Wednesday, January 20, 2021

மதிப்புமிகு சாந்தா அம்மையாருக்கு அஞ்சலி

நம் நாட்டில் அரசியலில் நீண்ட காலம் கோலோச்சியவர், ஆட்சியில் இருந்த சமயத்தில் இறந்து போனாலும், ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட நபருக்குச் செல்வாக்கு இருக்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களும் அவரவர் நிறுவன கொள்கைகளுக்கு ஏற்ப சங்கூதும். சங்கநாதம் முழங்கும். மக்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பலன் பெற்றவர்களின் உணர்ச்சிகரமான வார்த்தைகளை அஞ்சலியில் கோர்த்து மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இறந்தவர்  குறித்த மரியாதையை, மகத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.ஆனால் இறந்தவரின் வாழ்க்கையை, கடந்த காலச் செயல்பாடுகளை வெளிநாடுகள் போலக் குறுக்குவெட்டு, நீள்வெட்டுப் பார்வையாக அப்படியே எடுத்து வைத்தால் ஒருவரும் அருகே செல்ல மாட்டார்கள். ஊழல் என்பது இயல்பானது தானே? என்ற பொதுக்கருத்தை உன்னதமான கருத்தாக உருவாக்கி இன்று ஆயிரம் கோடி கொள்ளையடித்தவனை, கொள்ளையடித்துக் கொண்டிருப்பவனை மக்கள் இயல்பாகக் கடந்து செல்லும் அளவிற்கு ஊடகங்கள் மக்களைப் பழக்கப்படுத்தி விட்டது.  

இறந்த பின்பு, இராணுவ மரியாதை முதல் சமாதி அலங்காரம், மணி மண்டபம், புகழ்பாடிகள், துதிகள் என்பது வரைக்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சம காலம் தரும் கசப்பான சமூக நிகழ்வு.

சோனியாவின் வலது இடது கரமாக இருந்த அகமதுபடேல் இறந்த போது பத்திரிக்கைள் அதனை எப்படி வர்ணித்தது?.  இனி காங்கிரஸ் ன் எதிர்காலம்? அகமது படேல் காங்கிரசுக்குச் செய்த பங்களிப்பு, சோனியாவிற்கு உறுதுணையாக இருந்த நிகழ்வுகள் என்றெல்லாம் கோர்த்து அவருக்குப் புகழ் மாலைகள் சூட்டியது. நடுப்பக்கக் கட்டுரைகள்  தெறித்து விழுந்தது. ஆனால் அவர் தொடக்கம் முதல் இறுதிவரைக்கும் செய்தது சசிகலா வேலையைத்தான் செய்தார். இவர் மாநில அளவில் செய்தார். அவர் தேசிய அளவில் செய்தார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது அவர் தலை மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி.  பாஜக காரண காரியத்தோடு அதனைக் கிடப்பில் போட்டு வைத்திருந்த காரணத்தால் தப்பித்து ஜெ போலப் புகழுரைக்கு உரியவராக மறைந்து போனார்.

இன்னும் சில காலம் இங்கே வாழ்ந்திருப்பார் எனில் பீகார் லல்லு போல நொந்து வெந்து சிறையில் தான் இறந்து இருப்பார். ராகுல் தனி விமானத்தில் அவர் சொந்த கிராமம் வரைக்கும் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் என்பதிலிருந்தே அவரின் முக்கியத்துவத்தைச் சோனியாக எந்த அளவுக்குக் கருதியிருப்பார் என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதா முதல் இந்தப் பட்டியலில் பலரையும் கொண்டு வந்து சேர்க்க முடியும்.

நேற்றும் இன்றும் மருத்துவர் சாந்தா அம்மையார் இறந்த நிகழ்வுகள், அது சார்ந்த செய்திகள், ஊடகங்களில் அவருடன் பணிபுரிந்தவர்கள் கொடுத்த பேட்டி, அவரால் பலன் பெற்ற ஏழை எளிய சாதாரணப் பொதுமக்கள் அனைவரும் பேசிய பேச்சைக் கேட்ட போது ஒன்றே ஒன்று தான் என் மனதில் உருவானது.  

இப்படி இங்குள்ள ஓர் அரசியல்வாதிக்குப் புகழஞ்சலி கிடைக்குமா? 

அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த, கிடைக்கும் தொண்டர்கள் அனைவரும் படிப்பறிவு இல்லாத பாமரர்கள். அவர்களுக்கும் அரசியல் உலகத்திற்குத் தொடர்பே இல்லாமல் வாழ்கின்றவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இறந்தவர் அவருக்குத் தலைவர். இதற்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள். நிச்சயம் அந்தக் கட்சியினால் அவனோ, அவன் குடும்பமோ நேரிடையாக மறைமுகமாகவோ பலன் பெற்று இருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.  

ஆனால் பலன் பெற்றவர்கள் அனைவரும் இறப்புச் செய்தி கேட்ட அடுத்த நொடியிலிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தனக்கான இடத்தைக் கைப்பற்றுவதில் அவரவர் நிலை பொறுத்து  குறியாக இருப்பார்கள் என்பதனை நாம் பார்த்து வருகின்றோம்.

தமிழகத்தில் இறந்த ஒவ்வொரு அரசியல் ஆளுமைகளுக்கும் கூடிய கோடிக்கணக்கான கூட்டம் என்பது இப்படிப்பட்ட உணர்ச்சிவசப்பட்ட கூட்டமே. 

ஆனால் சாந்தா அம்மையாருக்கும் சமூக வர்க்கத்தில் இருக்கும் அத்தனை பிரிவுகளும் செலுத்திய அஞ்சலி வார்த்தைகள் என்பது அடக்க முடியாத கண்ணீருடன் தான் வார்த்தைகளாக வந்து விழுந்ததைக் கவனித்தேன்.

ஒரு பெண்மணி சொன்ன வாசகமிது. 

"அவர் மருத்துவர் அல்ல. அவர் என் கடவுள். கடைசி வரைக்கும் எளிய அணுகக்கூடிய அன்பு செலுத்தக்கூடிய ஆத்மார்த்தமான கடவுளாகத்தான் வாழ்ந்தார்" என்றார்.

சென்ற மாதத்தில் சாந்தி சோசியல் சர்வீஸ் மகான் திரு சுப்ரமணியம் இறந்த போதும் பலரும் இது போன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் ஊடக வெளிச்சம் அவருக்குக் கிடைக்கவில்லை.  தொடக்கம் முதலே அவர் இதனை விரும்பவும் இல்லை.

நம் நாட்டில் மட்டும் பிரபல்யம் என்றால் அரசியல், சினிமா இவை இரண்டையும் முக்கியமான இடத்திலும், தொழிலதிபர்கள் இறந்தால் கூட அதனை நொடிப் பொழுதில் கடந்து செல்லக்கூடிய வகையில் நம் ஊடகங்களின் தர்மம் தெளிவாகச் செயல்படுவதைக் கவனித்துப் பாருங்கள். 

ஏன் இப்படி?

வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்குப் பின்னாலும், ஒவ்வொரு புதிய ஆராய்ச்சிகளுக்குப் பின்னாலும் யாரோ ஒருவர், ஏதோவொரு நிறுவனம் தங்கள் கடமையைச் செய்து அந்த ஆராய்ச்சி வெற்றி பெற, கல்வி நிறுவனம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட முடிந்தவரைக்கும் நிதியைத் தாராளமாக வழங்கி தங்களால் ஆன சமூக பங்களிப்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

இன்று உலக அளவில் வெளிநாடுகளில் புகழ் பெற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்குப் பின்னாலும் பல நூறு தொழிலதிபர்களின் பங்களிப்பு உண்டு. இது இன்று வரையிலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கிறது.  

ஆனால் இங்கே?

இங்கே கல்வி என்பது தனிநபர்களின் லாபம் சார்ந்த வியாபாரம். அது குறுகிய வட்டத்திற்குள் தான் நிற்கும். இன்று வரையிலும் அப்படித்தான் அந்த எல்லைக்குள் நிற்கின்றது. இதன் காரணமாகவே எந்த புதிய ஆராய்ச்சிகளும் இங்கே நடப்பதில்லை. எவரும் ஊக்குவிப்பதும் இல்லை.  மொத்தத்தில் திறமையிருப்பவர்களை எவரும் கண்டு கொள்வதும் இல்லை. 

அரசியலுக்கு வந்துள்ள கமலஹாசனிடம் அவர் இருந்த துறைக்குத் தனிப்பட்ட முறையில் என்ன பங்களிப்பு செய்துள்ளார்? என்று கேட்டுப் பாருங்கள். 

 அவருக்குப் பின்னால் வந்த விஜயகாந்த் தான் சங்கத்துக் கடனையே கட்டி முடித்து உபரி பணத்தை உருவாக்கினார்.

சமூகத்திற்குப் பங்காற்றியவர்களை உண்மையிலேயே நம் அரசு கௌரவிக்க வேண்டும் என்று நினைத்தால் சாந்தா அம்மையார், திரு, சுப்ரமணியம் போன்றவர்களின் இறுதிச் சடங்குகளை இராணுவ மரியாதையுடன், குண்டு முழங்க, தேசியக் கொடி மரியாதையுடன் வெகு ஜோராக நடத்தப்பட வேண்டும்.  அப்படிச் செய்யும் போது தான் அதன் தொடர்ச்சியாகப் பலரும் இங்கே உருவாகக்கூடும். நம்பிக்கை பிறக்கக்கூடும். 

அளவு கடந்து பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி உருவானது போல இந்த மாற்றங்கள் இங்கே விரைவில் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.

தமிழக அரசு இன்று மருத்துவர் சாந்தா அம்மையாரின் இறுதி ஊர்வல நிகழ்வில் காவல்துறை மரியாதை செலுத்தி எங்கள் மனதிற்குள்ளும் கொஞ்சம் ஈரம் உள்ளது என்பதனை நிரூபித்தமைக்கு நன்றி.

••••••••••••

24 வகையான விலையில்லாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கினாலும் பெற்றோர்கள் மத்தியில் இன்று அரசு பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அளவு மதிப்பில்லை. காரணம் என்ன? 
எங்கிருந்து எப்போது பள்ளிகள் உருவானது? யாரால் தொடங்கப்பட்டது?

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிலர் தெய்வமாக இறந்து... மன்னிக்கவும்... மறைந்து விடுவார்கள்... அவர்களின் தெய்வத்திரு சாந்தா அம்மையாரும் ஒருவர்...

// தமிழக அரசு இன்று மருத்துவர் சாந்தா அம்மையாரின் இறுதி ஊர்வல நிகழ்வில் காவல்துறை மரியாதை செலுத்தி எங்கள் மனதிற்குள்ளும் கொஞ்சம் ஈரம் உள்ளது என்பதனை நிரூபித்தமைக்கு நன்றி //

நல்லவேளை எடுப்ஸ்-க்கு நன்றி சொல்லாமல் இருந்தமைக்கு நன்றிகள் பல கோடி...!

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கும்
வணங்குதலுக்கும் உரியவர்

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன்.

ஜோதிஜி said...

உண்மையான ஆத்மா.

Rathnavel Natarajan said...

மதிப்புமிகு சாந்தா அம்மையாருக்கு அஞ்சலி