Tuesday, May 11, 2021

ஞானக் கண்

நடந்து முடிந்த தேர்தல் என் ஞானக் கண்களைப் பல விதங்களில் திறந்துள்ளது. 

அவினாசியிலிருந்து வீட்டுக்குத் தினமும் வந்து காய்கனிகள் வழங்கும் நபர் அவினாசி தொகுதியில் நடந்த சிலவற்றை எனக்குப் புரிய வைத்தார். எனக்கு குழப்பமாக இன்னமும் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளது.



அங்கு முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிட்டார். ஒரு கை மடங்கியே இருக்கும். வாய் கூடச் சற்று கோணலாகவே இருக்கும். அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் அவினாசியில் மீண்டும் நின்று வெற்றி பெற்றுள்ளார். நானே அதியமான் கட்டாயம் தோற்பார் என்று எழுதியதற்குக் காரணம் அவரின் வாய்த்துடுக்கான பேச்சு. சாதி கலவரத்தைத் தூண்டும் வண்ணம் செயல்படும் அவரின் நடவடிக்கை.

அது மட்டும் காரணம் அல்ல என்பதனை உணர்ந்து கொண்டேன்.  அமைச்சராக இருப்பவர்கள் திருட முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சபாநாயகர் எப்படித் திருட முடியும்? அவருக்கும் எந்தத்  துறைக்கும் தொடர்பே இல்லையே என்று யோசித்ததுண்டு. ஆனால் தனபாலன் இறக்கிய பணம் சொல்லி மாளாது.

திமுகவிலிருந்து சீட் கேட்டவர் தன் மகனுக்குக் கேட்டு உள்ளார். 15 கோடி வரைக்கும் செலவழிக்க முடியும் என்று உறுதி அளித்தும் அதியமான் பக்கம் தள்ளிவிட்டார்கள்.  காரணம் தனபால் 50 கோடி செலவளிக்க தயாராக உள்ளார். நீங்கள் வைத்துள்ள பணத்தைப் பத்திரமாக வைத்திருங்கள். வேறு பதவிகளில் அமரலாம் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி உள்ளனர். அதாவது இரண்டு பக்கமும் யார் நிற்கின்றார்கள்? எவ்வளவு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்? மற்ற விசயங்கள் என்ன? என்பது போன்ற பல விசயங்களை வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பே இரு கட்சியில் இருப்பவர்களும் தனிப்பட்ட முறையில் கலந்து ஆலோசித்து இருப்பார்களோ என்கிற அளவுக்குத் தான் இரண்டு பக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. வேட்பாளர் பட்டியல் வந்த போதே புரிந்து கொண்டேன். சிரித்துக் கொண்டேன். சேப்பாக்கம் செட்டிங் கணக்கில் கொண்டு வந்த போது உறுதியானது.

தனபாலன் ஒவ்வொரு வாக்காளர்களுக்கு ஆயிரம் என்று வழங்கி உள்ளார். அதியமான் குறிப்பிட்ட மக்களுக்கு 300 என்பதற்கு மேல் தாண்ட முடியவில்லை. அதாவது தனபாலன் மூலமாக ஒரு குடும்பத்திற்கே 5000 வரைக்கும் எளிதாக கிடைத்துள்ளது. காய்கறி வழங்குபவர் வீட்டுக்கு மட்டும் பத்தாயிரம் கிடைத்துள்ளது. 

தனபாலன் எந்த வகையில் சம்பாதித்து இருப்பார் என்று இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். காரணம் அமைச்சராக இருந்தவர்கள் ஒவ்வொருவரும் கிங்கரர்கள். ஒரே ஒரு முறை ஏற்கனவே தொடக்கத்தில் நடந்த குழப்ப சூழலில் தனபாலனுக்கு முதல்வர் ஆசை வர எடப்பாடி அழைத்து ஆப்படித்த கதையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தது.

இந்தத் தேர்தலில் இயல்பாக செலவு செய்தவர்களே ஒரு தொகுதிக்குக் குறைந்தபட்சம் 12 கோடி செலவு செய்து உள்ளார்கள். அதாவது வாக்காளர்களுக்கு வழங்கிய கணக்கு தனி. கரூர் தொகுதி 100 கோடி (இரண்டு பக்கமும் 200 கோடி) ஒபிஎஸ் தொகுதி உச்சபட்சத் தொகை. எத்தனை கோடி என்று என்னால் யூகிக்க முடியவில்லை என்று அங்கு வாக்களித்த நண்பர் சொன்னார்.

மரண பயத்தைக் காட்டிய தேர்தல் 2021

அடையாளச் சிக்கலுடன் வாழும் அனாதை பிம்பங்கள்

பாஜக வாங்கிய வாக்குகளும் வென்ற 4 வேட்பாளர்களும் 2021

காரணம் தங்கக் காசு வழங்கிய ஒரே தொகுதி ஒபிஎஸ் தொகுதி மட்டுமே. இது தவிர பத்தாயிரம் வரைக்கும் ஒபிஎஸ் வழங்க (எப்படித்தான் மனம் வந்ததோ? அப்பா, மகன்கள் அனைவரும் ஒன் வே ட்ராபிக். எதுவும் வெளியே வரவே வராது) ஒரு குடும்பத்திற்கே ஐம்பதாயிரம் வரைக்கும் கிடைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டு வேட்பாளர் விருப்பப்படி செலவு செய்யலாம் என்று கொண்டு வந்தால் கூடப் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் அல்லவா?  எத்தனை நாளைக்குத்தான் புத்தம்புது இரண்டாயிரம் தாள்கள் இருட்டறைகளில் உறங்கிக் கொண்டேயிருக்கும்?

அதாவது நீங்கள் சமஉ ஆக ஆசைப்பட்டால் உங்களிடம் ரொக்கமாக 20 கோடி வேண்டும். அல்லது அதற்குச் சமமாக விற்க சொத்து இருக்க வேண்டும். தோற்றால் பக்கவாதம் வராத அளவிற்கு மனவுறுதி இருக்க வேண்டும்.

நண்பர் பேசும் போது சென்ற முறை தேர்தல் செலவுகளை விட இந்த முறை பத்து மடங்கு சர்வசாதாரணமாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் அடிப்படை விசயங்களில் மட்டுமே என்றார்.

இதிலும் ஆச்சரியப்படத்தக்க ஒரே விசயம். நாம் தமிழர் கட்சிக்கு வந்த முப்பது லட்ச ஓட்டுகளும் நயம் அக்மார்க் சுத்த தமிழ்ப்பிள்கைள் காசு வாங்காமல் போட்டு உள்ளனர். காரணம் வேட்பாளர்களிடம் காசு இல்லை. நின்ற அத்தனை பேர்களும் எழுந்து வர அடுத்த ஐந்து வருடம் ஆகும். இந்த ஓட்டுக்கள் தவிர மற்ற அத்தனை கட்சிகளின் ஓட்டுகளிலும் கறை படிந்துள்ளது.

மதநல்லிணக்கம் பேசும் கமல் சார்பாக கோவையில் காருண்யா கோஷ்டி அங்கங்கே பாதிரியார்களை வைத்து 300,500 என்று அதி தீவிரமாக இறங்கி களத்தில் கடைசி வரைக்கும் ஆடியுள்ளனர். ஏன் மயூரா ஜெயக்குமாரை த்ராட்டில் விட்டார்கள் என்றே புரியவில்லை? அப்படியும் வானதி சீனிவாசன் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. இவர் வந்து விடவே கூடாது என்று என்னன்னவோ செய்து பார்த்தார்கள். இறுதியில் தோல்வி தான் அவர்களுக்குக் கிடைத்து. 

ஆனால் நான் வேறு ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். 

மிக மிகக் குறைந்த அளவாக ஒரு தொகுதிக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த தொகை மட்டும் பத்துக் கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ரொக்கப் பணமாக இந்த முறை தேர்தலில் 234 தொகுதிகளில் ரூபாய் 2340000000 (நீங்கள் தான் எவ்வளவு தொகை என்று மனக்கணக்கு போட்டுக் கொள்ள வேண்டும்) வாங்கிக் கொண்டு இந்திய ஜனநாயகத்தை தமிழ்ப்பிள்ளைகள் காப்பாற்றி உள்ளனர்.

இதனை இரண்டு மடங்கு மூன்று என்று நீங்கள் கணக்கில் எடுத்து கால்குலேட்டர் தேடிப் போட்டுப் பார்த்து அதில் கணக்கு வரவில்லையே என்று மயக்கம் போட்டு விழுந்தால் கொம்பேனி பொறுப்பேற்காது.


6 comments:

ஸ்ரீராம். said...

அம்மாடி...  வேறென்ன சொல்ல...   மயக்கம்தான் வருகிறது.

வெங்கட் நாகராஜ் said...

பணம் கொண்டு ஒரு மிகப் பெரிய சூதாட்டம் - ஒவ்வொரு தேர்தலிலும்... எங்கே போய் முடியும் இந்த சூதாட்டம். எந்தக் கட்சியாக இருந்தாலும் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்கள் - பார்க்கலாம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் நம் தமிழகத்தில் என!

திண்டுக்கல் தனபாலன் said...

மனித குல விரோத ஜண்டா மகனின் வளர்ச்சியை கணக்கீடு செய்யும் போதே கால்குலேட்டர் வீணாகி விட்டது...

வருண் said...

***மதநல்லிணக்கம் பேசும் கமல் சார்பாக கோவையில் காருண்யா கோஷ்டி அங்கங்கே பாதிரியார்களை வைத்து 300,500 என்று அதி தீவிரமாக இறங்கி களத்தில் கடைசி வரைக்கும் ஆடியுள்ளனர். ஏன் மயூரா ஜெயக்குமாரை த்ராட்டில் விட்டார்கள் என்றே புரியவில்லை? அப்படியும் வானதி சீனிவாசன் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. இவர் வந்து விடவே கூடாது என்று என்னன்னவோ செய்து பார்த்தார்கள். இறுதியில் தோல்வி தான் அவர்களுக்குக் கிடைத்து.**

நீங்க சொல்றதப் பார்த்தா கமலஹாசன் காசு கொடுத்து தோத்துப் போயிட்டாரு (-300,500 என்று அதி தீவிரமாக இறங்கி களத்தில் கடைசி வரைக்கும் ஆடியுள்ளனர்-, ஆனால் இந்தம்மா வானதி ஶ்ரீனிவாசன் காசு கொடுக்காமல் யோக்கியமா மத உணர்வை, கடவுள் பக்தியை ஊட்டி ஊட்டி ஜெவிச்சிட்டாங்கனு சொல்ற மாதிரி எழுதுறீங்க.

..நீங்களும் அரசியல்வாதி மாதிரித்தான் எழுதுறீங்க, எதை ப்ளோ அப் பண்ணனும், எதை அடக்கி வாசிக்கனும்னு எல்லாம் தெரிந்து, அரசியல் செய்துதான் எழுதுறீங்க.. வாழ்த்துகள்!

ஆக, பா ஜ க ஜெவிச்ச 4 தொகுதியிலும் காசுகொடுக்காமலே ஜெயிச்சுட்டாங்களா? இல்லை அவங்களும் காசு கொடுத்தாங்களா? னு உங்க ஞானக் கண் பார்த்தத சொல்லுங்க ஜோதி G! இப்படி அதை மட்டும் சொல்லாமல் போகலாமா?!

அப்படியே பா ஜ க வேட்பாளர்கள் "கொஞ்சக் காசு" கொடுத்து ஜெயித்து இருந்தாலும் அது அவங்க தப்பு இல்லை.. யாரு அதிகமாக காசு கொடுத்தான்? யாரு இதை ஆரம்பிச்சு வச்சது..எல்லாம் அந்த திராவிட அரசியல்வாதிகள்தான்னு சொல்லுவீங்க. இல்லையா? :)


ஜோதிஜி said...

இதிலும் ஆச்சரியப்படத்தக்க ஒரே விசயம். நாம் தமிழர் கட்சிக்கு வந்த முப்பது லட்ச ஓட்டுகளும் நயம் அக்மார்க் சுத்த தமிழ்ப்பிள்கைள் காசு வாங்காமல் போட்டு உள்ளனர். காரணம் வேட்பாளர்களிடம் காசு இல்லை. நின்ற அத்தனை பேர்களும் எழுந்து வர அடுத்த ஐந்து வருடம் ஆகும். இந்த ஓட்டுக்கள் தவிர மற்ற அத்தனை கட்சிகளின் ஓட்டுகளிலும் கறை படிந்துள்ளது.

koilpillai said...

யாரைத்தான் நம்புவதோ?