உண்மைகள். எல்லாவற்றையும் கொரனா உருவாக்கியது. அதுவே உறுதிப்படுத்தியது. இப்போது நாம் கொரானா கால நினைவுகள் குறித்துப் பேசப் போகின்றோம்.

“இப்படியான ஒரு காலத்தை நாங்கள் கடந்து வந்தோம்” என்று இன்னும் 25 வருடங்கள் கழித்து நம் தலைமுறைகளிடம் சொன்னால் என்ன பதில் வரும்?

கொரனா காலம் என்பதனைப் பற்றியோ கோவிட் 19 உருவாக்கிய தாக்கத்தையே அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதே குழப்பமாக உள்ளது.

சீனா தான் காரணம் என்பதும், வூகான் மாநிலத்தில் உருவான வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தியது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்குமா?

வீட்டுக்குள் இருந்து உயிர் பிழைத்தோம். தனித்து இருந்து தப்பித்தோம். என்று சொன்னால் எதிர்கால மருத்துவ உலகம் சிரிக்காதா?

இயற்கையில் உருவானதா? செயற்கை சமாச்சாரமா? என்ற ஆராய்ச்சி முடிவே ஆறு மாதங்கள் ஆகியும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இன்னமும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர். மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் நிலை குலைந்து போய் விட்டது.

மானிட இயக்க விதிகள் மாறிப் போனது. மகா பெரிய கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தை இழந்தார்கள். அளவாக செல்வம் உடையவர்கள் உணவு இல்லாதவர்களுக்கு வழங்கினார்கள்.

அரசு ஊழியர்கள் அன்போடு பணிபுரிந்தார்கள். சாலைகள் சந்துகள் வீடுகள் எங்கும் கிருமி நாசினியை முதல் முறையாக பீய்ச்சியடிக்கப்பட்டது. நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் நகரும் சாலைகள் அனைத்தும் வெறிச் சோடியது. முக்கிய நகர்ப்புற சாலைகளில் கூட விலங்குகள்  பயமின்றி பயணித்தது. புகையின்றி காற்றைச் சுகமாகச் சுவாசித்தது. மனிதர்களுக்கு பயணமே இல்லாத வாழ்க்கையானது.

தமிழக அரசு   மருத்துவமனைகள்  கோவிலாக மாறியது. மருத்துவர்களும், சுகதாரப் பணியாளர்களும் கடவுளாக மாறினார்கள். 
செலவில்லாத சுகப் பிரசவம் அதிகமானது. 
கொரானா நோயை நெஞ்சக நோய் என்று தமிழில் அழைத்தார்கள். 
நோயாளிகளுக்கு பாசத்துடன் உணவு வழங்கினார்கள்.
கபசுர குடிநீர்’ கண்கண்ட கடவுளாக வந்து சேர்ந்தது.
எல்லாமே அரசு செலவு. 
தனியார் மருத்துவமனைகள் தடுமாறி இயக்கமற்று கிடந்தார்கள்.

உலகில் டாலர் முதல் பணம் வரைக்கும் செல்லாக்காசானது வல்லரசு நாடுகள் தடுமாறியது. வசதியிருந்தவர்களும் அரசு மருத்துவமனைகளில் தான் அடைக்கலாம் ஆக வேண்டியிருந்தது.

இங்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாமல் எதைத்தான் செய்ய வேண்டும் என்பதனையும் அறியாமல் குழம்பிக் கிடந்த போது கொரானா கற்றுக் கொடுத்த பாடங்கள் ஒன்றா இரண்டா?

2020 ல் ஒரு அலைபேசி தான் உலகம். ஒவ்வொருவரும் ஒரு உலகத்தை வைத்திருக்கின்றனர்.  கண்டம் கடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் காட்சியாக வந்து நம் அலைபேசியில் விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பது என்னவொரு விந்தை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின்னால் நவீனத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இன்னமும் உச்சத்தில் இருக்கும். அப்போது கொரனா நினைவுகள் குறித்து அறியப் பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்தால் எப்படி உணர்வார்கள்?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பஞ்சங்கள் பசியைக் கொண்டு வந்தது. பசி வறுமையைக் கொண்டு வந்தது. வறுமை கொத்துக் கொத்தாக மக்களைச் சாக வைத்தது. ஆனால் இன்று? பஞ்சம், பசி, பட்டினி எல்லாமே வெறும் வார்த்தையாக மாறியுள்ளது. ஒப்பீட்டளவில் மனிதர்களின் வறுமை என்ற எல்லைக்கோட்டைக் கடந்து வந்துள்ளான். முயற்சிக்கின்றான். வாய்ப்பும் உள்ளது. வசதிகளும் இழுத்துச் செல்கின்றது. ஆசைகள் இழுத்துச் செல்கின்றது.

தற்போது மனிதர்களுக்கு எதுவும் அனுபவிக்கக் கூடியது என்ற எண்ணத்தால் ஒவ்வொரு நாடும் சந்தையாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் நுகர்வோராகவே உள்ளான்.

இதன் காரணமாகக் கோரானா உருவாக்கிய ஒழுக்க விதிகளைப் பின்பற்ற முடியாமல் சாலைக்கு வரும் போது காவல்துறையிடம் சிக்கி உக்கி போடுகின்றார்கள். கும்மி தட்டுகின்றார்கள். கடைசியாகக் கதறி மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு ஓடுகின்றார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இங்கு வந்த பஞ்சங்கள் அனைத்தும் வெறுமனே கும்மிப்பாடல்களாக, ஒழுங்கற்ற கோர்வையற்ற செய்திகளாகவே உள்ளது.  முழுமையாக எங்கும் எவரும் ஆவணப்படுத்தப்படவே இல்லை.  அதன் தாக்கத்தை இன்று வரையிலும் எவரும் உணர வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொரானா காலமென்பது காணொளிக்காட்சியாக உள்ளது. எழுத்து வடிவில் உள்ளது. இதற்கு மேலாக சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் எழுதிய அவரவர் அனுபவங்கள் சார்ந்த ஆவணமாகவும் உள்ளது. 

ஒரு தகவல் உண்மையா என்பதற்கு எதிர்காலத்தில் சோதித்துப் பார்க்கப் பலரின் எழுத்துக்கள் ஆவணமாக இருக்கிறது என்பதே தற்போதைய கொரானா காலத்தின் ஒரே சிறப்பு.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பல எல்லைக்கோடுகள் உண்டு. மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல பிரிவினைகளையும் உடைத்துச் சுக்குநூறாகி அதெல்லாம் இருக்கட்டும். நீ முதலில் வீட்டுக்குள் போய் உட்கார். நான் சொல்லும் வரைக்கும் வெளியே வராதே என்று 2020 என்று ஒவ்வொருவரையும் மாற்றும் என்று எந்த ஜோசியராவது 2020 புத்தாண்டு பலனில் சொன்னார்களா?

இப்படியான ஒரு வாழ்க்கை முதல் ஆறு மாதங்களில் நாம் வாழ வேண்டியிருக்கும் என்று எவரும் நினைத்திருக்கவே மாட்டார்கள்.  பரம ஏழை முதல் பகாசூர பணக்காரர்கள் வரைக்கும் வரை,  கிராமம் முதல் நகரம் வரை. சென்னை முதல் நியூயார்க் வரை.  மெல்பேர்ன் முதல் வான்கூவர் வரைக்கும் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் கண்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்களை, வயது வித்தியாசமின்றி, பொருளாதார உயர்வு தாழ்வின்றி அனைவரும் இப்போது ஒரே மாதிரியான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும்.  என்ன வசதிகள் இருந்தாலும் வீட்டுக்குள் மட்டும் தான் இருந்தாக வேண்டும் என்று சிறிய கிருமி மிரட்டிவிட்டதே?

மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் கடந்த 50 நாளில் ஒன்று சேர்ந்து அன்பு ஆறாக ஓடியுள்ளது.  அதன் விளைவு அடுத்த வருடம் பல கோடி புதிய ஜீவன்கள் இந்தப் பூமிக்கு வரப் போகின்றார்கள் என்று எச்சரிக்கின்றார்கள்.

குழந்தைகளைக் கவனிக்காமல், மனைவியுடன் பேச நேரம் இல்லாமல் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருந்த விரைவு வாழ்க்கையை கொரானா மாற்றியுள்ளது.   கிமு, கிபி என்பது போல  இனி கொமு கொபி என்பதாக மாறியுள்ளது. அதாவது கொரானாவிற்கு முன், கொரானாவிற்கு பின் என்பதாக இனி வரும் காலம் மாறப் போகின்றது. கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாகப் பார்த்து உத்தேசமாகப் படம் வரைந்து பாகம் குறித்துள்ள நவீன விஞ்ஞானம் நமக்கு உணர்த்தியதை விடச் சமூக விஞ்ஞானத்தில் நடந்துள்ள மாற்றங்கள் அபாரமானது.

வீட்டைச்சுற்றியுள்ள இயற்கை குறித்து அக்கறை வந்துள்ளது.

பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் அசிங்கமல்ல என்ற எண்ணம் உருவாகியுள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு நாட்டுக்குத் தேவை என்பதனையும் உணர்த்தியுள்ளது.

உணவு கலாச்சாரம் மாறியுள்ளது.

பீகார் அருகே உள்ள கிராமத்திலிருந்து இமயமலையின் முடுகளைப் பார்க்கும் அளவிற்கு இடையே உள்ள 180 கிலோ மீட்டர் வானவெளியும் படு சுத்தமாக மாறியுள்ளது.

பல நூறு வருடங்கள் பல மனிதர்கள் சாதிக்க முடியாமல் அழுக்காக அசிங்கமாக இருந்த கங்கை நதியின் நீர் இப்போது இளநீர் போல மாறியுள்ளது.

கொரனா வருவதற்கு முன்பே டெல்லி மக்கள் முகமூடி போட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது டெல்லி காற்றின் மாசு நம்ப முடியாத அளவிற்கு முழுமையாக குறைந்துள்ளது. இலவசமாகத் தருகிறேன். என்னிடம் உள்ள கச்சா எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போ என்று இப்போது நடக்கும் கூத்தை எதிர்காலத்தில் சொன்னால் யாராவது நம்புவார்களா?

கொரனா என்பது நோயல்ல.
பூமிப் பந்தை சுத்தப்படுத்த வந்த தேவதை.

தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு வழிகாட்ட வந்த மாபெரும் சக்தி.
முதல் குரல் வழிப் பதிவு கேட்க சொடுக்க

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்து வடிவில் கொண்டு வந்தாச்சா...? நல்லது... அருமை...

நம் கரந்தை ஐயா பதிவை சொன்னேன்... அவர் வேறு ஒரு தொழினுட்பத்தை பயன்படுத்தினார்... ஆனால் அது கேட்பொலியாக மட்டும்...

ESWARAN.A said...

அருமை.. வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள்..

Rathnavel Natarajan said...

இப்படியான ஒரு வாழ்க்கை முதல் ஆறு மாதங்களில் நாம் வாழ வேண்டியிருக்கும் என்று எவரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். பரம ஏழை முதல் பகாசூர பணக்காரர்கள் வரைக்கும் வரை, கிராமம் முதல் நகரம் வரை. சென்னை முதல் நியூயார்க் வரை. மெல்பேர்ன் முதல் வான்கூவர் வரைக்கும் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் கண்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்களை, வயது வித்தியாசமின்றி, பொருளாதார உயர்வு தாழ்வின்றி அனைவரும் இப்போது ஒரே மாதிரியான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும். என்ன வசதிகள் இருந்தாலும் வீட்டுக்குள் மட்டும் தான் இருந்தாக வேண்டும் என்று சிறிய கிருமி மிரட்டிவிட்டதே? - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா
குரலும், படங்களும் தங்களின் எழுத்திற்கு வலு சேர்க்கின்றன

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவின் எழுத்தின் அளவு பெரியதாக இருக்கிறது ஐயா
சிறிதாக்கினால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்

Jayakumar Chandrasekaran said...

அருமை. சீரான நடை. பிழையின்றி சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறீர்கள். 
Jayakumar

ஜோதிஜி said...

தனபாலன் கவனித்தீர்களா? இந்த பாண்ட் சைஸ் நல்லது அல்ல.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

இது பெரிய வார்த்தை.

ஜோதிஜி said...

அதற்குள் விரைவில் நுழைவேன். உங்களை அழைப்பேன்.

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

சில சமயங்களில் காணொளியாக கேட்க/பார்க்க முடிவதில்லை என்பதால் எழுத்திலும் சேர்த்தது சிறப்பு. எழுத்தின் அளவு பெரிதாக்குவதும் சிறிதாக்குவதும் வாசிப்பவர் கையில். Ctrl பிடித்துக் கொண்டு மேலே கீழே ஸ்க்ரோல் செய்தால் போதும்! ரொம்பவே சிறிதாக இருந்தால் தான் பிரச்சனை.