Tuesday, March 30, 2021

மதுரை தினகரன் பத்திரிக்கையாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம்

2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.
குறிப்பாக விஜய் டிவியில் முன்பு, ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விஜய் டிவிக்குச் செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியைப் பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப்பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.

இது மட்டுமல்லாமல், அப்போது செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக் காட்சியைச் செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற் காரணம், இப்போதைய ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், மாறன் மாதிரி வளர்ச்சி அடைந்தது யாருமில்லை.. மீடியா துறையைப் போல அச்சுத் துறைகளிலும் கால் பதித்தனர்.

தி.மு.க. முன்னாள் பிரபல பிரமுகர்களில் ஒருவர் சி.பா., ஆதித்தனார். இவரது மருமகன் கே.பி., கந்தசாமி. இவர் தினகரன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இவர் வைகோ திமுகவிலிருந்து பிரிந்த போது பகிரங்கமாக வைகோவுக்கு ஆதரவளித்து தனது பத்திரிகை மூலமாக வைகோவை எம்.ஜி.ஆர். அளவுக்குப் பிரபலமாக்கினார், இவரது மறைவிற்குப் பிறகு, அவரது மகன் குமரன் நிர்வகித்தார். தொடர்ந்து, குமரனிடம் இருந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம், தினகரன் நாளிதழை இயந்திரங்கள், இடங்கள், ஊழியர்களோடு நடத்தத் தொடங்கியது.

2006 தேர்தலில் ஜெயலலிதா கண்டிப்பாக ஜெயிப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக கருணாநிதி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக டிவி கொடுப்போம் என்றார். 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய தருணத்தில் தி.மு.க.வுக்கு எந்தப் பத்திரிகையுமே ஆதரவு தரவில்லை. எல்லாப் பத்திரிகைகளும் அந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலையும் இல்லாத நிலையில் தி.மு.க. ஆதரவைப் பெருக்கப் பிரசாரப் பீரங்கியாகப் பயன்படுத்தவே தினகரன் வாங்கப்பட்டது.

திட்டமிட்டது போலத் தேர்தல் பிரசாரப் பீரங்கியாகச் செயல் பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அப்போதே தயாநிதிக்கும் அழகிரிக்குமான பனிப்போர் தொடங்கி விட்டது. 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இரு தரப்புக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. இது தினகரனில் பணியாற்றிய எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. குறிப்பாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு "தினகரன் நிருபர்களுக்குக் கல்வித் துறை பற்றிய செய்தி கொடுக்க வேண்டாம்" என்றும் உத்தரவிட்டார். 

அமைச்சரிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு "ஆமாம் நாங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் என்றும் ஒத்துக்கொண்டார்".

இதிலிருந்தே அழகிரி, மாறன் சகோதரர்கள் பனிப்போர் இருந்து வந்தது என்பது தினகரன் ஊழியர்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது தினகரனில் தயாரான சர்வே கேள்வி பட்டியல் திடீரென ஒரு நாள் தினகரனின் மூத்த நிருபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் தினகரன் நிருபர்களிடம் ஒரு தாள் ஒன்றை நீட்டினார். தினகரன் நிர்வாகம் ஒரு சர்வே வெளியிடப்போவதாகவும் கேள்வி என்ன மாதிரி கேட்கலாம் என்றும் எழுதித் தரக்கூறினர். ஆளாளுக்கு ஒன்று எழுதி தந்தனர். அப்படி எழுதப்பட்டதுதான் வாரிசு அரசியல் பற்றிய கேள்வியும். இத்தகைய சர்வே இந்த நோக்கத்துடன் வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது. மே மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த சர்வேக்கள் வந்த போது பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஸ்டாலின் தான் மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்று கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த நாள் தீவிரம் அதிகரித்தது.

மதுரை தினகரன் அலுவலகம் நோக்கி அழகிரி படை சென்று அடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுகள் வீசியது. எம்.வினோத் குமார்(23), ஜி.கோபிநாத்(25), முத்துராமலிங்கம்(42) ஆகியோர் உள்ளே மாட்டிக்கொண்டு பலியாயினர். உடனே அங்கே பறந்து வந்த கலாநிதி மாறன் நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று சொன்னதோடு மே 10ம் தேதி சன்டிவியில் அழகிரி ரவுடி, அழகிரி ரவுடி என்று திரும்பத் திரும்ப ஒளிபரப்பினார்கள். தமிழ் முரசிலும் தலைப்புச் செய்தியாக்கினார்கள். மறுநாள் தினகரனிலும் தலைப்புச் செய்தியாக்கினார்கள். சன்டிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஜெயா டிவிக்கும் தரப்பட்டது,

மறு நாள் சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, "நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தினகரன் நிர்வாகம் நான் சொல்லியதைக் கேட்கவில்லை" என்று ஒரே போடாக போட்டார். இதற்கு தினகரன் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை.

இதன் பின்னர் மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டது. எல்லாம் சில நாட்களுக்குத்தான். பிரச்சினை குறித்து வார இதழ்கள் கட்டுரை வெளியிட்ட போது. தயாநிதி ஆப் த ரிக்கார்டாக நக்கீரன் நிருபர் ஒருவரிடம் கூறுகையில் “சர்வே பற்றிய எல்லாத் தகவல்களும் தன் தாத்தாவுக்கு முன்கூட்டியே தெரியும்” என்று கூறினார். பின்னர் பிரச்சினை முற்றிய பிறகு தினகரனில் கலாநிதி வெளியிட்ட ஒரு பக்க கடிதத்திலும் இது குறிப்பிடப்பட்டது. கலைஞர் டிவி தொடங்கியபிறகு, அரசு கேபிள் டிவி வெளியான பிறகு, அரசுக்கு எதிரான செய்திகளை தினகரனில் வெளியிட்டும், சன் டிவியில் ஒளிபரப்பியும் தாத்தா கருணாநிதிக்குப் பீதியைப் பயத்தை ஏற்படுத்தித் திரும்பவும் மாறன் சகோதரர்கள் இணைந்தனர். ரவுடி அழகிரி என்று தினகரனில் செய்தி போட்டவர்கள், அழகிரியோடு இணைந்து நிற்கும் படம் வெளியானது.

இந்தச் சம்பவத்தில், அப்போது மதுரை மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராகப் பொறுப்பு வகித்த தி.மு.க பிரமுகர் அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 16 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார்.  ஆனால், ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று 2009, டிசம்பரில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  மீண்டும் 2011-ல் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐ. பலியான வினோத்தின் தாயார் பூங்கொடியும் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

இதற்கிடையே 2013-ல் பொட்டு சுரேஷ் கொலை சம்பவத்தில் அட்டாக் பாண்டியும் அவர் கூட்டாளிகளும் தலைமறைவாகி விட்டதால், இந்த வழக்கு இழுத்துக்கொண்டேபோனது. பின்பு அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு மார்ச் 21-ம் தேதி தீர்ப்பை வாசித்தனர். “இச்சம்பவத்தில் சாட்சியம் அளித்தவர்கள் பிறழ் சாட்சியாக மாறினாலும், புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கவனிக்கக் கீழமை நீதிமன்றம் தவறிவிட்டது.

அந்த ஆதாரங்களைப் பார்க்கும்போது அட்டாக் பாண்டி உட்பட அவருடைய கூட்டாளிகள் ஒன்பது பேருக்கும் தொடர்பு இருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒன்பது பேருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு அளித்தார்கள்.

தீர்ப்பில் மேலும், “கொலையான வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவம் நடந்தபோது பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊமச்சிகுளம் டி.எஸ்.பி ராஜாராம் கடமை தவறி இருக்கிறார். அவரும் குற்றவாளியே. வருகிற மார்ச் 25 -ம் தேதி அவர் இங்கு ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அவருக்கு என்ன தண்டனை என்பது பற்றி உத்தரவிடப்படும்’’ என்றனர்.

இந்தப் பிரச்சனையின் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனை, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வரை, தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக் கொள்ள தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார்.


1 comment:

ஜோதிஜி said...

நீங்கள் படிக்கும் கணக்குப் பாடத்தில் ஒன்றும் ஒன்றும் கூட்டினால் எத்தனை வரும் என்று கேட்டால் நீங்கள் இரண்டு என்பீர்கள்.
ஆனால் அரசியலில் மட்டும் விடை பத்து நூறு ஆயிரம் என்று சொல்வார்கள். ஏன் என்று கேட்கக்கூடாது. களம் அப்படித்தான் இருக்கும்.
தொழிலில் இரண்டே வார்த்தை தான் செல்லுபடியாகும்?
லாபம் அல்லது நட்டம். உன் புராணக்கதையெல்லாம் தேவையில்லை என்று கேட்காமல் கடந்து சென்றுவிடுவார்கள்.
வேட்பாளர் வெற்றி பெற்றாரா? அவர் இருக்கும் கட்சி ஆட்சியில் வந்து அமர்ந்து விட்டதா?
இது தான் எதார்த்தம்.
அறம், முறம், கொள்கை, நோக்கம் எல்லாம் பின்னால் தான் பேசப்படும்.
அதிகாரத்தை அடைந்தவர்கள் வெற்றியாளர்கள். அடையாதவர்கள் தோற்றுப் போனவர்கள்.
யூ டியுப் பார்க்கவே முடியாத அளவிற்கு எங்கெங்குகாணிணும் இவர்கள் உருவாக்கிய விளம்பரங்கள் கடந்த சில வாரங்களாகப் பாடாய்ப் படுத்தியது. என்னால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. எத்தனை நூறு கோடி என்பதனை இனி தான் கணக்கெடுக்க வேண்டும்.
ஆனால் உன் கை விரல்களைக் கொண்டே உன் கண்ணில் குத்த வைப்பது தெரியுமா? என்பதனை அரசியலில் ஓர் எளிய தமிழ்ப்பிள்ளையின் கதறல் மொழியின் மூலம் இப்போது வாசித்த போது
"நீங்க படித்த பள்ளியில் நாங்கள் ஹெட்மாஸ்டர்டா"
என்ற வசனம் தான் என் நினைவுக்கு வருகின்றது?
-
தமிழ்நாட்டின் முக்கிய நாளிதழ்களில் இருக்கும் சீனியர் எடிட்டர்கள் யாருக்குமே இன்று வெளியான விளம்பரம் குறித்து தெரியவில்லை.
காலையிலிருந்து தெருவில் அம்மணமாய் நிற்பது போல் புலம்புகிறார்கள் பத்திரிகையாளர்கள். சிலர் தங்கள் சொந்த நிறுவனம் மேலேயே வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் நாளிதழின் தலையங்கத்தை தீர்மானிக்கும் ஊழியர்களுக்குக் கூட தெரியாமல், தங்கள் நிறுவனத்தின் பெயரை விற்றிருக்கிறார்கள் ஊடக முதலாளிகளும் - ஆசிரியர்களும்.
லே அவுட்டை இறுதி செய்யும் கடைசி நொடிவரை செய்தி வெளியில் கசியாமல், கடைசி நேரத்தில் முதல் பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டு, ஜாம நேர அந்தரங்கமாக இந்த விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
தங்கள் பத்திரிகை நிறுவனத்தை, அரச பயங்கரவாதத்திற்கு கூட்டிக்கொடுக்கும் விபச்சாரம் என இவ்விளம்பரங்களை விமர்சிப்பது மிகக்குறைவான விமர்சனமாகவே இருக்கும் என கருதுகிறேன்.😜