Saturday, January 23, 2021

உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் இது உண்டு என்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  தொழில் துறையில் இருப்பவர்களுக்கு உள்ளுணர்வு மிகவும் முக்கியம். ஏற்றம், இறக்கம், வளைவு போன்றவற்றைச் சந்திக்கவிருக்கும் சமயங்களில் நிச்சயம் ஏதோவொன்று அறிகுறியாகத் தெரியும். உடனே இதனை மூடநம்பிக்கையில் வகைப்படுத்திவிட வேண்டாம். எனக்கும் இப்படி உணரும் எண்ணம் உண்டு. சில சமயம் அப்படியே நடந்தும் உள்ளது.  




அப்படித்தான் எழுதும் போதும் தோன்றும். 

பலருக்கு வாசிக்கும் போது எரிச்சலாக இருக்கும். பத்தாம்பசலித்தனமாக தோன்றும். பிற்போக்குவாதியாக இருப்பாரோ? என்று கூட எண்ணம் வரும்.  

காலையில் எழுந்த போது மகள்களின் வாட்ஸ்அப் குழுவில் ஓர் ஆசிரியை திருப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியின் விளம்பரத்தைப் பகிர்ந்து இருந்ததைப் பார்த்தேன். (பள்ளிகள் திறந்த காரணத்தால் இனி பொறியியல் கல்லூரிகளின் பிள்ளைபிடி கோஷ்டிகள் சகல இடத்திற்குள்ளும் புகுந்து உள்ளே வருவார்கள். இவர்கள் வலையில் சிக்கும் ஆசிரியர்கள் அவர்கள் தரும் உணவுக்காக மாணவர்களை தடம் மாற்றுவார்கள்) அந்த விளம்பரம் ஆசையைத் தூண்டுவதாக இருந்தது. 

+2 படிக்கும் மாணவர்கள் இந்த இணைப்பில் சென்று உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு காத்துள்ளது. முதன் மூன்று பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள் என்று சொல்லியிருந்தார்களே தவிர என்ன விபரம் என்று சொல்லவில்லை.  உள்ளே நுழைந்து பதிவு செய்து விட்டால் போதும். அனைத்து சொந்த விபரங்களையும் உருவி விடுவார்கள். 

அடுத்தடுத்து அழைப்பு வந்து கொண்டேயிருக்கும். குறுஞ்செய்தி கொட்டிக் கொண்டேயிருக்கும். உள்ளூர் என்றால் பிள்ளை பிடிக்கும் ஆட்கள் நேரிடையாக  சோப்பு ஷாம்பு எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். சிக்கியவர்கள் சின்னாபின்னமாகி விடுவார்கள். பிள்ளை பிடி கோஷ்டி அடுத்த வருடம் காத்திருக்கும்.  இப்படித்தான் இங்கே இப்போது பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நான் குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியின் தரவரிசைப்பட்டியல் எந்த நிலைமையில் உள்ளது என்று உடனே சென்று சோதித்துப் பார்த்தேன்.  காறித்துப்பும்படி இருந்தது.  அவர்கள் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 80 சதவிகித பொறியியல் கல்லூரிகளின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது. கட்டாயம் இதற்கு ஆரிய பார்ப்பன சூழ்ச்சி காரணமல்ல என்பதனை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தனியார்ப் பள்ளிக் கல்வி நிறுவனங்களை ஆதரிக்கும் நண்பர்கள் முன் இப்போது நியாயமாக எழ வேண்டிய கேள்வி கல்லூரிகள் என்று வரும் போது இன்று தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் தான் அதிக அளவு இருக்கின்றார்கள். (நல்லவேளை பள்ளிகளை இப்படி தரவரிசைப்பட்டியல் மூலமாக வெளிக்காட்டும் வசதிகள் இங்கே இன்னமும் உருவாகவில்லை)  

குறிப்பிட்ட சதவிகிதம் மோசம். பெரும்பாலான சதவிகிதம் சிறப்பாகத்தான் செயல்படுகின்றார்கள் என்று தானே நமக்குப் புள்ளி விபரங்கள் காட்ட வேண்டும்? ஏன் இப்படி முதல் இருபது இடத்திற்குள் வந்து நிற்பதற்கே அல்லது 50 இடங்களுக்குள் வருவதற்கே அவர்களுக்கு நாக்குத் தள்ளுகின்றது?

இங்கு ஆயிரம் கோடிக்கு மேல் வரவு செலவு செய்யும் நிறுவனமும் கல்விக் குழுமமாக மாறி சந்தையில் இப்போது வானாளவ உயர்ந்து நிற்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தரவரிசைப்பட்டியலில் வாங்கிய மதிப்பெண்கள் 33 சதவிகிதம். அதாவது தேர்ச்சி கூட அடையவில்லை?

என்ன காரணம்?

சுமாரான, நல்ல, தரமான கல்லூரிகள் என்று பிரித்து எடுத்துக் கொண்டால் ஒரு பொறியியல் பட்டதாரி தன் படிப்பை முடித்து வெளியே வரக் குறைந்தபட்சம் 4 லட்சம் முதல் 8 லட்சம் வரைக்கும் இன்றைய சூழலில் செலவாகின்றது. 

தனியார் கல்லூரிகள் என்றாலும் அவர்களுக்கு லாபம் தானே முக்கியம்? என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வந்து சேரும் மாணவர்கள் மூலம் அவர்களுக்குரிய லாபம் வந்து கொண்டே தான் இருக்கிறது.  ஆனால் அந்த நிறுவனத்தின் தரம் என்று சுட்டிக்காட்டப்படும் எந்த விசயங்களும் நடப்பதே இல்லையே? மாணவர்கள் சேர்வதில்லை என்று வாதம் வைக்கப்படுகின்றது. தரம் இருந்தால் மாவட்டங்கள் கடந்தும் சென்று சேர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள்.

முதல் காரணம் பள்ளி கல்லூரிகள் நடத்துபவர்கள் அதற்குத் தகுதியான நபர்கள் அல்ல.  

இரண்டாவது காரணம் அவர்கள் பெரும்பாலும் பினாமிகள். 

மூன்றாவது பல அரசியல்வாதிகள் நேரிடையாக மறைமுகமாகப் பல கல்லூரிகள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் என்ன ஆச்சரியம் என்று தோன்றும்?

இது போன்ற நிறுவனங்களில் நிர்வாகம் என்பது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது? கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கைகள் எதுவும் தேவையில்லாமல் இவர்கள் வேறொரு பாதையில் நிர்வாகத்தைக் கொண்டு சென்று கொண்டிருப்பார்கள். வருடந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் பலதுறைகளும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. எதையும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்று விட முடியும் என்ற செல்வாக்கில் இருப்பதால், அதற்காக எந்தக் குறுக்கு வழியையும் கடைப்பிடிக்கலாம் என்ற நோக்கத்தில் புதிய மாறுதல், தேவைப்படும் கொள்கைகள் எதுவும் கல்லூரி வளாகத்திற்குள் எட்டிப் பார்க்க வாய்ப்பில்லை.  

பணம் சேரச் சேர அது வேறு பக்கம் முதலீடாக மாறுமே தவிர அது கல்லூரி சார்ந்த வளர்ச்சிக்குரிய முதலீடாக மாறாது. இறுதியில் இன்வெர்ட்டர் என்றால் என்ன? என்று வெளியே வரும் மாணவர் கேட்கும் நிலையில் இருப்பார்கள்.  இப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளாக இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று வந்தமர்ந்த சூரப்பா பட்ட பாட்டை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.  

உங்கள் மகன் மகள் ப்ளஸ் டூ படிக்கின்றாரா? அவரை பொறியியல் அல்லது மற்ற எந்தத் துறையில் சேர்க்க வேண்டும் என்ற கனவு உங்களிடம் உள்ளதா? 

முதலில் மகன் மகளிடம் நீங்கள் கவனித்த அவர்களின் தனிப்பட்ட ஆர்வம் திறமையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எந்தப் படிப்பு படிக்க விரும்புகின்றார்? என்பதனை பொறுமையாக உரையாடித் தெரிந்து கொள்ளுங்கள். அவருக்குச் சொல்லத் தெரியவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த கல்லூரிகள், புதிய துறைகள் சார்ந்த விபரங்கள் அடங்கிய ஏராளமான புத்தகங்கள் தமிழில் ஆங்கிலத்தில் இன்று அதிகம் கிடைக்கின்றது. அதனை வாசிக்க வையுங்கள். 

எந்த ஊர்? எந்தக் கல்லூரி? எந்தத் துறை? என்று முடிவு செய்ததும் இணையத்தில் அது சார்ந்த கல்லூரிகள் குறித்த விபரங்களை ஆராயுங்கள். எந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றது என்பதனை உணர்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் அதன் செயல்பாடுகளை, வாங்கிய தரவரிசைப்பட்டியலைக் கணக்கில் எடுத்து மூன்று தேர்வு களாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.  

கட்டணம் விபரங்களை முடிந்தவரைக்கும் அறிந்தவர் தெரிந்தவர் மூலம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் தேர்வு எழுதுவதற்கு முன்பே நீங்கள் தெரிந்து கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.  தரமான நல்ல தரவரிசைப்பட்டியலில் உள்ள கல்லூரிகளில் உள்ள கட் ஆப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டு என்ன? என்பதனை புரிந்து மகன் மகளிடம் தெரியப்படுத்தி விட்டால் போதும். அவர் விரும்பிய துறை, கல்லூரி என்கிற பட்சத்தில் அவர் சற்று கூடுதலாக உழைக்க வாய்ப்புண்டு.

சுமாரான கல்வித்தரத்தில் தங்கள் வாரிசுகளைப் படிக்க வைக்க தங்கள் வருமானத்தில் 30 சதவிகிதத்தையும், நல்ல கல்வித்தரத்திற்கு 40 சதவிகிதமும், இந்திய அளவில் தரவரிசைப்பட்டியலில் உள்ள பள்ளி கல்லூரிகளில் சேர்க்க இப்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் 50 சதவிகிதத்தை செலவளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.  

இது தான் எதார்த்தம்.

கீழே இணைப்புகள் கொடுத்துள்ளேன்.

ஒன்று    இரண்டு   மூன்று   நான்கு

மகன் மகளுக்கு துறை சார்ந்த, கல்லூரிகள் சார்ந்த புரிதலுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

உங்கள் பணம் பத்திரம்.

(கூடுதல் தகவலுக்காக)

552 engineering colleges in Tamil Nadu as of July 2014. Out of 552 engineering colleges affiliated to Anna University, 7 of them are Government/aided colleges, 33 of them are Autonomous colleges and the rest are self-financing colleges and four are University departments within Anna University.

Tamil Nadu 2020?

There are more than 800 Engineering colleges in Tamil Nadu offering more than 7000 courses across various specializations.

10 comments:

திருவாரூர் சரவணா said...

சரியான நேரத்தில் தெளிவான அறிவுரை. பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

எதார்த்தம் எல்லாம் கடந்தாயிற்று...

இந்த ஆட்சியில் எதுவுமே வெளங்காது என்பதை (என்பதாவது) புரிகிறதா தலைவரே...?

ஸ்ரீராம். said...

எல்லாமே ஏமாற்று, வியாபாரம் என்று ஆனபின் மாணவர் தன் சொந்த புத்தியில், சொந்த முயற்சியில் முன்னேறினால் ஒழிய வேறு வழியில்லை எனும் நிலைதான்.   இது மாதிரி கல்லூரிகளில் தேர்ந்த ஆசிரியர்களை எதிர்பார்க்க முடியாது.  வேறு நல்ல வேலை கிடைக்கும்வரை இங்கு குப்பைகொட்டும் இடைநிலைப் பணியாளர்களால் என்ன பயன் விளையும்?  தரவரிசைப் பட்டியல் என்பது அந்தந்த வருடத்தின் மாணவர் தேர்ச்சியால் கிடைப்பபதுதானே?

Rathnavel Natarajan said...

நான் குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியின் தரவரிசைப்பட்டியல் எந்த நிலைமையில் உள்ளது என்று உடனே சென்று சோதித்துப் பார்த்தேன். காறித்துப்பும்படி இருந்தது. அவர்கள் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 80 சதவிகித பொறியியல் கல்லூரிகளின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது. - அருமையான, அவசியமான பதிவு. சில மாதங்களுக்கு முன் ஒரு பொறியியல் கல்லூரியில் ஏமாற்று பற்றி எழுதினேன். அதில் சம்பந்தப்பட்டது என் மகள் வழிப்பேரன். அந்த நிர்வாகத்தினர் அந்த மாணவனுக்கு கொடுத்த அழுத்தத்தினால் நான் பதிவை எடுக்க வேண்டியதானது - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல கல்வி நிறுவனங்கள் வியாபார மையங்களாக மாறிவிட்டன.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

போச்சுடா.. மனிதர்கள் மாறுவார்கள். சூழல் மாறும். கவலை வேண்டாம்.

ஜோதிஜி said...

அது மட்டுமல்ல. கல்லூரி இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் ராம்.

ஜோதிஜி said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி.

ஜோதிஜி said...

உண்மை.