Monday, March 29, 2021

தா. கிருஷ்ணன் படுகொலை- நடந்த நிகழ்வுகள்

 2003 மே  21

சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன். இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.  2003 மே மாதம் 21ஆம் தேதி காலை நடைபயிற்சியில் இருந்தபோது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.



தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான பிரபாகரை, வழக்கில் 22-வது சாட்சியாகச் சேர்த்திருந்தது காவல்துறை. ஜெ. பேரவையின் வட்ட இணைச் செயலாளராக பிரபாகர் இருப்பதால், இவர் எந்தக் காலத்திலும் புரண்டு பேச மாட்டார் என மலை போல் நம்பியது காவல்துறை. ஆனால், பிறழ் சாட்சியாகிப் போனார் பிரபாகர்.

இதற்கு நடுவில் தான் வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுக்கு மாறியது. அதில் மிரண்டு போய்தான், பிறழ் சாட்சியம் அளித்து தன்னையும் தனது குடும்பத்தையும் தற்காத்துக் கொண்டதாகச் சொன்னார் பிரபாகர்.

பிரபாகர் வார இதழுக்கு அளித்த பேட்டியில்..

 ''மோட்டார் ரிப்பேர் பார்த்த பணத்தை வாங்குறதுக்காக அன்னைக்கு அதிகாலை 5 மணிக்கு கௌம்பிப் போனேன். போற வழியில, அந்த நேரத்துல நாலஞ்சு பேரு சீருல்லாம நின்னுக்கிட்டு இருந்தாங்க. பக்கத்தில யமாஹா பைக் ஒண்ணு ஹெட் லைட் எரிஞ்ச மேனிக்கு உறுமிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி இன்னொரு பைக்கும் நின்னுச்சு. பக்கத்துல போனதும்தான் தெரிஞ்சுது... அவங்க அத்தனை பேரும் தி.மு.க.காரங்க. 'இவனுக எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்குறானுங்க'ன்னு சந்தேகப் பட்டுக்கிட்டே, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னேன். அப்ப, ஒரு பெரியவர் அந்த வழியா நடந்து வந்தார். அவரைப் பார்த்து அவனுக கையெடுத்து கும்பிட்டானுங்க. பதிலுக்கு அவரும் கும்பிட்டார். கண் இமைக்கிற நேரத்தில அவரை நெருங்குனவங்க, சினிமா கணக்கா சட்டுபுட்டுனு அரிவாளை எடுத்து கழுத்தை அறுத்துப் போட்டுட்டு வண்டியை கௌப்பிட்டாய்ங்க. என்னையை கிராஸ் பண்ணுற சமயம், 'கெழவனை முடிச்சுட்டோம்னு அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிருவோம்டா’னு ஒருத்தன் சொன்னது என் காதுல விழுந்துச்சு.

அவங்க போனதுமே பதறிக்கிட்டு ஓடிப்போயி பார்த்தேன். 

வெட்டுப் பட்டுக்கிடந்தது 'தா'வன்னா கிருஷ்ணன்னு அப்பத்தான் தெரிஞ்சுது.  தொண்டைக்கும் நெஞ்சுக் குமா இழுத்துக்கிட்டு இருந்தவரை தூக்குறதுக்கு முயற்சி செஞ்சேன் என்னால முடியல. அப்ப, எனக்குத் தெரிஞ்ச அந்த ஏரியா பால்காரர் வந்தாரு. 'அண்ணே... ஒரு கை போடுங்க; இவரை தூக்கிக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துருவோம்’னு சொன்னேன். 'டேய்... என்ன காரியம் நடந்துருக்கு! நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’ன்னு சொல்லி என்னைய அதட்டுனார். அப்புறம்தான் எனக்கே சீரியஸ்னஸ் தெரிஞ்சுது. அதுக்கப்புறம் அந்த இடத்துல நிக்காம வீட்டுக்கு வந்துட்டேன். விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்த போலீஸ்கிட்ட, 'நான் பார்த்ததை சொல்றேன். ஆனா, என்னைய சாட்சியாப் போடாதீங்க; எனக்கும் குடும்பம் குட்டி இருக்கு’ன்னு சொன்னேன். அதையும் மீறி என்னைய சாட்சியாக்கி ரகசிய வாக்குமூலம் கொடுக்க வெச்சாங்க. அதுல இருந்தே எனக்குப் பிரச்னைதான்''

''நான் சாட்சி சொல்லக்கூடாதுன்னு பல வழிகளிலும் மிரட்டுனவங்க, என்னோட கடைசிப் பையன் கபிலனைக் கடத்துற அளவுக்கு துணிஞ்சப்பத்தான் பதறித் துடிச்சிட்டேன். இது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னாடி நடந்தது. அப்ப கபிலனுக்கு மூன்றரை வயசு. வீட்டு வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தவன், திடீர்னு காணாமப் போயிட்டான். முதலில், தா.கி. வழக்கில் அழகிரிக்காக ஆஜரானவரும், ஆட்சி மாறியதும் அரசு வக்கீலாகவும் இருந்த மோகன்குமார் கொஞ்ச நேரத்தில எனக்கு போன் பண்ணி, 'உம் புள்ளயைத் தேட வேண்டாம்; பத்திரமா இருக்கான்’னு சொன்னார். 

ஒருநாள் முழுக்க நாங்க நெருப்புல விழுந்தாப்புல தவிச்சோம்.

மறுநாள் காலையில, அவரே காருல என்னைய ஏத்திக்கிட்டு தி.மு.க. முக்கியப் புள்ளியோட வீட்டுக்கு போனார். தா.கி. வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் அங்க இருந்தாங்க. அழகிரிக்கு வேண்டப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள் இரண்டு பேரும், ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தாங்க. அவங்க முன்னாடியே, 'மோகன்குமார் சொல்றபடி நடந்துக்க’னு முக்கியப் புள்ளி மிரட்டினார். 'நீங்க சொல்றதக் கேக்குறேன்; எம் புள்ளயக் குடுத்து ருங்க’னு கதறுனேன். அதுக்கப்புறம்தான் கபிலனைக் கண்ணுல காட்டுனாங்க. 

அப்புறமும் என்னை விடலை. சித்தூர் கோர்ட்டுக்கு நான் சாட்சி சொல்லப் போறதுக்கு மூணு நாள் முன்கூட்டியே என்னையும் என் மனைவி மக்களையும் அவங்க கஸ்டடிக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களை அவசரமா மதுரை ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயி, சென்னைக்கு ஃபிளைட் ஏத்திட்டாங்க. சென்னை ஏர்போர்ட்டுல இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் எங்களை ரிஸீவ் பண்ணி இம்பாலா ஹோட்டல்ல தங்க வெச்சார்.

அங்கருந்து சித்தூருக்கு ஏ.ஸி. கார்ல கூட்டிட்டுப் போயி, சித்தூர் கோர்ட்டுக்கு எதிர்லயே காஸ்ட்லி ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. அப்ப எங்களை சந்திச்ச மதுரை போலீஸ் ஆட்கள், 'இவனுக உங்க அம்மாவையே (ஜெயலலிதா) படாதபாடு படுத்துறானுங்க. உனக்கு எதுக்கு பொல்லாப்பு? பேசாம, 'எனக்கு எதுவும் தெரியாது’னு சொல்லிட்டுப் போயிக் கிட்டே இரு’ன்னாங்க. 

குடும்பத்தைக் பணயம் ஆக்கி மிரட்டுனதால, நானும் அவங்க சொன்னபடியே மனசாட்சியை ஒதுக்கி வெச்சிட்டு பிறழ் சாட்சியம் சொல் லிட்டு வந்துட்டேன். வரும்போதும் அதே மாதிரி ஃப்ளைட்ல எங்களை மதுரைக்கு அனுப்பி வெச்சாங்க".

மே 2003. 

அப்போது நடந்துகொண்டிருந்தது ஜெயலலிதா ஆட்சி. இந்த வழக்கில், 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டார், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. அந்தச் சமயத்தில், ஆவின் மதுரை கிளையின் தலைவராக இருந்த பி.எம்.மன்னன், தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்த எஸ்ஸார் கோபி, தி.மு.க மாணவர் அணி அமைப்பாளராக இருந்த முபாரக் மந்திரி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராக இருந்த கராத்தே சிவா உள்ளிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மு.க.அழகிரி உள்பட 13 பேர் மீதான வழக்கை மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. 

2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் அமர்வு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.

குற்றம்சாட்டப்பட்ட 13 பேரை குற்றவாளிகள் அல்ல என்று சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

தா.கிருட்டிணனை கொலை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

5 comments:

ஸ்ரீராம். said...

பாவம்...

கிருஷ்ண மூர்த்தி S said...

தா கிருட்டிணனைக் கொலைசெய்தவர்கள் யாரென்று தெரியாமல் இல்லை. ஆனால் வழக்கு விசாரணை நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கதையைத்தான் நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்களே!

ஜோதிஜி said...

வாசிக்கும் போதே புரியுமே. நம் எழுத்தை வாசிப்பவர்கள் படு பயங்கர கெட்டிக்காரர்கள். பாஜக ஒழிக என்பதனைத் தவிர அவர்களுக்கு வேறு சிந்தனை எதுவும் இல்லை என்று சொல்ல வர்றீங்களா?

ஜோதிஜி said...

திமுக வின் அரசியல் கொலைகளை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதினால் 50 வருடங்களில் ஆயிரம் பக்கங்கள் வரும்.

ஜோதிஜி said...

"நான் கலைஞரின் மகன்" என்பதனை பல இடங்களில் ஸ்டாலின் சொல்லி வருகின்றார். ஆனால் அப்பா ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு நான் பார்த்ததே இல்லை.
அவர் பேச்சில் பிரதானமாக இருப்பது இரண்டே இரண்டு விசயங்கள்.
1. நீங்கள் அதிமுக ஓட்டுப் போட்டால் அது பாஜக விற்கு போட்ட ஓட்டு.
2. உறவுகளை கொச்சைப்படுத்துதல்.
இதுவொரு சாம்பிள்.
ஓபிஎஸ் அவர்களின் மகன் அவரை daddy என்று அழைப்பதில்லையாம், மோடி அவர்களைத் தான் daddy என்று அழைப்பாராம் - என்ன இதெல்லாம்???