Monday, January 16, 2023

பொங்கல் 2023

 பொங்கல் 2023

விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் செய்திகள் உங்களுக்கு வந்தால் கவனமாக இருங்கள். எந்த விவசாயிகளும் களத்தில் இல்லை. அவர்கள் களம் என்பது அவர்கள் நிலத்தோடு முடிந்து விடுகின்றது. அவர்களிடம் பேரம் பேசி, அடித்து புடுங்கி, அவர்கள் அவசரத்தைப் பயன்படுத்தி வாங்கி வருகின்றவர்களின் ஆசை அளவில்லாத அளவுக்கு போய்க் கொண்டே இருக்கின்றது.

விவசாயியோ அவரிடம் வாங்கி வந்து விற்பரோ அவர்களிடம் தான் சென்று வாங்க வேண்டும் என்ற கொள்கையை இன்று தளர்த்தியுள்ளேன். காரணம் ஒரு மஞ்சள் கொத்து ரூ25 என்றார். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் தெருவில் எவ்வித மற்ற கட்டணங்களும் செலவழிக்க தேவையில்லாமல் இருப்பவர்கள் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் தங்கள் விலை தங்கள் லாபம் என்பதில் பிடிவாதமாக இருப்பதைப் பார்த்தேன்.
அருகே பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருப்பதால் உள்ளே சென்று பார்த்த போது அழுகல் இல்லாமல் சிறப்பான வகையில் அதனை மூடி ஒரு பானைக்கு இரண்டு மஞ்சள் கொத்து என்ற அடிப்படையில் அதனை ஒரு பையில் போட்டு கட்டி இரண்டும் ரூபாய் 15 என்று விற்கின்றார்கள்.
உள்ளே 100 பேர்கள் வேலை பார்க்கின்றார்கள். ஒரு லாபம் தவிர்த்த மற்ற செலவீனங்கள் என்று பார்த்தால் ஒரு பொருளுக்கு 300 சதவிகித லாபம் வைக்க வேண்டும். ஆனால் முறைப்படுத்தப்பட்ட வணிக நடைமுறையில் சரியாக தங்கள் பாதையை வகுத்துள்ளனர்.
வெளியே ஒரு சிறிய இலை ரூபாய் பத்து. ஆனால் இங்கு இரண்டு இலைகள் 7.50 பைசா. அதாவது வெளியே 12.50 பைசா அதிகமாக கொடுத்து வாங்க வேண்டும். ஆச்சரியம் என்னவெனில் இதில் தங்கள் கடை சார்ந்த ஆஃபர் மட்டும் தள்ளுபடி விவரங்கள் உள்ள காகிதங்கள் வைத்து கட்டிக் கொடுத்து விடுகின்றார்கள். பிரிக்கும் போது நிச்சயம் பெண்களைக் கவரும்.
அருகே வெற்றிலை மட்டும் பாக்கு என்று தனியாக ஒரு பை. மொத்தத்தில் வீட்டுக்காரம்மா சொல்லி அனுப்பும் சாமான்களை அப்படியே வாங்கி வந்து விட விடுகின்றது.
ஒரு கரும்பு 75 ரூபாய் வரைக்கும் தரம் பொறுத்து விற்கின்றார்கள். ஆனால் இரண்டு கரும்பு 100 என்பது இயல்பான தரத்தில் உள்ளதை கவனித்துக் கொண்டு நண்பரை அழைத்தேன்.
அவர் உழவர் சந்தையில் வாங்கிய பொருட்கள் அனைத்தும் நான் மொத்தமாக செலவளித்த தொகையில் பாதித் தொகையில் நான் வாங்கிய அத்தனை பொருட்களும் வாங்கியதை விலைவாரியாக பட்டியலை ஒப்புவித்தார்.
என் அப்பா உருவாக்கிய பாதையை என் மகள்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகின்றேன். மாறிக் கொண்டே இருக்கும் உலகத்தை, பல்வேறு வியாபார நுணுக்கங்களை, பேராசை கொண்ட மனித சமூகத்தை, எல்லாவற்றுக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சிறப்பல்ல என்ற பணத்தின் அருமையை புரியவைத்துக் கொண்டு வருகின்றேன்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.



No comments: