கு. காமராஜர், சிஎன், அண்ணாதுரை, மு, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா
இந்த ஐந்து முதல்வர்களில் தனித்த தலைவனுக்குரிய அடையாளக் குணம் கொண்டவர்களில் முழுமையான ஒரே தலைவர் கு. காமராஜர் மட்டுமே.
சங்க இலக்கியம் முதல் சாமானியன் விரும்பும் பாமர அரசியல் எண்ணம் கொண்டவர்கள் வரைக்கும் விரும்பக்கூடிய தலைவனுக்குரிய அனைத்து தகுதிகளும் அய்யாவிடம் இருந்தது. இவருக்குக் காலம் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியது. செய்து காட்டி ஒதுங்கி விட்டார்.
காலம் அனுமதிக்கவில்லை. ஆனால் குறை சொல்லவே முடியாத நிஜமான தலைவனுக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டு இருந்தார். முடிந்தவரைக்கும் செயல்படுத்தியும் காட்டினார். ஆனால் காலமும் சூழலும் அண்ணாவிற்கு ஒத்துழைக்கவில்லை.
கருணாநிதி இந்த இடத்திற்கு வந்து நிற்பார் என்று எவரும் யோசித்துக் கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள். கருணாநிதியின் உண்மையான சொரூபத்தை அண்ணா பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கருணாநிதிக்குத் தான் காலம் ஆசீர்வாதம் செய்தது. இவர் வந்த பின்பு அண்ணாதுரை என்ற பெயர் மட்டுமே மிஞ்சியது.
அண்ணாதுரைக்குப் பின்னால் வந்த மற்ற மூவரும் காற்று அடித்த திசையில் வந்தவர்கள். தங்களையே நம்பாதவர்கள்.
எம்ஜிஆர் வாழ்நாள் முழுக்க சந்தேகத்திலே வாழ்ந்து மடிந்தார்.
கருணாநிதி 100 வயதுக்கு மேல் உறுதியாக வாழ்வோம். பாடையில் படுக்கும் அந்த நொடி வரைக்கும் முதல்வர் பதவியில் இருப்போம் என்றே நம்பினார்.
ஜெயலலிதா அரை போதை கிறுக்கியாக வாழ்ந்தார். சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இவர்கள் எவரையும் அடையாளப்படுத்தவில்லை.
அரசியலில் தனக்குப் பின்னால் யார்? என்பதனை யாரும் அடையாளம் காட்ட மாட்டார்கள் என்பதனை பொது விதியாக சொல்கின்றார்கள். தகுதியுள்ளவன் வந்து சேர்வான் என்கிறார்கள். இன்று தமிழகம் கோமாளி ஒருவன் கையில் சிக்கும் என்று நீங்களோ நானோ கற்பனை செய்து இருப்போமா?
அதன் காரணமாகவே இன்று நடக்கும் அத்தனை அனர்த்தங்களுக்கும் முக்கிய விளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிக் கொண்டேயிருக்கின்றது என்பதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
எப்படி என்று கீழே பார்ப்போம்.
இன்று வரையிலும் அய்யா காமராஜர் குறித்து
வாய் வலிக்க வலிக்க தமிழ்ச் சமூகம் பேசியாகி விட்டது. அவர் ஆற்றிய பணிகள் எதையும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. இவர் இல்லாவிட்டால் இன்னமும் தமிழன் தற்குறி தான். சற்று தாமதமாக தமிழகம் வளர்ந்து இருக்கும்.
என் கடன் செய்து கிடப்பதே என்கிற ரீதியில் செயல்பட்டார். அதிகாரிகள் சொல்வதை
மட்டும் கேட்காமல் அதிகாரிகள் சொல்வதை
யும் கேட்டுக் கொண்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தான் விரும்பிய அனைத்தையும் அவர்களை ஏற்கச் செய்த தன் சொந்த மூளையைப் பயன்படுத்திய
அறிவுள்ள முதல்வர்.
கல்வி மூலம் கற்ற அறிவல்ல.
முழுக்க முழுக்க அனுபவம் சார்ந்த பயிற்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் கலந்த முத்தான முதல்வர். சோம்பிக் கிடந்த தமிழகத்தைச் சத்துணவு கொடுத்து மாற்றினார்.
ஆனால் காமராஜர் அவர் காலத்திலும் தன்னை தக்க வைத்துக் கொள்ள அரசியல் செய்தவர் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். பசும்பொன் அய்யாவுக்கும் காமராஜருக்கும் ஏழாம் பொருத்தம். அதற்குள் பல கிளைக்கதைகள் உண்டு. பசும்பொன் அய்யா மற்றும் இமானுவேல் சேகரன் இருவருக்கும் நடந்த பானிபட் யுத்தம் அனைத்துக்கும் பின்னால் காமராஜ் அய்யாவின் அரசியல் சித்து விளையாட்டுகளும் உண்டு.
ஆனால் தனக்குப் பின்னால் யார் என்பதனை அடையாளம் காட்டிய உண்மையான தலைவன். எந்த ஓர் அரசியல்வாதியும் புகழோடு இருக்கும் போது வேறு எவரையும் தன் அருகே வைத்திருக்க மாட்டார்கள். அடையாளப்படுத்திவிட மனதும் வராது. ஆனால் காமராஜர் தைரியமாக பக்த்வசலத்தை அடையாளம் காட்டினார். தனக்குப் பின்னால் முதல்வர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தார். காலமும் சூழலும் அதிர்ஷ்டமும் பக்தவச்சலம் அய்யாவுக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் பேத்தி காங்கிரஸ் ல் இருந்த ஜெயந்தி நடராஜன் வரைக்கும் முழுமையாக அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருந்தார்கள்.
ஆடம்பரம் இல்லை. அலட்டல் இல்லை. அடுத்தவர்களின் பணம் பொருள் இடம் மீது ஆசைப்படவில்லை. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை. ஊழல் புகாரும் இல்லை. ஒப்பனைக் கலைஞரோ, ஆடை வடிவமைப்பாளரோ, எழுதிக் கொடுக்க தனி ஆளோ, கூஜா தூக்க இளைஞர்களோ யாருமில்லாமல் தான் காமராஜர் வாழ்ந்தார். இறந்தார்.
ஆனால் எனக்குப் பின்னால் இவர் தான் என்று அடையாளம் காட்டிய போதும் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போனது. காமராஜருக்குப் பின்னால் அடையாளம் மாறியது. இப்போது உள்ள காங்கிரஸ் என்பது காமராஜருக்குத் தொடர்பே இல்லாதது.
அதாவது நாம் விரும்பிய, எதிர்பார்த்த அனைத்தும் நடந்தது. ஆனால் தீபம் அணைந்து இருட்டாகப் போனதன் காரணம் என்பதற்குப் பின்னால் உள்ள சூட்சமம் தான் தெரியவில்லை.
இப்போது அண்ணாதுரை அவர்களிடம் வருவோம்.
ஈவெரா அய்யா அண்ணாதுரை தன்னை விட்டு வெளியே வந்த சமயத்தில் அண்ணாதுரையைப் பார்த்துத் திட்டியதில் முக்கியமானது என்ன தெரியுமா?
எல்லா பயல்களும் காசு பார்க்காத பசங்க. கண்ணீர் துளி பசங்க. அரசியல் கட்சி என்றால் வசூல் செய்வார்கள். பிரச்சனை வரும். திருடுவார்கள். பதவிக்காகச் சென்று உள்ளனர். பதவி ஆசை பிடித்து அலைகின்றார்கள் என்பது போன்று வீட்டில் இடைவிடாமல் பேசிக் கொண்டேயிருக்கும் வயதான பெரியவர் போலவே கன்னா பின்னாவென்று திட்டி தினமும் எழுதித் தள்ளிக் கொண்டேயிருந்தார்.
ஆனால் ஈவெரா தோற்றுப் போனார்.
அண்ணாதுரை கடைசி வரைக்கும் பணத்துக்கு ஆசைப்படவில்லை.
விருகம்பாக்கம் கூட்டத்தில் எம்ஜிஆர் இரண்டு லட்சம் நன்கொடை தருகின்றேன் என்று வெளிப்படையாக அறிவித்தார். வேண்டாம் என்று மறுத்து விட்டார். கோவித்துக் கொண்ட இன்றைய உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரின் தாத்தாவிடம் எம்ஜிஆரிடம் கட்சியை அடகு வைக்க விரும்பவில்லை என்றார்.
அண்ணா நினைத்தால் பணம் பல்வேறு வழிகளில் வர வாய்ப்பு இருந்தது. எந்த தவறான வழிகளையும் அண்ணா தேர்ந்தெடுக்கவே இல்லை.
பதவிக்கு அலையவில்லை.
தனக்குச் சமமாக நெடுஞ்செழியன் போன்றவர்களை அமரவைத்ததோடு தனக்கு அடுத்து எப்படிக் கட்சியின் கட்டமைப்பு உருவாக வேண்டும் என்பதனை நீண்ட கால நோக்கோடு யோசித்து பின்னால் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏராளமானவர்களை உருவாக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வளரும் நபர்களை அடையாளப்படுத்தினார்.
மூன்றாவது நிலையில் இருந்தவர் தான் மு. கருணாநிதி.
காமராஜர் போலவே ஆடம்பரம் இல்லை. அவர் அணிந்திருந்த ஆடைகளைப் பாருங்கள். சலவை செய்யப்பட்டு இருக்காது. மூக்கில் நிரந்தரமாக பொடி ஒட்டியிருக்கும். சில சமயம் சளி. 1967 பதவி ஏற்கச் சென்ற போது அப்போது கொடியில் இருந்த வேஷ்டியை அப்படியே எடுத்துக் கட்டிக் கொண்டு சென்றார். திருமணம் ஆனது முதல் கடைசி வரைக்கும் மனைவி ராணி அம்மையாருடன் பேச்சு வார்த்தை என்பதே இல்லை. அதற்குப் பின்னால் பல கதைகள் உள்ளது. மனித பலகீனம் சார்ந்தது.
காமராஜருக்கும் இல்லாத கல்வி அறிவு, ஆங்கில அறிவு, உலக அறிவு, மயக்கும் பேச்சு, ஐந்து மணி நேரம் என்றாலும் அலுக்காத இயல்பான நடையில் பேசக்கூடிய பேச்சு என்று எல்லாவிதங்களிலும் அண்ணாதுரை அவர்களிடம் பலவிதமான திறமைகள்
இருந்தது.
காமராஜ் அவர்களின் திறமை எல்லாம் காலாவதியாகக்கூடிய சூழல் காலமாற்றம் விரைந்து தமிழக அரசியலை மாற்றிக் கொண்டு இருந்தது.
அண்ணா தனக்குப் பின்னால் பல தலைவர்களை உருவாக்கினார் என்றாலும் தன் உடல் நலன் பாதிப்பு அடைந்து இறக்கப் போகின்றோம் என்ற நிலையில் கூட வேறு எவரிடம் பதவி வழங்கவில்லை. அவர் இறந்த பின்பு எம்ஜிஆர் தான் முடிவு செய்து கருணாநிதிக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.
அதே போல அண்ணாவுக்குப் பின்னால் வந்த மூவரும் தன் அளவுக்கு வேறு எவரும் அருகே வந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார்கள். அதே நிலையில் மனதில் பலவற்றைக் கணக்கீடுகளாகக் கொண்டு எவரையும் வளரவிடவே இல்லை.
காமராஜர் உருவாக்கிய தமிழகத்திற்கான பாதையும், காமராஜர் கண்ட கனவு தமிழகமும் அண்ணாதுரை அவர்களின் வருகைக்குப் பிறகு முற்றிலும் மாறியது.
அண்ணாதுரை காமராஜர் போலத் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. இவர் செய்தது அனைத்தும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல், வாய்மையே வெல்லும், சீர்திருத்தத் திருமணம் சார்ந்த விசயங்கள் மற்றும் சமஸ்கிருத மொழி சார்ந்த விசயங்களை நீக்குதல் போன்ற கிலுகிலுப்பு தனமான வேலைகள் மட்டுமே. அதற்குள் அவர்கள் இயக்கப் பாணியில் சமூக நிதி என்று இன்று வரையிலும் அழைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கின்றார்கள்.
பின்னால் வந்த மூவரும் செய்த காரியங்கள் இதனை ஓட்டியே இருந்தது.
1967 முதல் 2016 வரைக்கும் அரை நூற்றாண்டுக் காலம் தமிழக அரசியலில் இருந்தவர்கள் செய்யாதது என்னவெனில் தனக்குப் பின்னால் யார் வர வேண்டும் என்று அடையாளம் காட்டாத காரணத்தால் உருவான இழப்பு ஒரு பக்கம்.
பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது ஏழையையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விரைவில் மேலே கொண்டு வந்து விடும் (இன்றைய சூழல் அப்படித்தானே உள்ளது) என்பதனை உணர மறுத்து தற்குறித்தனமான நாடகபாணி அரசியலை முன்னெடுத்த காரணத்தால் கட்சி சார்ந்த நபர்கள் மட்டுமே ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக மாறும் சூழல் உருவானது.
ஏன் பழைய கதையைப் பேச வேண்டும்?
தமிழக பாஜக மற்றும் மத்திய பாஜக இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டம், செயல்பாடு, செல்லும் பாதை எல்லாம் சரியாகவே உள்ளது. ஆனால் பாரபட்சம் பார்க்காமல் பல கிளைகள் வளர அனுமதித்தால் மட்டுமே காங்கிரஸ் போல அடுத்த அரை நூற்றாண்டுக்கு பாஜக என்ற கட்சி இந்தியாவை ஆட்சி செய்யும். ஆட்சி செய்யும் காலம் வரைக்கும் காங்கிரஸ் போலக் கெட்ட பெயர் இல்லாது அதிகாரத்தில் இருக்கும். வாசிக்கக்கூடிய செய்திகள் மூலம் நான் உணர்ந்து கொண்டது மத்திய பாஜக மோடி போல மாநிலங்களில் உள்ள மற்ற அத்தனை பாஜக தலைவர்களும் யோக்கியமானவர்களாக இருக்கின்றார்களா என்பது யோசிக்க வேண்டியதாக உள்ளது,
நாம் திமுக அதிமுக வை கேள்வி கேட்பது போல ஒவ்வொரு மாநிலத்தையும் உற்று நோக்கினால் பே சிம் என்ற வார்த்தை போலப் பல பார்வைகள் தெறித்து விழுகின்றது.
மாறும் என்று நம்புகின்றேன். இனியேனும் பிம்ப அரசியல் வேண்டாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் மோடி அவர்கள் சாலை ஷோ தான் நடத்தி வாக்குகள் பெற வேண்டும் என்றால் எங்கேயோ தவறு நடக்கின்றது?
ஹிமாச்சல் பிரதேசம் மாநகராட்சி தேர்தல் போலத்தான் என்று சப்பைக்கட்டு கொள்ளலாம்?
ஆனால் தோல்வியில் ஸ்பெஷல் தோல்வி? சாதா தோல்வி என்று ஏதேனும் உள்ளதா?
டெல்லி மாநகராட்சி என்பது தமிழ்நாட்டின் நிதி நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால் பாதிக்குப் பாதி வரும் என்றே நம்புகின்றேன். அதாவது ஒரு லட்சம் கோடி புழங்கக்கூடிய பெரிய மாநகராட்சி. நாட்டின் தலைநகர்.
ஏற்கனவே படித்த கிரிமினல் கேஜ்ரிவால். இரண்டு சதவிகிதம் என்றாலும் அரை சதவிகிதம் தான் வித்தியாசம் என்றாலும் நான் எனக்கு என்னுடைய என்னால் என்ற ஆணவம் தான் டெல்லி பாஜக வெற்றியை வெட்டி சாய்த்துள்ளது.
வெளியே பெருமையாக கொள்கை சித்தாந்தம் என்று பேசலாம். ஆனால் கொள்ளை என்ற வந்து நிற்கும் போது பங்காளிகளும் பகையாளிகளும் ஒன்றாக மாறும் போது அத்தனை அக்கப் போர்களும் இறுதியில் மோடி என்ற முகத்திடம் வந்து சேரும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
நிஜமான வளர்ச்சி அரசியலுக்கும் தேவைப்படும் சாதாரண இளைஞர்களை உருவாக்கி வளர்த்து காஷ்மீர் முதல் லடாக் வரைக்கும் நிஜமான தலைவர்களாக மாற்ற வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது.
ஆனால் இது கனவாகவே போய்விடும் என்று அச்சமாகவே உள்ளது.
பணம் இருப்பவர்கள் மட்டும் வா.
மற்றவர்கள் பக்கவாட்டில் நில்
என்பதாகவே பாதை முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருப்பதாக தகவல் வருகின்றது.
அப்படி மாறாதபட்சத்தில்?
யாருக்கும் நட்டமில்லை.
இன்று நேருவை கிழித்துத் தொங்க விடுவதைப் போல அடுத்த 50 வருடங்களுக்குப் பிறகு அன்றைய இளைஞர்களின் பேச்சு யாரைப் பற்றி இருக்கும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காலம் கழிவுகளைச் சல்லடை போட்டுச் சலித்து விடும் வல்லமை கொண்டது.
No comments:
Post a Comment