Tuesday, September 01, 2020

கல்லூரி மாணவர்களின் கடவுள் எடப்பாடியார்

 கடந்த மூன்று ஆண்டுகளில் அம்மா கொடுத்த நிர்ப்பந்தம், அப்பா உருவாக்கிய கட்டாயம், பக்கத்து வீட்டுக்காரன் மகன் படித்து முடித்த பின்பு காட்டிய கெத்து, கடைசியாக ஏதாவது ஒன்றைப் படித்துத் தானே ஆக வேண்டும் போன்ற பல காரணங்களால் உறவுக்கூட்டத்தில் உள்ள (குறைந்தது 10 பேர்கள்) பொறியியல் பாடத்தில் வைத்திருந்த அரியர் பேப்பர்கள் 6 முதல் 19. சிலர் எழுதும் எண்ணத்தில் இல்லை. வீட்டில் இம்சை தாங்க முடியவில்லை என்ற எண்ணத்தில் பணம் கட்டுவதோடு சரி. ஒவ்வொரு முறையும் இப்படியே காசு உயர்கல்வித்துறைக்குச் சென்று கொண்டேயிருந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த முறை அதே காரணங்களால் கட்டிய பணத்திற்கு பம்பர் லாட்டரி அய்யா விவசாயி அளித்த அறிவிப்பு ஏழை எளிய தமிழ்ப் பிள்ளைகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கிராமத்து கட்டிளங் காளைகள் இனிய விவசாயிக்கு தங்கள் கைக்காசைப் போட்டு ப்ளெக்ஸ் போர்டு வைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் அளவிற்குக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். ஆனால் முழுக் கிணறு தாண்ட முடியாத சோகம் அவர்கள் பேசிய பேச்சின் மூலம் உணர முடிந்தது. கடைசி பரிட்சை எழுதிய ஆக வேண்டியுள்ளது என்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நீதிமன்றம் வரைக்கும் சென்று பலரும் போராடிய போதும் ஏழை விவசாயி மனம் இரங்கவில்லை. "அதெல்லாம் முடியாது? பரிட்சை எழுத முடியாதவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க முடியும்? அவர்களின் கல்வித்தரம் என்பது தமிழ்நாட்டுக்குத் தேவையல்லவா?" என்று விவசாயி தரப்பு எடுத்து வைக்க அடுத்த மாதம் 21 முதல் 26 வரைக்கும் ஏறக்குறைய 7000க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு எழுதப் போகின்றார்கள்.

ஏன் பொரியல் கண்மணிகளுக்கு இந்த பம்பர் லாட்டரி பரிசை வழங்கினார்? என்று ஒரு மாணவக் கண்மணியிடம் கேட்டேன்.

"என் ஓட்டு விவசாயிக்குத்தான்" என்றார்.🙏

******

அரைகுறை உயிருடன் தன் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் நண்பர் அழைத்தார். 'நீங்கள் ஒரு ட்விட் போட வேண்டும். அதுவும் உடனே நம் முதலமைச்சருக்கு ட்விட் போட்டே ஆக வேண்டும்' என்றார். 'என்னடா? அரசியல் என்றால் அதன் வாடையே பிடிக்காது என்பவருக்கு நாட்டு நலன் குறித்து என்ன அக்கறை'? என்று கேட்டேன்.

பிரச்சனை வேறு விதமாக இருந்தது.

'எட்டு மணிக்கே மதுக்கடைகளை நிறுத்திவிடுகின்றார்கள். ஷிப்ட் எட்டரை மணிக்குத்தான் முடியும். ஆனால் இங்கே ஏழு மணிக்கே முன்பணம் கேட்டு குதியாட்டம் போடுகின்றார்கள். அதற்கு மேல் வேலை நடப்பதில்லை. வேறு வழியில்லாமல் காசைக் கொடுத்து அனுப்பினால் அடுத்த நாள் வருவதில்லை. மதியத்திற்கு மேல் வருகின்றார்கள். வந்து புலம்புகின்றார்கள். கண்ட டுப்ளிகேட் சரக்குகளை டபுள் ரேட் கொடுத்து வாங்கி காசு போனது தான் மிச்சம். லாயக்கில்லை' என்று வேலையில் கவனம் செல்வதில்லை.

ஏன் பாஸ் இதையெல்லாம் நம் விவசாயி பார்வைக்குக் கொண்டு போவது முறையா? அவர் கனகச்சிதமாக எட்டு மணி கணக்கு வைத்து கழக கண்மணிகளுக்கு வருமானத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல விசயங்களுக்கு ட்விட் செய்தாலே கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.

'உங்கள் புத்தகத்தை நான் படித்தேன். நெஞ்சுறுதி மிக்கவனாக மாறினேன்' என்று எழுதினால் லைக் போட்டு ரீ ட்விட் செய்வார்கள். மற்றது எல்லாம் காற்றில் கலந்து விடும்.

இந்த லட்சணத்தில் விவசாயி இருக்கும் டென்சனில் இதை எப்படிச் சொல்ல முடியும்? வருமானத்தைக் கெடுக்கும் எவரையும் அவர்கள் விரும்புவார்களா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜிஎஸ்டி - சில குறிப்புகள்.


கடந்த புதன் கிழமையிலிருந்து இத்தொடர் இந்த தளத்தில் வெளி வருகின்றது. ஒவ்வொரு வார புதன் கிழமையும் வெளி வரும். தொழில் சிந்தனைகள் கொண்டவர்களும், அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொடர்.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாணவர்களின் நிலை எங்கு போய் முடியப் போகிறதோ...

Yaathoramani.blogspot.com said...

2020 ல் பாஸானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை..

வெங்கட் நாகராஜ் said...

வேதனையான சூழல். இது எங்கே சென்று முடியும் என்பது அந்த ”ஆண்டவனு”க்கே வெளிச்சம்!

ஜோதிஜி said...

உங்கள் சிந்தனை வித்தியாசமாக உள்ளது. இப்படி நான் யோசிக்கவே இல்லை. அருமை. வாய்ப்புள்ளது.

ஜோதிஜி said...

ஆண்டவன் சொல்றான். அண்ணாமலை வந்துட்டான். (தனபால் காண்டாகுவது இங்கேயிருந்து தெரியுது)

ஜோதிஜி said...

நம் காலம் அல்ல. எளிய தமிழ்ப் பிள்ளைகள் எளிதில் பிழைத்துக் கொள்வார்கள். கவலை வேண்டாம்.