Saturday, September 05, 2020

மோடிக்கு சில கேள்விகள்

ஏழை எளிய தமிழ்ப்பிள்ளைகள் நடத்தும் எங்கள் சங்கத்தில் கோடிக்கணக்காக வங்கியிருப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகம் முழுக்க பல புத்திசாலி ஆலோசகர்கள் இருக்கின்றார்கள் என்பதனை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகின்றோம். உலக அளவில் போட்டியிட்டின்றி (அதாங்க பொதுக்குழு, செயற்குழு தேர்ந்தெடுத்து)தலைமை ஆலோசகராக நேற்று முதல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த எளிய விழாவில் எங்கள் ஆருயிர் அண்ணன் ட்ரம்ப் தலைமையில் நடந்த எளிய விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டே Sriram Narayanan ராம் அவர்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்.
அவர் பதவிவேற்ற உடனே தன் பணியைத் தொடங்கி விட்டார் என்பதனை எளிய தமிழ்ப்பிள்ளைகளுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதிரடியாக சரவெடியாக எங்கள் அக்காவை நோக்கிப் பல கேள்விகள் எழுப்பி உள்ளார். கூடவே கண் துஞ்சாது பணியாற்றும் எங்கள் குலத் தலைவனை நோக்கியும் அம்புகளை வீசியுள்ளார். எங்கள் சங்கம் ஜனநாயகத்தை மதிக்கக்கூடியது என்பதனை தாங்கள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் எங்கள் நிரந்தரப் பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் அடிப்படையில் அடிப்படை பொருளாதாரமே தெரியாத என்னைப் போன்ற சின்னப்பையனை இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வாய்ப்பு அளித்தமை நினைத்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. துடைத்துக் கொண்டு பதில் அளிக்கின்றேன்.

படித்து உய்வீர்களா? உய்யலாலா பாடவேண்டாம் என்று சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். 


மத்திய அரசின் மீதான (குறிப்பா பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மீது) என் விமர்சனங்கள்


1. “இனி எல்லாம் சுகமே”ன்னு சொல்கிறதை எப்போது நிறுத்துவீங்க?


அதற்கு வாய்ப்பே இல்லை. எங்கள் அக்கா சீனாதானாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும். அது இந்த ஜென்மத்தில் வாய்ப்பில்லை. அடுத்த ஜென்மத்தில் தமிழகத்தில் பிறந்து மதுரை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு) வென்று அப்போதும் மோடி அமைச்சரவை அமைத்தால் வாய்ப்புண்டு.


2. பிரச்சனையின் வீரியம் புரிகிறதா இல்ல அது கூட புரியலையா?


எங்கள் தமிழ்ப்பிள்ளைகளிடம் வீர்யம் என்ற வார்த்தையை உரக்கச் சொல்லாதீர்கள். அவர்கள் நாட்டு வைத்தியர் சொல்கின்ற வீரியத்தை வைத்து விபரீத பரீட்சையில் இறங்கிவிடப் போகின்றார்கள். மற்றபடி இந்தியா என்பது தேசியப் பார்வையில் பார்ப்பவர்களும் வீரியமும் புரியாது. அதற்குப் பின்னால் உள்ள விபரீதங்களும் புரியவே வாய்ப்பில்லை. ஒரே ஒரு வழியுள்ளது. கொட்டாம்பட்டி அருகே கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுத்து பத்துப் பதினைந்து மாடுகள் போடும் சப்தங்களுக்கிடையே மாட்டுச் சாண வாடையில் இந்தியப் பொருளாதாரத்தை எப்படிச் சீர் அமைப்பது என்று மாநாடு நடத்தினால் எளிய தமிழ்ப் பிள்ளைகள் விரும்பும் இந்தியப் பொருளாதாரம் குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு.


3. புரியுதுன்னு Benefit of Doubt கொடுப்பதால் இக்கேள்வி - பிரச்சனையைத் தீர்க்க (கடன் கொடுப்பதைத் தவிர) வேற என்ன முன்னெடுப்புகள் செய்யறீங்க?


அட ஏன் சார் நீங்க வேற? கடன் வாங்குவது தவறென்று ஆத்திச்சூடி முதல் நடிகர் விஜய் வரைக்கும் கரடியாகக் கத்திக் கொண்டிருப்பது உங்களுக்குப் புரியவே புரியாதா? பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் அது பிரச்சனை. அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால், பேச விடாமல் தடுத்தால் (இருக்கவே இருக்கிறது திஹார்) அது தானே முன்னெடுப்பது. இதற்கு மேல் என்ன தான் எதிர்பார்க்குறீங்க?


4. கொரோனா பிரச்சனை இப்போதைக்கு முடியப் போவதில்லையென்று மே / ஜூன் மாதங்களிலேயே தெரிந்து விட்டது. Sustained Partial Lock Down முறையில் ஓரளவுக்குப் பொருளாதாரத்தைத் திறந்து விடுவதை நீங்க பரீட்சார்த்த முறையில் கூட முயலாதது ஏன்?


போகாதா ஊருக்கு வழி சொன்னால் உங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை எடுக்க பரிசீலிக்கப்படும் என்பதனை அன்போடு எச்சரிக்கின்றோம். எங்கள் சுப்பி என்ற சுப்ரமணியன் சுவாமி இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னாலே சொன்னார். திறந்து விட்டால், சீர்திருத்தம் நடந்து விட்டால் எல்லோரும் மேல வருவீர்கள். சுய பொருளாதாரச் சார்பு அடைந்து வீடுவாங்க. தாமரையை மலர வைப்பீர்களா? தூரோடு பிடுங்கி எறியத்தானே பார்ப்பீர்கள். எங்களுக்குத் தேவையா? எங்களுக்கு ஓட்டு வேண்டும். எங்களுக்கு ஆட்சி வேண்டும். அது தான் எங்களுக்கு முக்கியம். மற்றதெல்லாம் செய்வோம். எப்போது செய்வோம் என்று அதிகப்பிரசங்கித்தனமான கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். எங்களுக்குத் தெரியும். சுபம்.


5. நாட்டு மக்கள் கையில் பணம் தருவதுதான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து எழ விரைவான மற்றும் உத்தரவாதமான வழி என்பது அனைவரும் ஒத்துக்கொண்ட ஒன்று. அதை ஏன் பரிசீலிக்கக்கூட மாட்டேன் என்கிறீர்கள்?


என்ன நீங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை விதிகளிலிருந்து மீறி நடக்கும் உங்களை ஏன் நீக்கக்கூடாது என்று பொதுக்குழு கேட்கின்ற அளவிற்குக் குண்டக்க மண்டக்க இப்படி கேள்வி கேட்குறீங்க? ஏற்கனவே மன்மோகன் சொன்னார். சீனாதானா சொன்னார். நாங்கள் இதையே நிறைவேற்றினால் அவர்கள் சொல்லித்தான் செய்தோமென்று ஊரு உலகம் எங்களை காறித் துப்பாதா? எங்களுக்குத் தேவையா இது?


6. நிறுவனங்களுக்குக் கடன் (அதுவும் வட்டியுடன்) என்ற ஒரே Stimulus Package ஐ உங்களுக்கு ஆலோசனைகள் செய்த பொருளாதார அறிஞர் யார்?


அந்த ராணுவ ரகசியமெல்லாம் கேட்காதீர்கள். முதலில் நீங்க தேச பக்தர் தானா? அதுவே எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது. நகை இருந்தால் கடன் தருவோமென்று சொல்லிவிட்டோம். வங்கிகளிடம் போய் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவிப்பு வேறு கொடுத்து முழுப்பக்க விளம்பரம் அனைத்து ஊடகம் வழியாகவும் சொல்லி எங்கள் கடமையைச் சரியாகத்தானே செய்துள்ளோம். வங்கி கடன் கொடுக்கவில்லை என்றால் அதற்கும் நாங்கள் பொறுப்பா? அவர்கள் என்ன கேட்கின்றார்கள்? எதனால் கொடுப்பதில்லை? போன்ற உள்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. காரணம் வங்கித்துறை அண்டார்ட்டிகா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதா? கொள்கை முடிவில் தலையிடும் எண்ணம் எங்கள் அரசுக்கு இல்லவே இல்லை.


7. 20 லட்சம் கோடி தொகுப்பென்று சொன்னீர்களே, அந்த தொகுப்பு நிதி இன்னும் சாமானியனை வந்து சேரவில்லையே? அந்த பேக்கேஜ் எங்கே தடைபட்டு நிற்கிறது?


இப்படியெல்லாம் பொய் பேசி புழுதி வாரித் தூற்றி எங்கள் ஆட்சியின் மேல் களங்கம் சுமத்தும் உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். எட்டு மணிக்கு மேல் எங்கள் டாஸ்மாக்கில் வந்து பாருங்கள். தாக சாந்தியை அடக்க முடியாமல் கூடுதலாக அவர்கள் கேட்கும் விலையைக் கொடுத்து விட்டுத் தான் எங்கள் ஏழை எளிய தமிழ்ப்பிள்ளைகள் வாங்கி வருகின்றார்கள். அடிமட்டம் வரைக்கும் பணப்புழக்கம் வந்து சேர்ந்துள்ளதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்.


8. கொரோனாவினால் வந்த மந்தநிலை Act of God என்று ஒத்துக் கொள்ள நான் தயார். ஆனால் அது Third Strike தான், பொருளாதாரத்தின் மீது விழுந்த இரு அடிகள் உங்கள் கைவண்ணங்களான டீமானிடைசேசனும் ஜி எஸ் டி குளறுபடிகளும் தானே? Triple Whammy யால் வந்த நிலைக்கு நிவாரணம் தராமல் Act of God னு சொன்னால் எப்படி?

மன்னிப்பு கேட்டால் மனிதன். மன்னிப்பவன் மகாத்மா என்ற உயரிய தத்துவத்தின் படி ராமர் கோவில் திறப்பு விழா அன்று தொலைக்காட்சி வாயிலாக எங்கள் பொருளாதாரக் கொள்கைகளை மக்களுக்குப் புரியும் வண்ணம் நிச்சயம் தெரிவிப்போம் என்று அன்போடு உறுதியளிக்கின்றோம்.

9. மாநிலங்களின் ஜி எஸ் டி பங்கையும் தந்து அத்தோடு நிவாரணத் தொகையும் கடனும் தர வேண்டிய நேரமிது. தர வேண்டியதையே தராமல் போய் கடன் வாங்கிக்கோன்னு எப்படிச் சொல்ல முடிகிறது உங்களால்?

எங்கள் உயர்ந்த சிந்தனையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக உள்ளது. ஏற்கனவே கொரானா என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு எளிய தமிழ்ப் பிள்ளைகள் ஒரு பக்கம் வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இதையும் அவர்கள் கேட்டவுடன் கொடுத்து விட்டால் அது எங்கே போகும் என்று உங்களுக்குத் தெரியாதா? ஏற்கனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் அடித்த நோட்டெல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் சென்றால் காணாமல் போய்விடுகின்றது என்று கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா?

10. சச்சின் ரிட்டையர்மெண்ட்டுக்கு வாழ்த்து, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டல் இதற்கெல்லாம் நேரமிருக்கும் பிரதமருக்கு நாட்டு மக்களுக்குப் பொருளாதாரம் குறித்து சேதி மற்றும் நிவாரணங்கள் குறித்துச் சொல்ல நேரமில்லாமல் போனது ஏன்?

பெரும்பான்மை சமூகம் பெற வேண்டிய உரிமைகளை நாங்கள் வந்து தான் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்பதிலிருந்தே எங்களின் உயரிய நோக்கத்தை உள்ளன்புடன் வரவேற்கும் 80 கோடி இந்துக்களிடம் கேட்டுப் பாருங்கள். சச்சின் என்பவர் உங்களுக்கு ஆட்டக்காரர். அவர்கள் இந்தியாவின் ஆன்மா. அடுத்து வரிசையில் இருக்கிறார் தோனி. இப்படியே நான்கு வருடங்கள் பலருக்கும் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கிறதல்லவா?

பின் குறிப்பு : இந்த நேரத்தில் மயிலோடு போட்டோ ஷூட் போக உங்களுக்கு எப்படி மனசு வருகிறது?

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மயில் என்பது தமிழர்களின் குறியீடு. அது முருகனின் வாகனம். முருகன் என்றால் வேல். வேல் என்றால் வெற்றி வேல். வெற்றி வேல் என்றால் தாமரை மலரும் என்று பொருள். விலங்குகள் மேல் அன்பு செலுத்தி நாட்டு நாய் வளர்த்து தனிமைப்படுத்தி இயற்கையோடு இசைந்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். (என்னைப் போலப் புகைப்படக்காரர்களை வைத்து படம் எடுத்து என்னைக் காண்டாக்க வேண்டாம்)குறியீடுகளைத் தயவு செய்து உள்வாங்கிப் புரிந்து கொள்ளுங்கள்.

தெரியாவிட்டால் உங்கள் பதவியில் முன்னால் Ramachandra Krishnamoorthy இருந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.😍

ஜெய்ஹிந்த்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் சில மாதங்களில் பொய்யனுக்கு தமிழ் தமிழ் தமிழ் தான்...