Monday, January 25, 2021

சாபத்தை சுமக்கும் ராகுல் காந்தி

சோனியா செய்த நல்ல விசயம் ஒன்று உண்டெனில் கணவர் முகத்தை மகனுக்கும் மாமியார் முகத்தை மகளுக்கும் கடத்த காரணமாக இருந்தது தான். 

ராகுல் பல சமயங்களில் அச்சு அசலாக ராஜீவ் காந்தி முகத்தை நினைவு படுத்துகின்றார். தோற்றம், நடை, உடை, பாவனை, உண்மையான எளிமை என்று எல்லா நிலைகளில் நான் பத்தடி தொலைவில் நின்று பார்த்த ராஜீவ் காந்தியை நினைவு படுத்தினார். அவரின் நேற்றைய கோவை, திருப்பூர் பயணம் பல ஆச்சரியங்களை உருவாக்கியது.



மன்மோகன்சிங் முதல் ஐந்தாண்டுக் காலம் பிரதமராக இருந்த போது இந்திய அரசியலை, அதிகாரத்தை மிக நெருக்கமாக நின்று கவனிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை காலம் அவருக்கு இயல்பாக வழங்கியது.  இரண்டாவது ஐந்தாண்டுக் காலம் தங்கத் தட்டில் "பிரதமர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மன்மோகன்சிங் சொல்லும் அளவிற்குக் காலம் அவருக்குச் சாதகமாக இருந்தது. 

மொத்தத்தில் தியரி மற்றும் பிராக்டிகல் பிரிட்சை இரண்டிலும் தேர்ச்சி பெறத் தகுதியில்லாத மாணவராகக் காலம் அவரை மாற்றியது. 

ராகுல், விமானப் பயணங்களில் கட்டாயம் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதாகப் பல புகைப்படங்கள் மூலம் பார்த்துள்ளேன். மோடி ஆட்சிக்கு வந்த முதல் ஐந்தாண்டுகளில் அதுவரையிலும் கற்ற, பார்த்த அரசியல் மற்றும் அதிகாரவர்க்கச் செயல்பாடுகளுக்கும், பதவி  இல்லாத போது தன்னைச் சுற்றியிருந்தவர்களின் மாறிய மனோபாவத்தையும் உணர்ந்திருக்க அதிக வாய்ப்புகளைக் காலம் அவருக்கு வழங்கியது.  ஆட்சியில் இல்லாத முதல் இரண்டு ஆண்டுகள் அவருக்கு போதுமானது. உணர்ந்திருந்தால் மீண்டு வந்திருப்பார். கட்சியைப் புதுப்பித்து இருப்பார். கொள்கைகளை மறு சீராய்வு செய்து இருக்கலாம். இந்தியாவின் கடந்த காலத் தேவைக்கும் இப்போது மாறியுள்ள இந்தியாவின் உண்மையான தேவைக்கும் உண்டான வித்தியாசங்களை எளிதில் அடையாளம் கண்டு இருப்பார்.

கட்சிக்குள் உள்ளே இருக்கும் பெருச்சாளிக்கூட்டத்தை ஒழிக்க எந்த ஆயுதத்தைக் கூர் தீட்ட வேண்டும் என்று காலம் அவருக்குப் பல சந்தர்ப்பங்களையையும் வழங்கியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் முடியவில்லை. செயல்படவில்லை. அம்மாவுக்கு அடங்காத பிள்ளையா? காயங்களை மறக்காத வாலிப சோகமா? ஒன்றும் தெரியவில்லை?

ராகுலுக்கு மக்களைக் கவரக்கூடிய கவர்ச்சி இருக்கிறது. நூற்றாண்டுக் காலக் குடும்பப் பெயர் இருக்கிறது. மூன்று தலைமுறைகளின் அனுபவம் இருக்கிறது. சாதிக்கத் தடையில்லாத இளமையான வயதும் இருக்கிறது.

இல்லாத ஒன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்.

மாறிய இந்தியாவின் தோற்றத்தை உள்வாங்காமல் பழைய பஞ்சாகத்தை நம்பிக் கொண்டு மலையைப் பிளக்க ஆணிகள் போதும் என்று நம்பியது. பதவிக்கு மட்டும் ஆசைப்படும் கிழட்டுக் கூட்டத்தைத் துரத்தாமல் வைத்திருப்பது. செயல்படத் தகுதியுள்ள இளைஞர் கூட்டத்தைக் கட்சியில் இருந்த துரத்தியடித்த கூட்டத்தைக் களையாமல் இருப்பது.

மதவாதம் இந்தியாவைச் சிதைக்கும் என்ற வார்த்தைகள் சரி தான். ஆனால் காங்கிரஸ் ன் கடந்த கால வரலாற்றில் மதவாதத்தை வளர்ப்பதில் தான் கவனம் செலுத்தி தங்களுக்குரிய அதிகாரத்தை அடைந்தார்கள் என்பதனை உணர மறுக்கின்றார். 

தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்று சொல்லும் போதே கடந்த காலத்தில் குறைந்தபட்சம் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களை எப்படி மத்தியில் இருந்தவர்கள் நடத்தினார்கள் என்பதனை உணராமல் உளறுகின்றார்.

மாநில சுயாட்சியை உரக்கப் பேசும் ராகுல் பாட்டி எப்படி இதனைச் சிதைத்தார் என்பதனை ஏற்க மறுத்து என்னால் மாற்ற முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றார்?

ஒவ்வொரு மாநிலத்திற்கும் காங்கிரஸ் வழங்கிய சுயாட்சி உரிமைகள் எப்படியிருந்தது என்பதனை உணர்ந்திருந்தாலே போதுமானது. 

இன்றைய மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கை தோல்வி என்று கூற்றில் உண்மை என்று மக்கள் உணர வேண்டும் என்றால் நேரு முதல் ராஜீவ் முதல் இந்தியாவை மற்ற நாடுகள் எப்படிப் பார்த்தது? எவ்வாறு கையாண்டது என்பதனை உணர வேண்டும்.

ராகுலின் எண்ணங்களில், செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு இல்லை. அத்துடன் குழப்பம் தான் உள்ளது என்பதற்குப் பின்னால் இருப்பது அனைத்தும் காங்கிரஸ் என்ற கட்சியில் உள்ள காலாவதியான கொள்கைகள்.

ஒரே குடும்பத்திற்காகவே உருவாக்கப்பட்ட கொள்கைகள். 

இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த மறைந்த நரசிம்மராவ் க்கு கிடைத்த அவமரியாதை என்பது மறக்கக்கூடியதா? நான், எனக்குப் பின்னால் என் மகன், அவனுக்குப் பின்னால் பேரன் போன்ற கொள்கைகள் இனி இங்கே எடுபடுமா?

நேரு உருவாக்கினார். இந்திரா வளர்த்தார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர்கள் உருவாக்கிய கொள்கைகள் அனைத்தும் காலாவதியாகிப் போன தருணத்தில் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக வில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். 

வறுமையைப் போக்க முடியவில்லை. இந்தியாவின் வசதிகளைப் பெருக்க முடியவில்லை. 

இதன் தொடர்ச்சியாக ராஜீவ் உள்ளே வந்த போது ஊழல் என்பது பொதுவாக மாறியது. மன்மோகன் காலத்தில் அனைவருக்கும் இயல்பானது என்பதாக மாறியது. உனக்குக் கொஞ்சம். எனக்குக் கொஞ்சம் என்பதாக மாறிய போது காங்கிரஸ் என்ற ஆலமரத்தில் அவரவர் முடிந்த அளவுக்குக் கொதி ஊரை ஊற்றி தங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள். யார் தலைவர் என்பதில் அக்கறையாக இருந்தார்கள். தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் சிரத்தையுடன் செயல்பட்டார்கள். தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் கட்சிக்குத் தொண்டர்களும் தேவை என்பதனை மறந்தார்கள்.  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் கட்சிக்கு உள்கட்டமைப்பு தேவை என்பதனை மறந்தார்கள். இத்தனை கோடிகள் சேர்த்தது போதும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து கோடிகள் பின்னால் அலைந்து தொண்டர்களைத் தெருக்கோடியில் நிறுத்தினார்கள். கட்சியின் பெயரை மக்கள் மனதிலிருந்து ஒதுக்கினார்கள். கடைசியில் மொத்த பாவத்தையும் நீ தான் சுமந்தாக வேண்டும் என்று காலம் ராகுலிடம் ஒப்படைத்து வேடிக்கைப் பார்க்கின்றது.

வாழப்பாடி இராமமூர்த்தி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குப் பிறகு தமிழகத்தில் எவர் காங்கிரஸை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று உள்ளனர்? பேசு பொருளாக மாற்றியுள்ளனர்? 

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் காங்கிரஸ் என்ற கட்சி மாநிலக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்த பழக்கத்திலிருந்து மீள முடியாத அளவிற்கு அவரவர் சுயநலம் வெளியே தெரிய இன்று எந்த மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ் என்ற ஆலமரத்தை அருகம்புல் போலவே பாவிக்கின்றார்கள். 

கடைசியாக இன்று ராகுலின்  எளிய ஆங்கிலப் பேச்சைக்கூட மொழி பெயர்க்கச் சரியான நபரை அடையாளம் காண முடியாத அளவிற்குக் கணக்கர் பதவிக்குக்கூட லாயக்கு இல்லாத அழகிரி தடுமாறுகின்றார்.

ராகுல் கோபப்படவில்லை. அழகிரி மேல் வெறுப்பு காட்டவில்லை. மறுபடியும் சிறிய வாக்கியமாகப் பேசுகின்றார். மீண்டும் அழகிரி கேட்ட பின்பு சொன்னவற்றை மீண்டும் சொல்கின்றார். 

மகா கோடீஸ்வரன் தங்கபாலு தொடங்கி எத்தனை எத்தனை பேர்கள்.  எங்கே சென்றார்கள்? 

அம்மாவுக்கும் மகனுக்கும் ப.சிதம்பரம் என்றால் ஆகாது என்பதனை அனைவரும் அறிந்ததே. இந்தக் கறையின் மேல் கை வைத்தால் நம் கறை அனைத்தும் வெளியே வந்தும் என்று பயப்படுகின்றார்கள். 

ஆனால் மக்கள் கூட்டம் என்ற போது ஈகோ முக்கியமா? செயல்பாடுகள் முக்கியமா? 

கட்சியை வைத்துச் சம்பாதித்த அத்தனை பேர்களும் காணாமல் போய்விட தன்னந்தனி காட்டுக்குள் வந்து நின்ற ராகுலுக்குக் கிடைத்த மரியாதை அவருக்குக் கிடைத்தது அல்ல. காங்கிரஸ் என்ற பாரம்பரியத்தின் மேல் வைத்திருக்கும் தமிழக மக்களின் எளிய நம்பிக்கையது. 

ராகுலின்  எளிமை நிஜமாகவே  உண்மையாகவே என்னைக் கவர்ந்தது. போலித்தனம் என்பது அறவே இல்லை என்பதனை பல பேச்சுக்கள் மூலம் கண்டேன்.

வயல்வெளியில் கார்பெட் போட்டு நடப்பவர்கள், கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு ஐம்பது தூரத்தில் நின்று கொண்டு உளறுபவர்கள் மத்தியில் தன்னை நாடி வந்த, கை கொடுத்த அத்தனை பேர்களுக்கும் வாஞ்சையாக நன்றி செலுத்திய ராகுலுக்கு எதிர்காலம் உள்ளது. திருப்பூர் திருமுருகன்பூண்டில் பேக்கரியில் அவர் தேநீர் அருந்திய காட்சி என்பது ஆச்சரியமானது.  முன்னும் பின்னும் இசட் பிரிவு சூழ்ந்து வாழ்ந்து பழகிய இளைஞரின் வாழ்க்கையின் இன்றைய நிலையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். நிலையாமை தத்துவம் என் நினைவுக்கு வந்து போனது.

ஆனால் அது எத்தனை ஆண்டு காலம் என்பது தான் புரியவில்லை? 

காரணம் ஜனநாயகம் என்றால் எதிர்க்கட்சிகள் வலுவாக வலிமையானதாக இருக்க வேண்டும். 

அது தான் ஆள்பவர்களுக்கு(ம்) சவாலை உருவாக்கும். மக்களுக்கும் நல்லது நடக்க வாய்ப்புண்டு.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்த 2 பத்தி...! வாவ்...!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை. பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

கட்சியை வைத்துச் சம்பாதித்த அத்தனை பேர்களும் காணாமல் போய்விட தன்னந்தனி காட்டுக்குள் வந்து நின்ற ராகுலுக்குக் கிடைத்த மரியாதை அவருக்குக் கிடைத்தது அல்ல. காங்கிரஸ் என்ற பாரம்பரியத்தின் மேல் வைத்திருக்கும் தமிழக மக்களின் எளிய நம்பிக்கையது. - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

ஸ்ரீராம். said...

எளிமையினால் பயனில்லை. சவால்களைச் சந்திக்கும் திறமை வேண்டும்!

Unknown said...

//கட்சியை வைத்துச் சம்பாதித்த அத்தனை பேர்களும் காணாமல் போய்விட தன்னந்தனி காட்டுக்குள் வந்து நின்ற ராகுலுக்குக் கிடைத்த மரியாதை அவருக்குக் கிடைத்தது அல்ல. காங்கிரஸ் என்ற பாரம்பரியத்தின் மேல் வைத்திருக்கும் தமிழக மக்களின் எளிய நம்பிக்கையது.// very well worded! I also think so. at one time. Actually we need bot BJP and Congress for running. Hope Rahul build his strength slowly. He will learn the real needs get rid of th excess baggage and start new life. wish him good luck.
Congress will emerge as an alternate when the public confidence fades on BJP.

Rajan

Unknown said...

//காரணம் ஜனநாயகம் என்றால் எதிர்க்கட்சிகள் வலுவாக வலிமையானதாக இருக்க வேண்டும். அது தான் ஆள்பவர்களுக்கு(ம்) சவாலை உருவாக்கும். மக்களுக்கும் நல்லது நடக்க வாய்ப்புண்டு.//

Remember this Kural:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

Rajan