Thursday, March 25, 2021

இஸ்லாமியர்களின் காவலர்கள் - திமுக இது உண்மையா? - 3

‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

அடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.

முஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்

அதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்கா நகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-?

K.N. நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை (?) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா? காரணம் அவர் ஒரு முஸ்லிம்.

முஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது

1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-?

நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது

1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்புக் கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.

‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.

கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை என்றார்.

தொகுதிகளைக் கொடுத்துப் பறிக்கும் கருணாநிதி

2006ல் நாடாளுமன்றச் சட்டமன்றத் தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூன்று சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியைப் பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.

இந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.

வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளைப் பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போலத் தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றைப் பிடுங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துவிட்டது.

அதனை எதிர்த்து மாநில மகளிர் அணித் தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ் மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.

1999ல் பாஜகவோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ் மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.

முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றைப் பறித்த அதிருப்தியையும் சரிக்கட்ட மிகச்சிறந்த ராஜதந்திரச் சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றிக் கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியைச் சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.

ஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்குப் பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

முகநூல் - எதற்காக...? + + + ஆனால் முடிவில் :-


ஏன்...?

ஜோதிஜி said...

தம்பியை நம்பி மகள் ஒருவர் இருக்கின்றார். அவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த சாதனையாளராக வாழ வேண்டும். மாற வேண்டும். தம்பி மார்களுக்கு அறிவுரை சொல்லி திருத்தும் கால கட்டம் கடந்து போன காரணத்தால் நாம் நம் பாதையில் கவனமாக முன்னேறிக் கொண்டிருந்தால் போதும் என்ற காரணமே முக்கியமானது.