Sunday, April 26, 2020

மத்திய அரசின் (கொரானா) திட்டங்கள்


அந்த 42 நாட்கள் -  15
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

நேற்று எடப்பாடி கைகூப்பிக் கையேந்தினார். இன்று மோடி "நிதி உதவி தாருங்கள்" என்று கேட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது வரையிலும் பேரமைதி தான் மிச்சம். ஆனால் நடிகர் அட்சய குமார் 25 கோடி அளிக்கிறேன் என்று தொடங்கி வைத்துள்ளார். மற்றொருபுறம் ஆர்பிஐ உபரி நிதியை கை வைத்தது தவறு என்று அர்ச்சனையும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் எதிர்க்கட்சி, எதிர்க்கட்சிகள், எதிர்க்கும் கட்சிகள், விமர்சிக்கும் கட்சிகள் என்று ஏராளமுண்டு. இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். எடப்பாடி பந்தைக் கோல் நோக்கிப் போட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூடவே "மக்கள் கஷ்டப்படுவார்கள். நிதியுதவி 5000 ஆகச் சேர்த்துக் கொடுங்கள்" என்று அறிவுரை சொல்கின்றார்கள்.







இங்குள்ள நிதி நிலவரம் நம்மை விடச் சொல்பவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.  ஏற்கனவே தமிழர்களின் ஒவ்வொரு தலையிலும் 58 000 கடன் சுமை உள்ளது. கட்ட வேண்டிய வட்டிக்குக் கடன் வாங்கி வட்டி கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். வட்டி, வட்டி, மேலும் வட்டி. இது தான் இன்றைய தமிழக நிதி நிலவரம். இதனையும் கடந்த தமிழகம் நகரக்காரணம் குடிமகன்களின் ஒப்பற்ற உதவி. ஒவ்வொருவரும் தங்களை அழித்துக் கொண்டு தமிழக நிதி கஜானாவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போதை சூழலில் தேவைப்படுகின்ற அதிகப்படியான புதிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கூடுதல் சம்பளம், ஊக்கத் தொகை, ஒப்பந்த முறைகளில் மாற்றம் என்று கூடுதல் சுமையென்பது தமிழக அரசுக்குத் தலையில் சுமக்க முடியாத பாராமாக ஏறிக் கொண்டேயிருக்கின்றது. அனைத்தும் உடனடித் தேவை தான். ஆனால் கஜானாவில் இருக்க வேண்டுமே? ஊழல், லஞ்சம், பரஸ்பரம் பகிர்ந்து உண்ணுதல் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல?

சில தினங்களுக்கு முன்பு கொரானாவிற்கு என மாநில அரசாங்க செலவீனங்களுக்கு என் மோடி மொத்த நிதியாக 55000 கோடி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார். இது சிதறு தேங்காயில் சில்லு போலத்தான் மாநிலங்களுக்குக் கிடைக்கும். இங்கு இன்னமும் பணியில் இருக்கின்ற மருத்துவர்களுக்கு, சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவைப்படுகின்ற முகக் கவசம் கூட வாங்க முடியவில்லை. பணியில் இருக்கும் அனைவரும் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்றே ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

எடப்பாடி இன்று "9000 கோடி தேவை" என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். எங்கிருந்து கொடுப்பார்கள்? எப்போது பெறுவார்கள்? எப்படிச் சமாளிக்கப் போகின்றார்கள்? என்பது திகில் படச் சமாச்சாரம் போலவே தெரிகின்றது. மோடி அரசாங்கம் மட்டுமல்ல. மத்தியில் ஆளும் எந்த அரசாங்கமும் இதுவரையிலும் மாநில அரசுக்குக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகச் சரித்திரம் இல்லை. எப்பேர்ப்பட்ட இடர்கள் மாநிலத்தில் வந்தாலும் அவரவர் உருண்டு புரண்டு வர வேண்டியது தான். ஆனால் மாநில வருவாயிலிருந்து மத்திய அரசு மிகச் சரியாக எடுத்துக் கொள்ளும். இப்போது சொல்லவே வேண்டாம். மொத்த நிதி அதிகாரத்தில் முக்கால்வாசி மத்திய அரசாங்கத்திடம் தான் உள்ளது.

இந்தச் சமயத்தில் தான் வைரஸ் பகவான் தமிழகத்திற்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார்?

எப்படி வந்தார்? எப்போது வந்தார்?

முதல் தொற்று கடந்த ஏழாம் தேதி கண்டறியப்பட்டது.

ஓமனிலிருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்து டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்தவரிடம் உறுதி செய்யப்பட்டது. அயர்லாந்திலிருந்து வந்தவர், நியூசிலாந்திலிருந்து வந்த முதியவர், தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்தவர், ஸ்பெய்னிலிருந்து கோவை வந்த இளம் பெண், துபாயிலிருந்து வந்தவர், அமெரிக்காவிலிருந்து வந்தவர், லண்டனிலிருந்து வந்தவர், பிரிட்டனிலிருந்து கோவை வழியே திருப்பூர் வந்தவர், ஆனால் மதுரையைச் சேர்ந்தவர் இங்கு வந்து சேர்ந்தவரிடம் பெற்று சிகிச்சை பலனின்றி (54 வயது) இறந்தார்.

இதே போல 40 பேர்களைத் தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஒரு வருத்தமான விசயம் என்னவெனில் முதல் பத்து முதல் பதினைந்து பேர்களும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

அமெரிக்கா, லண்டன், தாய்லாந்து, இந்தோனேசியா என்று இவர்கள் வந்த பாதை முக்கியமானது. அதே போலப் பயணித்து வந்து சேர்ந்த பாதை சென்னை, கோவை, ஈரோடு, சேலம் என்று முடிகின்றது. கூடவே தமிழக பல்வேறு மாவட்டங்களில் சென்று சேர்கின்றது. இப்போது சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் பெருகியுள்ளது. கன்யாகுமரி மரணம் இன்று அறிவிப்பாக வந்துள்ளது. உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாகப் பிரித்துப் பிரித்துப் பார்க்கத் தலைச் சுற்றுகின்றது.

இந்தச் சூழலில் அடம் பிடிக்கும் கூட்டம் ஒரு பக்கம். அறிவுரைகள் சொல்லும் கூட்டம் மறுபக்கம். நோயைச் சமாளிப்பதை விட பரப்புபவர்களைச் சமாளிப்பது தான் பெரும்பாடாக உள்ளது. சொன்னாலும் புரிந்து கொள்ளவில்லை. லத்தி எடுத்தாலும் உரிமை மீறல் என்ற பிலாக்கணம் உரக்க ஒலிக்கின்றது.

மற்றொரு விசயம், ஒருவர் தன்னிடம் உள்ள தொற்று நோயைக் குறைந்த பட்சம், நான்கு பேர்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அது அப்படியே பல்கிப் பெருகுகின்றது. அவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை அறியாமல் பயணித்த, பழகிய நபர்களிடம் தானம் அளித்துள்ளார்கள்.

இன்று தமிழகத்தில் தொற்று உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தில் வந்து சேர்ந்துள்ளது. இரண்டாம் நிலையில் நாம் உள்ளோம். இது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ற நிலையில் எடுத்துக் கொண்டாலும் இது உண்மை நிலவரமல்ல என்பதை நாம் உணர முடியும். காரணம் இங்குள்ள சுகாதார உள் கட்டமைப்பு. ஜனத் தொகைப் பெருக்கம். வாய்ப்பே இல்லை.

எத்தனை பேர்களைச் சோதிக்க முடியும்? எத்தனை பேர்களைச் சோதித்து இருப்பார்கள்? தேவைப்படும் உபகரணங்கள் எந்த அளவுக்கு இங்கே உள்ளது? எத்தனை ஷிப்ட்களில் இங்கே பணியாற்றுகின்றார்கள்? போன்ற பல கேள்விகளுக்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்று மட்டுமே. அரசாங்கத்தால் முடியவே முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு அரசுக்குக் கூடுதல் சுமை அளிக்காமல் இருக்க முடியும்.

நான் ஏன் இப்போதுள்ள சூழலில் நிதியளித்து உதவ முடியும்? என்ற நியாயமான கேள்வியைப் போல நாம் அரசாங்கத்திற்கு உதவ ஒரே வாய்ப்பு வீட்டை விட்டுச் செல்லாமல், வீட்டுக்கு வருகின்றவர்களை அனுமதிக்காமல் வீட்டுச் சிறைவாசியாக அடுத்த இரண்டு வாரத்திற்கு இருக்க முடிவதே நம்மால் முடிகின்ற கடமை.

தமிழகத்தில் முதல்வர் நாற்காலியின் மேல் கண் வைத்துள்ளவர்களின் பட்டியல் நீளமானது. சிலர் மனதிற்குள் வைத்துள்ளனர். சிலர் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டுள்ளனர். பலர் நிச்சயம் காலம் வரும் என்று காத்திருக்கின்றார்கள். நமக்கு வாய்ப்பு மீண்டும் வராமல் போய் விடுமோ என்று பதட்டத்திலும் இருக்கின்றார்கள். ஆனால் மேலே சொன்ன அனைவரும் நெருக்கடியான சூழலில் அமைதியாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களில் ஒருவர் 50 கோடி, 80 கோடி, 100 கோடி சம்பளமாகப் பெறக்கூடிய வகையில் தமிழர்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயம் இது இவர்களின் உழைப்பு, திறமை. அவர்களுக்கு இருக்கும் சந்தை மதிப்பு. தவறில்லை. அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. வரி விலக்கு உண்டு என்கிற வகையில் அவர்கள் அரசாங்கத்திற்கு வரியாகக் கட்டும் பணத்தை இது போன்ற நெருக்கடியான சூழலில் திருப்பி விட முடியும். அவர்களுக்கு இரண்டு வகையில் லாபம் தான். ஆனால் மனமில்லை. ஆனால் தமிழகம், தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர்களின் அக்கறைக்கும் குறைவில்லை.

கொரானா கிருமியை நீங்கள் எத்தனை செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் கண்களால் பார்க்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல மக்களுடன் பழகாமல், மக்களுக்குத் துயரம் வரும் போது உதவ மனமில்லாமல் இருக்கும் வரைக்கும் வரையிலும் ஊடகங்கள் உங்களைத் தாங்கினாலும் மக்கள் இருப்பவர்களே எங்களுக்குப் போதும் என்ற நிலைக்கே வந்து நிற்பார்கள். நீங்கள் உணரக்கூடிய காலம் அருகே உள்ளது. மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் கனவுகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

காரணம் தமிழர்கள் சாதி, மதம் போன்றவற்றோடு உங்களையும் உணர்ச்சிப் பூர்வமாகப் பார்த்துப் பழகியவர்கள். உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த வைரஸ் பாடம் நடத்தி விட்டே செல்லும்.

கொரானாவுக்காக தெலுங்கு ஹீரோக்கள் லட்சத்தில் தொடங்கி கோடி வரைக்கும் அளித்து உதவி செய்வதாக அறிவிப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ளவர்களும் அடுத்த தினங்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவே நம்புவோம்.

இந்தியாவில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்கள் எங்களால் இவையெல்லாம் செய்ய முடியும்? செய்து தர முடியும்? என்று பட்டியலிட்டுள்ளனர். நடைமுறையில் எவையெல்லாம் சாத்தியம்? என்ன விளைவுகள் உருவாகும்? என்ன மாற்றங்கள் கிடைக்கும்? என்பது இன்னும் சில வாரங்களில் கிடைக்கும்.

ஆனால் விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லை. களைத்துப் போன அமைச்சர் விஜயபாஸ்கரின் சுறுசுறுப்பு குறைந்து இப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஊடகங்களிடம் பேசத் தொடங்கியுள்ளார். ஏராளமான கேள்விகள்? ஏராளமான எதிர்பார்ப்புகள்?

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடலாம்.

வளைகுடா நாட்டிலிருந்து 15 நாட்களுக்கு முன்பு சென்று வந்த ஒருவருக்கு இங்கு சில தினங்களுக்கு முன்பு தனக்கும் கொரானா வந்திருக்குமோ? என்ற சந்தேகம் வந்துள்ளது. அரசு மருத்துவமனை சென்று தகவலைச் சொல்லியுள்ளார். அவர் சொல்லி முடித்ததும் தான் தாமதம் அருகே கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பத்தடி பின்னால் சென்று விட்டு மற்ற விபரங்களை அதன் பிறகே கேட்டுக் குறித்துள்ளனர். உடனே கோவை அழைத்துச் சென்று உள்ளனர். அறிகுறிகள் இல்லை என்றதும் வீட்டில் இருக்க அறிவுறுத்தி நோட்டீஸ் உடனே அவர் வீட்டில் ஒட்டி விட்டனர். அவருக்குக் காய்ச்சல் குறையவில்லை. அதை விட மனைவி மகள்களை மாமனார் வீட்டுக்கு அனுப்பி விட்டு தனியாக மன உளைச்சலுடன் இருக்கின்றார். தனக்கு வந்துள்ளதா? இல்லையா? என்று உறுதியாகத் தெரியாத பட்சத்தில் இந்தச் சித்ரவதையை இன்னும் சில வாரங்களுக்கு அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அரசாங்கம் அடுத்த நபரிடம் சென்றுவிடுவார்கள். இவரிடம் பணம் இருப்பதால் அடிப்படை விசயங்களுக்குப் பிரச்சனை இல்லை. அடிப்படை வாழ்வாதாரம் ஆட்டம் காணக்கூடியவர்களுக்கு வந்திருக்கும் பட்சத்தில்? நரகம் தான்.

இன்று நான்காவது நாள். எந்த அளவுக்கு இப்போது விபரீதம் உள்ளது?

நாள் முழுக்க வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பெண்கள் நலக்கூட்டணியை மாலையில் ஒரு மணி நேரம் என்று குறிப்பிட்ட நேரத்தில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சந்தில் எண்ணிக்கை சொல்லி மிதிவண்டி ஓட்டவும், ஓட்டப்பந்தயம் வைத்தும் போட்டி நடத்துவதுண்டு. இந்தப் பகுதியில் உள்ள காவல்துறையினர் காலை மாலை இருவேளையும் ரோந்துப் பணியின் பொருட்டு வந்து கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்துக் கொண்டே செல்வார்கள்.

இன்று என்னிடம் நிறுத்தி "சார் தவறுதலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அரசு நிறைய அழுத்தம் கொடுக்கின்றது. நாளை முதல் வீட்டுக்குள்ளே பயிற்சி கொடுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.



28/03/2020

காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.

No comments: