சென்ற வருடம் தீபாவளி திருநாளில் என்ன செய்தோம் என்று நினைவில் இல்லை. மகள் தான் சொன்னார் கைதி படம் போய்ப் பார்த்தோம் என்றார். நேற்றும் இன்றும் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்கள் பார்த்தோம். இரண்டும் அருமை. ஒடிடி தளம் என்பது குடும்ப பட்ஜெட் க்கு வரம்.
2020 முழுக்க எழுத்துப்பணியில் முழுமையாக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட திருப்தி உள்ளது. குரல்வழிப் பதிவுகளாகவும் இந்த வருடம் பலவற்றைப் பதிவு செய்ய வாய்ப்பு அமைந்தது.
இந்த வருடம் இணைய தளங்கள் மூலம் அறிமுகமான முகம் தெரியாத நண்பர்கள் பலவிதமான ஆலோசனைகளுக்கு அழைக்கும் ஆச்சரியங்களை இந்த வருடம் உருவாக்கியுள்ளது.
மொத்தமும் இழந்தாலும் இழக்காமல் வைத்துள்ள தன்னம்பிக்கை குறித்து இந்த வருடம் முழுக்க என்னைச் சுற்றி அதிகப்படியான பேர்களின் வாழ்க்கை கதைகளைக் கவனித்தேன்.
உடன்பிறந்தவர்களின் மாறிய மனோநிலை, சொத்துப் பிரிக்கும் போது உருவாகும் அனைத்து விதமான ஆச்சரியமான மனித குணாதிசயங்களைப் பல குடும்பங்களில் நடந்த நிகழ்வுகள் மூலம் இந்த வருடம் பார்த்தேன்.
எவரும் எவருடனும் பேச விரும்பாத சூழல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. மகள்கள் அப்பாக்கள் அழைத்தால் கூடத் தவிர்க்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் மனிதர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கும் என்று தம்பி ஒருவர் சொன்னார். அது உண்மையாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மகள்களின் பட்டாசு ஆசைகள் மாறிவிட்டது. அலைபேசி ஆசைகள் தொடங்கியுள்ளது.
இந்த வருடம் மகள்கள் தாவணி பாவாடை கட்டி வந்து நின்ற போது என் வயதின் தாக்கம் என்னை உலுக்கியது.
இந்த வருடம் முழுக்க என்னைப் பலவிதங்களில் ஆச்சரியப்படுத்திய, என்றும் என் நினைவில் இருக்க வேண்டிய, வைத்துக் கொள்ள வேண்டிய நண்பர், ஆலோசகர் மற்றும் என் குரு திரு. ராமச்சந்திரன் அவர்கள் ஹாங்காங்கிலிருந்து தீபாவளி வாழ்த்து சொன்னார். மேலும் அவர் உறவினர்கள் எவருக்கும் அழைக்காமல் என்னை மட்டும் முதலில் அழைத்ததும் அவர் மனைவியும் (என் வாசகர்) வாழ்த்து சொன்னதும் மனதிற்கு நிறைவாக இருந்தது. இந்த வருடம் முழுக்க உங்கள் எழுத்துக்களை முழுமையாக வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொரானா காலம் உங்களை நல்ல எழுத்தாளராக மாற்றியுள்ளது. மகிழ்ச்சி என்றார். மகிழ்ந்தேன்.
எல்லாவற்றையும் விட்டு படிப்படியாக விலகி நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் தாக்கம் இந்த வருடம் முழுக்க பல சம்பவங்களின் மூலம் என்னை நானே உணர்ந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.
கொரானா தொடங்கிய மார்ச் முதல் இப்போது நவம்பர் வரைக்கும் திருப்பூரில் சாதாரண எளிய மனிதர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற பட்ட கஷ்டங்கள், இழந்த பொருளாதார வசதிகள் அனைத்தையும் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சென்ற வாரம் நன்றாக இருந்தவர் இந்த வாரம் செயல்பட முடியாதவராக மாறியுள்ளதை எல்லாம் பார்க்கும் போது வாழ்க்கை குறித்துப் பல எண்ணங்கள் மாறி மாறி யோசிக்க வைக்கின்றது.
என் மனத்திடத்தின் அளவுகோல் உண்மையிலேயே எந்த அளவுக்கு உள்ளது என்பதனை இந்த வருடம் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் எனக்கு உணர்த்தியது.
அமைதியான பொறுப்பமான சிக்கனமான மனைவி என்பவர் எந்த அளவுக்கு நமக்கு வரம் என்பதனை இந்த வருடம் என் மனைவி மூலம் உணர்ந்து கொண்டேன். இதற்காகவே என் மோசமான பல முன் கோப குணாதிசயங்களை மாற்றிக் கொண்டேன்.
கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை. நிறுத்தி விட்டேன். மகள்கள் தினமும் மூன்று செய்தித் தாள்கள் வாசிக்கின்றார்கள். புத்தகங்கள் வாசிக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய படங்களைக் காட்சிகளைச் செய்திகளை அலைபேசி வழியாகப் பார்க்கின்றார்கள்.
மகள்கள் நன்றாகச் சமைக்க கற்றுள்ளனர். இது எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிக ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
கடந்த 11 வருடத்தில் இந்தத் தளத்தில் வழியாக வாசித்தவர்களின் எண்ணிக்கை All time 16,80,163. மாதம் தோறும் 11,000 பேர்கள் படிக்கின்றார்கள். வேர்ட்ப்ரஸ், ப்ளாக்கர்,அமேசான் மற்றும் இலவச மின்னூல் வழியாகக் கடந்த 11 வருடங்களில் இருபது லட்சம் பேர்களுக்கு எழுத்து மூலமாக நான் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகமாகியுள்ளேன்.
விரல்கள் விசைப்பலகையில் விளையாட வலு இருக்கும் வரைக்கும் இணையத்தில் குறிப்பாக இந்தத் தளத்தில் எழுதுவேன். மற்றபடி இனி குரல்வழியாக மட்டுமே பலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தன்பாலன் இந்தத் திருக்குறளுக்கு அவர் தளத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் ஃபேஸ்புக்கில் இன்னமும் மாற்றாமல் வைத்திருக்கிறேன்.
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்
உலகத்தை வெல்ல நினைப்பவர்கள் தங்களுக்கு பலம் இருந்த போது சரியான காலம் வரை காத்திருப்பர்.
அனைவருக்கும் 2020 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
8 comments:
ஜோதிஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
அருமையான சுய மதிப்பீடு. தொடர்ந்து எழுதவும், சாதிக்கவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மகிழ்ச்சி நன்றி
தொடர்ந்து வரும் உங்கள் அன்புக்கு நன்றி
வாழ்த்துகள் ராஜா
தீபத்திருநாள் வாழ்த்துகள்...
இதுவும் ஒரு முக்கிய குறள்...
→ கொம்பு எழுத்து இல்லாத குறள் ←
அதிகாரம் காலமறிதல்...
அனைத்தையும் விட இயல் : அரசியல்...!
நன்றி அண்ணே...
Post a Comment