Thursday, May 27, 2021

மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு

மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு

சென்னையைக் கடந்து நேற்று கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட்டதற்கு வாழ்த்துகள்.



இந்தச் சமயத்தில் சில ஆலோசனைகள் சொல்லத் தோன்றுகின்றது.
1. முந்தைய அரசு எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்காமல் தான் தோன்றித்தனமாக முதல் அலையை அடக்க முடியாமல் தடுமாறுகின்றது என்று கட்சி சார்பாக அறிக்கை வந்தது. அப்போது எடப்பாடியார் ஒற்றை வார்த்தைகளில் பதில் அளித்தார். இது போன்ற சமயங்களில் அரசியல்வாதிகள் ஆலோசனை தேவையில்லை. நிபுணர்களின் ஆலோசனை தான் தேவை என்றார்.
2. இப்போது நீங்கள் மட்டுமல்ல. மற்ற ஒவ்வொரு துறை அமைச்சர்களும் பத்திரிக்கையாளர்கள் , அதிகாரிகள், மற்ற அனைத்துக் கட்சிகள் புடை சூழ அனைத்து இடங்களிலும் வலம் வருவதைக் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
3. நீங்கள் அனைத்துக் கட்சியையும் மதிக்கின்றோம் என்ற எண்ணத்திற்கு
வாழ்த்துகள்
. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. அப்படியே அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்பினால் ஒரு தொகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் விரும்பும் அத்தனை பேர்களிடம் அலைபேசி வழியாக உதவியாளர்கள் மூலமாக ஆலோசனையைக் கேளுங்கள். அந்தந்த மருத்துவமனை சார்ந்த உயர் அதிகாரிகள், மருத்துவர்களிடம் என்ன பிரச்சனைகள் உள்ளது? எதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்? மக்கள் எதிர்பார்ப்பு என்ன? என்பதனை உங்கள் அலுவலகத்திலிருந்து கொண்டே கேட்டுப் பெறவும்.
4. முக்கியமாக நிதிப் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை போன்றவைகள் முக்கியமாக இருக்கும். என்ன செய்ய முடியும்? எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து கொண்டே அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுங்கள். கவனித்துக் கண்காணித்து அதன் பிறகு நீங்கள் விரும்பினால், சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் மட்டும் சில முக்கிய அதிகாரிகளுடன் அங்கே செல்லுங்கள்.
5. அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆலோசனையைக் கூட்டம் கூட்டி அதன் மூலம் நேரத்தை வீணாக்குவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இது தொழில் நுட்ப உலகம். இருந்த இடத்திலிருந்து கொண்டே நீங்கள் மதிக்கக்கூடிய, ஆலோசனை வழங்கக்கூடிய தகுதியில் உள்ள அனைவரிடமும் அவர்கள் எண்ணத்தைக் கேட்டுப் பொறுங்கள்.
6. நீங்கள் செல்லும் வாய்ப்புள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பேசுங்கள். அவர்கள் குரலுக்குச் செவி மடுக்கவும். அவர்கள் மூலம் தான் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளின் உண்மையான நிலைமை உங்களுக்குத் தெரிய வரும். இந்தச் சமயத்தில் ஒவ்வொரு மருத்துவமனைகளில் பணியாற்றும் அடிமட்ட ஊழியர்களின் கோரிக்கையைக் கேட்டுப் பெறுங்கள். ஒவ்வொரு மருத்துவமனைகளின் மொத்தச் சுகாதாரத்திற்கு அதிகம் கவனம் செலுத்துங்கள். அது ஐந்து ஷிப்ட் என்கிற ரீதியில் பணி செய்பவர்களை ஆர்வத்துடன் பணியாற்றத் திட்டம் வகுத்துக் கொடுங்கள். வருகின்ற, உள்ளே இருக்கின்ற நோயாளிகளுக்கு முக்கால் வாசி ஆரோக்கியம் இதன் மூலம் வந்து விடும்.
7. நீங்கள் களப்பணி வீரர் என்பது கட்சி கடந்து நேசிக்கக்கூடியவர்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். அதற்காக உங்கள் ஆரோக்கியம் அனைத்தையும் விட முக்கியம். உங்கள் துறையில் உள்ள முக்கியமான அதிகாரிகள் தொடர்ந்து உழைக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களை அவர்கள் பணி செய்ய அனுமதிக்கவும். அலைந்து கொண்டேயிருந்தால் எவராலும் பணி செய்ய முடியாது.
8. நிர்வாகம் என்பது தகுந்த நபர்களை நியமித்துக் கவனிப்பது, கண்காணிப்பது. தவறு நடந்தால் தட்டிக் கொடுத்து கற்றுக் கொடுப்பது. உங்கள் அலுவலக அறையில் தேவையான தொழில் நுட்ப வசதிகளை உருவாக்கித் தகுந்த நபர்களை அருகே வைத்துக் கொண்டால் போதும். சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் உங்கள் அறைக்குள் இருந்து கொண்டே கண்காணிக்க முடியும். உங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் தளத்தில் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று மட்டும் சொல்லி அமைதியாக கவனித்தால் போதும். அதிகாரிகளை வேலை வாங்க உங்களுக்கு அத்தனை வாய்ப்புகளையும் மக்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடியே உங்களுக்கு வழங்குவார்கள்.

4 comments:

ஸ்ரீராம். said...

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

திண்டுக்கல் தனபாலன் said...

இவை அவருக்கு சென்றடைந்தால் நல்லது...

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஆலோசனைகள்.

துளசிதரன்

நீங்கள் சொல்லியிருப்பது போல் இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்தில் ஒரே இடத்தில் இருந்து முடிப்பது நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், அநாவசிய செலவு அரசு கஜானாவுக்கு மிச்சம்,(அச்செலவை மருத்துவமனைகளுக்குச் செலவழிக்கலாம்) கூடவே இப்படிக் கூட்டமாகப் போனால் கொரோனாவுக்கும் கொண்டாட்டம் தானே. ஆலோசனைகள் நன்று

கீதா

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான யோசனைகள். அவருக்குச் சென்றடைந்தால் நல்லது.