Wednesday, January 11, 2023

BSNL நிர்வாகம் மீண்டு வர வாய்ப்புள்ளதா?

 சற்று நேரத்திற்கு முன்பு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் சாலை ஓரத்தில் ஒருவர் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். காரணம் கேட்ட போது ஜியோ பைபர் (அவர் கிராமத்து மொழியில் பேசினார். நீண்ட நாளைக்குப் பிறகு தமிழர் சாலையில் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்) இந்தப் பக்கம் வரப் போகின்றது என்றார். ஒரு மணிநேரத்தில் சடசடவென்று வேலையை முடித்து கம்பம் நிறுத்தும் அளவுக்குத் தயார் செய்து விட்டார். ஜனவரி மாதம் முழுக்க திருப்பூரில் பல பகுதிகளில் ஜியோ 5ஜி தெறிக்க விடும் என்றே நம்புகின்றேன்.

()()()


கடந்த ஆறேழு மாதங்களாக பிஎஸ்என்எல் ஓரளவுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பைபர் தொடர்பு உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. 70 சதவிகித பொறுப்புகளைத் தனியார் வசம் வழங்கி விட்டனர். பிஎஸ்என்எல் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகின்றது என்று இன்னமும் குழப்பமாகவே உள்ளது. பிஎம்ஓ அலுவலகம் இதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமா? என்பதும் தெரியவில்லை. மக்கள் எப்படி இன்று அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் சுத்த மோசம் என்று தீர்ப்பு வழங்குகின்றார்களோ அதற்குக் குறைவில்லாமல் பிஎஸ்என்எல் குறித்துப் பேசினாலும் எழுதினாலும் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் மோடி அரசு தோற்றுப் போன மிகப் பெரிய விசயம் இந்த பிஎஸ்என்எல்.
முதலில் 75 ஆயிரம் கோடி ஒதுக்கினார்கள். சில வாரங்களுக்கு முன் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாராளுமன்ற விவாதத்தில் பேசிய போது எம்டிஎன்எல் பிஎஸ்என்எல் இரண்டும் ஒன்றாக சேர்ந்து ஆயிரத்துச் சொச்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அறிக்கைப் பார்த்து வாசித்தார். கணினியிலிருந்து பணிபுரியும் போது பிஎஸ்என்எல் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் அலைபேசி சேவைக்கு 35 மதிப்பெண்கள் தான் வழங்குவேன். ஆனால் ஏர்டெல் தொடங்கி மற்ற அனைத்தும் தனியார் சேவைகளும் இப்படித்தான் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றது. தொழில் நுட்பம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டு வருகின்றது. யாரைக் குறை சொல்வது என்றே தெரியவில்லை.
பிஎஸ்என்எல் டேட்டா சேவை என்பது பூஜ்ய மதிப்பெண் வழங்கும் அளவுக்குத்தான் உள்ளது. ஆனால் அரசாங்கம் பணம் பார்ப்பதில் தனியாரை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. சில உதாரணங்கள் சொல்கின்றேன். கவனமாக இருங்கள்.
சென்ற வருடம் 450 ரூபாய் கட்டி ஒரு பிஎஸ்என்எல் அட்டை வாங்கினேன். 365 நாட்கள் உயிருடன் இருக்கும். இரண்டு மாதங்கள் பேசிக் கொள்ளலாம். 3 ஜிபி டேட்டா மட்டும் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும். ஆனால் ஒரு வருடம் முழுக்க அழைப்பு வரும். ஆனால் நாம் பேச முடியாது. ஒரு எண் வேறொரு விசயத்திற்கு வேண்டும் என்பவர்களுக்கு இந்த வசதி அருமை. ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் இந்த திட்டத்திற்கு 675 என்று மாற்றி விட்டனர். 12 மாதம் கழித்து இதனைத் தூக்கி விட்டனர். இதே போல 319 ரூபாய் கட்டினால் முதலில் 90 நாட்கள் வழங்கினர். அது படிப்படியாக குறைந்து இன்று 65 நாட்கள் என்று வந்து நிற்கின்றனர். ஆனால் சேவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.
அனுராக்தாக்கூர் எப்படி அந்தப் பக்கம் தத்தியாக அமர வைக்கப்பட்டுள்ளனரோ அதே போல இந்தப் பக்கம் அஸ்வினி என்பவர் இருப்பார் போலும். ஒரு அவுட் புட் கூட இன்னமும் என் கண்களுக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் (ரயில் சீட்டு கேன்சல் செய்தால் பாதித் தொகை அதிலும் ஜிஎஸ்டி கழித்து....... இப்படிப்பட்ட யோசனை எல்லாம் யார் சொல்லிக் கொடுப்பார்கள். ஏறக்குறைய குரல்வளையில் வாயை வைத்து ரத்தம் உறிஞ்சுவது போல உள்ளது,
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முறையற்ற நிர்வாகம், தெளிவற்ற அதிகாரிகள், ஒழுங்கற்ற நோக்கம், மக்கள் நலன் இல்லாத ஆட்சியதிகாரம் எல்லாம் சேர்ந்து உங்களைத் தனியார் பக்கம் கொண்டு போய் சேர்க்கும். சந்துக்குள் சிக்கிய பிறகு வைத்து நொக்கப் போகின்றார்கள்.
நான் தனியாரை ஆதரிக்கின்றேன். அது மேலை நாடுகள் போன்ற சரியான அமைப்பு இருக்கும் இடங்களில் 75 சதவிகிதம் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். இங்கு அப்படி வர இன்னும் 25 ஆண்டுகள் ஆகலாம்.


No comments: