Monday, April 20, 2020

தும்மினால் தொற்றுவேன். தொட்டால் தொடர்வேன்.

அந்த 42 நாட்கள் -  4
Corona Virus 2020


மருத்துவர்கள் நுண்ணோக்கி வழியாகப் பார்த்த போது இந்த வைரஸ் பார்ப்பதற்குக் கூர்முனைகளுடன் அதன் வைரஸ் சுவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்படுகிறதாம். பார்ப்பதற்குக் கீரிடம் மின்னுவது போல இருப்பதால் (கொரோனா - லத்தீன் மொழியில் கீரிடம்) அதற்குக் கொரோனா வைரஸ் என்று பெயரிட்டு உள்ளனர். 

டிஎன்ஏ வகை வைரஸ்கள், ஆர்என்ஏ வகை வைரஸ்கள் என பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள் உலகில் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றித் தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் ஆர்என்ஏ வகை வைரஸ்கள் அப்படி கிடையாது. இந்த வைரஸ் ஏ என்ற நபரிலிருந்து பி என்ற நபருக்குப் பரவும் போது அதன் ஆர்என்ஏ அமைப்பு மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது அந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.இதனால்தான் ஆர்என்ஏ வகை வைரஸ்களுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கக் கடினமாக உள்ளது. ஆர்என்ஏ வகை வைரஸ்கள் எப்போது உருமாறும், எப்படி தன்னுடைய செல்களை மாற்றிக்கொள்ளும், எப்போது வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது.




சீனாவில் வூஹானில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா சென்ற பின் கொஞ்சம் உருமாற்றம் அடைந்துள்ளது. சீனாவில் இருக்கும் கொரோனாவின் தோற்றமும், அமெரிக்காவில், ஐரோப்பாவில் பரவும் கொரோனாவின் தோற்றமும் ஒரே மாதிரி இல்லை. இதில் சில விஷயங்கள் மாறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஆர்என்ஏ வைரஸ் தன்னை அப்டேட் செய்து கொள்வதை Mutation என்று அழைப்பார்கள்.

கொரோனா வைரஸ் இப்படித்தான் mutate ஆகிக்கொண்டே இருக்கிறது. தற்போது வரை 4 வகையில் இந்தக் கொரோனா வைரஸ் mutate ஆகியுள்ளது. அதன்படி சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வகை 1, அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டமில் பரவி வரும் வைரஸ் வகை 2, ஈரான் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வரும் வைரஸ் வகை மூன்று, இத்தாலி, ஸ்பெயினில் பரவி வரும் வைரஸ் வகை 4 ஆகும்.

கொரோனா வைரஸ் ஓரிழை ஆர். என். ஏ வை கொண்டுள்ளது. 

இதன் கூர்முனைக் கால்கள் போன்ற பகுதி நம் உடம்பிற்குள் நுழைந்ததும் நம் செல்களுடன் பிணைக்கப்பட்டு விடுகிறது. பிறகு இது ஆர்.என்.ஏ மற்றும் சில நொதிகள் மூலம் செல்லின் மூலக்கூறு இயந்திரங்களைப் பயன்படுத்தி வைரஸ்களை பல மடங்காகப் பெருக்க ஆரம்பிக்கின்றன. இப்படியே ஒரு செல்லாகப் பரவிப் பரவி மற்ற செல்களையும் பாதிக்கிறது. இப்படி இந்த வைரஸ்கள் நம்முள் சுழற்சி செய்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது பரப்பி வரும் கொரோனா வைரஸ் இதேபோன்ற ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இதனால் இதை டெஸ்ட் செய்வதும், அதற்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதும் மிக மிகக் கடினமாக இருக்கிறது. இந்தக் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆர்என்ஏவில் உருமாற்றம் அடைந்து அப்டேட் ஆகிறது. அதாவது இந்த வைரஸின் உட்பகுதியில் இருக்கும் புரதங்கள், அதன் வடிவங்கள், செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைகிறது.

உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.

தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்குச் சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.

ஆரம்பக் கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.

நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.

லேசான நோய். ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும். கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டுப் பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன. உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது. காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும். 

இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாகச் செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும். சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்கும்.

இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும். உங்கள் வாயிலிருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும். அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்ஸிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும். சிலருக்குச் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.

ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்குக் குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும். நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.

இந்தச் சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது

கொரானா - குற்றச்சாட்டுகள் 3

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சற்று முன் புதுக்கோட்டையில் முதன்முறையாக...

இங்கு புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகே இருவருக்கு...

செய்திகளின் அடிப்படையில், இரு வாரமாக அதிக தொற்று, ஞாயிறு திங்கள் கிழமைகளில்...

Yaathoramani.blogspot.com said...

அறியாதன அறிந்தோம்..தொடர வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அறிவியல் குறித்து அதன் ஆழம் குறித்து அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். என்ன சொன்னாலும் அவர்களுக்கு புரிவதே இல்லை. நான் இப்போது பேசுவதே இல்லை. கூட்டமாக இருந்தாலும் அமைதியாக ஒதுங்கி கூட்டம் கலையும் வரைக்கும் காத்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

நன்றி நன்றி

எஸ் சம்பத் said...

வரலாறு முக்கியம் அமைச்சரே என்பதற்கிணங்க நாட்குறிப்பு போல் செய்திகளை தொடராக தொகுத்துள்ளீர்கள். நிச்சயமாக பத்திரிகையாளர்கள் சேமித்து வைத்துக் கொண்டால் அவர்கள் பணிக்கு உதவியாக இருக்கும்..அடுத்த மின் புத்தகம் ரெடியாகிறது..