Monday, November 16, 2020

இன்று சூரப்பா... நாளை காத்தப்பா...

தமிழகத்தில் முதல் முறையாக ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. பாரபட்சமில்லாமல் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். சுருதி சுத்தமாக ஒரே வாசகத்தை திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றார்கள். வெவ்வேறு விதமான பாணியில் பேசினாலும் கடைசியில் "சூரப்பா வெளியேறு" என்கிறார்கள். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையாக சூரப்பா தெரிகின்றார். 


"தமிழ்ப்பிள்ளைகளின் கல்லூரிப்படிப்பு அனைத்தும் இனி போய்விடும்" என்று அலறுகின்றார்கள். "தரம் என்ற வார்த்தை எங்களை ஏமாற்ற வந்தது" என்று குதியாட்டம் போடுகின்றார்கள். "தமிழர்களின் சொத்தை அபகரிக்க வந்த திருடன்" என்றே சூரப்பாவைக் கூச்சமில்லாமல் சொல்கின்றார்கள். சூரப்பா மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டு வந்து நுழைத்துள்ளார். இவர் சுயநலவாதி. தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பவர். 

லக்ஷ்மண் ரேகையைத் தாண்டிவிட்டார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவரைத் துரத்தியடிப்பதே நம் முதல் பணி என்று கோஷ்டி கானமாகக் கடந்த சில வாரங்களாகப் பேசிக் கொண்டேயிருக்கின்றார்கள். பல்கலைக்கழகம் அடுத்த கட்ட வளர்ச்சியை விட "அது எங்கள் சொத்து. எங்கள் உரிமை. எங்களுக்குரியது" என்கிறார்கள். இவரின் செயல்பாடுகள் அனைத்து தமிழ்ப்பிள்ளைகளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் நுழையவே முடியாத அளவிற்குச் செய்து விடும். இதுவரையிலும் தேடிச் சேர்த்து வைத்துள்ள இட ஒதுக்கீடு உரிமைகள் முதல் எளிய பிள்ளைகள் எளிதாகச் செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கும் வேலையைச் செய்து விடும் என்று அஞ்சுகின்றார்கள். 

சொல்பவர்கள் அனைவரும் யார்? 

இதற்கு முன்னால் இதே பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களில் இப்போது கோஷ்டி கானம் பாடுபவர்கள் அனைவரும் எப்படிச் செயல்பட்டார்கள்? 

1. இதுவரையிலும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பல துணைவேந்தர்கள் இருந்தார்கள்? எவராலும் சூரப்பா போன்று சர்ச்சைகளில் சிக்கவில்லை? இத்தனை எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை? என்ன காரணம்?

ஒரு பல்கலைக்கழகம் என்பது ஒரு மாநிலம் போன்ற அதிகாரம் உள்ள அமைப்பு. துணைவேந்தர் என்பவர் வானாளவிய அதிகாரம் படைத்தவர். ஆனால் இதுவரையிலும் (கடந்த 30 ஆண்டுகளில்) தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சாதி,பணம் இரண்டும் தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் முதல்முறையாக இது மாறியது. முதல் கோணல் இங்கிருந்து தொடங்கியது.  

முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை விட தாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுப்பதில் குறியாக இருந்தார்கள். தங்களுக்கு உதவியவர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட்டார்கள். இதன் காரணமாகத் "திருடனுக்குத் திருடன் எப்போதும் நண்பன்" என்ற கொள்கை பேசியது. இப்போது மாற்றம் பெற்றதால் இரண்டாவது கோணல் உருவானது.

பல்கலைக்கழகத்தில் நிர்வாக அமைப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் தினமும் பணம் சம்பாதிப்பதையே தங்கள் முழு நேரப் பணியாக வைத்திருந்தவர்கள் அனைவரும் தாங்கள் இனி வாங்கும் சம்பளத்திற்கு உழைக்க வேண்டும் என்ற சட்டத்தின் வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட பின்பு முழுமையான வட்டம் உருவானது.  இந்த வட்டத்திற்குள் இப்போது சூரப்பா நிறுத்தப்பட்டு இருக்கின்றார். ஆளுநர் - சூரப்பா - மத்திய அரசு என்ற கூட்டணியை உடைக்க இப்போது கலையரசன் என்ற நீதிமான் மூலம் மாநில அரசு யுத்தம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

2. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது முறையாகுமா?

கடந்த முப்பது ஆண்டுகளில் ஒவ்வொரு சமயத்திலும் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள் மாநில அரசின் உரிமைகளை தங்களின் சுயலாபங்களுக்காக மத்திய அரசிடம் தாரை வார்த்தார்கள். பல்வேறு அரசியல் காரணங்கள் அதற்குப் பின்னால் உள்ளது.  நீட் சரிதான் என்று கையெழுத்திட்ட மாபா பாண்டியராஜனை எவராவது அவர் வெளியே வரும் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க முடியுமா? 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிராக நான் வழக்குத் தொடுப்பேன் என்ற விஜயன் என்ன கதிக்கு ஆனார்? அதற்குப் பிறகு எவராவது அதனைப் பற்றிப் பேசினார்களா? 

3. சூரப்பா மகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி உள்ளே வந்தார்?

ஆறு மாதங்கள் ஏற்கனவே பணியாற்றி உள்ளே உள்ள இதற்கென நியமிக்கப்பட்ட கமிட்டி நபர்களின் பார்வைக்குச் சென்று, சட்ட விதிகளின், அவர்களின் ஒப்புதல் பெற்றுத் தான் பணியில் சேர்ந்துள்ளார். சரி இதில் சூரப்பா தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வாய்ப்புண்டு என்று தமிழக அரசு குற்றச்சாட்டு உண்மையென எடுத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் மாநில அரசு நினைத்தால் தடுத்து இருக்க முடியுமே? ஆனால் ஏற்கனவே 150 பேராசிரியர்கள் எவ்விதத் தகுதியுமின்றி நியமிக்கப்பட்ட உண்மைகள் வெளியே வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக விதிகளின் படி ஒரு பிரிவில் பணியாற்றியவர் மாற்றொரு பிரிவுக்குச் செல்ல முடியாது என்பதனை மீறி ஒருவர் இன்னமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அது பிரச்சனையாக மாறிய போது அரசின் சலுகை என்கிற போர்வைக்குள் அவரை இன்னமும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். (இணைப்பு கீழே)

4. கேரியர் அட்வான்ஸ் ஸ்கீம்?

இதுவரையிலும் நிரந்தரம் இல்லாமல் தினக்கூலி போலவே அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிப் பல பேராசிரியர்கள் மன உளைச்சலுடன் இருந்தவர்களுக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிரந்த ஆசிரியர்களாக சூரப்பா உருவாக்கிய சமாச்சாரம் பலரின் கண்களை உறுத்தி அதில் சூரப்பா ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்கள். காரணம் இதன் மூலம் பல நூறு கோடி பார்க்க வேண்டிய விசயத்தை எளிய முறையில் கண் இமைக்கும் நேரத்தில் முடித்த காரணத்தால் பலரும் கொலை வெறியில் உள்ளனர். ஏற்கனவே உதயச்சந்திரன் கல்வித்துறையில் இருந்து மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணமும் இதுவே. இவர் இஷ்டத்திற்கு எல்லா இடங்களிலும் இணையம் வழியே வெளிப்படைத்தன்மையை உருவாக்க பணம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறிவிட்டனர். இப்போது 3000 ஆண்டுகளுக்குப் பின்னால் உள்ளவற்றை ஆராய அனுப்பி விட்டனர்.

5, உருவாகப் போகும் மாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணம் உயரும்? ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்?

இதுவரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எவரும் கவனம் செலுத்தாமல் இருந்த விசயம் ஆராய்ச்சிப்படிப்பு, ஆராய்ச்சி சார்ந்த ஆய்வுகள், ஆராய்ச்சி உரிமைகள்.  முனைவர் பட்டமென்பது ரூபாய்க்கு நான்கு என்கிற ரீதியில் இருந்தது. இப்போது கல்வி என்பது உலகளாவிய போட்டியோடு தொடர்புடையது. ஆராய்ச்சி சார்ந்த படிப்பு என்பது என்பது வெறுமனே ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பது அல்ல. அதன் விளைவுகள், அதனால் உருவாக்கப்படும் விசயங்கள். அவை எந்த அளவுக்கு உலகில் பேசப்படக்கூடியதாக இருக்கும் என்பதனைப் பொறுத்துத் தான் ஒரு பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியல் மேலேறுவதும் கீழே இறங்குவதும்.  

இதற்கென உருவாக்கப்படும் துறைகள் சர்வதேசத் தரமென்பதை நம்மால் மறுக்க முடியாது. ஒதுக்கவும் கூடாது.  இதற்கென உலகம் முழுக்க முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்கள், மத்திய அரசின் கல்வி அமைச்சகம் மூலம் வழங்கப்படும் உதவித் தொகையும் வரக்கூடிய வாய்ப்பதிகம். இதன் மூலம் பெருந்தொகை (உத்தேசமாக வருடம் 350 கோடி) உள்ளே வரவழைக்க நாம் நம் பல்கலைக்கழகத் துறை சார்ந்த கட்டுமானத்தை மீளாய்வு செய்தே ஆக வேண்டும். அடுத்த கட்ட வளர்ச்சி செய்ய வேண்டிய ஆய்த்தப் பணிகளின் விளைவுகளை உடனே நாம் காண முடியாது. அடுத்து வரும் தலைமுறைகள் அதனை உணர்வார்கள். அனுபவிப்பார்கள்.  

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி துறைக்கென் கன்சல்டன்சி வைத்து அவர்கள் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றார்கள். அங்கு பயிலும் மாணவர்கள் இந்தக் கட்டணச் சுமையைச் சுமந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் இங்கு இது போன்ற ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய சூழலையும் எவரும் உருவாக்கவே இல்லை என்பதனை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

6. இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்?

தமிழக மாணவர்களுக்கென உண்டான சிறப்பு இட ஒதுக்கீடு என்பது மாநில அரசின் சட்டதிட்ட ஷரத்துகளில் ஒன்று. எந்தப் பல்கலைக்கழகம் என்றாலும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளை ஏற்றுத் தான் செயல்பட்டே ஆக வேண்டும். அதனை மீற முடியாது. மாற்ற முடியாது. மாற்ற வேண்டும் என்றால் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அது ஆட்சியில் இருப்பவர்களின் கைகளில் தான் உள்ளது. அரசின் நிதியுதவியைப் பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முறைப்படி செயல்படுத்தப்படுகின்றதா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

7. சூரப்பா ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் என்ன?

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் போன்ற அனைத்தும் இரண்டாம் பட்சமானது. முக்கியமானது அரியர் மாணவர்கள் விசயத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவை சூரப்பா எதிர்த்தார். மத்திய அரசின் துணையோடு அதனை முறியடித்தார் என்ற தமிழ்ப்பிள்கைளின் ஈகோ வை சீண்டிப் பார்த்த காரணமே இதற்குள் தலையாய பிரச்சனையாக உள்ளது.  

கோவை விவசாயக் கல்லூரி நிர்வாகம் குறித்து நண்பர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதையெல்லாம் வாசிக்கும் போது நம் தமிழ்ப்பிள்ளைகளுக்கு ஊழல் என்பது பெரிய சமாச்சாரம் அல்ல. அது இங்குள்ள அரசியல் வளர்ச்சிக்கான அடிப்படை அங்கம் என்பதனை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  சமீபத்தில் நந்தா (ஈரோடு) குழுமத்தில் ரெய்டு நடந்தது. எவரும் பேசவில்லை. பொது விவாதமாக மாறவில்லை. காரணம் இரண்டு கட்சிகளும் பங்குதாரராக இருக்கின்றார்கள். மேலே உள்ளவர்களும் நிறுத்தி வைத்துள்ளார்கள். கொள்கை என்கிற ரீதியில் வெவ்வேறு விதமாகக் காட்சியளிப்பவர்கள் கொள்ளை என்கிற ரீதியில் பங்குதாரராக இருப்பதால் சூரப்பா கண்ணில் விழுந்த தூசியாகவே இவர்களுக்குத் தெரிகின்றார்கள். மேலும் தமிழகத்தில் கல்வியென்பது மாபியா கும்பல் மூலம் நடத்தப்படும் மிகப் பெரிய வணிகம். இன்று சூரப்பா வந்து மாற்றுவதை அனுமதித்தால் நாளை காத்தப்பா வந்து நம்மை காத்தாட வைப்பார் என்று இவர்களுக்குத் தெரியாதா?

4 comments:

கிரி said...

அண்ணா பல்கலைக்கழகம் குறித்த தகவல்கள் குழப்பமாகவே உள்ளது. உங்கள் கட்டுரையில் தான் தெரிந்து கொண்டேன்.

இருப்பினும், இதை யாராவது சரியாகப் பொறுப்பில் உள்ளவர்கள், மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் இதைச் சரியாக முன்னெடுக்காதவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஸ்டாலின், சஸ்பெண்ட் செய்யணும் என்று திரும்ப கூறி இருக்கிறார்.

ஜோதிஜி said...

மத்திய அரசு உள்ளே நுழையாது. வேறு சில வேலைகள் நடக்கும். இன்னும் சில வாரங்களில் தெரியும். காத்திருக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கர்நாடகத்திற்கு இங்குள்ளவர்கள் செல்ல வேண்டும்... அவ்வளவே டர்-நாடகம்...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்கும் எதிலும் அரசியலே. இதிலும் அவ்வாறே.