Saturday, January 09, 2021

எது பாதை? எது இலக்கு?

அதிகக் கட்டணம், நடுத்தரக் கட்டணம் உள்ள தனியார்ப் பள்ளிகள், தனிப்பட்ட நபர்களின் முயற்சியில் நன்றாக நடந்து கொண்டிருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாங்கள் சம்பளம் மட்டும் வாங்கத் தான் இந்தப் பணியில் சேர்ந்தோம்? என்று அக்கறையின்றி ஆசிரியப் பணியில் இருக்கும் ஜந்துகள் இருக்கும் பள்ளிகள்  என்று எல்லாப் படிக்கட்டுகளும் இப்போது ஒன்றாக மாறியுள்ளது.  எது பாதை? எது இலக்கு என்பதில் எல்லா இடங்களிலும் குழப்பம் நிலவ எங்கிருந்து தொடங்குவது? என்று எல்லாப் பக்கமும் குழப்பம் தான் மிஞ்சியுள்ளது.  அரசு தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் எதார்த்த உலகம் வேறுவிதமாக இருப்பதை நேற்றும் இன்றும் பள்ளியில் பார்த்தேன்.

பள்ளி திறக்கலாமா? வேண்டாமா? என்று கருத்துக் கேட்புக்கூட்டத்தில் ஒரு பெண்மணி தொலைக்காட்சி நிரூபரிடம் சொன்ன வாசகம் இது.  

"அவனுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கண் வலி, கழுத்து வலி, உடல் பருமன் மூன்றும் வந்து விட்டது. கட்டாயம் பள்ளி திறக்கப்பட வேண்டும்" என்றார்.  

70 சதவிகிதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. வருகின்ற 18 ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும் கூட ஆசிரியர்கள் முன்னால் இருக்கும் சவால்கள் மிகப் பெரியது?

கடந்த வருடத்தில் உருவான மிகப் பெரிய கால இடைவெளி மாணவர்களை மொத்தமாக மாற்றியுள்ளது. அவர்களின் இயல்பான சிந்தனைகளை மீட்டெடுப்பது அவ்வளவு சாதாரண விசயமில்லை. இதுவரை இணையம் என்பது பட்டும் படாமல் இருந்தது. கடந்த சில மாதங்களில் அவர்களுக்குப் புதுப் பாதை, சுதந்திரம் என்று அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

எது நல்லது? எது கெட்டது? என்பதனை அறியும் பக்குவமில்லாதவர்களிடம், எது தேவை? எது தேவையில்லை என்பதனை அறியாதவர்களிடம் மிகப் பெரிய புதையல் கிடைத்தால் எப்படிச் செலவழிப்பார்கள்?  அப்படித்தான் மாணவர்கள் இணையத்தைக் கடந்த பல மாதமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

அதுவும் பெற்றோர்கள் அங்கீகாரத்துடன், அவர்களுக்குத் தெரியாமல், தெரிந்து அனைத்தையும் அனுபவித்தார்கள்.  இணைய வகுப்புகளில் தொழில் நுட்ப அறிவு இல்லாத ஆசிரியர்கள் மிகவும் பிரயாசைப்பட்டார்கள் என்பதனை கண்கூடாகப் பார்த்தேன். மகள்கள் இருவரிடம் நான்கு ஆசிரியைகள் இணைய வகுப்பை நடத்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர்களே மாணவிகள் போல வேடிக்கை பார்க்கும் சூழலில் இருந்தார்கள். காரணம் அவர்கள் உடம்பில் இயல்பாக இருந்த நோய் ஒவ்வொன்றும் எகிறத் தொடங்கியது.  

மாணவர்களைக் கையாள்வதை விட மாணவிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது கடினம் என்பதனை அனுபவப் பூர்வமாகப் புரிந்து கொண்டேன்.

கொண்டாட்ட மனநிலை என்பது இப்போது இங்கே பொதுமொழியாக மாறியுள்ளது. சுதந்திரம் என்பது அத்துமீறல் என்பதற்கு வாசல்படியாக உருவாகியுள்ளது. மொக்கை என்பது தேசிய மொழியாக எடுத்துக் கொண்டு நள்ளிரவு வரைக்கும் உரையாடிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  அம்மா அப்பா அருகே வந்து நின்றால் டவுட் கேட்கிறேன் என்பது என் காதில் விழுந்த போது சிரித்துக் கொண்டேன்.

வேலையில்லை என்பதனைக் காரணமாகக் கொண்டு திருப்பூரில் இருந்த பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவரவர் சொந்த ஊரில் கொண்டு போய் விட்டு வந்தார்கள்.  பொருளாதாரச் சுமைகளுடன் வாரிசுகளின் கல்வி குறித்த அக்கறை சார்ந்த விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்று வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அது உண்மையல்ல என்பதனை எதார்த்த உலகில் பார்த்தேன்.  அம்மா, அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் படிக்கும் குழந்தைகளைப் பெட்டி மடிக்க, பிசிர் வெட்ட என்ற பல வேலைகளில் ஈடுபடுத்தி பொருள் ஈட்டப் பழக்கப்படுத்தினார்கள்.  

வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்கள் காற்றில் அல்லாடியது.  நடத்திய பாடங்கள் நகர்ந்து சென்றது. பல வகுப்புகளில் கால் வாசி மாணவிகள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்கள் சொன்னார்கள். ஆனால் அரட்டை அடிக்க வேண்டிய சமயங்களில் சொல்லி வைத்தாற் போல கான்ப்ரென்ஸ் காலில் ஒன்று சேர்கின்றார்கள். இளமை, துடிப்பு, அனுபவிக்க வேண்டிய வயது என்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தேன்.

ஒரே காரணம் தங்கள் வாழ்க்கை முறையை எவரும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. தங்கள் விருப்பங்களைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை. தினமும் மது அருந்தும் தகப்பன் "தன் மகளுக்கு ஓர் அலைபேசி வாங்கிக் கொடுக்க என்னால் முடியவில்லை" என்கிறார். அலைபேசி இருந்தால் மகள் கெட்டுப் போய்விடுவார் என்று பயப்படும் அம்மா மகளின் கல்வியில் நடந்த மாற்றங்களை உணர மறுக்கின்றார்.

பெற்றோர்கள் மனதளவில் ஏழையாக இருக்கின்றார்கள். அப்படிக் காட்டிக் கொள்ள விரும்புகின்றார்கள். மனம் முழுக்க ஆசைகள் இருந்தாலும் மகன் மகளின் கல்வியில் தங்களுக்கும் இதில் கடமையுள்ளது என்பதனை உணர மறுப்பதை ஒவ்வொரு மாணவிகளின் உரையாடல் வழியே கண்டு கொண்டேன்.  ஒரு நாள் முழுக்க வீட்டில் சும்மா இருந்தாலும் ஆசிரியை கொடுக்கும் வீட்டுப் பாடங்களை வாட்ஸ்அப் வழியே அனுப்ப ஒரு மாணவிக்கு ஒரு வாரம் ஆகின்றது. காரணம் கேட்ட போது "அலைபேசியை அப்பா அல்லது அம்மா வைத்திருப்பார்கள். வந்தவுடன் தான் கொடுப்பார்கள்" என்கிறார். 

பள்ளி இருக்கும் போது காலையில் எழுந்து பழக்கப்பட்ட உடம்புக்கு இப்போது அதிகப்படியான ஓய்வு தேவைப்பட பத்து மணிக்கு எழுந்தேன் என்பதனை இயல்பாக எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள்.  "உங்கள் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்கள் வீட்டில் அந்தப் பிரச்சனை இல்லை" என்பதனை நகைச்சுவை உரையாடலாக மாற்றிக் கொள்கின்றார்கள்.  

பள்ளியில் சந்தித்த அம்மா ஒருவர் சொன்ன வாசகமிது. "அடுத்த வருடம் திறக்கட்டும் சார். இனிமேல் ஏன் செலவு செய்ய வேண்டும். எப்படியும் பாஸ் போட்டுவிடத்தானே போகிறார்கள்" என்ற போது அமைதியாக வெறித்துப் பார்த்தேன். 

கொரனா பொருளாதாரத்தை மற்றும் பாதிக்கவில்லை. மனம், உடல், நோக்கம், பழக்க வழக்கம், சிந்தனை என அனைத்திலும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பள்ளி திறந்தாலும் ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கும் சவாலை விடப் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய அவசர அவசியக் காரியங்களை விட மாணவ மாணவியர்கள் மன ஒழுங்கை எப்படிச் சீர் செய்வார்கள்? என்பதனை யோசிக்கும் ஆயாசமாக உள்ளது.

முரண்பாடுகளும் முரண்நகையும் சேர்ந்த கலவையுடன் தமிழகக் குடும்ப சமூகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்

6 வயது 11 லட்சம் - வீபரித விளையாட்டு

11 comments:

Mohamed Yasin said...

பதிவை படித்த பின் குழந்தைகளின் எதிர்காலத்தை குறித்து மிகவும் ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கிறது. நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெரிய இடைவெளியை இந்த கொடுநோய் நமக்குத் தந்துள்ளது. இதனால் இழப்புகள் அதிகமே.

ஜோதிஜி said...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உரையாடுங்கள். அவர்கள் பாதையில் சென்று அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். மனைவிக்கு நிகழ் கால நிஜங்களைக் சொல்லிக் கொடுங்க. கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி விடாதீர்கள்.

ஜோதிஜி said...

இழப்புகள் மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக திட்டு(க்)கள் பல கிடைத்தாலும் திடமாக மாற்றி கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்...

ஜோதிஜி said...

மனதில் உறுதி வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பதிவு. இந்த கல்வி வருடம் பலருக்கும் சவாலாகவே அமைந்திருக்கிறது - பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்.

கிரி said...

மாணவர்களுக்கு இணையம் பல புதிய விஷயங்களை அறிய தந்து இருக்கிறது. நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது.

இந்த ஒரு வருட இடைவெளி மாணவர்களின் எண்ணவோட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் நிலை தான் பாவமாக இருக்கும்.

ஜோதிஜி said...

உண்மை

ஜோதிஜி said...

நன்றி

Rathnavel Natarajan said...

அருமை