Tuesday, March 23, 2021

இஸ்லாமியர்களின் காவலர்கள் - திமுக இது உண்மையா? - 2

 அப்துல் ஸமத் அவர்களின் 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதின் அவர்கள் அதனைத் தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.



“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையிலிருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்தச் சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. 

இந்தச் சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மிக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்தச் சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்” என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். 

காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஓர் உன்னதத் தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.

மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடாமல் வலிமையை இழந்தனர். வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்று சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.

மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவுத் தளத்தைத் தொலைத்தது.

தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.

திமுகவிலிருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள்:

முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?

கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்தச் சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார்.

சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.

கருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப்பிடித்தது சமுதாயம்.

எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்குக் கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது. இந்தளவிற்குக் கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்குக் கலைஞர் செய்தது என்ன?

அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்

அமைப்பாக ஒன்று திரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார்.

உதாரணமாக,

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி :

1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)

1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)

1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.

1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.

1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.

1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.

அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.

வணிக சிந்தனை - பயமா? பாவமா?


துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்தத் தொகுதியின் கடந்த கால நிலை என்ன?

1977 ரகுமான்கான் திமுக

1980 ரகுமான்கான் திமுக

1984 ரகுமான்கான் திமுக

1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)

1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)

இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.

தொடரும்..............


7 comments:

Agni rama said...

Do you have a courage to talk about the present BJP govt political/economic implications aka effects?
P.S I don't support kattumaram

ஜோதிஜி said...

இந்தியர்களின் வாழ்க்கை மலர்ச்சியுடன் இருப்பதால் தானே எங்களைப் போன்றவர்கள் வெளிப்படையாக பாஜக அரசியல் சரியானது என்று எழுதத் தொடங்கி உள்ளோம். இதில் என்ன தைரியம் வேண்டி கிடக்கு?

Agni rama said...

my apologies. Now we know who you are

ஸ்ரீராம். said...

இன்று எனக்கு வந்த ஒரு வாட்சாப் பார்வேர்ட் திமுக தனது  தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் போலீஸ் நுழைய முடியாதபடி சட்டம் இயற்றப்படும் என்று சொல்லி இருப்பதாகச் சொல்கிறது.    உண்மையா, பொய்யா தெரியவில்லை.

Unknown said...

இரண்டாவது போட்டோ உண்மைதானா ? இந்தகட்சிக்கு அவர்கள் என்றால் ஒரு வெறுப்பு உண்டே . அவர்கள் வோட்டு தேவையில்லை என்ற கொள்கை உண்டே.

ஜோதிஜி said...

ஓட்டரசியலுக்கு (மட்டும்) அனைவரும் தேவை.

ஜோதிஜி said...

நாங்கள் திருந்தப் போவதில்லை என்பவர்களிடம் உங்கள் கவனத்தை செலுத்த தேவையில்லை.