Saturday, January 30, 2021

நடராஜன் உருவாக்கிய ஜெயலலிதா

நடராஜன் என்றொரு மனிதர் இல்லாதபட்சத்தில் இன்று தாயம்மாவுக்கு 80 கோடி செலவில் மண்டபம் கட்ட காலம் அனுமதித்து இருக்காது. நிச்சயம் கர்நாடகாவில் அமைதியாக தன் மீதமிருந்த வாழ்க்கையை கழித்து முன்னாள் நடிகை மறைந்தார் என்று இரண்டு பத்தி காலத்தில் காணாமல் போய் இருப்பார். 



தந்திரம், குயுக்தி, சூழலைக் கையாளளுதல் என்ற மூன்றையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தி பொம்மையை உருவமாக மாற்றினார் நடராஜன். காலமும் சாதகமாக இருந்தது. 

உருவத்திற்கு அலங்காரம் செய்ய, கவனித்துக் கொள்ள சசிகலா உடன் இருந்த காரணத்தால் பார்ப்பவர்களுக்கு பிரமிப்பு உருவானது. தமிழர்களுக்கு பிடித்த கவர்ச்சி, சினிமா இரண்டும் உதவ வேறென்ன வேண்டும்?

அதாவது அரசியலின் அனைத்து அத்தியாயங்களையும் கரைத்துக் குடித்த கலைஞருக்கே போக்கு காட்டும் அளவிற்கு நடராஜன் செயல்பாடுகள் ஒரு காலத்தில் தமிழகத்தில் கோலோச்சியது என்றால் மிகையல்ல.

"கலைஞரின் நான்கு கால்கள் உள்ள பதவி நாற்காலியை நாங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம்" என்று ஒரு சமயத்தில் மிதப்புடன் சொன்ன முரசொலி மாறன் போல கணவனும் மனைவியும் நேரிடையாகச் சொல்லவில்லை.  

ஆனால் ஒவ்வொரு அடியையும் இடி போல இறக்கினார்கள். ஒருவரையும் நெருங்க விடவே இல்லை.  இது என்ன பந்தம்? என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாத நட்பாக இருந்தது. இவரால் அவருக்கு? அவரால் இவருக்கு? என்ற விசித்திர வலைக்குள் விழுந்து கிடந்தார்கள்.

கான்வென்ட் மொழி கற்று வந்தவருக்கு வயக்காட்டு மொழி கற்று வந்த சசிகலா பாடம் எடுத்தார். நடராஜன் சிலபஸ் உருவாக்கிக் கொடுத்தார். 

 கணவனும் மனைவியும் அதிமுக என்ற கட்சியின் கீழிலிருந்து மேல் வரைக்கும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், இரட்டை இலை என்ற மாயையில் இருந்தார்கள். தாயம்மா இந்திர லோகத்தில் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தார்.

பழைய பத்திரிக்கையாளர்களின் பேட்டிகளைப் படித்துப் பாருங்கள்.

கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா தான் எடுத்தார். பின்னால் நடராஜன் இருந்தார். அதாவது சட்டப்படி முதல்வராக பிரமாணம் எடுத்த ஒருவர் எப்போதும் ஓய்வில் இருந்தார். உல்லாசத்தில் திளைத்தார். தான் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாமலே வாழ்ந்தார். தேர்தல் சமயங்களில் முழிப்பு வரும். அடுத்த 60 மாதங்கள் கொட நாட்டில் கொஞ்ச நாட்கள். பையனூர் பங்களாவில் பாதி நாட்கள் என்று வாழ்ந்து அனுபவித்தார்.

 அப்படித்தான் அவர் குணமும் உடலும் இருந்தது. கடைசி வரைக்கும் மாறவில்லை. மக்கள் அதற்கான சந்தர்ப்பங்களையும் கொடுக்கவில்லை. அவர் வாங்கி வந்த வரம் அப்படி இருந்தது.

ஆனால் 33 வருடங்கள் ஆட்சி, அதிகாரம், கட்சி, கணக்கு, வழக்கு, கண்காணிப்பு போன்ற அனைத்தையும் சசிகலா தான் எடுத்தார். அதன் மூலம் அவரைச் சார்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். 

இது தான் நிஜம்.

இன்று அதிமுக வில் இருக்கும் அனைவருக்கும் இப்போது வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை என்பது சசிகலா கொடுத்தது தான். ஆனால் அவர் சும்மா கொடுக்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு தான் கொடுத்தார். அவர் மட்டும் வாங்கவில்லை. சசிகலா உறவுகளில் பிறந்த குழந்தையைத் தவிர மற்ற அனைவருக்கும் கப்பம் கட்ட வேண்டிய சூழலில் தான் ஒவ்வொருவரும் இருந்தனர்.

எடப்பாடிக்கு முதல்முறையாக எம்எல்ஏ சீட்டு வாங்கிக் கொடுத்தவர் இராவணன். இப்போது எங்கே இருக்கின்றார்? என்றே தெரியவில்லை.  

சிறையில் இருந்த சசிகலா, இளவரசி முகத்தை உடலைப் பார்த்தால் தெரியும். பியூட்டி பார்லரில் இருந்து வெளியே வருபவரகள் போலததான் இருக்கின்றார்கள். 

காரணம் அவர் அதிகாரவர்க்கத்தின் அனைத்து இருட்டுகளையும் கற்றறிந்தவர்.  நீக்கு போக்கு அறிந்தவர்.  அவர் அறியாத வித்தைகளை முதல் முறையாக பாஜக கற்றுக் கொடுக்கத் தொடங்கிய போது ஆடிப் போய்விட்டார். கடைசியில் சிறைக்குள் நான்கு வருட காலம் அடக்கமாக இருந்து உயிர் தப்பினால் போதும் என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது. 

சசிகலா வருகையை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக கட்டுரைகள், ஹேஸ்யங்ககள் எழுதித் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். இன்று சசிகலா முறைப்படி விடுதலையாகி விட்டார்.  இன்னமும் இளவரசி, சுதாகரன் விடுதலையாகவில்லை.  சுதாகரனுக்கு கட்ட வேண்டிய பணம் இன்னமும் கட்ட முடியவில்லை என்கிறார்கள். 

கடந்த சில மாதங்களில் தினகரன் தனி விமானத்தில் பலமுறை டெல்லி சென்று வந்து கொண்டிருந்தார். விடுதலையாவதில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டார். கடந்த ஆறுமாதங்களாக தினகரன் அதிகமாக எந்த இடத்திலும் மைனர் குஞ்சு போல பேசவே இல்லை என்பதனை குறித்துக் கொண்டால் போதும்.

கர்ப்பகிரகத்தில் எப்போது திரை விலகும். பகவான் தரிசனம் கிட்டும் என்பதில் தான் அவர் கவனம் முழுக்க இருந்தது.

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பேச்சும் அதனைத்தான் உணர்த்தியது.

"தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் இன்று சிறையிலிருந்து வெளியே வருகின்றார். இதனைச் சொல்ல மட்டும் விரும்புகின்றேன். இந்த சமயத்தில் நீங்கள் கேட்கும் அரசியல் சார்ந்த எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.  மீண்டும் ஒரு நாள் பேசுவேன்."

கள அரசியல் வேறு.

எதார்த்த அரசியல் வேறு.

ஊடக அரசியல் வேறு.

எடப்பாடி என்பவர் ஜெகஜால கில்லாடி என்பதனை காலம் பலருக்கும் உணர்த்தும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

டிடிவி தினகரன் பேசிய பேச்சு (எதிர்பார்த்து காத்திருந்த) பலருக்கும் பின்னால் பச்சை மிளகாய் சொருகியது போல இருந்தது என்று களத்தில் பார்த்த செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பள்ளிகள் உருவான வரலாறு

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை

ஸ்ரீராம். said...

நிதர்சனங்கள். எடப்பாடி யார் என்பது புதிர்தான். நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.