Thursday, November 19, 2020

பண்டிகை கால கொள்ளையர்கள்

நான்கு வருடங்களுக்கு முன்பு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கடையில் நான் பார்த்த பெண்கள் சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆச்சரியத்தைத் தந்தது. வண்ணங்கள்,தரம், விலை என்று எல்லாவிதங்களிலும் மிகச் சரியாகவே இருந்தது. நான் எதையும் வாங்கவில்லை.  வீட்டில் வந்து சொன்ன போது நம்ப மறுத்தார்கள்.  வீட்டுக்கு அருகே ட்ரெண்ட்ஸ் திறந்த போது ஆர்வத்துடன் சென்று பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. நம் குலப் பெண்கள் அணியும் வகைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. வீட்டில் கொந்தளிப்பு உருவாக அதன்பிறகு அந்தக் கடை குறித்து வாயைத் திறந்தாலே கசகசா வார்த்தைகள்.




அதன் பிறகு விசாரித்த போது பங்களாதேஷ் ல் இருந்து தைத்துக் கொண்டு வருகின்றார்கள். தரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதும் புரிந்தது. அவர்களின் இணைய தளத்தில் காரச் சேவுடன் ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். மறந்து விட்டேன்.

நேற்று என்னை பார்சல் செய்து மூவரும் வெளியே அனுப்பி வைத்தார்கள். நாங்கள் கேட்ட உடைகள் இல்லாமல் உள்ளே வரவேண்டாம் என்று. வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தவருக்கு ஏக மகிழ்ச்சி.

அவர் சொன்ன கடையில் நிறுத்திய போது பயந்தே போய்விட்டேன். ஈரோடு சந்தை போல எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். மூன்று தளங்கள் 2000 பேர்கள். 80 சதவிகிதம் பெண்கள். முகக்கவசம் என்ற ஒப்பில்லா தத்துவம் அங்கே அனாதையாக எங்கேயோ திரிந்து கொண்டிருந்தது. 

கொரானா தூதர்கள் என்று 

யாருக்காவது பட்டம் வழங்க வேண்டுமென்றால் பெண்களுக்குத் தான் நான் கொடுப்பேன். 

உள்ளே உள்ள கூட்டத்தைப் பார்த்து நான் உள்ளே வரவே மாட்டேன் என்று வெளியே நின்று விட்டேன். மற்றொரு பயம் மனதில் வந்து நின்றது. ஆசை வந்தால் பர்ஸ் காலியாகிவிடும் என்ற அடிப்படை பொருளாதாரத் தன்மையை நினைத்து கால் மணி நேரம் கழித்து உள்ளே சென்ற போது நினைத்த மாதிரியே குப்பையை எடுத்து வைத்திருந்தார். அதாவது நங்கைகள் அணியில் டாப் என்ற ஆடையில் ஸ்டிக்கரில் 699 என்று போட்டு அதன் மேல் கோடு போட்டு 599 என்பதனைப் பார்த்து பெருமையாக என்னிடம் கேட்டார். 

"உனக்கு இது போல பத்து எடுத்துத் தருகிறேன். இங்கேயிருந்து வெளியே வந்து விடு"

என்று அழைத்துக் கொண்டு எதிரே இருந்த ரிலையன்ஸ் ட்ரெண்ஸ் அழைத்துச் சென்றேன். மூன்று நிமிடங்கள் தான். 399 ரூபாய். தரமான அழகான நேர்த்தியான ஆடைகள். ஒவ்வொரு அடியிலும் ஒரு திட்டமிடுதல். குறிப்பிட்டத் தொகைக்கு மேல் எடுத்தால் அதிலும் கழிவு வாய்ப்புகள் உண்டு.

எனக்கு ஆச்சரியம் என்னவெனில் விலை ஸ்டிக்கரில் இவர்களே எழுதுகின்றார்கள். இவர்களே அதையும் அடிக்கின்றார்கள். அதன் மேல் மற்றொரு ஸ்டிக்கர் வெட்கம் இல்லாமல் ஒட்டுகின்றார்கள்.  அவன் இடம். அவன் பொருள். அவன் விலை? என்று கேட்கலாம். சரி தான். 150 ரூபாய் பொருளுக்கு 599 விற்பனை எனில் இது எந்த வணிக மேலாண்மைப் பாடத்தில் கற்றுத் தருகின்றார்கள்.

சரி, அந்த விலைக்குரிய தரமான ஆடைகள் உள்ளதா? என்றால் அங்கிருந்த கூட்டம் அதைத்தவிர வேறு எல்லாவற்றையும் பார்த்துத் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்?

யார் சொன்ன கொரானா கொடிய தொற்று நோய் என்று?

ஒரு பக்கம் கொள்ளையடிக்க உதவுகின்றது.

மற்றொரு பக்கம் கொள்ளையடிப்பவர்கள் உதவும் உதவாக்கரைகளையும் உருவாக்கியுள்ளது.

நாம் அம்பானி அதானி என்று கோஷமிட கற்றுக் கொண்டதால் 

உள்ளூரில் உள்ள கொள்ளைக்கும்பல் ஒவ்வொரு கொண்டாட்டங்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பயன்படுத்திக் கொள்கிறது.

இன்று சூரப்பா... நாளை காத்தப்பா...


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// என்னை பார்சல் செய்து //

இப்பவே கண்ணைக் கட்டுதே...!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

ஸ்ரீராம். said...

ட்ரெண்ட்ஸில் இந்த அனுபவத்தை சென்ற வருடம் நானும் அனுபவித்தேன்.  1500 ரூபாய்க்குமேல் துணிகள் எடுத்தால் ஒரு மிக்சி வேறு தந்தார்கள்.  இன்னமும் அது ஓடிக்கொண்டிருக்கிறது!

ஜோதிஜி said...

இந்த வருடம் அவர்களுக்கு தீப ஒளி எனக்கு வலி.

ஜோதிஜி said...

உண்மை இந்த வருடமும் இங்கே ஆபர் இருந்தது.

ஜோதிஜி said...

நன்றி அய்யா