Sunday, January 08, 2023

அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கு - 2023

 அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கு

உங்களின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பு அதிக கவனம் பெற்றதை கவனித்தவன் என்ற முறையில் அவசரமாக இந்தக் கடிதம் உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது.

தமிழக இணையப் பெருவெளியில் கவிதை, இலக்கியம், சிறுகதை, அனுபவப் பகிர்வுகள் என்று அனைத்து தளங்களும் அழிக்கப்பட்டு கடைசியாக எஞ்சியிருப்பது இரண்டு இரண்டு தான். ஒன்று. திமுக வை ஆதரித்தே ஆக வேண்டும். மற்றொன்று பாஜக வை எதிர்த்தே ஆக வேண்டும்.

நானும் நீங்கள் அரசியல் வருவதற்கு முன்பு அரசியல் குறித்து எழுதியிருக்கின்றேனே தவிர காத்திரமான நிலைப்பாடுகள் எதையும் எடுத்ததே இல்லை. குறிப்பாக திமுக வை குறித்து இப்போது எழுதுவது போல ஆசிட் வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததும் இல்லை. ஆனால் தமிழக அரசியல் களத்தில் உங்கள் வருகைக்குப் பின்பு நான் உணர்ந்தே ஒன்றே ஒன்று இனியும் தாமதித்து அமைதியாக இருந்தால் வெள்ளத்தில் மூழ்கிப் போனதாகத் தமிழகம் மாறிவிட வாய்ப்புள்ளது என்பதனை கருத்தில் கொண்டே நீங்கள் சமஉ விறகு போட்டியிட்ட தருணம் முதல் இந்த நொடி வரைக்கும் உங்கள் நல்லெண்ணங்கள் நிறைவேற வேண்டும். தமிழக அரசியல் களம் மாற வேண்டும். நல்லவர்கள். படித்தவர்கள். நாணமானவர்கள், நல்லொழுக்கத்தை விரும்பக்கூடியவர்கள் தமிழக முதல்வர் பொறுப்பு வர வேண்டும் என்பதனை உணர்ந்து வெளிப்படையாகவே பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்தேன்.

நீங்கள் தமிழக பாஜக வில் சாதாரண உறுப்பினராக நுழைந்த முதல் நாள் முதல். துணைத்தலைவர் தொடங்கி மாநிலத் தலைவராக உருமாறிய காலம் வரைக்கும் கவனித்தவன் என்ற முறையில் என்னளவில் ஒவ்வொன்றையும் இணையத்தில் ஆவணப்படுத்தி உள்ளேன். படிக்க மட்டும் முடியும் என்று தேடுதல் ஆர்வம் கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் உங்கள் செயல்பாடுகள் குறித்து தகவல்களை நாள்தோறும் கொண்டு சேர்க்கும் பணியை இன்று வரையிலும் தொய்வு இல்லாமல் செய்து வருகின்றேன்.

தஞ்சாவூரில் தொடங்கிய பெருவாரியான ஆதரவு கூட்டம் என்பது அடுத்தடுத்து தமிழகம் முழுக்க நீங்கள் கலந்து கொண்ட ஒவ்வொரு பொதுக்கூட்டமும் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு போலவே இருந்ததை மற்ற தமிழக கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் கவனித்தது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசியல் களத்தில் நேரிடையாகப் பங்கெடுத்தது என்பது நான் அறிந்தவரையில் 1964ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமே. அதற்குப் பிறகு தன்னெழுச்சியாகக் கூடியது ஜல்லிக்கட்டு அமைதி எதிர்ப்புக்கூட்டம். மாறிய தொழில் நுட்பங்களோடு சேர்ந்து பிறந்த தலைமுறையின் விரும்பும் தலைமுறையாக நீங்கள் மாறியிருப்பதும் அரசியல் என்பது நாமும் கவனிக்க வேண்டிய ஒன்று தான் என்று இன்று இளைஞர்கள் ஆண் பெண் என்ற பாரபட்சமின்றி உங்கள் பின்னால் மெது மெதுவாக அணிவகுத்து பின்னால் வந்து கொண்டு இருப்பதை ஆளுங்கட்சி முதல் இங்கு ஆண்ட கட்சி வரை என அனைவருக்கும் எரிச்சலூட்டும் சமாச்சாரமாக உள்ளது.

இன்று உங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் உளவுத்துறை முதல் உழவு செய்யும் எளிய மனிதர்கள் வரைக்கும் கவனிக்கும் நிலையில் இருப்பதும் இதுவரையிலும் தமிழகம் காணாத ஒன்று.

ஆனால் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புகள் உருவாக்கும் தாக்கம் குறித்துத் தான் உங்களுக்குச் சிலவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இன்று வரையிலும் மறைந்த திமுக தலைவராக இருந்த திரு. மு. கருணாநிதி அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பை அனைவரும் சிலாகித்து எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள். உதாரணமாகவும் காட்டுகின்றார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மறைக்கும் சுட்டிக் காட்டி மறந்த ஒரு விசயம் என்னவெனில் கருணாநிதி அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பது உங்களைப் போல எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஊழலை முழுமையாக வெளிப்படுத்தாது. அதுவொரு சமிக்ஞை போலவே காட்டுவார். எம்ஜிஆர் புரிந்து கொண்டு செயல்படுவார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது நேரிடையாகப் பதில் அளிக்க மாட்டார். நிருபரைச் சந்தோஷப்படுத்தும் வேலையை மட்டும் செய்வார். நாம் கேட்ட கேள்விக்குத் தலைவர் பதில் அளித்தார் என்பதனை மட்டும் உணர்ந்த நிருபருக்கு அதற்கு மேல் வேறு எதையும் கேட்கத் தோன்றாது. அதாவது கேட்ட கேள்விக்கு பதில் உண்டு. பைனரி பதில் கிடைக்காது.

காரணம் அரசியல்வாதியாகவே கடைசி வரைக்கும் கருணாநிதி வாழ்ந்தாரோ ஒழிய அவர் மக்கள் நலன் காக்கும் தலைவராகச் சாகின்ற வரைக்கும் மாற நினைக்கவே இல்லை. கூடவே தன்னை எதிர்ப்பவர்களை வழிக்குக் கொண்டு வரக்கூடிய அனைத்து சித்து வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடியவராக இருந்த காரணத்தால் அவரைச் சுற்றி புல் பூண்டு கூட முளைக்க விடாத அளவுக்குத் தன் பதவியைத் தன் அரசியல் வாழ்க்கை கெட்டிக்காரத்தனமாக நகர்த்தி வந்து வெற்றி கண்டார்.

கச்சத்தீவு, தமிழக மீனவர் பிரச்சனைகள் முதல் இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகா நதிநீர் சார்ந்த அனைத்து விசயங்களும் இன்று உயிரோடு உயிர்ப்போடு இருக்க ஒரே காரணம் கருணாநிதி. எந்த பத்திரிக்கையாளராவது இன்று அவர் மகனிடம் இது குறித்துக் கேட்பார்களா? மாட்டார்கள். காரணம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதை விடப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது யாரோ அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதன் பலன் தான் இன்று திராவிட மாடல் அரசு என்ற வார்த்தை.

தலைக்கு வெளியே ஒன்றும் இல்லை. உள்ளேயும் ஒன்றும் இல்லை. ஆனால் அவன் தலைவன் என்கிற அளவுக்குத் தமிழக மக்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தவர் யார் என்று நினைக்கின்றீர்கள்? தமிழகத்தின் உண்மையான நிஜமான பிரச்சனைகள் என்ன? என்பதனைப் பற்றி மட்டும் பேசவே மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு தைரியமாகத் தொழில் நடத்தும் பத்திரிக்கையாளர்களைத் தான் நீங்கள் சந்தித்து அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்தால் நிச்சயம் இங்கே நல்லது நடக்கும் என்று நம்புகின்றீர்கள்?

முறைப்படியான படிப்பறிவு இல்லை. நிஜமாகவே அறிவை எப்படி ஒவ்வொரு நிலையிலும் வளர்த்து கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சூழலும் இங்கே கடந்த 30 ஆண்டுகளாகவும் இல்லை. போட்டி போட முடியாது. நுழைவுத் தேர்வு என்றாலே பயம். குறுக்கு வழி என்பது இங்கே இயல்பான தகுதிகளில் ஒன்றாக மாறிய காரணத்தால் துணைவேந்தர் பதவி முதல் பத்திரிக்கையாளர் படிப்பு வரைக்கும் எல்லாமே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் தமிழகம் இன்று வரையிலும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்று வரையிலும் அரசுத் துறைகளில் தரவுகள் தேவையில்லை. அரசின் நிர்வாக பணிகளில் கணக்கீடு அவசியமற்றது. மாறி மாறி இருவர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் சொல்லி வைத்தாற்போல பரஸ்பர புரிதலின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை இல்லாத அரசின் செயல்பாடுகளை எந்தவொரு பத்திரிக்கைகளும் கேள்வி கேட்டதே இல்லை. கேள்விகளும் எழுப்பாது.

நீங்கள் புதிய தலைமுறை முருகேசனைச் சிரித்துக் கொண்டே கையாண்டு இருக்க வேண்டும். உங்கள் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அது மொழியாக மாறி கவனிப்பவர்களை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று நான் நம்புகின்றேன். உங்கள் மேடைப் பேச்சு முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு வரை அத்தனை இடங்களிலும் உங்கள் முகம் என்பது காவல்துறை பணிக்குரிய தகுதியிலிருந்து இன்னமும் வெளியே வரவில்லையோ என்று தான் யோசிக்க வேண்டியதாக இருக்கின்றது.

நீங்கள் சந்திக்கும் எந்த பத்திரிக்கையாளரும் முறைப்படியான இதழியல் படித்து விட்டு பணியில் சேரவில்லை. எவரும் ஆசைப்பட்டு இந்தத் தொழில் என்னுடைய கனவாக இருந்தது என்ற நிலையில் அந்த பணியைச் செய்யக்கூடியவர்களும் இல்லை. யாரோ கட்டளையிடுகின்றார்கள்.

யாருக்காகவே வேலை செய்கின்றார்கள். குடும்ப நிர்ப்பந்தம் ஒரு பக்கம். பொருளாதார நிராசைகள் மறுபக்கம் என்று உந்தித்தள்ளி எந்தப் பக்கம் சென்றால் பணம் கிடைக்கும் என்ற பிழைப்புவாதிகள் தான் தற்போது அங்கீகரிக்கப்பட்டப் பத்திரிக்கைகளில் பணிபுரிகின்றார்கள் என்றால் மிகச் சாதாரணமாக ஒரு யூ டியூப் சேனல் என்ற பெயரில் சில லட்ச சந்தாதாரர்கள் சேர்ந்தவுடன் தன்னை பெரிய பிஸ்தாவாக நம்பிக் கொண்டு இருக்கும் இவர்களை நீங்கள் பத்திரிக்கையாளர் என்ற கோட்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா?

கருணாநிதி பேட்டி கொடுத்த சமயத்தில் அலைபேசி இல்லை. தொலைக்காட்சி நேரிலை இல்லை. வேறொரு மூலையில் பார்த்துக் கொண்டு இருக்கும் நபர் சம்பந்தப்பட்டப் பத்திரிக்கையாளரை அழைத்து இப்படி கேள்? இதனைக் கேள்? என்று சொல்வதற்கும் வாய்ப்பில்லை. அப்படியே ஏட்டிக்குப் போட்டியாகக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒன்று அடுத்த சில நாட்களில் உடல் காயங்களோடு தான் வாழ்வார் அல்லது வேறொரு தொழிலுக்கு மாறுவார். காரணம் கருணாநிதி பத்திரிக்கை நிருபர்களை வீட்டுக்கு வெளியே இருக்கும் நாயாகவும், பத்திரிக்கை நடத்தும் முதலாளிகளைத் தன் வீட்டுக்குள் உலாவும் செல்லக்குட்டிகளாகவும் வைத்திருந்தார்.

பத்திரிக்கையாளர் சாவி (சா.விஸ்வநாதன்) உட்பட.

மக்கள் மனம் மாறுவார்கள். தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகவும் அமைந்து விடும். ஆனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் என்னவாகும்? நல்ல உதாரணம் எடப்பாடியின் நான்காண்டுக் கால ஆட்சியில் இப்போது உள்ள பத்திரிக்கையுலகம் எப்படி நடந்து கொண்டது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

வாய்ப்புகள் உங்கள் முன் நிறைய உள்ளது. கட்சி ரீதியாகச் செயல்படுபவர்களுக்குப் பதவி முக்கியம். ஆனால் உங்களைப் போன்றவர்களை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருந்த என்னைப் போன்ற பலரும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் உங்கள் எதிர்கால முதல்வர் என்று ஒரு கூட்டமும் எதிர்காலப் பிரதமர் என்று மற்றொரு கூட்டமும் உரக்கச் சொல்லி கட்சி வளர்ந்து விடக்கூடாது. நீங்கள் மேலேறிச் சென்று விடக்கூடாது என்பதில் அதி தீவிரமாக உள்ளனர் என்பதனை நீங்கள் அறிந்தே வைத்திருக்கக்கூடும்.

நான் எப்போதும் எளிய மனிதர்களைச் சந்திக்கவே விரும்புகின்றேன் என்று உங்கள் சமீப பேட்டிகளில் சொன்னதை நிஜமாக்கிக் காட்டுங்கள். அண்ணாதுரை இறப்பதற்கு முன் சில ஆண்டுகளில் கருணாநிதி ஒரு வளையம் போட்டு வைத்திருந்தார். கடைசியில் அண்ணாதுரை அவர்களே அந்த வளையத்தை உடைத்து வெளியே வர முடியவில்லை. கட்சியில் கடைசியில் இருந்த கருணாநிதி தன்னை எம்ஜிஆர் ஆதரவுடன் கட்சியைக் கைப்பற்றினார்.

அதேபோல நீங்கள் ஏணிப்படியில் ஏற உங்களுக்கு அருகே உள்ளவர்கள் வேறுவிதமான வளையங்கள் உங்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டே இருப்பதால் நீங்கள் ஒருவர் மட்டுமே 24 மணி நேர போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்களோ? என்று நான் யோசிப்பதுண்டு.


500 பேர்களை அடுத்த கட்டத்தில் உருவாக்க வேண்டும் என்றீர்கள். லட்சம் மடங்கு அயோக்கியத்தனத்தைச் செய்த திமுக, ஆதாரம் அனைத்தும் இணையம் எங்கும் இருந்த போதிலும் பயம் எதுவும் இல்லாமல் இன்று வரையிலும் களத்தில் இருப்பதற்கு ஒரே காரணம் அதன் ஒவ்வொரு அடுக்கும் அதனதன் வேலையை எந்தந்த சமயத்தில் எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே ஒவ்வொருவரும் சுதி மாறாமல் ரிதம் தப்பாமல் அப்படியே செய்கின்றார்கள்?

உங்களுக்கு அப்படி யார் இங்கே செய்கின்றார்கள்?

வளர்ச்சியென்பது வேறு. வீக்கம் என்பது வேறு. நடிகர்களை எதிர்த்து ஒரு பக்கம். வெகுஜனம் விரும்பாததை விளக்கமாகப் பேசி எரிச்சலூட்டுபவர்கள் மறுபக்கம். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல நீங்கள் முப்பது அடி எடுத்து வைத்து முன்னேறினால் 300 அடி பின்னால் இழுப்பவர்கள் உங்கள் ஆதரவாளர்கள் அல்ல. கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்து உச்சாணிக் கொம்பில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் என்பது தான் உங்களுக்கு நன்றாகவே தெரியும் தானே?

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சிக்குள் இருப்பவர்களை விட கட்சிக்கு வெளியே இருப்பவர்களைக் கவனிப்பது, கண்காணிப்பது, அரவணைப்பது, அழைத்துப் பேசுவது, உறவாடுவது போன்ற கலையைக் கருணாநிதி மிகச் சரியாக உருவாக்கி வைத்திருந்த காரணத்தால் மூளை வளர்ச்சி இல்லாத போதும் கூட நாங்கள் அவரை சுமப்போம் என்கிற அளவுக்கு அந்த கட்சி இன்னமும் உயிரோடு இருக்கின்றது என்பதனை கவனத்தில் வைத்திருங்கள்.

எந்நாளும் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் நல்லாட்சி மலரும் அதுவும் தாமரை மூலம் நடக்கும் என்ற நம்பிக்கையுள்ளவன்.

No comments: