Thursday, January 21, 2021

அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.

அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.

இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிந்தால் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் தனியார்ப் பள்ளியில் கௌரவத்திற்காகப் படிக்க வைத்துக் கொண்டு, தமிழகக் கல்வித் தரம் பாழ்பட்டு நிற்கின்றது என்று பூபாளம் இசைக்கும் நண்பர்களுக்குப் புரியும்.


இங்குள்ள தனியார்ப் பள்ளியின் கட்டமைப்பு என்பது வேறு.  அது ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நிர்வாக (லாப) வகையைச் சேர்ந்தது.  குறிப்பிட்ட ஒரு நபரால் உருவாக்கப்பட்டது. உடனடியாக முடிவு எடுக்க முடியும். குறைவான சம்பளம் என்ற போதிலும், அதிகப்படியான வேலைப்பளு என்றாலும் தங்களின் குடும்பச் சூழலுக்காக தங்களை அடகு வைத்துக் கொண்டவர்கள் அங்கே ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். இவற்றை விட தங்கள் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கருதும் பெற்றோர்கள் குறிப்பிட்ட பள்ளிகள் கிழிக்கும் கோடுகளைத் தாண்டுவதில்லை. அவர்கள் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்கின்றார்கள். 

கட்டணம் முதல் அவமானங்கள் வரைக்கும்.

நல்ல அர்ப்பணிப்பு உள்ள தனியார்ப் பள்ளிகளும் உள்ளது. நல்ல பெயரை வைத்துக் கொண்டு காசு சம்பாதிக்கும் கொள்ளைக்கூட்ட நிறுவனங்களும் உள்ளது. 

ஆனால் இந்த இரண்டு இடத்திலும் எந்தப் பெற்றோர்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதில்லை. மட்டையாக மடங்கி விடுகின்றார்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்?. 

அவர்கள் கேட்கும் பணத்தை அங்கே கொட்டி உங்கள் மகன் மகள் மிகக் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதனால் அடுத்த வருடம் பொதுத் தேர்வுக்கு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும்பட்சத்தில் எத்தனை பெற்றோர்கள் என்ன மயிருக்கு நீ பணம் வாங்கி பாடம் நடத்தி என்னிடம் புகார் செய்கின்றாய்? என்று கேட்டவர் எத்தனை பேர்கள் இருக்கிறீர்கள்?

கூனிக்குறுகி வெட்கப்பட்டு அவமானத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு மனதிற்கு மறுகி மகனை மகளை வீட்டுக்கு அழைத்து வந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு அதற்குப் பிறகு அது குறித்த உரையாடலின் மூலம் மனைவி கணவன் சண்டை உருவாகி குடும்ப வாழ்க்கையை ரணகளமாக்கும் இந்தக் கல்வி சிஸ்டத்தை எவரும் ஏன் கேட்பதில்லை?

காரணம் கௌரவம் என்ற போலித்தனமாக வாழ்க்கையின் அங்கத்தினர் நாம்.

இங்குள்ள பெரிய நிறுவனங்களில் சமீப காலமாக ஒரு புதிய பழக்கத்தை உருவாக்கியுள்ளனர்.  நேர்முகத் தேர்வுக்கு வரும் அனைத்துத் துறை சார்ந்த ஆண் பெண் என்று இருபாலருக்கும் நீட் மற்றும் என்ஐடி தொழில் நுட்பப் படிப்புக்குக் கேட்கப்படும் நுழைவுத் தேர்வுக்குரிய வினாத்தாளைக் கொடுத்து முதலில் அதனைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் டிக் செய்யச் சொல்கின்றனர்.  பத்து வருடம் ஓர் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்து வந்தவனுக்கு துறை சார்ந்த விசயங்கள் அத்துப்படியாக இருந்தாலும் இந்தக் கேள்வித் தாள் என்பது அவனை முட்டாள் போலவே காட்டும். காரணம் மனிதர்களின் உளவியல் தெரிந்து, ஆடைகளின் உள்ளும் புறமும் புரிந்து வலுவான அனுபவம் பெற்றவனை டிக் செய். அதன் பிறகு தான் உன் திறமையை நான் அங்கீகரிப்பேன் என்பது எந்த அளவுக்குக் கேவலமான செயல்பாடோ அதே போலத் தமிழகப் பள்ளி மாணவர்கள் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தோற்றுப் போனாலும் அவர்களுக்கு அறிவே இல்லை என்று நண்பர்கள் சொல்லும் போது எனக்குச் சிரிப்பு வருகின்றது.

எந்தவிதப் பயிற்சியும் இல்லை. எவரிடமும் கற்றுக் கொள்ளவும் இல்லை. முன் பின் அனுபவம் இல்லை. மகள் ஒருவர் பத்து வருட அனுபவம் பெற்றவர் போலப் பல விதமான ஓவியங்களை வரைந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றார். மனித, தெய்வ முகங்களை அச்சு அசலாகக் கோட்டோவியமாகத் தீட்டுகின்றார். அவர் ஏற்கனவே படித்த பள்ளியில் ஓவிய ஆசிரியரோ அது குறித்து உரையாட ஒரு நபரோ இல்லை என்பது குறிப்பிட்டத் தக்கது.  

எந்த மென்பொருள் என்றால் அரை மணி நேரத்திற்குள் உள் வாங்கி தலைகீழாகப் புரட்டி விலகிப் போ. நான் முடித்துத் தருகிறேன் என்கிறார். அவர் கணினி அறிவியல் கற்றவர் அல்ல. அது என் துறை அல்ல. எனக்கு அது பிடிக்கவில்லை என்கிறார்.

ஒரு மணி நேரம் படித்து விட்டு இரண்டு மணி நேரம் தோழிகளுடன் அரட்டை அடிப்பவர் நூற்றுக்கு நூறு தான் எடுக்கின்றார்.  600 பக்க வரலாற்றுப் புத்தகங்களை முழுமையாகப் படிக்கத் தேவையில்லை. கடந்து  சென்று விடலாம் என்ற போது அதற்குப் படிக்காமலிருந்து விடலாம் என்று திருப்பி அடிக்கின்றார்.  நான்கு ஆசிரியைகளுக்கு அடங்காத மாணவிகளை தன் ஆளுமையில் அடக்கும் அவரைப் பார்த்து அமைதியாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  

இவை எல்லாம் தனியார்ப் பள்ளியில் இருந்த போது ஒன்று கூட வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரமாகவே மாற்றி வைத்திருந்தார்கள். மனித உணர்வுக்கு மாற்ற எனக்கு ஒரு வருடம் ஆகியுள்ளது.

ஆனால் இவரால் மத்திய அரசு தேர்வில் பெற முடிந்த மதிப்பெண் நூற்றுக்கு அறுபத்து ஐந்து. எனக்கே குழப்பமாக இருந்தது. பலவிதங்களில் யோசித்துப் பார்த்த போது இந்தத் தலைமுறையின் உணர்தல் வேறு. அறிவு வேறு. உள்வாங்குதல் வேறு என்பதனை உணர்ந்து கொண்டேன்.

பயிற்சியின் அடிப்படையில் தான் டிக் அடிக்கும் நுழைவுத் தேர்வுகள் வெல்ல முடியும் என்பதனை கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொன்றாகப் பார்த்து அறிந்து புரிந்து கொண்டேன். இதற்குப் பெயர் அறிவல்ல. அதிர்ஷ்டம் என்ற வார்த்தையும் இதற்குள் அடங்கும்.

யூபிஎஸ்சி பரிட்சை ஒரே முறையில் தேர்ச்சி பெற்றவர் என்ன முழுமையான புத்திசாலியா? அப்படிப் புத்திசாலியாக வந்தவர்கள் இங்கே எப்படி மாவட்டச் செயலாளர்கள் போல வருத்தப்படாமல் சீட்டைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை இங்கே வந்தால் நண்பர்களுக்கு டெமோ செய்து அடையாளம் காட்ட முடியும்.

கடந்த மூன்று மாதங்கள் ஓர் அரசுப் பள்ளியின் முழுமையாக இயக்கம், மாணவிகளின் செயல்பாடுகள், பல்வேறு நிலையிலிருந்து வரும் அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் பெற்றோர்கள் தங்கள் பொருளாதாரத்திற்கு (மட்டும்) கொடுக்கும் முன்னுரிமை. குடிகார தகப்பன், தவறான வழிகாட்டல்கள் அனைத்தையும் நெருக்கமாக உள் வாங்கி மனதிற்குள் வைத்துள்ளேன்,  

இத்தனையையும் கடந்து, இவர்களை வைத்துத் தான் ஓர் அரசு பள்ளிக்கூட ஆசிரியர் தன் பணியை இங்கே செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மேலாக அதிகாரவர்க்கத்தின் வெளியே பகிர முடியாத தடுப்பு முறைகள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் அரசுப் பள்ளிக்கூடங்கள் மட்டும் இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் குடும்பங்களிலிருந்து 70 சதவிகித மாணவ மாணவியர்கள் படிக்கவே மாட்டார்கள்.  படிக்க முடியாது. அவர்கள் வாழ்க்கைச் சூழல் வேறு விதமாக உள்ளது.  

இங்குள்ள அரசியல்வாதிகளை என்ன வேண்டுமானாலும் திட்டலாம்.  ஆனால் தமிழகத்தில் உள்ள கல்விச்சூழல் என்பது அறிவை வளர்த்து, பயிற்சி கொடுத்து உலக அளவில் நட்டக்குத்தலாக நம் மாணவர்களை நிறுத்துமா? என்று என்னால் சொல்லத் தெரியாது. ஆனால் கட்டாயம் இந்த சிஸ்டம் இங்குள்ள அனைவருக்கும் முடிந்த அளவுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குகின்றது என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்கள் மகன் மகள் நீங்கள் விரும்பும் தரமான தனியார்ப் பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை அடைந்து பொருளாதார நிலையில் நீங்கள் விரும்பிய வண்ணம் உன்னதமான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும் அவன் அவள் இந்தச் சமூகத்தில் தான் வாழ வேண்டும் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள்.  

சமமற்ற சமூகம் உருவாகும் பட்சத்தில் உங்கள் மகன் மகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகே ஒரு செக்யூரிட்டி நபருக்குக் காசு கொடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய ஆப்ரிக்கா நிலைமை போல வாய்ப்பு வந்தால் ஆச்சரியமில்லை.  

நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

தரம் என்பது எதிலும் எங்கும் இல்லை. நம் கற்பனைக்கேற்ப அது ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமாக அளவிடப்படும். 

சிலருக்கும் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்.  

சிலருக்கு மட்டும் மற்றவர்களின் மரணம் மூலம் உணர்த்தும்.

அதில் நீங்கள் யார்?

பணம் இனி தேவையில்லை

மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம்

ஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை


4 comments:

 1. ஒவ்வொன்றும் உண்மையின் வெளிப்பாடு... அருமை...

  ReplyDelete
 2. என்ன சொல்வதென்று தெரியவில்லை.  கல்வி என்பதை வியாபாரமாக்கி விட்ட காலத்தில் ஒரு உள்கூட்டு போல வேலைக்கு எடுப்பவர்கள் என்பவர்கள் சில கல்வி நிறுவனங்களில் படித்தால் மதிப்போடு பார்க்கிறார்கள்.  சில கல்வி நிறுவனங்கள் பெயரைச் சொன்னால் முகம் மாறுகிறார்கள்.  அதைப்பொறுத்துதான் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்கும் வைபவம் நடைபெறுகிறது.  நல்ல பெயர் பெற்ற பள்ளி, கல்வி, முதல் மதிப்பெண், நல்ல வேலை கைநிறைய சம்பளம்.... இதுதான் இன்றைய வாழ்க்கை முறை.    மன நிறைவு?

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் உங்களுக்கு குறள்பாலனுக்கும் பதில் உள்ளது.

   Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.