Monday, November 30, 2020

வைரக்கல்

பிரபல்யங்களைப் பற்றி எழுதுவது ஒரு வினோதமான கலை. நாம் விரும்பியவர்களைப் பற்றி யாராவது ஒருவர் புகழ்ந்து எழுதினால் நமக்கு உவப்பாக இருக்கும். விமர்சித்து எழுதினால் அதில் உள்ள விசயங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து எழுதியவர் எத்தனை சதவிகிதம் உண்மை எழுதியுள்ளார்?. எப்படிப் பொய்யை உண்மையாக மாற்றி உள்ளார்? போன்ற எதனையும் ஆராய மாட்டோம். 

காரணம் நம் மனம்.
நாம் வாசிக்கும் கதை கட்டுரை திரைப்படம் எதுவாக இருந்தாலும் நம் மனதின் விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.  அதனைத் தான் வெற்றி பெற்றதாக சமூகம் கொண்டாடுகின்றது. இது பொதுவான வெற்றி. உண்மையான வெற்றி அல்ல.

மற்றொரு வகை உண்டு. 

எது சரியோ? எது உண்மையோ? அடுத்து வரும் தலைமுறை உணரக்கூடிய வகையில் எழுதக் கூடியவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று செய்து கொண்டேயிருப்பார்கள்.  

300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒவ்வொரு ஆவணமும் இன்று பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது.  300 ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேர்கள் எழுதியிருப்பார்கள். அவர்கள் படைப்பு என்னவாயிற்று?  நாம் உணர்ந்து பார்த்தால் இதற்குள் உள்ள உண்மை புரியும். ஆனால் நாம் உணர மாட்டோம்.

உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மொத்த மனித எண்ணிக்கையில் 3 சதவிகித மக்கள் தான் பல துறைகளில் வெற்றிக் கொடியை நாட்டுகின்றார்கள். 17 சதவிகித மக்கள் அவர்களைச் சார்ந்து இயங்கி தனக்கான அடையாளத்தை 3 சதவிகித மக்கள் மூலம் பெறுகின்றார்கள். மீதம் உள்ள 80 சதவிகித மக்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமே. வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமும் இன்றி இறந்து போய்விடுகின்றார்கள்.

இது நான் சொல்ல வில்லை. 

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் (சோதிடம், அனுமாஸ்யம், மற்ற ஆச்சரியத் தகவல்கள் குறித்து) ஒரு காணொளிக் காட்சியில் சொல்லியிருந்தார். பலவிதமான தாக்கத்தை உருவாக்கியது. 

நான் வாழும் சமூகத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.

ஒரு பிரபல்யம் என் தமிழக அரசியல் வரலாறு குறித்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய பின்பு அவர் கருத்தாக என்னிடம் சொன்னது இது.

"யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதில் காழ்ப்புணர்வு இருக்கக்கூடாது. படிப்பவர்கள் உங்களைப் பற்றி உணர்ந்து கொள்வார்கள். அதன் பின்பு உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள். நீங்கள் சரியாகவே அதனைக் கையாண்டு இருக்கிறீர்கள்" என்றார். 

இது நான் திட்டமிட்டுச் செய்தது அல்ல.  ஆவணம் என்பது அதற்கான தகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினேன். 

அரசியல், திரைப்பட மற்றும் சமூக ஆளுமைகளைப் பற்றித் திட்டுவது, பாராட்டுவது, விமர்சிப்பது என்பது எழுதத் தொடங்குபவர்கள் கூட இணையத்தில் இயல்பாகச் செய்யக்கூடிய ஒன்று. பல வருடங்கள் பாடுபட்டு அவர்கள் தங்களுக்கென்று சேர்த்து வைத்துள்ள புகழ் வெளிச்சத்தை எழுதுபவர் இதன் மூலம் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயல்வது என்பதனைத் தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் எந்தப் பிரபல்யத்திற்கு வாழ்த்து செய்தி, கட்டுரைகள் எழுதினால் சம்பந்தப்பட்ட எவரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. 

இப்படியொரு கூட்டம் நம்மைக் கொண்டாடுகின்றது என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தெரியுமா? என்பதே ஆச்சரியம்.  காரணம் அவர்கள் உலகம் தனி. நம்முடைய வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத வாழ்க்கை வாழ்பவர்கள். அப்படி அவர்கள் வாழ்ந்தால் மட்டுமே அந்த வாழ்க்கையை அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதும் உண்மை.

ஒவ்வொரு அரசியல் பிரபல்யமும் இறந்து இறுதி ஊர்வலத்தின் எத்தனை லட்சம் மக்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சாவு போல அழுது தங்கள் துக்கத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகின்றார்கள் என்பதனை ஒவ்வொரு முறையும் நாம் பார்த்துக் கொண்டே தான் வருகின்றோம். ஆனால் இத்தனை லட்ச மக்கள் நம் அப்பாவை, நம் தலைவரைக் கொண்டாடும் அளவிற்கு இருக்கின்றார்களே, நாம் இனியாவது இவர்களுக்காக வாழ வேண்டும் என்று எந்த அரசியல் ஆளுமைகளாவது யோசித்து இருக்கின்றார்களா?  

அதே ஊழல். அதே பாதை.

நம்மை இத்தனை கோடி ரசிகர்கள் கொண்டாடுகின்றார்கள். நம்மிடம் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்துள்ளது? நாம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்? எந்தத் திரைப்பட பிரபல்யங்களாவது திரும்பச் செய்கின்றார்களா?

காரணம் அரசியல் குறித்துத் தெரியாது. வாழ்க்கை குறித்த உண்மையான புரிதல் தெரியாத மிகப் பெரிய ஜனத்திரளை நாம் புத்திசாலியாகவே பார்த்து வருகின்றோம்.  

நம்பவே முடியாத வித்தியாசங்கள் இங்கே இருப்பதற்குக் காரணமும் இதுவே.

அவரவர் உழைப்பின் மூலம் அடைந்த உயரம் என்பதனை வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அந்த உயரத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்னவாகப் போகின்றது என்பதனை இவர்கள் யாரும் உணர்வதே இல்லையே? இதையே தான் மக்களும் நம்புகின்றார்கள்? 

பின்தொடர்கின்றார்கள்? ஏமாற்றமடைகின்றார்கள். 

தமிழகத்தில் மட்டும் அடிப்படை வசதிகளே இல்லாத மக்களின் ஜனத் தொகை 40 சதவிகிதம் இன்னமும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வாக்கியத்தை வாசிக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட கட்சி சார்ந்து குறிப்பிட்ட முகம் சார்ந்தே நீங்கள் யோசிப்பீர்கள். நான் இதற்குப் பின்னால் உள்ள தெளிவான வலைப்பின்னல் அரசியல் குறித்தே யோசிப்பதுண்டு. 

ஒவ்வொரு பிரபல்யமும் இறக்கும் சமயத்தில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் போட்டுக் கொண்டு அஞ்சலி செலுத்துபவர்களைப் பார்த்து மனதிற்குள் வியந்துள்ளேன். இது என்ன புதுவிதமான மார்க்கெட்டிங் யுக்தி என்று பரிதாபப்பட்டுள்ளேன்.

நான் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலும் திரைப்பட பிரபல்யங்களை என் எழுத்தில் வலிந்து கொண்டு வந்தது இல்லை. திரை விமர்சனம் கூட மொத்தத்தில் பத்து அல்லது அதற்குக் கொஞ்சம் அதிகம் என்கிற அளவில் தான் எழுதியுள்ளேன்.  

அதே போலத் தமிழ் எழுத்தாளர்கள் வாழ்க்கையும் இப்படித்தான். அவர்களை நேரில் சந்திக்காத வரைக்கும் தான் உங்கள் மனதில் அவர்களைப் பற்றி உருவம் உங்களுக்குள் உன்னதமாக இருக்கும். சந்தித்து விட்டால் அதன் பிறகு மாற்றம் பெறும்.

என் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் பாலகுமாரன்.  

மிகப் பெரிய ஆச்சரியத்தை இன்று வரையிலும் தந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் சுஜாதா.  

இன்று எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் இவர்களின் பங்களிப்புண்டு.  

ஆனால் பாலகுமாரன் அவர்களுடன் நேரிடையாகப் பழகியவர்கள், அவரின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பற்றிச் சொன்னவர்கள் ஏராளமான பேர்கள் இருந்த போதிலும் என் மனம் மாறவே இல்லை.  

ஆனால் அவர் இறக்கும் தறுவாயில் சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அதி தீவிரமாகச் செயல்பட்டார்.  அவருடன் பேசிய பல எழுத்தாளர்கள் இலை மறை காயாகப் பலவற்றை அவர் வாழும் போதே எழுதினார்கள்.  

பாலகுமாரன் வாழ்நாள் முழுக்க நாலைந்து உருவமாகவே வாழ்ந்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம்.  கடைசியில் தன்னை தெய்வ வடிவமாக நிரூபிக்க முயன்று கேலிப் பொருளாக மாறி இறந்தார்.  

இதன் காரணமாகவே எழுத்துலகில் மார்க்கெட்டிங் என்பதனையும் வலிந்து கண்ட இடத்தில் முன்னிலைப்படுத்திக் கொள்வதும், நீ என்னைப் பற்றி எழுது, நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன் என்று ஒப்பந்தம் போட்டுச் செயல்பட்டவர்கள் அத்தனை பேர்களும் முடங்கி விட்டார்கள். முயலாமை கதை போலவே மாறிவிட்டது. தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிற சமூக வலைதளங்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நமக்கு அந்தப் பிரச்சனை இல்லை. 

தொடக்கம் முதலே தெளிவாகவே இருந்தேன். 

ஒரே பாதை. ஒரே நோக்கம்.  

நல்லது நிச்சயம் சென்று சேரும். தாமதமாக இருந்தாலும் அது சேர வேண்டிய இடத்தை நோக்கி அருவி போலப் பாய்ந்தோடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். 

நேற்று இரண்டு அதிசயம் நடந்தது.

ஒரு பிரபல இயக்குநரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் தம்பியொருவர் அழைத்தார். டாலர் நகரம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சில அத்தியாயங்களில் உள்ள வரிகளை வாசித்துச் சிலாகித்துப் பேசினார். அப்போது அவர் சொன்ன வாசகம் முக்கியமானது. 

"எவர் எல்லாம் எழுத்தாளர் என்று இங்கு நம்ப வைக்கப்பட்டு சந்தையில் இருக்கின்றார்களோ அவர்கள் சாதாரண வாசிப்பாளர்களுக்கு உரிய எழுத்தாளர்கள் அல்ல என்பதனை உங்களின் ஒவ்வொரு அத்தியாயமும் உணர்த்தியது.  ரத்தமும் சதையுமாக மனிதர்களின் வாழ்க்கையை, ஓர் ஊரின் வரலாற்றை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்" என்றார்.  

ஆனால் இந்தப் புத்தகம் அவரிடம் கடந்த ஆறு வருடமாகப் பரணில் இருந்தது. சென்னை வெள்ளப் பகுதிகள் செயல்பட விடாத சூழலில் தான் படிக்கவே தோன்றி என்னிடம் விமர்சனம் சொல்லும் அளவிற்குக் கொண்டு வந்து சேர்த்தது.

அடுத்து வந்த அழைப்பு ஆச்சரியமானது.

நாம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருக்கின்றோம் என்பதனை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியது. அதையும் எழுதி வைத்து விடலாம் என்று தோன்றியதால் இங்கே இதனைப் பதிவு செய்து விட எண்ணம் உருவானது.

திருப்பூரில் தான் அவரும் என்னைப் போலக் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இங்கே வாழ்ந்து வருகின்றார். மற்றொரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். என் எழுத்து மேல் அக்கறை கொண்டவர். அவரும் யூ டியூப் மூலம் பேசுங்கள் என்று நச்சரித்தவர்களில் ஒருவர். என் குரல்வழி பதிவுகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்.

நேற்று அவர் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் ஒரு திருமணத்திற்குச் சென்று உள்ளார்.  மணமகனும் திருப்பூரில் பணி புரிந்து கொண்டிருப்பவர்.  

திருமணத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகப்  பேராசிரியர் ஒருவரும் வந்துள்ளார்.  மாப்பிள்ளையிடம் "திருப்பூரில் பணி புரிகின்றாய் என்று தெரியும்? திருப்பூர் குறித்து உனக்கு முழுமையாகத் தெரியுமா"? என்று கேட்டுள்ளார். 

"இல்லை நான் அலுவலகத்தின் உள்ளே பிளானிங் மேனேஜர் பொறுப்பில் இருப்பதால் வீடு அலுவலகம் என்பதற்குள் என் வாழ்க்கை முடிந்து விட்டது. பத்து வருடமாக ஒரே நிறுவனத்தில் தான் பணியாற்றி வருகிறேன். வெளியுலகம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்ல "நான் ஓர் பரிசு தருகிறேன். பொக்கிஷமாக வைத்திரு. முக்கியமான பரிசு. வாழ்க்கை முழுக்க உனக்குப் பயன் அளிக்கும். தவறவிடாதே" என்று சொல்லிவிட்டு ஓர் அலங்கரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்று உள்ளார்.  

மணமகனுடன் உடன் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த என் நண்பருக்கு ஆச்சரியம்.  ஏதாவது வைரக்கல் மோதிரமாக இருக்குமோ? என்று எண்ணம் மனதிற்குக் குறுகுறுப்பாக உள்ளே ஓடிக் கொண்டிருக்க மாலை நேரத்தில் மாப்பிள்ளையும் என் நண்பரும் அவர் கொடுத்த பரிசினைத் தேடிக் கண்டுபிடித்துப் பிரித்துப் பார்த்துள்ளனர்.   உள்ளே என் டாலர் நகரம் புத்தகத்தை (பிடிஎப்) அப்படியே பிரிண்ட் எடுத்து ஸ்பைரல் பைண்டிங் போட்டு அதனைக் கச்சிதமாகப் புத்தக வடிவில் மாற்றி பரிசாக வழங்கி உள்ளார்,

சமூகம் குறித்துக் கவலைப்படாதே.  

ஒவ்வொரு காலத்திலும் சமூகத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். 

உனக்குப் பிடிக்கும், பிடிக்காது. வெறுக்கக்கூடியதாக இருக்கும். விரும்பக்கூடியதாக இருக்கலாம்.  

ஆதரி. ஆதரிக்காமல் அமைதியாக இரு. எதுவானாலும் உன் தரப்பு நியாயங்களை ஆவணப்படுத்து.

தேவையெனில் கொண்டாடப்படும். இல்லையெனில் காணாமல் போய்விடும். 

கோடிக்கணக்கான துகள்களில் நாமும் ஒருவர்.

அங்கீகாரம் தேடி வரும். வராவிட்டாலும் பரவாயில்லை. அமைதியான வாழ்க்கை வாழ்ந்து முடித்து விடு.

7 comments:

Unknown said...

"அதே ஊழல். அதே பாதை." எதற்காக மாறவேண்டும் . நாம் என்ன குப்பை கொட்டினாலும் அதை எடுத்து உச்சி முகர்வர்கள் இருக்கும் மட்டும். இதுதான் எந்த துறையில் புகழ் பெற்றவர் ஆயினும் நினைப்பது .

திண்டுக்கல் தனபாலன் said...

I'm in before 3000 (maybe +/-)

ஜோதிஜி said...

You are only one evergreen super star ⭐

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லது நிச்சயம் சென்று சேரும். தாமதமாக இருந்தாலும் அது சேர வேண்டிய இடத்தை நோக்கி அருவி போலப் பாய்ந்தோடும்
உண்மை ஐயா
வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அங்கீகாரத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து. முடிந்தவரை ஆவணப்படுத்துதல் என்பதானது மிகவும் சிறப்பாகும். பௌத்தம் தொடர்பான என் ஆய்வினை தத்துவம் அல்லது இலக்கியம் என்ற வகையில் அடிப்படையாகக்கொண்டு மிக எளிதாக முடித்துவிடலாம் என்று நினைத்தபோது முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் மற்றவர் செய்ததை சற்று மாறுபட்டோ/அடியொற்றியோ/மேம்படுத்தியோ செய்வதைவிட களப்பணி மூலமாக புதிய தரவுகளை வரலாற்றுக்கொணரலாம் வரலாற்றின் தேவையும் அதுதான் என்று கூறி என் ஆய்வின் போக்கை மாற்றினார். நான் இருக்குமிடத்திற்கு அருகே கலைக்கூடத்தில் இருந்த புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்பினை எடுக்க அங்கு செல்ல நான் ஒரு நாள் விடுப்பும் ரூ.20 செலவும் ஆனது. இது நடந்தது 1995இல். இது சாத்தியப்படாது. அலுவலக விடுப்பு, பொருளாதார நிலையில் நம்மால் முடியாது என நான் நினைத்தபோதிலும் வரலாற்றுக்கு புதிய பங்களிப்பினை அளிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆய்வினை களப்பணியில் மேற்கொண்டு, பட்டம்பெற்ற பின்னும், தொடர்கிறேன். இங்கு அங்கீகாரம் என்பதை இரண்டாம்பட்சமாகவே உணர்கிறேன்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

தமிழக மன்னர்கள் குறித்து குடவாயில் அய்யா எழுதிய புத்தகங்களில் எவையெல்லாம் முக்கியமானது. பட்டியல் தர முடியுமா?