Tuesday, September 28, 2010

ஆசை மரம்.

" இவனை நம்மால் அடக்கமுடியாது " என்று குடும்பத்தினர் ஓதுங்கியிருந்த போது தான் அக்கா மூலமாக மாமனார் என்ற தெய்வரூபம் என்னைத் தேடி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். என்னுடைய கொள்கைகள், நோக்கங்கள் அத்தனையும் புரிந்து கொண்டு மற்றொரு அப்பாவாக மாறினார். ஏற்கனவே நண்பர் சுட்டிக்காட்டியிருந்தபடி திருமணமும் திரைப்பட காட்சிகளைப் போலவே நடந்து முடிந்தது.

முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்கு பசிக்கும்? ஒருவருக்கு கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்கு கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்த சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாய பிம்பங்களையும் கலைத்துப் போட்டது.

சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது. காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர்.  முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்து கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது.  அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டுருந்தனர்.

தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்க பேரூந்தில் பயணித்து கண் எரிச்சலோடு அந்த அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரை குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி.......

வாடா........ எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?  

காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம்.  அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் மறுபடியும் பூதத்தை பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன்.  இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது. 

காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். உள்துறை அமைச்சரின் ஊரைத்தாண்டி உள்ளே நுழைந்தால் உங்களை இனிதே வரவேற்கும். பாலத்தை தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்த பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிகிறது. 

அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு கடைத்தெரு உள்ள ஒரு ஊர்.  அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன்,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்க காத்திருககும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க,  பழகிய எவரையும் இன்று காணவில்லை.

கற்பக விநாயகர் திருக்கோயில்.  எதிரே குளம்.  சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள்.  ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை.  தொட்டு தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை,   பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது.

தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில். சிறிய கோவிலைத்தாண்டி குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளில் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து வந்தால் சுத்தம் செய்யாத முடை நாற்றம். 

உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம்.  புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன். குழந்தைகளுக்கு கிடைத்த சுதந்திரத்தில் ஓ......வென்ற இரைச்சல் அந்த கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தை சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள்.  

மழை வரும் போல் இருக்கிறது.  மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்த பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன்.  பக்கத்தில் உள்ள அத்தனை கிராமங்களும் குடிநீர் எடுக்க கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது.
படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர்.  பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று கஞ்சி ஊத்தாத மருகளை அண்டிக் கொண்டு அடங்கி வாழ்ந்து கொண்டுருப்ப்தை கண்ணீருடன் பேசினார். குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு சமாளித்து கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன்.

தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டு சிருங்காரமாய் நிற்கிறது. தடவிப் பார்த்துக் கொண்டுருக்கின்றேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது. நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர்க் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையை தடவிப் பார்க்கின்றேன்.  தொடர்ச்சியாக குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது.  மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது.


ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தை கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஓட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூட போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்காடுகள் குடியிருப்புக்கு அளந்து கொண்டுருக்கிறார்கள்.  அருகே ரயில் நிலையம்.  மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காக சில பேர்கள் காத்துக் கொண்டுருக்கிறார்கள். பழகிய சில பெரியவர்களின் வாயில் இருந்து அளவான் புன்னகை.. ஆனால் பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ்.  எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம்.  

இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்து கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம்.  மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது.  அவர்கள் தொழில் நுடபகல்லூரிக்குள் நுழைய் தடமும் மாறிவிட்டது. 

ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாக கால்கள் வைத்து வேலி தாண்டிய வெள்ளாடு போல் வந்தால் அருகே உள்ள பூங்காவிற்குள் நுழையலாம்.  பழைய தகரங்களைக் கோர்த்து உள்ள நடுநாயக நடைமேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு.  குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தை தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன்.  கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம் அதில் இருக்க ஆசையுடன் பார்த்தேன்.

தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது.  என் பெயர் மட்டும் மெலிதாக தெரிந்தது.  அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருக்கிறார்கள்... 

47 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

அருமையான கொசு வத்தி சுத்தி இருக்கீங்க - இளமைக்காலம் மறகக் இயலாத காலம். ஒவ்வொரு நிகழ்வினையும் நினைத்து - காலங்களை ஒப்பு நோக்கி -பல் வேறு சிந்தனைகளில் உறவாடி - கண்னில் காணும் அத்தனையையும் ரசித்து - அசை போட்டு - ஆனந்தித்து - எழுத்துத் திறமையினை காட்டும் வண்ணம் இட்டிருக்கும் இடுகை நன்று. மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் ஜோதிஜி

நட்புடன் சீனா

கோவி.கண்ணன் said...

100க் கணக்கில் கவிதைகள் ஒளிந்திருக்கும் இந்த இடுகையாக நன்றாக வந்திருக்கிறது. எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்கும் கலை உங்களுக்கு நன்றாக வந்திருக்கிறது.

vinthaimanithan said...

வாவ்! நீங்கள் குறிப்பிட்ட கோயில்தேர்களில் நுணுக்கமாகச் செதுக்கி இருப்பார்களே சின்னச் சின்னதாய் சிற்பங்கள்..... அதுபோலவே சின்னச் சின்னதாய் வார்த்தைகளில் உளியெடுத்துச் செதுக்கி இருக்கின்றீர்கள்! "எண்ணிப் புள்ளி வைத்து இழை எடுத்துப் போட்ட கோலம்" என்று மாலன் கவிதையில் ஒரு வரி வரும்... அதுபோல இருக்கின்றது இன்றைய பதிவு! வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

சீனா ஐயாவுக்கு

உங்கள் வாழ்த்து எனக்கு பொக்கிஷம். நன்றி.

கண்ணன் அப்பாடா தப்பித்தேன் என்ற மன நிலை வந்தது. இந்த நடை தமிழ்மணம் செல்வராஜ் போலவே முயற்சித்து பார்த்த ஒன்று.

ஜோதிஜி said...

ராசா நீ சொல்றது புரிஞ்சது. இதில் எழுதிய பாதி விசயங்களை நீக்கி விட்டேன். ஏற்கனவே பெரிசுசுசுசுசுசுசுசு என்று நீட்டி முழங்கி விடுகிறார்கள்.

அப்புறம் உன்னுடைய வாசிப்பு அனுப்வம் ஒவ்வொரு முறையும் வியக்க வைத்துக் கொண்டுருக்கிறாய்.

அதே மாலன் அவர்கள் எழுதிய வீடு என்று எதைச் சொல்வீர் என்ற கவிதையை படித்துப் பார்.

வழிதவறிய வண்ணத்துப்பூச்சிகள் என்ற புத்தகம் தான் நான் கடைசியாக படித்த புத்தகம். அப்புறம் உள்ளே இருக்கிற பல புத்தகங்களுடன் மொத்தமாக வைத்து உள்ளேன். மறுபடியும் பரமபதம் வாழ்க்கை விளையாட்டில் மீண்டும் ஒரு நீண்ட ஓய்வு வரும் போது தொடரவேண்டும்.

நன்றி ராசா.

துளசி கோபால் said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.....
வாசிச்சு முடிச்சால் வியப்புதான் வருது.

என்ன ஒரு அழகான யதார்த்தமான நடை!

குழந்தைகள் வந்தபின் நம் வாழ்க்கை சுற்றிவருவதே அவர்களைத்தான்.

அடங்காதவரை அடக்கிவைக்க ஆண்டவன் அனுப்பும் ஆயுதம்:-)))))

ஜோதிஜி said...

அடங்காதவரை அடக்கிவைக்க ஆண்டவன் அனுப்பும் ஆயுதம்

நன்றி டீச்சர். சிரிக்க சிந்திக்க வைத்த வரிகள்.

குடுகுடுப்பை said...

புதுவயலோ?

சுடுதண்ணி said...

// பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ். எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம்.
//

:)))))

சொல்வதற்கு நிறைய இருந்தாலும், சொல்லாமலே நகர்கிறேன்.. காலார ஊரணிக்கரையில் நடந்து சென்ற உணர்வு..(காத்து வாங்க மட்டுமே... பாடம் படிக்க அல்ல)..


அந்தப் புகைப்படம் ஆயிரம் கதை சொல்லுகிறது...:)

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா...........!

நண்பா முதல் காதலா??? ஐ எனக்கு பிடிச்ச பாடம் ஆச்சே?? :) :) ......

நடுத்தர வயதில் உள்ள தென்னகத்து தமிழர்களெல்லாம் இத்தகைய நினைவலைகளை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்....
நல்ல கொண்டு போறீங்க நண்பா...
:) :) :)
அந்த முதல் காதல கொஞ்சம் விளக்கமா எழுதுவீங்கன்னு நம்பறேன்........ :) :)
அப்போதான் ஜோதி குள்ள இப்படி ஒரு கவிதையானு வியந்து போக வாய்ப்பு நெறைய இருக்கு
:) :)

Ravichandran Somu said...

அருமையான நினைவலைகள்... அட்டகாசமான எழுத்து நடை...

//இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்த சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாய பிம்பங்களையும் கலைத்துப் போட்டது.//

Excellent....

வாழ்த்துகள் நண்பரே...

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ஜோதிஜி said...

சொல்வதற்கு நிறைய இருந்தாலும், சொல்லாமலே நகர்கிறேன்

இந்த கவிதை வரிகளை ஹேமாவிற்கு அர்பணிக்கின்றேன்.

அப்போதான் ஜோதி குள்ள இப்படி ஒரு கவிதையானு வியந்து

மன்மத கடவுளே இப்படித்தான் ஹாலிவுட் பாலாக்கிட்ட உங்க கதையை எடுத்து விடுங்கன்னு கேட்டேன்.
அவரு நாமக்கல் போய்ச் சேர்றதுக்குள்ள மூச்சு வாங்கிடும்ன்னு சொல்லிட்டாரு. நம்ம இப்ப உள்ள நிலமையும் அப்படித்தான்.

உங்களுக்கு மட்டும் ஒரு கூடுதல் தகவல்.

அவங்களுக்கும் ரெட்டை புள்ளைங்க தான்(??????)

ஜோதிஜி said...

நன்றி ரவி

தமிழ் உதயன் said...

அருமையான மீள் நினைவு மீட்டல்

அது ஒரு கனாக் காலம் said...

சும்மா சொல்லக்கூடாது ... தூள் கிளப்பிட்டீங்க ..

அழகான , கோர்வையான நடை ... இது மாதிரி நிறைய எழுதுங்க. குழந்தைகள் எப்போதுமே தனி தான் , அதிலும் பெண் குழந்தை .... அவர்கள் தேவியின் மறு உருவம் தான்

தமிழ் உதயம் said...

இந்த சில மாதங்களில் எழுத்து நடை, எடுத்து கொள்ளும் கரு என்று எல்லாவற்றிலும் பிரமிக்க வைக்கிறிர்கள். எங்கேயோ துவங்கி, கச்சிதமாக வந்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்

தமிழ் உதயம் said...
This comment has been removed by the author.
Unknown said...

உங்கள் நினைவுகளோடு கைகோர்த்து நடந்து கொண்டிருக்கிறேன் இன்னும் மாறாத அதே கிராமத்தானாக வாழும் சிலரில் நீங்களும் ஒருவர். கண்முன் விரியும் காரைக்குடியின் வீதிகள்... விவரணையில் சொக்கிப் போய் மூன்றுமுறை வாசித்தேன்...

http://thavaru.blogspot.com/ said...

புனைவுகள் இல்லா உண்மை அபூர்வம். தங்களுடைய
புனைவுகள் இல்லா உண்மைக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள் ஜோதிஜி

Thomas Ruban said...

அருமையான யதார்த்தமான,கோர்வையான நடை கவிதையும் அருமை உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள பல விசியங்கள் இருக்கு... பகிர்வுக்கு நன்றி சார்...

பவள சங்கரி said...

தங்களுடைய வாழ்வியல் அனுபவங்களை, அழகு நடையில், சலிப்பில்லாமல் கொண்டு சென்ற விதம் அருமைங்க...... வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

//தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது. என் பெயர் மட்டும் மெலிதாக தெரிந்தது. அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருக்கிறார்கள்... //

இயற்கை என்றுமே சரியானதைத்தான் செய்யும் :))

இடுகை உங்ககூடவே ஊருக்கு வந்த மாதிரி இருந்தது..

எஸ்.கே said...

இளமைக் காலங்களை அதுவும் இப்படி விவரித்துள்ளீர்கள்!!! அது உங்கள் அனுபவமனாலும் எங்களுக்குள்ளும் உணர்வுகள்...

குருத்து said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

எண்ண ஓட்டத்தை அப்படியே எழுத்தாக்கும் கலை உங்களுக்கு...
பகிர்வுக்கு நன்றி.

Tamilmana natchaththiraththukku vazhththukkal.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நட்சத்திரப்பதிவு

Anonymous said...

சூப்பரா இருக்கு

Unknown said...

அழகான நாட்களை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.நல்ல நினைவுகள், எங்களையும் நினைக்க தூண்டி விட்டீர்கள்.

ஜோதிஜி said...

நந்தா ஆண்டாள் மகன்
ஆர் கே சதிஷ்குமார்
திருநாவுக்கரசு பழனிச்சாமி
சே குமார்
குருத்து
எஸ்கே
நித்திலம் சிப்பிக்குள் முத்து
தாமஸ்ரூபன்

சிலாகித்து வாசித்த உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு என் நன்றி மக்களே

ஜோதிஜி said...

இயற்கை என்றுமே சரியானதைத்தான் செய்யும் :))

தலைவா நைஸா உங்க நம்பிக்கையை கொண்டு வந்து சேர்த்து விட்டீங்க பார்த்தீர்களா? நீங்கள் சொல்வது உண்மைதானே சிவா. இயற்கை என்ற வார்த்தையில் சிலருக்கு சக்தி என்று போட்டுக் கொள்ளத் தோன்றும்.
நம்புபவர்களுக்கு சக்தி. நாதாரிகளுக்கு நித்தி.

தவறு

உங்கள் விமர்சனத்தை பலமுறை படித்து வியந்து போய்விட்டேன். செந்தில் நீங்கள் பாராட்ட வேண்டியது இவரைத்தான்.

தமிழ் உதயம்.

கண்ணதாசன், பாலகுமாரனை பெரும்பாலனவர்களுக்கு பிடிக்க காரணம் அவரின் தொடக்க திருவிளையாடல்கள். அந்த அனுபவத்தை பாடலாக எழுத்தாக மாற்ற வாய்ப்பு வந்த போது சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். இயல்பை மீறி வாழ நினைப்பவர்களுக்கு சில சமயம் இடுகை தான் அங்கீகாரம் கொடுக்கும் போலிருக்கு.

ஜோதிஜி said...

சுந்தர் நீங்கள் கொடுத்த முதல் விமர்சனத்தை இங்கு இன்று அணைவரும் படிக்கும இந்த நேரத்தில் பதிய வைக்க ஆசைப்படுகின்றேன். அதற்கும் இதற்கும் பெரிதான வித்யாசங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் எழுத்துலகின் முதல் தலைப்பு (அப்பாவாய் இருந்து பார்) உங்களின்

முதல் விமர்சனம் (ஜுலை 3 2009)

அருமையான நடை …நிறைய அனுபவங்கள் … எதையும் மறக்காமல் , நினைவு கூர்ந்து , அழகாக எழதுகிறீர்கள் … கடந்த துன்பங்களை , கசப்புடன் பார்க்காமல், … ஒரு படிப்பினை போல எடுத்துகொண்டது அபாரம்… நிச்சயமாக கோபம் இல்லை உங்கள் வார்த்தையில் …வாழ்த்துக்கள்

ஹேமா said...

ஓ..அவரா நீங்க !

கைப்பிடித்த குழந்தைகளோடு கடந்து வந்த கனாக்காலம்.காட்டாமல் மறைக்க அதன்மேல் அவர்கள் கையெழுத்து.இருங்க இருங்க....சொல்லிக் குடுக்கிறேன்.

அருமையா நினைவலைகளோட ஆரம்பிச்சிருக்கிறீங்க ஜோதிஜி.இயல்பான எழுத்தோடு கை கோர்த்து எங்களை இந்த வாரம்முழுதும் கூட்டிச் செல்லப்போகிறீர்கள் என்கிற ஆர்வம் இன்னும் இன்னும்.ஆட்டம் ஆரம்பம் !

ஜோதிஜி said...

ஹேமா என்னத்த சொல்லி என்னத்த கொடுத்து

உச்சி மேல் ஏறி ஆடு பாம்பேன்னு இப்ப மூணு பேர் ஆடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையில் இது போன்று நினைத்துப் பார்க்க இடுகை இருப்பதே மிகப் பெரிய வரப்பிரசாதம்.

ராஜ நடராஜன் said...

இரட்டையா!கொடுத்து வச்சிருக்கணும்!மகிழ்ச்சி!

மாதேவி said...

இனிய நினைவலைகள்.

வனம் said...

வணக்கம் ஜி

ஊர் நியாபகம் எல்லாம் கிளரிவிடும்......

முடியல!!!!

ஜெயந்தி said...

சிறுகதை படிச்ச மாதிரி இருந்துச்சு.

Unknown said...

பள்ளிக் காலம் எப்போதுமே ரசிக்ககூடியதுதான்.... அதை அழகாக கொடுத்திருக்கிறீர்கள்......அனுபவித்து படித்தேன்....

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

மகிழ்ச்சி என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடிவதில்லை. சிலசமயம் வரும் துன்பங்களையும்.

வாங்க மாதேவி. பெயரே வித்யாசம இருக்குங்க.

ஜெயந்தி நீங்கள் சொன்ன விமர்சனத்தைப் பார்த்து அதிஷா படித்தால் புரிந்து கொள்வார்.

வெண்புரவி அடேங்கப்பா பெயரைப் போலவே ரசனை மிகுந்தவராக இருப்பீங்க போலிருக்கு.

Geetha Ravichandran said...

கவிதை என்று சொல்லவா அல்லது எழுத்துச் சிற்பம் என்று சொல்லவா? முதலில் நுனிபுல் மேய்ந்தேன் பின் ஒரு முறை மென்று பார்த்தேன் , மீண்டும் ஒரு முறை அசை போட ஆரம்பித்தேன். சுவை கூடிக்கொண்டே இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் வாசகியாக இருந்து ஆதரிக்கும் உங்கள் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

கீதா விமர்சனத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதையைப் போலவே வெகு சிறப்பாக தர ஆரம்பித்து விட்டீர்கள். ரவி கொடுத்து வைத்தவர் தான்.

கண்ணகி said...

ஆசை மரத்தில் தினமும் புதிது புதிதாக துளிர்க்கின்றன...விழுகின்றன...எல்லோருக்கும்தான்..

தேவியர்கள் உங்களை நிறைய மாற்றி இருப்பார்கள் போல...

ரோஸ்விக் said...

முன்னாடியே படிச்சுப்புட்டு இவரு எந்த ஊரா இருக்கும்? புதுவயலா இருக்குமோ?-ன்னு நினைச்சுகிட்டே வேறவேலை பாக்கப் போயிட்டேன்.

அழகான இடுகை... நம் மனங்களைப்போல :-)

ஜோதிஜி said...

தேவியர்கள் உங்களை நிறைய மாற்றி இருப்பார்கள் போல...

உண்மை கண்ணகி.


அழகான இடுகை... நம் மனங்களைப்போல :-)


ரொம்ப நன்றி ராசா......

Rathnavel Natarajan said...

இந்த பதிவை இப்போது தான் படிக்கிறேன். பதிவும் அற்புதம். பின்னூட்டங்களும், உங்களது நண்பர்களும் மிகவும் அருமை.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Lakshmanan17 said...

எந்த புற்றில் எந்த பாம்போ எனும்படி மலைபோன்ற உணர்வுகளை மனதில் இருத்தி வெளியில் - பேச்சில் அப்புராணி தோற்றம் காணப்பெற்றால் குற்றம் உங்களுடையது இல்லைதான். பதிவுகள் வெளிப்பட நளினம் தேவை எக்கச்சக்கம்.

சரண்துரை said...

அண்ணே சிறு திருத்தம், கற்பகவிநாயகர் கோவில் அல்ல . கைலாச விநாயகர் கோவில் ...............