Tuesday, January 26, 2021

பைத்தியக்காரர்களின் பூமி

 "ஒரு காட்சியின் அளவு 180 செகண்ட் அதிக பட்சம் இருக்க வேண்டும். அதாவது மூன்று நிமிடங்கள். இதுவே அதிகம் தான். இதுவே மிக நீண்டது. நான் அப்படி வைக்க மாட்டேன். குறைத்து விடுவேன். அதை நான் பார்க்கும் போது ஒரு ஷாட்டில் இருக்கும் பட்சத்தில் கோணங்களும், கதாபாத்திரங்களின் வசனம் அதற்குத் தகுந்தாற்போல அவர்களின் முகபாவனை முக்கியமாக இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். பார்ப்பவர்கள் அடுத்த காட்சியின் தொடக்கத்தில் அது முடிக்க வேண்டும்" என்று இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.  ஷங்கர் படத்தின் பாடல் காட்சிகளை ஒரு ஷாட் கூட நீங்கள் தவிர்க்க முடியாது. பல நூறு மனிதர்களின் உன்னத உழைப்பு அதில் இருக்கும். நூறு ரூபாய் கொடுத்து உள்ளே வரும் ஒரு பார்வையாளனுக்குக் கொடுக்கப்படும் மரியாதையது. திரைப்பட இயக்குநர் என்பவர் முதலில் மேலாண்மை இயக்குநர். ஏறக்குறைய 24 துறைகளில் இருப்பவர்களையும் ஒன்றிணைத்து தன் கனவுகளை அத்துடன் குழைத்து காட்சியாக மாற்றக்கூடிய வித்தைகளை கற்று இருக்க வேண்டும். 

ஹெச். வினோத், வெற்றி மாறன் இருவரின் படங்களைப் புத்தகங்கள் அதிகமாக வாசித்தவர்கள், வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் இவர்களின் படங்களைப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.  விபரங்கள், விளக்கங்கள் காட்சிகளாக மாறிக் கொண்டேயிருக்கும். கள ஆய்வு ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும். 

திரைக்கதை உருவாக்கக் குறிப்பிட்ட காலம், உருவான திரைக்கதையில் உன்னதமான வசனங்களைக் கோர்க்கத் தகுதியான நபர்கள், இரண்டிலும் உள்ள நம்பகத்தன்மைக்காக துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு என்று பரவசப்படுத்தியிருப்பார்கள். 

ஒரு  திரைப்படம் தானே என்று பார்த்து விட்டு மறந்து அடுத்த படத்திற்குள் நுழைபவர்களுக்கும். பார்த்த படத்திலிருந்து என்னால்  இன்னமும் மீள முடியவில்லை என்பதற்கும் உண்டான வித்தியாசம் உங்களுக்குப் புரிந்தால் போதும் ஓர் இயக்குநரின் உண்மையான தகுதி தெரியவரும். இயக்குநர் மசாலா, வசூல் தான் முக்கியம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் எதையும் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பொங்கல் சமயத்தில் மலையாள டப்பிங் கள்ளப்புருசன் 2 என்ற படம் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கும் கூட்டம் இருக்கக்தான் செய்கின்றது. எந்த ஆராய்ச்சியும் அதில் செய்ய மாட்டார்கள்.

பூமி படத்தின் தொடக்கத்தில் இந்தக் கதை மற்றொருவரின் சிந்தனையோடு இருந்ததாகவும் அவருக்கு நன்றி, பஞ்சாயத்து செய்தவர்களுக்கு நன்றி என்றும் ஒரு வாசகம் வருகின்றது.  கதை விவாதம் ஒரு பெரிய கூட்டம் பெயர்களாக வருகின்றது. இதற்கு மேலே இயக்குநர் பெயர். இத்தனை கிறுக்கர்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றார்களா? என்று யோசித்தேன்.

இவர்கள் எடுத்த கதையும் களமும் ஜெயம் ரவியின் அண்ணன் எடுத்த தனியொருவன் படத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். அந்தப் படத்தில் வெட்டப்பட்ட காட்சிகளையும் பின்னால் பார்த்தேன்.  காரணம் தனியொருவன் படக்கோர்வை (எடிட்டிங்) என்பது அத்தனை துல்லியமாக இருக்கும். பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளேன்.

ஆனால் ஜெயம் ரவி (25வது படம்) எப்படி தன் சொந்தக் காசைப் போட்டு அரை குறை ஆஃபாயில் களை வைத்துக் கொண்டு இது போன்ற படத்தை எடுக்கத் துணிந்தார் என்றே புரியவில்லை.  மரபணு மாற்றப்பட்ட விதைகள் சர்வதேச அரசியலுடன் தொடர்புடையது.  விவசாயம் என்பது இப்போதைய சூழலில் வெவ்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாக உள்ளது.  இது தான் உண்மை.  இது தான் பொய்.  இது சரியானது என்று இறுதியாக எதையும் சொல்ல முடியாத சூழலில் வந்து நிற்கின்றது. 

மார்க்கெட்டிங் மற்றும் செயின் ஸ்டோர் என்பது நீண்ட காலம் ஆராய்ச்சி செய்தாலும் உறுதியான எதையும் அதிலிருந்து நம்மால் பெற முடியாது. சூழல் மாற்றிக் கொண்டேயிருக்கும். பலரும் கண்முழி பிதுங்கி வேடிக்கை பார்க்கும் சந்தையது. 

இன்று சந்தை என்பது உலகளாவிய வர்த்தகமாக மாறியுள்ளது.  இது இனம், மொழியோடு தொடர்புடையது என்று ஒருவன் சொல்கிறான் என்றால் சதுரங்க வேட்டை படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

கௌரவ விவசாயிகள், கணக்கு காட்ட மட்டும் இருக்கும் அரசியல் விவசாயிகள், நாகரிக விவசாயிகள், ஃபேஸ்புக் விவசாயிகள், பணப்பயிர் விவசாயிகள், போராட்டத்தில் மஜாஜ் செய்து கொண்டு போராடும் விவசாயிகள், சங்கத்து விவசாயிகள், கௌரவ விவசாயி, பச்சைத்துண்டு விவசாயி என்று இதற்குள் இருக்கும் பல அத்தியாயங்களை இவர்கள் முழுமையாகப் படித்துப் பார்த்து உணர்ந்து திரைக்கதை அமைத்திருந்தால் இந்தப் பக்கமே கால் வைத்திருக்க மாட்டார்கள். காரணம் ஆழப் புதைத்து உள்ளே இழுக்கும் சகதி. சதியின் மூலம் கட்டமைக்கப்பட்ட தந்திர வலையது.

போட்ட முதலுக்கு நட்டமில்லை என்று ஹாட்ஸ்டார் என்ற கார்ப்பரேட் இடம் விற்றுப் போட்ட முதலீட்டை ஜெயம் ரவி காப்பாற்றிக் கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் விபரம் புரிந்து பார்ப்பவர்கள் மனதிற்குள் சிரித்துக் கொள்வார்கள் என்று இயக்குநருக்குத் தெரியாது. காரணம் அவர் யூ டியூப், வாட்ஸ்அப் விரும்பி என்று படத்தைப் பார்க்கும் போதே புரிகின்றது.

ஜெயம் ரவிக்குக் கூடத் தெரிய வாய்ப்பில்லையா?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விவசாயி வகைகளை இன்று அறிந்தேன்...