Thursday, May 14, 2020

உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளுங்க.

சுய ஊரடங்கு 3.0 - 54
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

தமிழகத்தில் சிவப்பு குறி என்று அடையாளம் காட்டப்பட்ட சில மாவட்டங்களுக்கு மொத்தமாக 72 மணி நேரம் ஊரடங்கு என்றவுடன் மக்கள் அனைவரும் அங்கங்கே கூட்டமாகக் கும்மி தட்ட நம்மவர்கள் எப்போதும் போல அரசுக்கு அறிவே இல்லை என்கிற ரீதியில் படத்தையும் போட்டு பாடம் வேறு நடத்துகின்றார்கள்.

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை வாய்ப்பிருந்தால் இன்று செய்ய முடியுமா? என்று பாருங்கள்?



உங்கள் வீட்டுக்குள் இருப்பவர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், அறிமுகமானவர் என்று உங்கள் வட்டத்தில் உள்ள இருபது பேர்களிடம் கொரானா வைரஸ் பற்றி கேளுங்கள். எப்படிப் பரவுகின்றது? நாம் எப்படியிருக்க வேண்டும்? என்ன தற்காப்பு? போன்றவற்றை இயல்பான உரையாடலின் போது கேட்டுப் பாருங்களேன்.

ஒரு மாதம் ஆகி விட்டது. ஊடகங்கள், பத்திரிக்கைகள் அனைத்திலும் படம் வரைந்து பாகம் குறித்து விட்டார்கள். விவாத மேடையில் தினமும் நான்கு கழுதைகள் வேறு உட்கார்ந்து கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்து இருக்கக்கூடும்.

வாட்ஸ் அப், வூகான் முதல் வட கொரியா எமப்பய வரைக்கும் ஏராளமான ஏழரை சமாச்சாரங்களையும் கொண்டு வந்து திரும்பத் திரும்பத் தள்ளிக் கொண்டே இருந்திருக்கும் தானே?

மக்கள் புரிந்து இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

பக்கத்தில் செல்லக்கூடாது.
தொடுதல் கூடாது.
உரசுதல் கூடாது.
தும்முதல் கூடாது.
எச்சில் துப்பக்கூடாது.

இந்தப் பஞ்சப் பாண்டவம் தானே.

பிறகேன் காய்கறிகடைகளில், கறிக்கடைகளில் இத்தனைக்கூட்டம். பயம் இல்லையா? புரியவில்லையா?

காரணம் ஒன்றே ஒன்று தான்.

இதுவரையிலும் வந்த கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிகுறிகள் உடனே வெளியே தெரிய வரும். அம்மை நோய் என்றால் முகம் எத்தனை விகாரமாக மாறும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடல் சில தினங்களில் காட்டிவிடும். வெளியே செல்ல முடியாது. முடங்கி விடுவார்கள்.

ஆனால் இங்கு தலைகீழ். அறிகுறிதெரிய வருவதே 14 நாட்களுக்கு மேல் ஆகும். இதற்கு மேலாக நமக்கெல்லாம் இது வராது என்ற நம்பிக்கை.

"இந்தத் தொற்று ஒருவருக்கு வந்தவுடன் முகத்தில் கட்டி வரும். அது மறைய மருந்து இன்னமும் கண்டு பிடிக்க வில்லை என்று சொல்லிப் பாருங்கள்".

ஒரு பயபுள்ளைங்க வெளியே வர மாட்டார்கள்.

இது தான் இங்கே இத்தனை பஞ்சாயத்துக்களுக்கு முக்கியக் காரணம்.

அரசாங்கத்தைக் குறை சொல்லாதீர்கள்.

ஒவ்வொரு குடிமகனையும் தொட்டிலில் படுக்கப்போட்டு கிண்டில் மூலம் பால் கொடுக்க முடியாது. அது அரசின் வேலையும் அல்ல. கையில் காசு இல்லாமல் கணக்கற்ற செலவு இருந்தால் குடும்பத்தலைவர் எந்த அளவுக்கு கொதி நிலையில் இருப்பார். அப்படித்தான் எடப்பாடி இப்போது இருக்கக்கூடும்?

ரேசன் அரிசியை வரிசையில் நின்று வாங்கிக் கொண்டு வெளியே மூன்று ரூபாய்க்கு விற்று கிலோ 50 ரூபாய் விலைக்கு வாங்கிய அரிசி சாப்பிடும் தமிழர்களுக்குக் கொஞ்சம் அறிவென்பது புடைப்பாகத்தான் இருக்கும்.

அடுத்த சில வாரங்களில் நல்ல செய்திகள் வரும்.

வரும் வரைக்கும் காத்திருக்கவும்.

அதுவரைக்கும் இந்த மாக்களிடம் இருந்து உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளுங்க.

இப்போதைக்கு அது போதும்.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
அலைகடலெனக் கூடும் கூட்டங்களைத் தொலைக் காட்சியில் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது

வெங்கட் நாகராஜ் said...

கும்பல் கும்பலாக மனிதர்கள் - எங்கே செல்கிறார்கள் எதற்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை. இன்னும் தொற்று பற்றிய புரிதல் நம் மக்களிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கவனம்... அதிக கவனம் தேவை...

ஜோதிஜி said...

அடுத்தடுத்து வரப் போகும் குரல் பதிவில் இதனைப் பற்றி வேறொரு பார்வையில் பேசியுள்ளேன்.

ஜோதிஜி said...

பட்டுத் திருந்துவார்கள்.

ஜோதிஜி said...

வெற்றிகரமாக 52 நாட்களை நாம் கடந்து வந்துள்ளோம்.