Saturday, April 25, 2020

நிதி தாருங்கள் மக்களே.....


அந்த 42 நாட்கள் -  14
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு மயில்கள், அணில்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் வைத்துள்ள உணவை உண்பதற்காகக் காலை மாலை இருவேளையும் தவறாமல் வந்து விடுவார்கள். வைத்துள்ள தண்ணீரையும் குடித்து ரொமான்ஸ் மூடில் பேசிக் கொண்டிருப்பார்கள். மதிய வேளையில் அவர்களின் சொந்த பந்தங்கள் ஒன்றிரண்டு பேர்கள் வருவதைப் பார்த்துள்ளேன். ஆனால் இப்போது கூட்டம் அதிகமாகியுள்ளது. அரிசி, கோதுமை போட்டு மாளமுடியவில்லை. அரிசியுடன் கோதுமையைக் கலந்து வைத்தால் கூட அரிசியை ஒதுக்கி வைத்து விட்டு கோதுமையை மட்டுமே உண்கிறார்கள். தண்ணீர் இருமுறை வைக்க வேண்டியுள்ளது. 



பூஞ்சை காளான் தண்ணீரில் படர்ந்திருந்தால் கோபமாக நம்மைப் பார்க்கின்றார்கள். அவர்களும் மனிதர்களைப் போலவே மினரல் வாட்டர் கலாச்சாரத்திற்கு மாறியதை உணர்ந்து அந்தப் பொறுப்பைத் தனி இலாகாவாக நான் எடுத்துக் கொண்டுள்ளேன்.

சுதந்திரமாக வருகின்றார்கள். சுகவாசியாக மாறிவிட்டார்கள். "பெண்கள் நலக் கூட்டணி" எதிர்க்கட்சியாக மாறிவிட்டார்கள். "முன்பு மூன்று கைப்பிடி அளவுக்குப் போட்டால் போதுமானதாக இருந்தது. இப்போது டப்பா நிறைய நிரப்பி வைத்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் காணாமல் போய்விடுகின்றது. நீங்கள் நிறையச் செல்லம் கொடுக்குறீங்க" என்று என் மேல் பாய்கின்றார்கள்.

ஆனால் மனிதர்கள் தாயம் ஆடி, கேரம் போர்டு விளையாட்டு முடித்து, நடைபயிற்சி, உடற்பயிற்சி, மிதிவண்டி ஒட்டி, வாகனங்களைத் துடைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, புத்தகங்கள் படித்து, மதியம் குட்டித் தூக்கம் போட்டு, விரும்பிய படங்களைப் பார்த்து முடித்து, பழைய செய்தித்தாள்களை மீண்டும் படித்து முடித்தாலும் இரவில் தூக்கம் வராமல் தடுமாறுகின்றார்கள்.

செய்தித்தாள்கள் போடும் பையன் நேற்றைய முன்தினம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். "அண்ணா பசங்க பயப்படுகிறார்கள். இனி பிரச்சனை முடியும் வரைக்கும் வராது" என்று இறுதி அறிக்கை வழங்கிவிட்டார்கள். தினமலர் ஒரு பக்கத்திற்கு விளம்பரம் கொடுத்து "நாங்கள் ரொம்ப ஆச்சாரம்" என்று கதறிப் பார்த்தார்கள்.

முகவர்கள் "அய்யா சாமி உயிர் முக்கியம்" என்று கண்டு கொள்ளவில்லை. தினமலருக்குச் சத்திய சோதனை. காண்டாகிவிட்டார்கள். இதற்கிடையே காவல்துறை கவனித்த கவனிப்பில் மிச்சமிருந்து பேப்பர் போடும் பசங்களும் காணாமல் போய்விட அடுத்த நாளே "யாருக்கு இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது. அடிக்கவா காவல்துறை?" என்று கொட்டை எழுத்தில் பொங்கித் தீர்த்து விட்டார்கள்.

பால்காரர் வருகின்றார். தலையில் ஒரு முண்டாசு. முகத்தில் கண்கள் மட்டுமே தெரியுமளவுக்குச் சிறப்பு முகமூடி. கையில் உரை. விண்வெளி வீரர் போலவே வந்து பால் ஊற்றுகின்றார். பயத்தில் சபாநாயகரிடம் சொல்லிப் பார்த்தேன். "நாம் ஏன் பத்து நாளைக்குத் தியாகம் செய்யக்கூடாது?" என்று கேட்ட போது அவர் "தனி மனித வருமானம் குறித்து, இழப்பு குறித்து சீனாதானா போலப் பொருளாதாரப் பாடம்" நடத்தினார். நமக்குக் கணக்கு எந்தக்காலத்தில் புரிந்துள்ளது. "நீ சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கும்" என்றேன். பின்னால் இருந்து கூட்டணியினர் சப்தம் போட்டுச் சிரிக்கின்றார்கள்.

சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ 120 ரூபாய். அவரும் விண்வெளி வீரர் போலவே வந்தார். "திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாளை முதல் நம் உழவர் சந்தையில் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளார். நாளை வாங்கி வருகிறேன். எவரிடமும் வாங்க வேண்டாம்" என்றாலும் எடுபடவில்லை. சந்தில் உள்ள எந்தப் பெண்களும் தொற்று குறித்துப் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்.

தனி மனிதர்களின் வாழ்க்கை தான் இப்படியுள்ளது என்றால் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் மகானுபாவர்கள் அனைவரையும் பார்க்கும் போது பரிதாப ஜீவன்களாகத் தெரிகின்றார்கள்.

இந்தியாவில் இப்போது தினமும் உலையில் இருக்கும் சட்டி போலக் கொதித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மட்டுமே.

பதவி கிடைக்காதவர்கள், கிடைத்த பதவியை இழந்தவர்கள் இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு அவஸ்தை இருந்தாலும் ஒவ்வொரு முதலமைச்சர்களும் முழுகும் கப்பலில் பயணிக்கும் பயணி போலவே அபயக்குரல் எழுப்புகின்றார்கள். 

அன்பாய் சொல்லிப் பார்த்தாகிவிட்டது. அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்லியாகிவிட்டது. நடிகர்களை விட்டுப் பேசச் சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை. காரணம் மக்களின் செயல்பாடுகள் அவர்களைப் படாய் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. எங்கேயிருந்து வருகின்றார்கள்? எப்போது வருவார்கள்? என்பதனை யூகிக்க முடியாத அளவிற்குக் கிலியை உருவாக்குகின்றார்கள். காவல்துறை முட்டி போட வைத்து, ஜட்டியோடு நிற்க வைத்தாலும் அடுத்த அணி அணிவகுத்து வந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

உச்சக்கட்டமாகத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் "இராணுவத்தை வரவழைக்கப் போகிறேன். வெளியே சுற்றுபவர்களைப் பார்த்தால் கண்டதும் சுட உத்தரவிடப் போகின்றேன்" என்று பொங்கித் தீர்த்து விட்டார்.

ஆனால் மூன்றாவது நாளான இன்று ஒப்பீட்டளவில் பயணங்கள் குறைந்துள்ளது. சாலைகள் நிசப்தமாக மாறியுள்ளது. காற்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது. பறவையினங்கள் முழுச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றது. புகையில்லை. எரிபொருள் தேவை குறைந்துள்ளது. அந்நிய செலாவணி மிச்சமாகியுள்ளது. ஜிடிபி இரண்டு சதவிகிதம் அடிவாங்கும் என்று பயமுறுத்தினாலும் இழப்பு இல்லாமல் மீண்டு வந்தாலே போதுமானதாக இருக்கும் போல.

இயற்கை கடந்த சில நாட்களில் தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது. பூமிப் பந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு புத்தாடை அணிந்துள்ளது. உயிரினங்கள் உயிர்பயமின்றி உலாவுகின்றது. நகர்ப்புறங்களின் உள்ளடங்கிய ஒவ்வொரு சந்திலும் நடமாட்டம் இல்லை என்கிற அளவிற்கு மாறியுள்ளது.

இன்று தான் எடப்பாடி திருவாய் மலர்ந்துள்ளார். "நிதி தாருங்கள். கொரானா எதிர்ப்புக்கு நிதி அளிங்க" என்று அறிக்கை விட்டுள்ளார். ஆனால் இது இப்போது அர்ஜுன் வடிவேலைப் பார்த்துச் சொன்ன "சிரிப்பு போலிஸ்" கதையாகவே போய்விடும் வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் ரேசன் கடைசியில் போய் நிற்க வேண்டியிருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களிடம் போய் "அய்யா நிதி தாருங்கள்?" என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் தருவார்கள்?

எடப்பாடி அவர்களுக்கு இப்போது ஆலோசனை சொல்ல அருகே எவரும் செல்ல வாய்ப்பில்லை சமூக விலக்கத்தின் பொருட்டு விலகி நிற்பார்கள் என்றே நினைகிறேன். அவருக்கு என்னால் சில ஆலோசனைகள் சொல்ல முடியும். அவர் இதனைப் பின்பற்றினாலே அவர் எதிர்பார்க்காத அளவுக்குப் பலமுனைகளிலிருந்தும் நிதி வந்து குவிய வாய்ப்புள்ளது.

144 தடையுத்தரவு நாளை மாலை ஆறு மணிக்குத் தொடங்குகின்றது என்று முதல் நாள் அறிவித்தார். ஆனால் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் தமிழக மக்களின் தாகசாந்தி தீர்க்க எந்த அளவுக்குப் பொறுப்புணர்வுடன் டாஸ்மாக் செயல்பட்டுள்ளது என்பதனை நினைக்கும் போது அதிகாரிகளின் கடமையுணர்ச்சியைப் பாராட்டத் தோன்றுகின்றது. ஏறக்குறைய 300 கோடி ரூபாய் அருகே மது விற்பனை நடந்துள்ளது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? திட்டமிட்டுள்ளனர். மூன்று ஷிப்ட்களில் சாராய ஆலைகள் செயல்பட்டுள்ளது. 

திகட்டத் திகட்ட ஸ்டாக் வைக்க அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளார்கள் என்று தானே அர்த்தம்.

தட்டுப்பாட்டு இல்லாமல், ஒருவர் எத்தனை பாட்டில்கள் வேண்டுமானாலும், வருத்தப்படாமல் வாங்கிச் செல்ல வேண்டும் என்று குடிமகன்களில் நலனின் தான் இந்த அரசு செயல்பட்டுள்ளது என்று தானே அர்த்தம். அப்படிப்பட்ட உன்னத நிர்வாகத்தை நடத்தி வரும் எடப்பாடியார் எதிர்பார்க்கும் கொரானா நிதியைப் பெறுவதற்கும் ஏராளமான வாய்ப்புள்ளது.

கடை செயல்படவில்லை. பார் செயல்படவில்லை. ஆனால் இன்று வரையிலும் மது கிடைக்கின்றது. வாங்கி வைத்த ஸ்டாக் முடியும் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டேயிருக்கும். வட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழகம் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரைக்கும் பாயும் வெள்ளநீரை எடப்பாடியார் கொஞ்சம் கொரானா பக்கம் திருப்பிக் கொள்ள முடியும்.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை தொடங்கி ஒவ்வொரு துறை சார்ந்த முதன்மை ஒப்பந்தக்காரர்களிடம் கொரானா விழிப்புணர்வு, மக்கள் நலன் குறித்து எடுத்துச் சொல்லலாம். நிச்சயம் அவர்கள் கருணை உள்ளத்துடன் உதவத் தயாராகவே இருப்பார்கள். இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. அப்போது கணக்கு வழக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் உறுதியளிக்கும் பட்சத்தில் அவர்கள் நிச்சயம் உதவத் தயாராக இருப்பார்கள்.

"கொரானா குறித்த ஒப்பந்தங்கள் யார் யாருக்கு வேண்டும்" என்று கேட்டால் போதும். "எங்களுக்கு வேண்டாம். அதற்குப் பதிலாக எத்தனை கோடி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று ஒவ்வொருவரும் உதவத் தயாராகவே இருப்பார்கள்.

எடப்பாடியார் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தலா இத்தனை லட்சம் என்று டிக் செய்து பட்டியலை அமைச்சர்களிடம் கொடுத்து விட்டால் போதும். வெட்டிக் கொண்டு மணி அமைச்சர்கள் மணியோடு வந்து நிற்பார்கள் பண்டல் பண்டலாக கட்டிக் கொண்டும் வந்தும் கொடுப்பார்கள்.

பரப்பன அக்ரகாரத்தில் தன்னலமற்றுத் தொண்டாற்றி தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னம்மாவிற்கு சிறைத்துறை வாயிலாக ஒரு கடிதம் அனுப்பினால் போதும். அடுத்த நிமிடமே விவேக் தலைமைச் செயலகத்தில் கண்டெய்னர் லாரியைக் கொண்டு வந்து நிறுத்துவார். கட்டாயம் அதில் டிடிவி இருபது ரூபாய்த் தாள்களை வைத்துள்ளாரா என்பதனை கவனித்து எடுத்து அதிகாரிகளை எண்ணிப் பார்க்கச் சொல்லவும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சமஉ, பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் சம்பளத்தை அப்படியே திருப்பிவிடலாம். அறைக்குள் பீதியோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு இப்போது பஞ்சப்படி, பயணப்படி எதுவும் தேவையிருக்காது.

ஒரு லட்சத்திற்கு மேல் வாங்கும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம். அரசு ஊழியர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். எடப்பாடியாரே, நிறுவனங்களிடம் கேட்டு அவர்கள் வாயில் கதவைத் தட்ட வேண்டாம். கதவு தான் மிச்சமுள்ளது. எடுத்துக் கொண்டு போய்விடுங்கள் என்று சொல்லிவிட வாய்ப்புள்ளது.

கடந்த மூன்றாண்டுகளாக அதிர்ஷ்டம் உங்கள் நகர்த்திக் கொண்டே வந்தது. உங்கள் ஆளுமை வளர்ந்துள்ளது என்பதாக சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு வாரத்தில் தான் உங்களுக்கான அக்னி பரிட்சை தொடங்கப் போகின்றது. இது அனல் பறக்கும் பிரச்சாரமல்ல? பணத்தை இறைத்தால் வெல்லக்கூடிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கு?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கொள்ளையடித்து விட்டு பிச்சை கேட்கும் அவலம்... விரைவில் எனது பகிர்வில்...