Sunday, May 30, 2021

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி - ஏழாண்டு ஆட்சி காலம்

 ஏழு வருடங்கள்.. ஏழு காரணங்கள்..

கற்றதும் பெற்றதும்.......

1. இந்து என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இந்திய அரசியல்வாதிகள் சந்துக்குள் சிந்து பாடிக் கொண்டிருந்தார்கள். இன்று நாங்கள் இந்து சமூகத்திற்கு எதிரியல்ல என்று தேர்தல் சமயங்களில் (மட்டும்) கதறுகின்றார்கள். ஆனால் மோடி நீங்கள் மாற வேண்டும் என்று எந்த அரசியல்வாதிகளையையும் சொல்லவே இல்லை என்பதனையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.    
மதநல்லிணக்கம் என்ற பெயரில் நடந்து கொண்டிருந்த அயோக்கியத்தனம் முழுமையாக முடிவுக்கு இன்னமும் வந்து விடவில்லை. ஆனால் தண்ணீருக்குள் மூழ்கி சுவாசத்திற்கு ஏங்கும் நிலைக்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தடுமாறும் நிலைக்கு மாற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

2. ரிசர்வ் வங்கி இத்தனை லட்சம் கோடி தான் வெளியே புழங்குகின்றது என்ற கணக்கு வைத்திருந்தது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் சந்தி சிரித்தது. வந்து சேர்ந்த பணம் ஆவணங்களில் இருந்த கணக்கை விடப் பல மடங்கு இருந்தது. இன்னமும் பாதுகாக்கப்படும் பணம் அதனை விடப் பல மடங்கு உள்ளது. இப்படிப்பட்ட உன்னத நிர்வாகத்தைப் பாதுகாத்தவர்கள் ரகுராம் ராஜன். உத்தமர் பாசி. உலக மேதை மன்மோகன்.  

ஒரு நிர்வாகம். அதில் ஓராயிரம் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவுக்கும் ஆயிரமாயிரம் தலைகள். தறுதலைகள் தின்று கொண்டிருந்த பணம் மடை மாற்றப்பட்டது. பணம் அனைத்தும் வேறு திட்டங்களுக்கு மக்கள் நலனுக்காக மாற்றப்பட்டது. நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட்டது. அலறல் ஒலி அதிகமானது. கவலையில்லை. வெற்றி வேல்.வீர வேல். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. கடந்து வந்துள்ளோம்.

3. என்னைத் திட்டுங்கள். நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திருடாதீர்கள். அதனை நான் அனுமதிக்க மாட்டேன். கடின உழைப்பு எல்லா இடங்களிலும் தேவையில்லை. தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் பாதி மக்கள் தொகைக்கு நொடிப் பொழுதில் இடைத் தரகர் இல்லாமல் திருட்டுத்தனமின்றி அரசு வழங்கும் பணம் அல்வா துண்டு போலவே வந்து சேர்கின்றது.

58 ஆண்டுகள் இந்தியாவைச் சுரண்டியே வாழ்ந்தவர்கள் இன்று திக்குமுக்காடித் திணறிச் செய்வதறியாமல் தடுமாறு கின்றார்கள்.

4. மாற்றங்களை வரவேற்கிறேன். அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும். மாற்றங்கள் கற்றுக் கொடுத்துள்ளது. கவலையைத் தந்துள்ளது. கண்ணீர் வரவழைத்துள்ளது. ஆனாலும் விரும்புகிறேன். மாற்றங்களை விரும்பாதவர்கள் விரைவில் தேக்க நிலைக்குச் சென்று விடுவார்கள். மனதில் காரிய இருள் சூழ்ந்தவர்களாக இருப்பார்கள். பொதுவான வளர்ச்சியை விரும்பாமல் தன் வளர்ச்சி, தனக்கான வளர்ச்சியில் மட்டும் கவனமாக இருப்பார்கள். மனதிற்குள் பொறாமை கொழுந்து விட்டு எறியும். பொழுது முழுவதும் தன் வருமானம் குறித்தே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

தனிப்பட்ட மனிதர்கள், நிறுவனம் என்றால் அதன் இயங்குமுறை வேறு. ஆனால் நாடு என்று வரும் போது அதன் இயங்குதளமென்பது மக்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும். இப்படித்தான் மோடி அவர்கள் செயல்படுகின்றார் என்று உறுதியாக நம்புகிறேன். வரவேற்கின்றேன். ஆதரிக்கின்றேன். ஆதரிப்பேன்.

5. தலைவன் என்பவன் மாறலாம். ஆனால் அவன் மாற்றத்தை உணர்ந்து உள்வாங்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அதனைச் சூழல் பொறுத்துத் தகுந்த காரண காரியங்களுடன் மக்களுக்கு வழங்கத் தெரிய வேண்டும். 

மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக அவர்களைச் சீராட்டி, குளிப்பாட்டி, பாலூட்டி கொஞ்சிக் கொண்டேயிருக்க அவசியமில்லை. அவனை உணர வைப்பது தான் தலைவனின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும்.  

உனக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறேன். கற்பதற்குச் சூழலை உருவாக்கியும் தருகிறேன். போட்டிப் போடத் தயாராக இரு. கட்டாயம் நீ உன் முன்னேற்றத்திற்கு உழைத்துத்தான் ஆக வேண்டும். அதற்குத் தயாராக இரு. நான் செய்வது உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நீ எனக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட உன் தலைமுறைகள் இங்கே சுகமாக வாழ்வதும் முக்கியம். கடந்து வந்த பாதையில் நாம் அனுபவித்த பல துன்பங்களுக்குப் பலரும் காரணமாக இருந்த காரணத்தால் இந்த முறை அதனை நீக்க போக்க நாம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும். அப்படித்தான் மத்திய அரசு நிர்வாகம் அமைந்துள்ளது என்றே கருதுகிறேன். நம்புகிறேன். ஆதரிக்கின்றேன். ஆதரிப்பேன்.

மாற்றங்கள் எனக்கு ஆசான். வழிகாட்டி. நல்ல நிர்வாகி புதுப்புது மாற்றங்களை உருவாக்குபவராக இருப்பார். உருவான மாற்றத்தின் வழியே முன்னேற்றத்தை விரைவு படுத்துவார். நல்ல ஆசான் அதிகமாக பேசமாட்டார். புழுதி வாரித்தூற்றுபவர்களை அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டே முன்னேறுவார். மோடி முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார். வாழ்த்துகள்

6. தகுதியான நிர்வாகி என்பவருக்குண்டான முக்கியமான அடையாளம் அடிப்படையில் இருக்க வேண்டிய நிதி ஆதாரம். நிதி தான் நிர்வாகத்தை வழி நடத்துகின்றது. நம்பிக்கையளிக்கும். நல்ல எண்ணங்கள் மட்டுமே நல்ல நிர்வாகத்தைத் தந்து விடாது. கொடுக்க வேண்டிய இலவசம் என்பது வாங்குபவர்களைச் சோம்பேறியாக்கி விடக்கூடாது. அதே சமயத்தில் தகுந்த சமயத்தில் கொடுக்க வேண்டியதையும் கொடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதனையும் உணர்ந்து தான் மோடியின் நிர்வாகம் உள்ளது.

7. நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் எதிரிகளாக இருக்கின்றார்கள். ஆனால் பயந்து அமைதியாக இருக்கின்றார்கள். நாட்டுக்குள் இருப்பவர்கள் துரோகியாக இருக்கின்றார்கள். தெரிந்தும் இந்த விசயத்தில் மட்டும் மோடி அரசு மெதுவாக செயல்படுவது எனக்கு வருத்தமளிப்பதாக உள்ளது.

*****


1. மத்திய அரசு மானியங்கள், ஊதியங்கள் மற்றும் சமூக ஆதரவு திட்டங்களின் பலன்களைப் பயனாளிகளுக்கு வங்கி வழியாக நேரடி பரிமாற்றத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மொத்தமாக வருடந்தோறும் சுமார் ₹ 2.0 லட்சம் கோடி சேமிக்கப்படுகிறது.

2. 2014 முதல் 42.0 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டன.  இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வங்கிக் கணக்கு மூலம் வங்கிகள் மக்களின் பணத்தைச் சுரண்ட மோடி செய்த ஏற்பாடு என்று எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பிக் கொண்டு இருந்தனர். மோடி கண்டு கொள்ளவே இல்லை. 

காரணம் ஜன்தன் கணக்கு என்பது பூஜ்ஜிய இருப்பு கணக்கு கொண்டது. மத்திய அரசு வழங்குகின்ற நலத்திட்டங்கள் சார்ந்த பண உதவிகள் இதன் மூலம் வரவு வைக்கப்படுவதால் வங்கிகளால் கட்டணம் வசூலிக்க முடியாது.

இந்தக் கணக்குகள் 1.0 லட்சத்திற்குக் காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன, மேலும் அடல் ஓய்வூதிய யோஜனா சந்தாவைச் செலுத்தவும் பயன்படும்.

Direct Benefit TransferGovernment of India

3. உரம் விற்பனையின் போது ஆதார் ஐடியைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனையைப் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் 2020 மார்ச் வரை 10,000 கோடியைச் சேமிக்க முடிந்துள்ளது. 

இது 20-21 நிதியாண்டில் மற்றொரு ₹ 1250Cr ஐ சேமிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,

4, நரேகா ( தேசிய ஊரக கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம். நாம் நூறு நாள் வேலை வாய்ப்பு என்று அழைக்கின்றோம்)

2014 இல் NREGA க்காக நேரடி பரிமாற்றத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஊதியங்கள் ரொக்கமாக வழங்கப்பட்டன, யார் எப்போது பெற்றார்கள் என்பதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நேரடி பரிமாற்றம் மற்றும் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 10% சேமிப்பு  அரசுக்குக் கிடைத்து வருகின்றது. 5.நேரடியான வங்கிபரிமாற்றத் திட்டத்தை எரிவாயு உருளையில் செயல்படுத்துவதிலிருந்து எல்பிஜி மானியம் மிகப்பெரிய சேமிப்பை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. ஆதார் எண் மூலம் சுமார் ஆறு கோடியே இரண்டு லட்சம் போலி  பயனாளிகள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர் மற்றும் ஒரு கோடியே ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பிரதமர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கள் எல்.பி.ஜி மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

6, நாடு முழுவதும் சுமார் 3 கோடி போலி ரேஷன் அட்டைகள் அகற்றப்பட்டு இன்றுவரை இதன் மூலம் மட்டுமே 75,000 கோடி சேமிக்கப்பட்டு வருகின்றது. 7, முதியோர் உதவித் தொகையின் மூலம் நடைபெற்று வந்த திருட்டுத்தனங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. இறந்துபோனவர்களை வைத்து வாங்கிக் கொண்டு இருந்ததை கண்டுபிடித்து நிறுத்தப்பட்டது. பி.டி.எஸ் அமைப்பில் மரணம் புதுப்பிக்கப்படாததால் பல பயனாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆனாலும் இந்தளவு நகைச்சுவை ஆகாது அண்ணே...!

கிரி said...

பலர் மோடி / பாஜக மீது உள்ள வெறுப்பின் காரணமாக அவர்கள் செய்து வரும் நல்லதை கூட ஏற்க மறுக்கிறார்கள்.

ஆதார் இணைப்பின் மூலம் கோடிக்கணக்கான போலி கணக்குகள் நீக்கப்பட்டன.

வங்கியில் நேரடி பணம் செலுத்தும் முறையின் காரணமாக பயனாளர்கள் முழு பயனைப் பெற்றனர்.

பாஜக பெட்ரோல், கேஸ் போன்ற அடிப்படை செலவில் கட்டணத்தை உயர்த்துவதால், இவர்கள் செய்யும் நல்லது கவனிக்கப்படாமலே போய் விடுகிறது.

மாறன் said...

ஆனால் அடிக்கடி பயிற்சி வகுப்பு உண்டு.
மாட்டுக்கறி தின்றவனை அடித்தது.தடை செய்தது.பாண்டியில் ஆட்சியை பிடிக்கும் சாதனை.