Monday, November 23, 2020

சூரரைப் போற்று

அசுரன் படமென்பது எழுத்தாளர் பூமணி எழுதிய கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சரடு. அதே போல கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அதனை உந்துதலாக வைத்துக் கொண்டு முயன்று பார்த்த ஒரு படம் தான் சூரரைப் போற்று.



ஏன் கோ ஏர் பாட்டியா வென்றார்? கோபிநாத் தோற்றார் என்பது போன்ற விசயங்கள் தமிழ்நாட்டு ரசிகன் புரிந்து கொள்ள இன்னும் 20 வருடங்கள் ஆகும்.  காரணம் இங்கே பொருளாதாரம் பாடம் என்பது கடந்த இரண்டு வருடமாகத்தான் (11 மற்றும் 12 ஆம் வகுப்பு) பாடங்களில் எதார்த்த நடைமுறைக்கு ஓரளவுக்கு மாற்றம் பெற்று மாணவர்களின் பார்வைக்குப் பாடமாக வந்துள்ளது.

"ஏன் 20,000 ரூபாய் செல்போன் வாங்குகிறாய்? நீ விரும்புகின்ற அத்தனை வசதிகளும் 8,999 விலையுள்ள மாடலில் இருக்கிறதே?" என்று உறவினரின் மகனிடம் கேட்ட போது "இந்த மாடல் வைத்திருந்தால் கெத்து" என்கிற பதில் கேட்டு ஆச்சரியமளிக்கவில்லை.  அம்மா சொன்ன (ஒத்த பையன் தம்பி) வாசகம் நினைவுக்கு வந்தது. தொழில் முனைவோரின் கஷ்டங்கள், அரசின் முடக்குவாத கொள்கைகள் போன்ற பல விசயங்களை அறிய நம் இளைஞர்களுக்கு இன்னும் பல ஐந்து ஆண்டுகள் ஆகும். 

இது போன்ற மாற்றங்கள் இங்கே வந்து சேரும் வரை சூரரைப் போற்று போன்ற படங்களைத் தொடக்கப் புள்ளியாக வைத்துப் பாருங்கள்.  உங்கள் பார்வையை எதார்த்த உலகிற்கு அருகே வைத்துப் பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.  மற்றபடி வசனம் எழுதிய உறியடி விஜயகுமார், இயக்கிய சுதா முதலீடு செய்த சூர்யா போன்றவர்களுக்குத் தெரியாத அனைத்தும் உங்களுக்குத் தெரிந்துள்ளது என்று நம்புவது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கை. 

நீங்கள் எழுதி நாற்பது பேர்கள் வாசித்து புளகாங்கிதம் அடைந்து ஆட்டின் சிம்பலைத் தட்டி விட்டு தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அடுத்த ஆயிரம் பேர்கள் அருமையான படம் என்று எழுதிக் கொண்டிருப்பார்கள். அது உங்கள் ரசனைக்கு வேறுவிதமாக இருக்கும். எரிச்சலாகவும் இருக்கக்கூடும். காரணம் இங்கே எளிய தமிழ்ப் பிள்ளைகளின் ரசனைகள் என்பது உங்களுக்குப் புரியாது. உங்களின் சூத்திரங்கள் சூரரைப் போற்று வெற்றியைப் பாதிக்காது.

விமர்சனம் சொன்ன ஆலோசகர்கள் எவரும் தொழில் அதிபராக மாற முயல்வதில்லை. காரணம் அதற்கான தகுதிகள் அவர்களுக்கு இல்லை என்பதனை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். 

தமிழ்நாட்டு ரசிகர்களின் மனோநிலை தெரிந்து அவர்கள் விரும்புவதை ஜனரஞ்சகமாகக் கொடுக்கத் தெரிந்தவர்களின்  முதலீடு மட்டுமே திரும்ப வரும் என்பதனையாவது புரிந்து கொள்ளுங்கள்.  திரைப்படம் என்பது பள்ளியில் நடத்தப்படும் பாடமல்ல. 

உங்கள் அக்மார்க் நயம் முத்திரைகள் எதுவும் இயல்பான ரசிகனுக்குத் தேவையில்லாதது. அவர்கள் விரும்புவதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு அந்தத் தகுதியும் இல்லை என்பதனை நீங்கள் உணர மறுப்பீர்கள்.

சந்தை விரும்புவதைக் கொடுக்கத் தெரிந்தவனுக்கு உங்கள் ஆலோசனைகள் சிரிப்பை வரவழைக்கும். அது தான் அவர்களின் வெற்றி. இரண்டு மணி நேரம் படத்தைப் பார்த்து  ஆலோசகர்கள் சொல்வது அனைத்தும் அபத்தம் என்று உணர்ந்தவர்கள் தான் உண்மையான தொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள்.  காரணம் அவர்கள் நடைமுறை வாழ்வியலுக்கும் தொழில் வாழ்க்கைக்கும் உண்டான வித்தியாசம் புரிந்தவர்கள்.

ரசிகர்களைப் பொறுத்தவரையிலும் உங்கள் விமர்சனங்களைப் படித்தால் நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று தான் கேட்பார்களே ஒழிய உங்களை ஒரு நபராகக்கூடப் பொருட்படுத்தமாட்டார்கள் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் புலம்பும் குறியீடுகள் அனைத்தும் பொம்மி அணிந்து வரும் லைட் சாரீஸ் மற்றும் அவரின் முதுகு சொல்லும் அழகுக் குறியீட்டில் அமிழ்ந்து போய்விடுகின்றது என்பதனையாவது உணர்ந்து கொள்ளுங்கள். நள்ளிரவு முழுக்க தூக்கம் மறந்து புரண்டு படுத்த எங்களைப் போன்ற சித்தர்களிடம் வந்து ஞானம் பெறுங்கள்.

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்குப் பல விதங்களிலும் தகுதி படைத்த எதிர்கால முதலமைச்சராக வரத் தகுதி இருக்கும் அம்மையார் நயன்தாராவுக்குப் பதிலாக அபர்ணா என்ற பொம்மியை முன்னிலைப் படுத்தலாம் என்று சங்க உறுப்பினர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை இதன் மூலம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

"பரமபதம் விளையாட்டு"

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிஜ சூப்பர் ஸ்டார் தொல்காப்பிய நயன் வாழ்க...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்களைப் போன்ற சித்தர்களிடம்....ஆதங்கத்தை உணர்ந்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொழில் முனைவோரின் கஷ்டங்கள், அரசின் முடக்குவாத கொள்கைகள் போன்ற பல விசயங்களை அறிய நம் இளைஞர்களுக்கு இன்னும் பல ஐந்து ஆண்டுகள் ஆகும்.

உண்மை
உண்மை