Friday, May 07, 2021

மரண பயத்தைக் காட்டிய தேர்தல் 2021

மூன்று வருடங்களுக்கு முன்பு தினமும் ஒரு மணி நேரமாவது சுபவீ அவர்களின் வலையொளி பேச்சைக் கேட்டதுண்டு. அதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி என்று தொடங்கி திராவிடம் என்ற வார்த்தையை மட்டும் வைத்து நம்பி தங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்  ஒவ்வொருவரின் பேச்சைப் பல நூறு மணி நேரம் பொறுமையாக கேட்டுள்ளேன். தொடக்கத்தில் கவர்ச்சியாக இருந்தது. அடுத்து நம்பிக்கையை உருவாக்குவது போல இருந்தது. அடுத்து இவர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்கத் தொடங்கினேன்.அதே போல ஜெயரஞ்சன் பேச்சை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நானே அவரை வழிமொழிந்து எழுதவும் செய்துள்ளேன்.

சமகாலத்தில் பேசிக் கொண்டிருக்கும் கரு. பழனியப்பன் வரைக்கும் அனைவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்.

கடந்த மூன்று வருடங்களில் நான் உணர்ந்தது ஒன்றே ஒன்று தான். இவர்கள் அனைவரும் அல்லது இவர்களைப் போலவே பேசும் அனைவரும் ஒரே புள்ளியில் வந்து நிற்கின்றார்கள். உங்களை ஒரே பக்கம் நகர்த்திக் கொண்டு வருவதில் வெற்றி பெறுகின்றார்கள்.

இவர்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்று மொத்தமாக பட்டியலிட்டுப் பார்த்தால் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு பேசலாம்.

1. சம உரிமை

இங்கு அனைவருக்கும் சம உரிமை வேண்டும். பிராமணர்கள் அதனை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ளார்கள்.

இங்கே யாருக்கு சம உரிமை இல்லை? தமிழ்நாட்டில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் உள்ள பிராமணர்கள் தான் மீதம் 98 சதவிகித மக்களை இன்னமும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்? என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

2. சமூக நீதி

இங்கு அனைவரும் சாதிய இழிவு கடந்து வாழ வேண்டும். வர்ணாசிரமம் நாம் ஆட்டிப் படைக்க நினைக்கிறது.

தாழ்த்தப்பட்ட சமூகம் அரசு பதவிகளில் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வருடந்தோறும் அவர்களுக்கென்று வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதா? 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பதவிகளில் எத்தனை பிராமணர்கள் வருடந்தோறும் அரசு பதவிகளில் சென்று சேர்கின்றார்கள். பெரும்பாலும் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்கள். தணிக்கையாளர் பதவிகள் போன்ற மூளை உழைப்பு சார்ந்த பதவிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். இது அரசு சார்ந்த பதவி அல்ல. தனியார் நிறுவனங்கள் மற்றும் சொந்தமாக தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ள தணிக்கையாளர் சார்ந்த துறைக்குச் சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

சாதிய இழிவு என்பது தற்போது இடைநிலை சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு இடையே நீர் பூத்த நெருப்பு போல உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பை அதிகார வெறி பிடித்து அதை அணைய விடாமல் காத்துக் கொண்டிருக்கும் திராவிட பேச்சாளர்கள் எங்கேயாவது பேசி பார்த்து இருக்கின்றீர்களா?

நூறு முதல் நூற்றி எட்டு வரைக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளில் உட்பிரிவுகள் உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் இருக்கின்றார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

இட ஒதுக்கீடு என்பது உரிமை அல்ல கடமை என்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எந்தவொரு திட்டத்திற்கும் குறிப்பிட்ட எல்லையுண்டு. நோக்கம் வேண்டும். கணக்கீடு வேண்டும். சாதித்த சாதனைகள் பேச வேண்டும். வென்று வந்தவர்களை அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்த்த வேண்டும். அவர்களை முன்னெடுக்க வேண்டும். ஆனால் எதுவும் இங்கே நடக்கவில்லை. இழிவுடன் வாழ்பவர்கள் அப்படியே எங்கோ ஒரு மூலையில் அடையாளம் தெரியாமல் வாழ்வதும் சலுகை என்ற பெயரில் அரசின் அனைத்து வகையான ஆதாயங்களைப் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதும் இங்கே திட்டமிட்ட திருட்டுத்தனத்துடன் தெளிவாக பிரித்தாளும் சூழ்ச்சியாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

சாதியை இவர்களே வளர்க்கின்றார்கள்.

சாதியை இவர்களே உயிர்ப்புடன் வைத்துள்ளார்கள்.

சாதியை வைத்தே இவர்கள் அரசியல் செய்கின்றார்கள்.

சாதியை வைத்தே அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றார்கள்.

சாதியை வைத்தே ஒவ்வொன்றையும் இறுதியில் தீர்மானிக்கின்றார்கள்.

இந்த இடங்களில் பிராமணர்கள் வருகின்றார்களா? அவர்கள் முடிவு செய்கின்றார்களா?

அரசு பணியில் உள்ளவர்கள் காசு கொடுத்துச் சேர்கின்றார்கள்.

துணைவேந்தர் பதவிகள் எத்தனை கோடிகளுக்குக் கடந்த முப்பது வருடங்களில் ஏலம் போல விட்டுக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி பேராசிரியர் பதவி முதல் பள்ளிக்கூட ஆசிரியர் பதவி வரைக்கும் அரசின் அனைத்துத் துறைகளும் லஞ்சம் ஊழல் திருட்டுத்தனம் என்று நீக்கமற நிறைந்திருப்பதை மறைக்க இவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் தான் சமூக நீதி.

அதாவது தாங்கள் அடைந்துள்ள இடத்தை அடுத்தவர் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் பேச்சும் பேச்சு, எழுதும் எழுத்து, உருவாக்கும் மதநல்லிணக்கம் என்ற மாயச்சூழலுக்கு மக்களை மயக்கத்தில் வைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

கடைசி ஆயுதமாக தமிழ் மொழி.

இருபது வயதுள்ள ஓர் இளைஞரை, கல்லூரி படிக்கும் பெண் குழந்தைகளைத் தவறு இல்லாமல் அழகான தமிழ் மொழியில் பத்து வரிகள் பிழையில்லாமல் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

15 வருடங்கள் ஆங்கில வழியில் படித்து கல்லூரி முடித்து வந்தவர்களைத் தெளிவாக ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதப் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

இரண்டு மொழிகளும் அழியும் நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்?

அனைத்துத் தனியார்ப் பள்ளிகளிலும் ஹிந்தி என்பது கட்டாயப் பாடம். படித்தே ஆக வேண்டும். இன்றைய சூழலில் ஒரு மாணவர் மாணவி தமிழ்நாட்டில் பாலர் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரைக்கும் தமிழ் மொழி படிக்காமல் தெரியாமல் பட்டம் வாங்கி விட முடியும்? என்றால் நீங்கள் நம்புவீர்களா? இதற்கு யார் காரணம்?  மொழிப் பற்று என்பது இது தானா? 

இல்லை? எல்லாமே இவர்களின் அரசியல் விளையாட்டு.

தமிழக அரசியல், இந்தியாவில் உள்ள அரசியல் பற்றி முழுமையாக சுவராசியமாக அறிந்து கொள்ள இந்த மின்னூலைப் படித்துப் பாருங்கள். இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  அரசியல் என்றால் எனக்கு வெறுப்பு என்பவர்களுக்குக்கூடச் சுவராசியக் கதை போலப் பலவற்றை உங்களுக்குப் புரிய வைக்கும். எது அரசியல்? ஏன் அரசியலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதனை 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு இருந்து தொடங்கி படிப்படியாக ஒவ்வொன்றாக விவரித்துச் சொல்லி உள்ளேன். களத்தில் இருந்தவர்கள் முதல் கடைசியில் காணாமல் போனவர்கள் வரைக்கும். 

தேர்தல் முடிந்த பின்பு போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல் வெற்றிக்கான காரணம் வரைக்கும்.

மரண பயத்தைக் காட்டிய தேர்தல் 2021 

ஒவ்வொரு முறையும் புழுதிவாரித் தூற்றி தமிழக அதிகார அரசியலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் எப்படி வைத்துள்ளார்கள் என்பதனை அறிய முடியும்?

இது 2026 ல் நடக்கப் போகும் தேர்தல் வரைக்கும் தேவைப்படும் ஆவணம். அதற்குப் பின்னாலும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அவசியம் வாசிக்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் அவர்கள் விரும்பும் வழியில் எழுதி உள்ளேன். தொகுத்துள்ளேன்.

பக்தவச்சலம் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டின் தேசியப் பார்வை விலகி மாநில சுயாட்சி மூலம் நினைப்பதைச் சாதித்து விடுவோம் என்று தமிழ்நாடு பாதை மாறியது. வென்று உள்ளோம். ஆனால் மாநிலம் வென்றதை விடப் பல நூறு மடங்கு தனி மனிதர்கள் தங்கள் பொருளாதார வளத்தை வென்று காட்டி உள்ளார்கள்.

இதைத்தான் நம்மவர்கள் வளர்ச்சி என்கிறார்கள். நான் எப்போதும் அதை வீக்கம் என்பேன்.  நிஜமான வளர்ச்சி என்பது அனைத்து உறுப்புகளும் ஒன்றாக சமமாக வளர்வது. மேற்கு மண்டலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதியை வாரி வழங்குகின்றது. வடக்கு மண்டலம் பிச்சை எடுக்கின்றது. தெற்கு மண்டலம் சாதியப் பெருமையில் உழல்கின்றது. கிழக்கு மண்டலம் கேட்பாரற்றுக் கிடக்கின்றது.

மொத்தத்தில் சென்னை மண்டலம் சாராய வியாபாரத்தில் கவனம் செலுத்தி நாடே சாராயம் விற்றால் தான் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியும் என்கிற நிலைக்குத் தமிழகம் வந்து சேர்ந்துள்ளது.

மரண பயத்தைக் காட்டிய தேர்தல் 2021 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தலைப்பிற்கேற்ப கேள்விகள் உள்ளது... பதில்கள்...?

Unknown said...

Good post! good thinking!
Rajan

ஸ்ரீராம். said...

நல்லதொரு பதிவு.

மாறன் said...

அனைத்து மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி அவசியம்.அவசரம்.