Thursday, April 30, 2020

ஐ போனுக்கு விலைபோன அரசு மருத்துவர்..! கொரோனா அச்சத்தில் 300 பேர்

அந்த 42 நாட்கள் -  24
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

மின்னம்பலம் தளத்தில் வந்துள்ள செய்தியிது.

//////////////////

சென்னை பர்மா பஜாரின் கிங் என்று வர்ணிக்கப்பட்ட வியாபாரி ஜமால் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி காலமானார். 70 வயதான ஜமாலின் சொந்த ஊர் கீழக்கரை என்பதால், அவரது உடலை கீழக்கரை கொண்டு சென்று அங்கே மத முறையின்படி, அடக்கம் செய்தனர். இறுதி ஊர்வலத்திலும், நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவு பாசிட்டிவ் என வந்திருப்பதால், அவரது குடும்பத்தினர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் என்று பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்த ஜமால், வணிகர்கள் வட்டாரத்திலும் சென்னை ஏர்போர்ட் வட்டாரத்திலும் பீலி ஜமால் என்று புகழ் பெற்றவர். சுறா போன்ற பெரிய வகை மீன்களின் இறக்கைகளை மட்டுமே ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வந்தார் ஜமால். இந்த மீன் இறக்கைகளுக்கு பீலி என்று பெயர். அதனால் ஜமாலுக்கு பீலி ஜமால் என்றுதான் பெயர். காவல்துறை, கஸ்டம்ஸ்,. விமான நிலைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று அனைத்துத் தரப்பினரிடத்திலும் செல்வாக்கு பெற்றவர். அதிமுக அனுதாபியான பீலி ஜமாலுக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் நெருக்கமானவர்,. ராமநாதபுரம் அதிமுகவிலும் பலர் இவருக்கு நெருக்கமானவர்கள். பல உயரதிகாரிகளுக்கு தன் அன்புப் பரிசாக வெளிநாட்டு பாட்டில்களை தாராளமாகக் கொடுப்பார் ஜமால் என்கிறார்கள். ரம்ஜான் அன்று ஜமாலுக்கு வேண்டிய அதிகாரிகள் வீட்டுக்கு காலை 10 மணிக்கே சுடச் சுட பிரியாணி அனுப்பி வைக்கப்படும். அந்த அளவுக்கு தனது நட்பு வட்டத்தை பேணி காத்தவர் ஜமால்.

கடந்த 15 ஆம் தேதி துபாய் சென்று வந்தார் ஜமால். அதையடுத்து சென்னை மண்ணடியில் கோரல் மெர்ச்சண்ட் தெருவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி. வீட்டுத் தனிமையில் இருந்த ஜமால் மூச்சுத் திணறலுக்காக மார்ச் 27 ஆம் தேதி விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேரச் சொல்லியுள்ளார்கள். பின் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஜமால். மூச்சுத் திணறல், வெளிநாட்டுப் பயணம் என்பதை வைத்து ஜமாலுக்கு கொரோனா சோதனை செய்துள்ளார்கள் ஸ்டான்லி மருத்துவமனையில். அவரது ரத்த, சளி மாதிரி கொரோனா டெஸ்டுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் ஜமால் காலமானார். உடனடியாக அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு ஜமாலுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கும் அதிகாரிகள் செல்வாக்கும் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தன. ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருந்தவர், வெளிநாட்டில் இருந்து வந்தவர், மூச்சுத் திணறலால் அட்மிட் செய்யப்பட்டவர், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு முடிவு இன்னும் வரவில்லை...என முழுக்க முழுக்க சந்தேகத்துக்கு இடமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி (ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது கை ரேகை வாங்கினாரே அதே டாக்டர்தான்) ஜமாலின் உடலை அவரது சொந்த ஊரான கீழக்கரையில் கொண்டு சென்று அடக்கம் செய்யவும் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தே அனுமதி கொடுத்திருக்கிறார். இறந்த ஜமாலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி, அதோடு அவரது குடும்பத்தினர் 10 பேர் கீழக்கரை செல்வதற்கு ஒரு மாருதி ஈகோ, ஒரு இன்னோவா காரில் செல்வதற்கு ஸ்டான்லி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதியே கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து ஜமாலின் உடல் 2 ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து கீழ்க்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னையில் இருந்து அவரது உடல் கீழக்கரைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குள் மூன்று ஆம்புலன்ஸுகளில் மாற்றப்பட்டிருக்கிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமே உறுதிப்படுத்தியிருக்கிறது. அதாவது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து உளுந்தூர் பேட்டை வரை ஒரு ஆம்புலன்ஸ், அங்கிருந்து புதுக்கோட்டை வரை இன்னொரு ஆம்புலன்ஸ்... அங்கிருந்து கீழக்கரை வரை மூன்றாவது ஆம்புலன்ஸ். உளுந்தூர் பேட்டை, புதுக்கோட்டை என இரு இடங்களிலும் உடல் ஒரு ஆம்புலன்ஸில் இருந்து இன்னொரு ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டபோது உடல் முறையாக கையாளப்படவில்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை மேலிடத்துக்கு அனுப்பிய அறிக்கையே தெரிவிக்கிறது. ஜமாலின் உடலோடு கியாசுதீன் என்பவர் உட்கார்ந்து கீழக்கரை வரை சென்றுள்ளார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஜமாலின் உடல் கீழக்கரை எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டு அன்று காலை 10 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு பள்ளிவாசலுக்கு உட்பட்ட அடக்கத் தலத்தில் அடக்கம் செய்யப்படடது. ஜமால் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி நிகழ்விலும் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டார்கள். தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மணிகண்டன், அவரது தந்தை முருகேசன் உள்ளிட்ட சுமார் 300 பேர் ஜமாலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவுதான் ஜமால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சோதனை முடிவுகள் வெளிவந்தன. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது. இதன் பின் பதற்றமான ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ஜமால் குடும்பத்தினர், ஜமாலின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர்கள், ஜமால் உடலோடு ஆம்புலன்ஸில் உட்கார்ந்து வந்த கியாசுதீன், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் என அனைவரையும் தேடத் தொடங்கிவிட்டனர்.

ஏப்ரல் 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை சென்னைக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், “கீழக்கரை டவுனே மூடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஜமால் உடல் கீழக்கரை மசூதியில் வைக்கப்பட்டு குளிப்பாட்டப்பட்டு மதச் சடங்குகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் டிரைவரை தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது. ஜமாலின் குடும்பத்தினர் உட்பட்ட ஒட்டுமொத்த கீழக்கரையும் லாக் செய்யப்பட்டிருக்கிறது. மசூதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே கீழக்கரை பள்ளிவாசல் சார்பாக, ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடந்த விஷயத்தை எல்லாம் எடுத்துச் சொல்லி, ஜமாலுக்காக இறுதித் தொழுகை செய்தவர்கள், உடலைக் குளிப்பாட்டியவர்கள், உடலைத் தூக்கியவர்கள் எல்லாம் பள்ளிவாசலுக்கு அருகே இருக்கும் சுகாதார ஆய்வாளரிடம் வந்து சோதனை செய்துகொள்ளும்படி தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது.

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், “ கொரோனா நோய்தொற்று முடிவு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியத்தாலும் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. சந்தேகிக்கப்பட்டு பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்த நிலையில் முடிவு வருவதற்கு முன்பே, உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறி உடலை ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம் செய்த மிகப் பெரிய தவறு.

தற்போது நோய்தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் அவரது இறுதி நல்லடக்கத்தில் உடல்நலக்குறைவால் இறந்தவர் என்று எதார்த்தமாக

பங்கேற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அனைவரும் தற்போது பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த முடிவினை உடனடியாக அறிவித்திருந்தால் இது போன்ற அச்சம் ஏற்பட்டிருக்காது. அல்லது முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாத்து முடிவு வந்ததற்கு பிறகு ஒப்படைத்து இருக்க வேண்டும்.

அப்படி செய்து இருந்தால் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப் பட்டிருக்கும். இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்து இருப்பார்கள்.

அதனை செய்யாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இந்த பேரிடர் காலகட்டத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவறை நிகழ்த்தி விட்டார்கள். கொரோனா நோய்தொற்று விஷயத்தில் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கும் பொழுது மெத்தனப் போக்குடன் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று பரிசோதனை முடிவுகளை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.

இது மிகப்பெரிய அலட்சியம். இந்த அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் இதற்காக நாம் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்திருக்கிறார் நவாஸ் கனி எம்.பி. .

தனிமைப்படுத்தப்பட்ட, கொரோனோ சோதனைக்கு மாதிரி அனுப்பப்பட்டவர் இறந்த நிலையில். அவரது உடலை எடுத்துச் செல்ல அனுமதித்த ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் செய்த தவறால் இன்று ஒட்டுமொத்த கீழக்கரையும் பீதியில் இருக்கிறதுஏப்ரல் 5 - 9 மணி 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

ஜோதிஜி said...

மறக்காமல் ஒவ்வொரு பதிவுக்கும் இது போன்ற பொருத்தமான பாடல்களை பின்னூட்டத்தில் கொடுத்துக் கொண்டே வரவும். வாசிப்பவர்களுக்கு ஒப்பிட்டுப் பார்த்து சுவராசியமாக வாசிக்க முடியும்.